புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 
காரைநகர் தந்த கல்விமான் கலாநிதி பண்டிதர் க.வைத்தீஸ்வர குருக்கள்

காரைநகர் தந்த கல்விமான் கலாநிதி பண்டிதர் க.வைத்தீஸ்வர குருக்கள்

அமரர் தனது புதல்விகளுடன்...

சிரித்த முகம், நெற்றியில் திரிபுண்டரமாகத் தரித்த திருநீறு மெல்லிய தோற்றம், நான்கு முழ வேட்டியுடன் “ஓ.... வாங்கோ தம்பி” என்று அன்புடன் அழைக்கும் பண்டிதரை சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள் சிவபதம் எய்திவிட்டார் என்ற செய்தி உலகில் வாழ் தமிழ் அன்பர்களையும் என்னையும் அதிர வைத்தது.

இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்புதான் தொலைபேசியில் பல விடயங்களை என்றோடு கதைத்தவர். என்னைக் காணும் போது “உங்கள் பாட்டா மஹா வித்துவான் கணேச ஐயர் அவர்களே எனது குரு” எனப் பெருமையாகப் பேசிக் கொள்வார்.

பண்டிதர் பிரம்மஸ்ரீ கா.வை. குருக்கள் அவர்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம், ஒரு கலைக்களஞ்சியம், ஒரு நல்ல அகராதி. அவ்வளவு தூரம் அவரது ஆழ்ந்த புலமை. எந்தப் பாவையோ, வசனத்தையோ இன்றேல் சொல்லையோ கேட்ட மாத்திரத்தில் பதில் தரும் ஒரு கல்விமான். அவர் மனதிலே எப்பொழுதும் சைவம், தமிழ் ஆகியனவே. முன்நிற்கும் அவரை அவ்வாறான ஒரு சில சிரேஷ்டர், தமிழ் ஆசான் எனக் கூறுதல் சாலப் பொருந்தும்.

ஈழத்துச் சிதம்பரேஸ்வர் அவரது குலதெய்வம். தமது குலதெய்வத்தின்பால் இருந்த அன்பும், பக்தியும் காரணமாக மலர்ந்ததுவே ஈழத்துச் சிதம்பர புராணம் ஆகும். இது தவிர ஐயனார் புராணம், திருவாதிரை மலர்கள், முதலானவை இவர் பதிப்பித்த நூல்களாகும்.

சிவஸ்ரீ கா.வை.குருக்கள் அவர்கள் ஆரம்பக் கல்வியை காரைநகர் அ.மி.த.க பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை காரை. சுப்பிரமணிய வித்தியாலயத்திலும், மேற்கல்வியை காரை.

இந்துவிலும், அளவெட்டி நாகபூஷணி வித்தியாலயத்திலும் கல்வி கற்று சிரேஷ்ட கல்வித் தராதரப் பரீட்சையில் சித்தியெய்தினார். பரமேஸ்வர பண்டித ஆசிரியர் கலாசாலையில் கல்வி கற்று பயிற்றப்பட்ட ஆசிரியர் பரீட்சை, பண்டிதர் பரீட்சைகளில் சித்தியடைந்தார். சுன்னாகம் பாடசாலையில் சைவம், சைவ சித்தாந்தம், சைவ சித்தாந்த சாஸ்திரம், தமிழ் இலக்கியம், இலக்கணம் முதலானவற்றைக் கற்று நல்லறிஞரானார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கெளரவ கலாநிதி பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட பின் பேராசிரியர்களுடன்...

புன்னாலைக்கட்டுவன் மஹா வித்துவான் பிரம்மஸ்ரீ சி.கணேச ஐயர் அவர்களிடம் தமிழ் இலக்கணம் தொல்காப்பியம், நிகண்டு ஆகிய நூல்களைக் கற்று இலக்கண வித்தகர் ஆனார். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், வித்தகர் கந்தையா பிள்ளை ஆகியோரின் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார் குருக்கள் ஐயா அவர்கள்.

