புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 
சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லத்தான் நினைக்கிறேன்

- அந்தனி ஜீவா-

ம்மிடையே வாழ்ந்து மறைந்த சாதனையாளர்களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு அறிய வாய்ப்பில்லை, காரணம் அவர்களைப் பற்றி, அவர்கள் ஆற்றிய பலரும் பாராட்டு படியான பணிகளைப் பற்றிய நூல்கள் வெளிவருவது மிகவும் குறைவு அதிலும் அரசியல், தொழிற்சங்கம் வர்த்தகம் போன்ற துறைகளில் வாழும் காலத்தில் சாதனை புரிந்தவர்களின் வரலாறுகள் மிக மிக குறைவாகவே வெளிவந்துள்ளன. ஆனால் தொழிற்சங்கம், வர்த்தகம், சினிமாத்துறை மூன்றிலும் சாதனை படைத்த ஒருவரின் வரலாறு இப்பொழுது நமது பார்வைக்கு கிடைத்துள்ளது.

மலையக மக்களின் விடிவுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் மலையகத்தவர்கள் நாடாளுமன்றம் போக வேண்டும் அங்கு தான் எமது மக்களுக்காக குரல்கொடுத்து பல உரிமைகளை பெற முடியும் என கனவு கண்டார் கலை உள்ளம் கொண்ட ஒருவர். அதற்காக தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்ட செயல்படலானார்.

அத்துடன், இலங்கையில் தமிழ் திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்கெல்லாம் மூலதனம் தேவை. அதற்காக தன் முயற்சியால் வர்த்தக துறையில் ஈடுபட்டு உழைப்பால் உயர்ந்தார். அவரது வெற்றிக்கெல்லாம் அவருடன் நிழலாக நின்று துணைபுரிந்தவர் அவரது துணைவியார்.

தொழிற்சங்கம், வர்த்தகம், திரைப்பட தயாரிப்பு என்று முத்துறைகளிலும் சாதனை படைத்தவர் வேறு யாருமல்ல... ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்த சாதனையாளர் வி. பி. கணேசன் மறக்கவும் மறைக் கப்பட்ட இத்தகைய மாமனிதரின் செயற்பாடுகளைப் பற்றி ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணன் ‘சிகரம் தொட்ட செம்மல் வி.பி.கணேசன்’ என்ற நூலை எழுதியுள்ளார். இதற்கு துணை நின்றவர் வி.பி.கணேசனின் மைந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகணேசன். “தந்தையின் வரலாற்றை மொழிவாணன் தொகுத்து வழங்கிய விதத்தை படித்த பொழுது நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்கு நான் என்னையே அறியாமல் சென்றுவிட்டேன். எனது தந்தையின் குணங்களிலே மிகவும் பிடித்த குணமான விட்டுக் கொடுப்புகள், எதிரியை நண்பனாக பார்க்கும் எண்ணம். வாழ்க்கையையும் அரசியலையும் பிரித்து செயல்படும் திறன், தலைக்கனமற்ற எளிமையான குணம், தலைவனாலும், தொண்டர்களை அரவணைத்து போகும் அன்பு, அதிகமாக பேசுபவர்களிடம் பேச்சைக் குறைத்து மற்றவர்கள் பேசுவதை கேட்பது என்ற கவனயீர்ப்புக் குணம். போன்றவற்றை இன்று நான் கடைப்பிடித்து வருகிறேன். இதிலிருந்து நான் சற்று விலகினாலும் கூட இந்த வரலாற்றுப் பதிப்பை எடுத்து படிக்கும் போது என்னை நான் மீண்டும் அவரது வழியில் உருமாற்றிக் கொள்ளக்கூடிய வழியினை மொழிவாணன் எனக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்” என்கிறார் வி.பியின் புதல்வரான பிரபா கணேசன்.

சிகரம் தொட்ட செம்மல் வி.பி.கணேசனின் வரலாற்றை எழுத்தாளர் மொழிவாணன், வி.பி.கணேசனின் குடும்பத்தினரையும், அவரோடு தொடர்புடைய பலரையும் சந்தித்து உரையாடி இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.

