புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

வெற்றியை தேடித் தரவுள்ள சம்பந்தனின் சாணக்கியம்

வெற்றியை தேடித் தரவுள்ள சம்பந்தனின் சாணக்கியம்

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பற்றி மிகவும் ஆழமான கருத் தொன்றினை முன்வைத்தார். அரசியல் சாணக்கியமும், நீண்டகால அரசியல் அனுபவமும் கொண்ட மூத்த தலைவரான சம்பந்தன் அவர்களது தலைமையில் தமிழ் மக்களுக்கு நல்லதொரு எதிர் காலம் நிச்சயம் அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தி ருந்தார். சம்பந்தனுடன் சிறிது நேர உரையாடலிலிருந்து இலங்கைத் தமிழர் பிரச்சினை, அதற்கு அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வு என்பன குறித்துத் தான் ஆழமாகப் புரிந்து கொண்டதாக ஜோன் கெரி தெரிவித்திருந்தார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் இந்தப் பாராட்டு நிறைந்த கருத்துக் குறித்து உண்மையில் தமிழ் மக்கள் பெருமைப்பட வேண்டும். பொதுவாக அமெரிக்கத் தலைவர்கள் எவரும் இலகு வில் எவரையும் பாராட்ட மாட்டார்கள். அவர்கள் சகலரது கருத்துக் களையும் ஆழமாக உள்வாங்குவார்களே தவிரவும் தமது கருத் துக்களை அவர்கள் மிகவும் இராஜதந்திர ரீதியிலேயே வெளியி டுவார்கள். அப்படியிருக்க உலகத்திற்கே தலைமைப் பொலிஸ்காரன் எனக் கூறப்படும் அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு அடுத்த ஸ்தானத்திலுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அவர்கள், இரா. சம்பந்தனை இத்தனை தூரம் விழித்துக் கூறியமை எமது நாட்டுத் தலைவர் ஒருவருக்குக் கிடைத்த உயர்ந்த கெளரவம் என்றே கூற வேண்டும்.

இத்தகைய ஒரு தமிழ்த் தலைவரைப் பற்றியும், அவரது அரசியல் சாணக்கியம், முதிர்ச்சியான அனுபவம் குறித்தும் புரிந்து கொள்ளாத சிலர் எமது நாட்டில் இருப்பது வேதனை தரும் விடயமாகும். இவர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக வந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாகச் செயற்பட்டு வெற்றி கண்டவர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் தமது தலைவராக நினைத்துச் செயற்படும் சம்பந்தன், தனக்கு அம்மக்கள் வழங்கிய இந்தப் பொறுப்பான பதவிக்கும், அங்கீகா ரத்திற்கும் மதிப்பளித்து நம்பிக்கையளிக்கும் வகையிலே செயற் பட்டு வருகிறார்.

கடந்த முப்பது வருட கால ஆயுதமேந்திய விடுதலைப் புலிகளது யுத்தத்திலே தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களைச் சந்தித்தனர். குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது அம்மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் ஐந்து வருடங்கள் கழிந்தும் இன்றும் ஆறாத வடுக்களாகவே உள்ளது. ஆயுதப் போராட்டம் மூலமாகத் தோல்வி கண்டுள்ள தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு இனி பேச்சு வார்த்தை மூலமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு முயற் சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளரது விஜயமும், அவர் தெரிவித்துள்ள கருத்துக்களும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.

குறிப்பாக தமிழ்த் தலைமைகள் புதிய அரசாங்கத்துடன் ஆக்க பூர்வமான பேச்சுக்களை நடத்தி நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்பதே ஜோன் கெரியின் கோரிக்கையாக அமைந் திருந்தது. உண்மையும் அதுவே. ஜோன் கெரி அவர்கள் கூறியது போன்று புதிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் பொதுவாகவே நாட்டு மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. இதில் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுவதே அவர்களது தேவையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதற் காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அவர்கள் இந்தப் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

உண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்தப் புதிய அரசாங்கம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வொன்றினைக் காண்பதில் முயற்சிகளை மேற்கொண்டே வருகிறது. ஆனால் இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சில தமிழ்த் தலைமைகள் புதிய அரசாங்கத்தைக் குறை கூறி வருகின்றனர். இது இவர்களது அறியாமையினால் ஏற்படுகிறது. இன்னும் சிலர் உண்மை தெரிந்திருந்தும் ஊடகங்களில் தற்பிரசாரம் தேடுவதற்காக அரசைக் குறை கூறி வருகின்றனர். அரசாங்கத்தைக் குறை கூறினால்தான் மக்களதும், ஊடகங்களினதும் கவனம் தம்பக்கம் இருக்கும் என்பது இச்சிலரது எண்ணமாக உள்ளது.

ஆனால் உண்மை அதுவல்ல. தென்னிலங்கையிலுள்ள கட்சிக ளையும், சில இனவாதப் போக்குடைய அமைப்புக்களையும் அரவ ணைத்து அவர்களது ஆதரவையும் பெற்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதையே அரசாங்கம் விரும்புகிறது. அதுவே நிலையான சமாதானமாக அமையும் என்பது அரசின் நம்பிக்கையாகும். அரை குறையாக அவசரப்பட்டு ஏனோதானோ எனத் தீர்வைக் கண்டு விடுவது அரசின் நோக்கமல்ல. இது தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவருக்கும், அவரது நெருங்கிய தலைவர்களுக்கும் நன்கு தெரியும். அவர்கள் தமது ஏனைய சகாக்களுக்கு இதனை தெளிவுபடுத்தியுள்ள போதிலும் அவர்களில் சிலர் இன்னமும் விதண்டாவாதப் போக்குடைய கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலை நிறுத்தப்பட வேண்டும்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, 45 நிமிட நேர உரையாடலில் கண்டுபிடித்த சம்பந்தனின் சாணக்கியத் தனத்தையும். தலைமைத்துவப் பண்பையும் தமிழ் மக்களில் சிலரும், அம்மக் களின் பிரதிநிதிகளாக உள்ள சிலரும் இன்னமும் புரிந்து கொள் ளாமலிருப்பது வேதனை தரும் விடயமாகும். எனவே இனியாவது அத்தமிழ் மக்களும், தமிழ்த் தலைமைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பின்னால் ஓரணியில் அணி திரள வேண்டும். இதன் மூலமாக தமிழ்க் கூட்டமைப்பை பலப்படுத்துவது மட்டுமல்லாது தமிழ் மக்களுக்கும் ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம். இரா. சம்பந்தனின் சாணக்கியம் தமிழ் மக்களுக்கு அனைத்து வழிகளிலும் வெற்றியைத் தேடித் தரும் என்பது எமது நம்பிக்கை.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.