காரைநகர் பண்டிதர் பிரம்மஸ்ரீ ச.பஞ்சாட்சர சர்மா பண்டித மணி சு.நவநீத கிருஷ்ண பாரதியாரிடமும் இவர் கல்வி கற்றமை குறிப்பிடக்கூடியது. வேத விசாரத் பிரம்மஸ்ரீ வி.சிதம்பர சாஸ்த்திரிகளிடம் வேதம், ஆகமம், வைதீகம் முதலானவற்றை சமஸ்கிருத மொழியில் கற்றார்.

இவ்வாறான முதுபெரும் அறிஞர்களிடம் கல்வி கற்றமையால் நாம் இன்று பிரம்ம ஸ்ரீ கா.வை.குருக்கள் அவர்களைப் போற்றும் நடமாடும் கல்விமானாக அவர் சிவபதம் எய்தும்வரை திகழ ஏதுவாயிற்று.

அதனால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இலக்கிய கலாநிதி என்ற கெளரவ விருதினை வழங்கிக் கெளரவித்தது சைவ மன்றங்கள் தமிழ் கழகங்கள் ஐயா அவர்களைத் தமது வெள்ளிவிழா பவள விழாவில் கெளரவிக்கத் தவறவில்லை.

ஈழத்துச் சிதம்பரம் ஸ்ரீ நடராஜரின் திருவடித் தியானம் மிக்கவராக பண்டிதர் சிவஸ்ரீ கா.வை.குருக்கள் அவர்கள் திகழ்ந்தார். மார்கழித் திருவெம்பாவை, திருவாதிரை இவைகளே என்றும் இவரின் மனதில் இருந்தவை. இதனால் 1960இல் ஆரம்பமானதே மணி வாசகர் சபை. இதன் மூலம் மார்கழித் திருவாதிரையையொட்டி “மணிவாசகர் விழா” அன்று முதல் இன்றும் நிகழ்ந்து வருகின்றது. இதிலே கலைமகள் ஆசிரியர் திரு. கி.வா.ஜகன்நாதன் அவர்களின் பேருரைகள் என்றும் பெருமைவாய்ந்தவை.

மேலும் இவ்விழாவில் இலங்கை, இந்திய அறிஞர்கள் பங்குகொண்டு உரையாற்றுவது சிவனடியார்களை மேலும் சிவசிந்தனைக்குட்படுத்தி வண்ணம் உள்ளது.

காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம் ஆரம்பமான நால் முதல் இன்றும் க.பொ.த. பத்திர சாதாரணதரம், உயர்தரம் கற்கும் மாணவர்க்குக் கல்விப் பணியை நல்கிக் கொண்டே இருக்கின்றது. இவைகள் ஐயா அவர்களின் பணிகளுட் சில.

காரைநகர், ஈழத்துச் சிதம்பரம் பரம்பரைக்குரு இலக்கிய கலாநிதி, பண்டிதர் சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்கள் தமது 99ஆவது வயதை நிறைவு செய்து 100 ஆவது வயதில் வாழ்ந்து வருங்கால் அவரைச் சிதம்பரேஸ்வரர் தமது தேவ சபைக்கு அழைத்துவிட்டார். மூன்று பிள்ளைகளையும் “சிவசிவ” எனக் கூறச் சொன்னார். அவர்களோடு தாமும் சிவசிவ என ஜபஞ் செய்தார். யோகர் சுவாமிகள் அழைக்கின்றார். நான் அவரிடம் போகிறேன் என்றார். சிற்சபேச சிவசிதம்பரம் என்று வாழ்ந்து உலகிற்கு ஞான ஒளியைக் காட்டிவந்த சிவசிரேஷ்டர் சிவஸ்ரீ கா.வை.குருக்கள் பாட்டா ஈழத்துச் சிதம்பரநாதன் திருவடிக்கே சென்றுவிட்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.