தொழிற்சங்கவாதியாகவும், வர்த்தகராக உலா வந்த சாதனையாளர் வி.பி.கணேசனை நாடறிந்த ஒருவராக அறிமுகப்படுத்தியது, அவர் தயாரித்து நடித்த புதிய காற்று திரைப்படம், இலங்கையிலும் தமிழ் சினிமாவை வெற்றிகரமாக தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கை தந்தது. ‘புதிய காற்று’ திரைப்படம்.

தொழிற்சங்கவாதியாக அறிமுகமாகியிருந்த வி.பி.கணேசன் இப்பொழுது திரைப்பட தயாரிப்பாளருமாகிவிட்டார். ஏன் அவர் திரைப்படத்துறையில் ஈடுபட்டார் என்பது பலருக்கு புரியாத புதிராக இருந்தது. அவர் ஒரு திட்டத்துடன் தான் திரைப்படம் எடுத்தார் என்ற உண்மை அவருக்கு மாத்திரம் தான் தெரியும்.

தொழிற்சங்கவாதியான வி.பி.கணேசன் அரசியலில் ஈடுபட வேண்டும் என் எண்ணத்தில் தீர்க்க தரிசனத்துடன் செயல்பட்டார் அருகிலுள்ள தமிழ் நாட்டு அரசியலையும் அவதானித்தார். அறிஞர் அண்ணாவின் தலைமையில் இயங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் சினிமாவை எப்படி அரசியலுக்கு பிரசார சாதனமாக பயன்படுத்தியதோ அதே போல நாமும் பயன்படுத்தினால் என்ன என்று சிந்தித்து முடிவு எடுத்தார். இதற்கு எம்.ஜி.ஆர் அவர்களை முன் உதாரணமாகக் கொண்டார்.

‘புதிய காற்று’... அதன் பிறகு “நான் உங்கள் தோழன்” என்ற திரைப்படத்தை தயாரித்தார். இதற்கு மேடை நாடக உலகில் சிறப்பாக செயல்பட்ட கலைஞர் கலைச் செல்வனை திரைகதை, வசனம் எழுத அமர்த்தினார். “நான் உங்கள் தோழன்” வெளிவந்து வசூலில் சாதனையை புரிந்தது.

அரசியல் பிரவேசத்திற்கு சினிமா மாத்திரம் போதாது என முடிவெடுத்து என்னையும் அழைத்து கொண்டு பத்திரிகை உலக ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் அவர்களை சந்தித்து ‘முரசொலி’ என்ற பெயரில் முதலில் மாதப் பத்திரிகையாக வெளியிடுவது பின்னர் வார பத்திரிகையாக வெளியீடு என முடிவு செய்து அதன் ஆசிரியர் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். சில மாதங்கள் ‘முரசொலி’ வந்தது.

அதன் பின்னர் நாட்டின் சூழ்நிலை கறுப்பு ஜுலை போன்ற காரணங்களால் தேர்தலில் போட்டியிடா விட்டாலும் தொழிற்சங்க பணிகளில் அதிக ஆர்வம் காட்டினார். ஆனால் அவர் கண்ட அரசியல் கனவு அவரின் மைந்தர்களான மனோ கணேசனும், பிரபா கணேசனும் நனவாக்கினார்கள். 1996ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி கணேசன் காலமானார். அமரரான சாதனையாளர் கணேசனைப் பற்றி எழுத்தாளர் மொழிவாணன் எழுதிய இந்த நூல் என்றும் அவரை நினைவு கூரும்.

உண்மையிலேயே இத்தகைய படைப்புகள் நூலுருப் பெற ஊடகங்கள் பெரிதும் துணை புரிகின்றன. தினகரன் வாரமஞ்சரியில் வி.பி.கணேசன் பற்றிய தொடராக வந்த முப்பது அத்தியாயங்கள் நூலுருப் பெற்றுள்ளது. இதற்குக் களம் அமைத்துக் கொடுத்த வாரமஞ்சரியின் மகத்தான பணிக்கும் எமது பாராட்டுக்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.