புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 
ஊடகத் தர்மத்தை விலைபேச முன்வராத பத்திரிகையாளனுக்கு

ஊடகத் தர்மத்தை விலைபேச முன்வராத பத்திரிகையாளனுக்கு

ஊடகத்துறை பயணம் சவால் நிறைந்த களம்

விடகத்துறை பயணம் என்பது சமரசத்திற்கு இடம் கொடுக்காதவர் களுக்கு சவால் நிறைந்த களம் என வீரசேகரி பத்திரிகை நிறுவன ஆலோசகர் வி. தேவராஜ் மட்டக்களப்பில் நடைபெற்ற சிவராம் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேசும் போது தெரிவித்துள்ளார்.

அவரின் உரையின் முழு வடிவம்

ஊடகத்துறைப் பயணம் என்பது எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காதவர்களுக்கு, அதாவது ஊடகத் தர்மத்தை விலை பேச முன்வராத எந்த ஒரு பத்திரிகையாளனுக்கும், அது ஒரு சவால் நிறைந்த களமாகும். நண்பர் சிவராமின் ஊடகப் பயணம் அத்தகையது தான். அவர் தனது ஊடகத்துறைப் பயணத்தில் எந்தச் சக்திகளிடமும் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காதவராகத் தனது பணியினை மேற்கொண்டார். இதன் விளைவுதான் அவரது உயிர் பறிக்கப்படக் காரணமாகியது.

அவர் எதையும் தனிப்பட்ட ரீதியில் பார்ப்பதில்லை. மனதிலும் அவ்வாறான ஒரு எண்ணத்தைப் பதியவிடுவதும் இல்லை. அதாவது னிothing ஜிலீrsonal என்பது தான் அந்தப் பண்பு. அதே வேளையில் தனக்கு சரி எனப் பட்டத்தை ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொண்ட பின் எழுதுவதற்கும் அவர் தயங்கியதில்லை. இந்தப் பண்பு பல எதிரிகளைத் தானாகவே உருவாக்கிவிடும். இதற்கு நண்பர் சிவராமின் ஊடகப் பயணம் விதி விலக்காக அமைந்துவிடவில்லை. இந்தப் பண்பு அவரது உயிருக்கே அச்சுறுத்தலாகி இறுதியில் கொலை செய்யப்படக் காரணமாகியது.

உண்மையில் நண்பர் சிவராம் நினைத்திருந்தால் ஊடகத் துறையில் சமரசத்துடனான ஒரு வாழ்க்கையை வாழ்த்திருக்கலாம். சுக போகத்தில் திளைத்திருக்கலாம். அல்லது தனக்கு வந்த அச்சுறுத்தல்களைக் காட்டி வெளிநாடுகளில் தஞ்சம் கோரி இருக்கலாம். ஆனால் நண்பர் சிவராம் இந்த நிலைகளுக்கெல்லாம் அப்பால் மக்களுடன் நின்று தனது ஊடகப் பயணத்தைத் தொடர்ந்தார்.

நண்பர் சிவராமைப் பொறுத்து, ஊடகத்துறையினருக்கு, அவர் வாழ்ந்த காலச் சூழ்நிலை அது வடக்கு - கிழக்காக இருக்கட்டும், தென்பகுதியாக இருக்கட்டும் நாட்டின் எந்தப் பகுதியும் ஊடகத்துறை சார்ந்தோருக்கு பாதுகாப்பற்ற நிலையே காணப்பட்டது. எவ்வேளையிலும் எந்த ஊடகவியலாளனும் கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்லப்படலாம்.

அத்தகைய ஒரு நெருப்பாற்றுக்கூடாகவே அவரது ஊடகப் பயணம் தொடர்ந்தது.

நண்பர் சிவராமின் ஊடகப் பயணம் போராட்டம் களத்தில் இருந்து அதன் பின்புல அறிவு, தகவல், அனுபவங்களுடனான தளத்தில் இருந்து ஆரம்பமாகியது. குறிப்பாகக் கூறுவதாயின் தமிழ்த் தேசியம் பிரசவித்த அக்கினிக் குழந்தைகளில் அவரும் ஒருவர்.

