புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 
இஸ்லாமிய கீதத்தில் இமயமாய் திகழ்ந்த ஈ.எம்.ஹனீபா

இஸ்லாமிய கீதத்தில் இமயமாய் திகழ்ந்த ஈ.எம்.ஹனீபா

“வானகமும் வையகமும் யாவும் மறைந்து விடும்
ஆனதினால் சோதரனே ஆண்டவனை நீ தொழுவாய்
மெளத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா
மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் ஞாயமா”

இந்தப் பாடல் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் மரணத்தை நினைவூட்டிக்கொண்டிருந்த நாகூர் ஹனீபா அவர்களும் கடந்த வியாழனன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டார்.

இஸ்லாமிய கீதம் என்றாலே நாகூர் ஹனீபா பாடல்கள்தான் என்று நினைக்கும் அளவுக்கு ஆயிரத்துக்கும் மேலாக பாடி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நாகூர் ஹனீபா.

மேலும் தலைவாரி பூச்சூடி உன்னை, பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை. என்ற அழகிய பாடலை தமிழ் சினிமாவில் பல மெட்டுக்களில் பல பாடகர்களும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாகூர் ஹனிபாவும் இதற்கு விதி விலக்கில்லாமல் அழகாகப் பாடியுள்ள போதும், அதனை அத்திபூத்தாற்போல இல்லை இல்லை குறிஞ்சி மலர் பூப்பது போல மிகமிக அருமையாகவே கேட்க முடிகிறது.

அன்று பாடினாலும், இன்று பாடினாலும் தத்துவக் கருத்தில் மட்டும் குறைவே இல்லை.

அல்லாஹ்வை நாம் தொழுதால், ஆதி அருள் கனிந்திலங்கி, எல்லாப் புகழும் இறைவனுக்கே, மதீனா நகருக்கு போக வேண்டும் என்று தொடங்கி நூற்றுக்கணக்கான கீதங்கள் சொந்த இசையில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்து முஸ்லிம் ஒற்றுமை இந்தியாவைப் பொறுத்தமட்டில் பிரதானமானது. எனவே அன்றே பாடினார் எம்.ஜி.ஆர்.நடித்த குலேபகாவலி படத்தில் டபிள்யூ.எஸ்.கிருஷ்ணனோடு இணைந்து.

‘இந்து முஸ்லிம் ஒற்றுமை பெற, அருள்தர வேண்டும் நாயகமே! நாயகமே நபி நாயகமே!’ இதனால் மண் வாசனையை காட்ட நினைத்தாரோ என்னவோ, பால் மணக்குது பழம் மணக்குது, பழனி மலையிலே என்ற ரமணி அம்மாள் பாடல் மெட்டில் அருள் மணக்குது, அறம் மணக்குது அரபு நாட்டியே என்று பாடினார் ஹனீபா. மேலும் ஒரு பாடலில், இணையில்லாத அன்பின் உருவே - இந்து முஸ்லிம் போற்றும் குருவே என்று நாகூர் மீரானை விளித்துப் பாடியிருக்கிறார்.

புலவர் ஆப்தீன், நாகூர் சலீம், பேராசிரியர் அப்துல் கபூர் போன்றோர் இலகு நடைமுறையில் பாடல்களை இயற்றிக் கொடுத்திருப்பதும் இசை முரசின் சிறப்புக்கு ஒரு காரணம்.

அழகு தமிழ் எப்படியெல்லாம் இழையோடுகிறது என்பதை அறிய வேண்டுமானால் இசை முரசு ஹனீபாவின் பாடல்களைக் கேட்கத்தான் வேண்டும், என்பேன்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.