புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

‘KAVITHAIMANJAREY’

தொழிலாளிகள்

நாக்கியாதெனி ஜீ.விஜேசேகர

தொழிலைத் தேடி வரும் பொழுது
பூனைகுட்டி போலத் தொழிலாளி
தொழிலுக்கு வந்து நாலு - ஐந்து
நாளில் யானைக்கு மேலே தொழிலாளி

எதைச் சொன்னாலும் அதைச் செய்யாமல்
நினைத்ததை செய்வார் தொழிலாளி
செய்யும் தொழிலே தெய்வம் என்பதை
தெரியாதவன் தொழிலாளி

பொறுமை விற்று உரிமை பற்றி நிறையாய்
சொல்வான் தொழிலாளி
உண்ணும் சோறுக்கு மண்ணும் போட்டு
கண்ணும் மூடும் தொழிலாளி

தொழிலாளியைத் தன் தலையில் தூக்கி
பிச்சை கேட்பார் முதலாளி!


மழையும் நீயும்

மணிமேகலை வரதராஜன், வந்தாறுமூலை

கோடையில் தோன்றிய
குளிர்கால உறவு
சோடை போனதேன்
ஓ... வாடை இல்லாத தாலா
ஆடைகட்டும் அன்புப் பெண்ணே
உன்னை

வியர்வைத் துளிகள் விலாசம் கேட்டன
ஓடைகள் எல்லாம்
ஓடாய் ஆனது
ஓர் பூட்டு முளைகள்
ஏப்பம் விடுகுது
காதலன் மண்ணில்
காத்துக் கிடக்கிறான்
காதல் போக்க
மாரியிலாவது
மாலை மாற்று


நான்சொல்வது சரியா தவறா

சுமையா, கண்டி

ஆசையாய் நட்ட
ஆரெஞ்சு ரோஜா செடியில்
வெள்ளை பூ பூத்தால்
கண்ணீர் வருமா
இல்லை கவிதை வருமா?

எப்படிப் பூக்கும்
ஆரெஞ்சில் வெள்ளை
அன்பே கலப்படமான இவ்வுலகில்
பூச்செடி மட்டுமென்ன விதிவிலக்கா
அப்படியும் பூக்கும் தான்.

சோகமே உருவாய் நின்ற
பூச்செடியில் புயலாய் பூத்த
வெள்ளை ரோஜா புன்னகைதான்
எனக்கென்றால்
புன்னகைதான் வரும்
பின்னர் மெளனமாய்
சில கண்ணீர் துளிகள்

வாழ்விலும் தான்
நம் தோல்வி யாருக்கேனும்
சுகமென்றால்
அழுது விடாதே சகி
நம் புன்னகை தான்
அவர் தோல்வி

நம் வெற்றி பூ பூத்தாயிற்று
அது ஆரோஞ்சோ வெள்ளையோ


கைப்பசை

ஏ.k.இஸ்மா லெவ்வை, சம்மாந்துறை

சொல், வாக்கு எதற்குமே
செல்வாக்கு அறுவதும்
சொந்த பந்தங்களின்
உறவற்றுப் போவதும்
பால், பழம், இனிப்பெலாம்
பாகற் காயாவதும்
எட்டிப் பிடிப்பவை
உச்சியில் ஏறலும்
கடக்க நினைப்பவை
கடுந் தடைப்படுவதும்
கட்ட நினைப்பவை
சொட்டுசும்பாமையும்
தொட்டிடும் தூரம்
தொடு வான மாகியும்
கண்ணுக்குத் தெரிபவை
கானல் நீராகவும்
பெருமையாய் வருவது
பிரமையாய்ப் போவதும்
முடிந்ததாய் மகிழ்ந்தது
தொடர்ந்ததாய்த் துரத்தியும்
தொடர்ந்திட நினைப்பது
தொடக்கத்தில் அழிவதும்
பனியாய் நினைப்பது

மலையாய்க் கனப்பதும்
கைக்கெட்டியது
வாய்க் கெட்டாமலும்
இன்று என்பது
என்றோ ஆவதும்
இன்ன என்பது
அன்னா ஆவதும்
இப்படி வாழ்க்கையின்
எல்லா வளங்களும்
தூரம் தூரமாய்
தொலை பட்டுப் போவதற்கு
காரணம் கைப்பசை
காய்ந்தது தானோ?


சூரியன்

பழுகாமவூர், சங்கரன்

கீழ் திசையில் வண்ணக்
கிரணங்கள் பரப்பிவந்து
சூழ் இருள்தனை அகற்றி
சுடரொளி தந்திடுவான்

பகலவன் வரவுகண்டு
பாரிலுள்ளோர் விழித்திடுவர்
தகதகவென மின்னும்
தங்க மகன் வந்திடுவான்

பூக்கள் மலர்ந்து விடும்
புல்லினங்கள் ஒலி எழுப்பும்
செஞ்சொல் சேவலதும்
செகத்தினை எழுப்பிவிடும்

‘கா’ ‘கா’ எனக்கரையும்
காகமதும் விழித்துவிடும்
‘கூ’ ‘கூ’ வெனக் கூவும்
கோகிலமும் கீதமிடும்

இத்தனையும் எழுந்த பின்னர்
நித்திரையைக் கலைத்துவிட்ட
சித்தத் தெளிவுடனே
சிறுவர்களும் எழுந்திடுவர்

காலைக்காட்சியதன்
கதாநாயகனும் ஆதவனே
வாலைக்குமரியரும்
வாழ்த்தி வணங்கிடுவர்

மாலை வேளைதனில்
மங்கல ஒளிகள் தந்து
மலையோரம் சென்று - வான்
மறைபவனும் இவனன்றோ!


மச்ச உணவுப் பிண்டங்களாய்

நீ.பி.அருளானந்தம், சூசைப்பிள்ளையார் குளம்

பறவைகளின்
அழகைப் பார்த்து - நீ
ரசிப்பதேயில்லை

ஆனால்
அதன் சிறகுகளை
பிடுங்கி
அதைக் கொன்று
மாமிசம் புசிக்கத்தான்
“நீ”
அவாவடைகிறாய்

ஏய்
யுனக்குள்ளே
எத்தனையே
வர்ணம் பெற்ற
பறவைகளின்
அவலச்
‘ச..த்..த...ங்..க..ள்’
புதையுண்டும்
கிடக்கிறது

இரத்தம்
ஒழுக, ஒழுக
‘தீயதின்’
வேகத்தில்
பொசுங்கிய
எரிந்த மணம்
காற்றிலும் கலந்து
அதற்கும் துக்கத்தை
தருவித்தது
பசித்த மனித மிருகங்களின்
வாயிலே - சிறிது சிறிதாய்
மெளனமாய் விடைபெறுகிறது
அழகிய பறவைகளின்
விசும்பல்கள்

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.