போராட்டக் களம் புகுந்த நண்பர் சிவராம் பின்னாளில் ஊடகத் துறைக்குள் பிரவேசிக்கின்றார். இந்தப் பிரவேசமே நண்பர் சிவராமுக்கும் எனக்கும் இடையிலான உறவுக்கு வழி சமைத்தது.

அவரது ஆரம்பகால ஆங்கில எழுத்துக்களால் கவரப்பட்டவன் நான். இனச் சாயல் அற்ற தளத்தில் இருந்து அறிவு சார்ந்தவையாக அவரது எழுத்துக்கள் இருந்தன. அதேவேளையில், ஆங்கிலம் கற்ற உலகிற்கு, குறிப்பாக கொழும்பில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டுத் தூதரக மட்டத்தினருக்கும் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஆங்கிலம் கற்ற சிங்களத் தரப்பினருக்கும் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டையும் வழங்குவதாகவும் அமைந்தன.

உண்மையில் நண்பர் சிவராம் அவர்கள் தனது நடு நிலையான தமிழ் இனச் சாயல் அற்ற எழுத்துக்களின் மூலம் தமிழர்கள் அவர்களது உரிமைகள் அரசியல் அபிலாஷைகள் குறித்த பயணத்தின் நீதியை, நியாயத்தன்மையை எடுத்துக் கூறுவதாக அமைந்திருந்தன. இதன் மூலம் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தென்னிலங்கை அரசியல் சக்திகள் மனப் போக்கில் மாற்றத்திற்கு வித்திட முடியும் என்று கருதினார்.

ஆனால் நண்பர் சிவராம் அவர்களின் எழுத்துக்கள் அவரது எதிர்பார்ப்பிற்கு மாறாக எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தின. அதாவது இவரது ஆங்கில எழுத்துக்கள் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களுக்கும் வெளிநாட்டுத் தூதரக மட்டத்தினருக்கும் தமிழர் தொடர்பான மற்றும் ஈழப் போராட்டம் தொடர்பான தகவல்களைத் திரட்டிக் கொள்ளும் அதேவேளையில் அறிவுபூர்வமான இராணுவ புலனாய்வு குறித்த உள் இரகசியங்களை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்குமான களமாகவே பார்க்கப்பட்டன.

குறிப்பாக சிவராம் என்ற மனிதனின் அறிவுசார் இராணுவ ஆய்வுகள் குறித்து தென்னிலங்கையில் சிலாகித்துப் பேசப்பட்டது. மறுபுறம் நண்பர் சிவராமும் அவர்களை ஒரு தகவல் பொக்கிஷமாக இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களும் வெளிநாட்டுத் தூதரக மட்டத்தினரும் பார்த்தனர்.

அவ்வேளையில் அவர் தமிbழ விடுதலைப் புலிகளினால் தேடப்பட்ட நபராக இருந்தமையால் அவரது ஆங்கில எழுத்துக்களுக்கு ஒரு அங்கீகாரமும் அந்தஸ்தும் தென்னிலங்கையில் கிடைத்தது. ஆனால் சிவராமின் ஆங்கில எழுத்துக்கள் தமிழ் மக்களிடையே எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தின. தமிழர்கள் தொடர்பான தகவல்களையும் தமிழர்களின் போராட்டம், இராணுவ இரகசியங்கள் குறித்த தகவல்களையும் சிவராம் தென்னிலங்கைச் சக்திகளுக்கு வழங்குகின்றார் என்ற கருத்தோட்டம் தமிழ் மக்களிடையே பரவத் தொடங்கியது. இந்த ஒரு பின்னணிதான் நான் அவரை தமிழ் மொழியில் எழுதுமாறு வற்புறுத்தக் காரணமாகியது.

