புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 
இன்று சர்வதேச அன்னையர் தினம் அன்பைச் சொரியும் அன்னை

இன்று சர்வதேச அன்னையர் தினம் அன்பைச் சொரியும் அன்னை

உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால்கொடுத்து அள்ளி அணைத்திடும் போதெல்லாம் அன்பைச் சொரியும் ஆலயமாக அன்னை மிளிர்கின்றாள். உலகில் எத்தனையோ சொந்தங்களுண்டெனினும் அன்னைக்கீடான சொந்தம் வேறில்லை. மாதாவின் மலரடியில் மைந்தனின் சொர்க்கம். தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை என அன்னை வர்ணிக்கப்படுகிறாள். இன்று சர்வதேச அன்னையர் தினமாகும். பிரதி மே மாதமும் 2வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இத்தினம் தாய்மையைப் போற்றும் புனித தினமாகும்.

அன்னையருக்கு மரியாதை வழங்கும் மரபு புராதன காலத்தில் தொடங்கியதாக வரலாறுகள் சான்று பகருகின்றன. பெண் கடவுளான சைபில் எனும் கடவுள் வணங்கப்பட்டாள். இப்பெண் தெய்வமே சகல கடவுள்களுக்கும் முதற் தாய்க்கடவுளாக அக்கால மக்களால் வழிபட்டுவரப்பட்டுள்ளது. கிரேக்கர்கள், ரோமர்கள் பெண் தெய்வத்தை வழிபட்டு பல வகையான கொண்டாட்டங்களை நடாத்தினர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகளாவிய ரீதியில் அன்னையர் தினம் அனுஷ்டிப்பதற்கான வாய்ப்புக்கள் மலர்ந்தன.

ஜார்விஸ் என்ற பெண் ஒரு சமூக சேவகியாவார். அமெரிக்க மேற்கு வேர்ஜீனியா மாநிலத்தில் கிராப்டன் எனுமிடத்தில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் போர்க்களத்தில் அமெரிக்க வீரர்கள் பலியாகினர். அவ்வீரர்களின் குடும்பங்கள் சீரழிந்தன. பிரிந்த குடும்பங்கள் ஒன்றிணையவும், அவர்களின் நல்வாழ்விற்கும் சமாதானத்திற்கும் அயராது பாடுபட்டுவந்த ஜார்விஸ் 1904ல் காலமானார். இவரின் மகள் அன்னா ஜார்விஸ் தனது அன்னையின் நினைவாக 1908 மே மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை உள்ளூரிலுள்ள மெதடிஸ்த தேவாலயமொன்றில் சிறப்பு வழிபாடொன்றை நடாத்தினார். தனது அன்னையைப் பாராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய பெருமையை இவர் பெறுகின்றார்.

அனைத்து அன்னையர்களும் கெளரவிக்கப்பட வேண்டும் எனும் கொள்கையில் அன்னா ஜார்விஸ் திடமாக இருந்தார். தனது எண்ணத்தை பென்ஸில்வேர்னியா மாநில அரசுக்கு தெரிவித்தார். அரசும் அவர் கோரிக்கையை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் பிரதி ஆண்டும் அனுஷ்டிக்க அங்கீகரித்தது.

எனினும் அன்னா ஜார்விஸ் திருப்திகொள்ளவில்லை. அரசியல்வாதிகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கு வர்த்தக அமைப்புக்களுக்கும் கடிதம் எழுதி அமெரிக்கா முழுவதும் அன்னையர் தின கொண்டாடவும், அத்தினத்தை விடுமுறைத் தினமாக அங்கீகரிக்கவும் வேண்டுகோள் விடுத்தார். இவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி வுட்றோ வில்சன் 1914ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மே மாதம் 2வது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாகவும் அன்றைய தினத்தை விடுமுறை தினமாகவும் பிரகடனப்படுத்தினார். இதனை அமெரிக்க காங்கிரசும் ஏற்றுக்கொண்டது. மேலும் கனடா உட்பட 47 நாடுகள் இதே நாளில் அன்னையர் தினமென அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இதையிட்டு அன்னா மகிழ்ச்சியடைந்தாலும் இந்நாடுகள் மட்டுமல்ல உலகெங்கும் அன்னையர் தினம் கொண்டாட வேண்டும் என்றும் மேலான எண்ணத்தில் தொடர்ந்தும் பாடுபட்டார்.

உலகெங்கும் சகல இல்லங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென்பதே எனது அவா எனத் தனது 84 வயதில் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் தன்னைச் சந்தித்த பத்திரிகையாளரிடம் தனது அவாவை வெளிப்படுத்தினார். அவரது பேரவா இன்று பூர்த்தியாகி சர்வதேச ரீதியில் அன்னையர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.

மாதாவின் அன்பு தினமும் புதிதாகவே பூக்கும் பூவாகவுள்ளது. இன்றைய நாளில் நம்மை ஈன்ற அன்புத் தாய்க்கு இணையற்ற அன்பைப் பொழிய சிறந்த தீர்மானங்களை நாம் நிறைவேற்றிச் செயற்பட வேண்டும். இனிய வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துவதன் மூலம் அன்னையைச் சிறப்பிக்க வேண்டும் இறைவன் எமக்களித்த வரம் தாய்தான். அவளின் தியாகம் மிகப்பெரிது. மாண்புமிக்கது

‘பத்து மாதங்கள் பாரமாய்ச் சுமந்தே
வைத்த அன்போடு வளர்த்துப்பாலுடன்
நித்தமுணவூட்டி நீடு வாழ்த்திடும்

உத்தம தாயே உனைமறவேன்’ என தனது தாய்க்கு புகழாரமிடுகின்றார் ஒரு கவிஞர். எம்மைப் பெற்று தாலாட்டிச் சீராட்டி வளர்த்து ஆளாக்கிய அன்னையை இன்றைய நாளில் போற்றிப் புகழ்வோமாக.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.