புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 
லய ஞான குபேர பூபதி தவில் தெட்சணாமூர்த்தி

லய ஞான குபேர பூபதி தவில் தெட்சணாமூர்த்தி

பிரபஞ்ச கானத்தின் உச்சம். நாதப்பிரம்மத்தின் விஸ்தாரம். இசை வித்துவத்தின் பிரவாகம். தனிவினிக்கையின் சிகரம். கற்பனை கரைபுரண்டோடும் லயவின் யாசம்.

மனிதக் கரங்கள் இந்த துரித கதியில் இயங்க முடியுமா? அசுர சாதகமும் செறிந்த அனுபவமும் இறைவனின் அருட்கொடையும் இணைந்த பூரண கலவை.

பிரமிப்பூட்டும் லயக்கணிதம், மூளைவேகம், கரவேகம்! காதில் வாங்கிய பல்லவியை “ருத்ரகதியில்” உள்வாங்கும் கற்பூர மூளை. அவரது வாசிப்பு தெய்வீகம் - அவன் கடவுளின் அவதாரம்! தெட்சணாமூர்த்தியின் தவில் வாசிப்பு “இறைவனின் பேச்சு” ! இணுவிலும் அளவெட்டியும் யாழ்ப்பாணமும் இலங்கையும் தமிழகமும் போட்டிபோட்டுப் பெருமைப்படும் தவில் தெட்சணாமூர்த்தி உலக இசைப்பாரம்பரியத்தின் சொந்தக்காரன்.

“உலகின் எட்டாவது அதிசயம்” என்று வியந்து போகிறார் மிருதங்க இசைமேதை பாலக்காடு மணி ஐயர். தெட்சணாமூர்த்திக்குத் தவில் வாசிப்பு மந்திரம். இசை அவருக்கு அற்புத தரிசனம். அது அவருக்கு வேள்வி. அக்கினியில் ஜுவாலிக்கும் யாகம். மனோதர்மத்தினூடாக வெளிப்படும் கற்பனா சஞ்சாரம். அம்மாளுக்கான ஆலாபனம். நாதவித்துவம் கரைந்தொழுகும் பெருநதி. அவரது தவில் வாசிப்பு மாந்திரீகம். மணிக்கணக்கில் கேட்போரைக் கட்டிப்போடும் மந்திரவலை. தீ என்றால் வாய் வெந்துபோகும். தீபக் ராகம் அக்னியைப் பிரசவிக்கும் ராகம். அக்பர் மன்னரின் அரசவை. ஆஸ்தான இசைஞன் தான்சேனிடம் தீபக் ராகத்தைப் பாடுமாறு பணிக்கிறார் அக்பர். தான்சேன் திகைத்துப்போகிறான்! தீபக் ராகத்தை அச்சொட்டாக பூரணமாகப் பாடி முடித்தால், பாடிய இசைவாணனின் உடலையே எரித்துச் சாம்பராக்கிவிடும் அக்கினியைக் கக்கும் ராகம் அது! தான்சேன் தம்புராவைக் கைகளில் ஏந்தி தீபக் ராகத்தைப் பாட ஆரம்பிக்கிறான்.

வாயு உஷ்ணமாகிறது. தான்சேனின் தீபக் ராகம் தொடர்கிறது. பூங்காக்களில் இலைகளும் மலர்களும் வெப்பம் தாங்காமல் வாடிக் கருகி உதிர்கின்றன. நீரூற்றுக்களில் பீறிடும் நீர் கொதிக்கிறது, அவனது இசை தேடிவரும் பறவைகள் உஷ்ணத் தஹிப்பிலிருந்து தப்பிப் பறக்கின்றன, விளக்குகள் எரிய ஆரம்பிக்கின்றன வான் வெளியில் அக்னி ஜுவாலை. மக்கள் பயங்கர பீதியில் தப்பி ஓடுகிறார்கள்.

தான்சேன் பாடுகிறான். அவனுடைய மேனியில் அக்னி பரவுகிறது. அந்த ராகத்தைப் பாடி முடித்து, எரிந்து சாம்பராகின்றான் தான்சேன். தெட்சணாமூர்த்தி - நம்காலத்து தான்சேன்.

அபூர்வ பிறவி - நாதப்புனல்

அம்மாள் அவரின் அன்னை ‘சினேகிதி’ வார்த்தை சொல்லித்தரும் ஆசான். அந்தத் தேவியின் அருள்தாங்கும் கொள்கலனாக தெட்சணாமூர்த்தி. அம்மாளின் கருணை பொங்கிவழிகிறது. அந்த உக்கிரகதியின் வேகத்தை மானிட உடல் தாங்குமா? சதா அந்த இளைஞனின் வாயில் உதிரும் வார்த்தைகள்! மதகடியில், தேநீர்க் கடையருகில் வயல்வெளியில் அவன் மூளையில், உயிரில் உணர்வில் நாவில் நாதத்தின் பேராட்சி! ஆயிரம் வருசங்களில் ஒருமுறைதான் இப்படி இப்படி ஒரு இசைவாணன் தோன்றமுடியும்.

நாப்பத்திரண்டு வயது

அந்த நாதப்பிரம்மத்தின் பொற்கலம் உடைந்துபோய்விட்டது. ஆனால் இசைத்த தவிலின் நாதம் உலகுள்ளவரை வாழும் தகைமையது. தேச எல்லைகள் கடந்து மொழிகளை மேவி, பிரபஞ்சத்தில் சஞ்சாரிக்கும் கானம் அவருடையது.

இவை அவரின் மூர்ச்சனை ‘உயிரின் ஜீவன்’ ‘அமுதப் பிரவாகம்’ சதா அம்பாளுடன் நடத்தும் சம்பாசணையின் வியாபகம் அவன் புனிதன் பெருங்கருணைப் பேராற்றலின் வடிகால். அந்த இசைப் பேரரசன் ஈடிணையற்ற தவில்மேதை மறைந்து நான்கு தசாப்தங்கள் ககனப் பெருவெளியில் கரைந்தோடிவிட்டன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.