அதேவேளையில், அக்காலக்கட்டத்தில் வெளிவந்த மாற்றுப் பத்திரிகையான சரிநிகரில் அவரது எழுத்துக்கள் வெளிவந்தன. எனினும் தேசியப் பத்திரிகை ஒன்றில் அவரது எழுத்துக்கள் வெளிவருவது பரந்து விரிந்த ஒரு வாசகர் வட்டத்திற்குள் செல்வதுடன் தமிழ் மக்கள் மத்தியில் ஆழமான பதிவினை, செல்வாக்கினை, மேற்கொள்ள முடியும் என்ற ஒரு எதிர்பார்ப்பிலேயே அவரை நான் வீரகேசரி வார இதழில் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன்.

எத்தகைய இடர்வரினும் அவரது எழுத்துக்களுக்குத் தொடர்ந்தும் களம் அமைத்துக் கொடுப்பேன் என்பது மாத்திரமல்ல. அவரது எழுத்துக்கள் முழுமையாகப் பிரசுரிக்கப்படும் என்ற உத்தரவாதத்தையும் வழங்கினேன். எனினும் கேசரி வார இதழில் எழுதுவதற்கான தீர்மானத்தை எடுக்க அவருக்கு மூன்று வருடங்கள் எடுத்தன.

இறுதியில் உங்களைச் சரியாக விளங்கிக் கொண்டேன் என்ற வாசகத்துடன் வீரகேசரி வார இதழில் அவர் எழுதத் தொடங்கினார். உண்மையில் நண்பர் சிவராம் அவர்களை வீரகேசரி வார வெளியீட்டில் எழுத வைத்தது தனிப்பட்ட ரீதியில் எனக்குக் கிடைத்த வெற்றியாகவும் பெருமையாகவும் இருந்தபோதும், அவரது இழப்பு தந்த வலியினை இன்றுவரை சுமந்து நிற்கின்றேன்.

என்னைப் பொறுத்து ஒரு பத்திரிகை ஆசிரியன் என்ற வகையில் பத்திரிகைக்கு, மக்களுக்கு எது தேவை என்பதைத் தேடிப் பிடித்து அவற்றுள் பெறுமதிமிக்கதை பத்திரிகைக்கூடாக மக்களுக்கு வழங்குதல் என்ற பணியினை மிகச் செம்மையாகச் செய்தேன் என்ற ஆத்ம திருப்தி உள்ளது. அந்தப் பணியில் சிவராம் போன்ற மகத்தான ஊடக ஜாம்பவானுடன் இணைந்து பணியாற்றுக் கிடைத்தமை, அவரது எழுத்துக்களை பிரசுரிக்கக் கிடைத்தமையானது, எனது 28 வருட கால பத்திரிகைத் துறைப் பயணத்தில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன்.

இலங்கையின் சிங்கள தேசிய அரசியல் போக்கில் தமிழ் மக்கள் மீதான உரிமை மறுப்பு, அடக்கு முறை, அடாவடித்தனம், கட்டவிழ்த்து விடப்படும் காடைத் தனங்கள் போன்றவற்றைக் கண்டும், அனுபவித்தும், இத்தகைய அனுபவங்களுக்குப் பிறகும், பெரும்பான்மை இன ஆளும் வர்க்கத்துடன் சமரசத்திற்கு இடம் உண்டு என்ற எதிர்பார்ப்புடன் புறப்பட்ட பலருக்கு தென்னிலங்கை சளைக்காது தோல்வியையே கொடுத்துள்ளது. அதாவது, தமிழ் மக்களுடன் கை கோர்த்து சமரச அரசியல் பயணத்துக்குத் தயார் இல்லை என்பதையும் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலில் அப்படியொரு அத்தியாயமே இல்லையென்பதையும் தென்னிலங்கை மிகத் தெளிவாகவே உணர்த்தி வந்துள்ளது. அதன் முழுமையான வெளிப்பாட்டை நாம் இன்றும் காணக் கூடியதாக இருக்கின்றது.

(அடுத்தவாரம் தொடரும்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.