புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 
லண்டனில் மு.நித்தியானந்தனின் கூலித்தமிழ் நூல் வெளியீட்டு விழா!

லண்டனில் மு.நித்தியானந்தனின் கூலித்தமிழ் நூல் வெளியீட்டு விழா!

கூலித்தமிழ் என்ற நூல் வெறுமனே மலையகத்தவரின் அவல வரலாற்றைச் சொல்லுகின்ற நூல் அன்று. அது, கற்க வழியற்றுக் கிடந்த தோட்டத் தமிழரின் போர்க்குணத்தையும், இலக்கியப் படைப்புக்களையும் புலப்படுத்துகின்ற நூல்.

தோட்டத் தொழிலாளர்கள் அவலம் பற்றி ஈழத் தமிழர்களும் கேட்டும் கேளாதவர்கள் போலவே இருந்துவிட்டார்கள். அவர்களும் இணைந்து குரல்கொடுத்துச் சகோதரத் தமிழரின் அவலத்தைத் தணித்திருக்கலாம். அன்றைய ஈழத்தமிழரின் செயலுக்காக நான் வெட்கப்பட்டு, வேதனைப்படுகிறேன். ஈழத்தமிழர் அசட்டையாக இருந்தார்கள் என்றால், தமிழ் நாட்டுத் தமிழரும் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள்.

தமிழகத்திலிருந்து புதுவாழ்வு தேடிவந்த சகோதரர்கள் இலங்கை மலைநாட்டில் அடிமைகளாக வாழ்ந்ததை அவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்களும் மெளனிகளாகவே இருந்துவிட்டார்கள்.

அவர்களையும் மன்னிக்க முடியவில்லை. மலையகத் தமிழரின் பிறந்தகமும் அவர்களின் புகுந்தகமும் அவர்களைப் புறக்கணித்தது என்பது சோகமான உண்மை என்று தமிழறிஞரும், வழக்கறிஞருமான செ. சிறிஸ்கந்தராஜா லண்டன் சொறாஸ்ட்ரியன் மண்டபத்தில், மு. நித்தியானந்தனின் நூல் வெளியீட்டில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் பேசுகையில்,

ஒக்ஸ்போர்டு ஆங்கில அகராதி தரும் விளக்கத்தின்படி, 1638ஆம் ஆண்டுக்கு முன்னரே கூலி என்ற சொல் ஆங்கில மொழி வழக்கில் வந்துவிட்டது என்பது தெளிவாகிறது. கூலியாள் என்ற பொருள் தரும் கூலி என்ற சொல் பிரித்தானியர் தமிழ் நாட்டுக்குள் நுழையுமுன்னரேயே ஆங்கில அகராதியில் ஏறிவிட்டது. திருக்குறளில் கூலி என்ற சொல் பயிலப்பட்டிருந்தாலும், அது சம்பளம், வேதனம் என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது. கூலியாள், கூலிக்காரன் என்ற பொருளில் அல்ல. எந்தத் தமிழிலக்கியத்திலும் கூலி என்ற சொல் கூலிக்காரன் என்ற பொருளில் கையாளப்படவில்லை என்று தெரிவித்தார்.

இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் இந்தியத் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி புதுமைப்பித்தன் துன்பக்கேணி என்ற சிறுகதையிலே விபரித்துச் செல்கிறார். ஆனால், பிற்பட்ட காலங்களில் எங்களின் தொப்புள்கொடி உறவான மலையகத் தமிழர்களைப் பற்றித் தமிழகத்தில் எந்த அக்கறையும் கரிசனையுமே இல்லாது இருந்துவிட்டோம் என்ற குற்றவுணர்வு மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் நூலை வாசித்ததும் மனதில் எழுந்தது.

வட, கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை மலையகத் தமிழர்களின் பிரச்சினை குறித்து வழங்கவில்லை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது என்று இவ்விழாவின் சிறப்பு அதிதியாகக் கலந்து சிறப்பித்திருந்த தமிழகத்தின் ஆவணப்பட இயக்குநரும், எழுத்தாளருமான அம்ஷன் குமார் தனது சிறப்புரையில் தெரிவித்தார்.

மலையக இலக்கியத்தின் ஆரம்பகால எழுத்துப் பதிவுகளை அவர் ஐரோப்பிய நூலகங்களிலும் தமிழகத்திலும் தேடி, ஆய்வு செய்து முக்கிய ஆவணமொன்றை நம்மிடம் கையளித்திருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது.

இந்த நூலில் அவர் தந்திருக்கும் தகவல்களும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. பிரிட்டனிலேயே கூலித்தமிழ் வகுப்புகளை அந்தக் காலத்திலேயே நடாத்தியிருக்கிறார்கள் என்கிற அபூர்வமான தகவல்களை எல்லாம் இந்த நூலில் பார்த்து வியப்புற்றேன். தமிழகத்தில் மலையகத்தமிழர்கள் மீது கவனத்தை ஈர்க்கும் முக்கிய பணியை இந்த நூல் தொடக்கி வைத்திருக்கிறது என்று அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார். ஊடகவியலாளர் நடாமோகனின் வரவேற்புரையோடு ஆரம்பமான இவ்விழா செல்வி. சிவபாலனின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது.

இலங்கையை வளம் கொழிக்கும் நாடாக மாற்றிய மலையகத் தமிழர்கள் அடையாளம் அற்றவர்களாக, தாங்கள் உழைத்து மாண்டதற்கான ஆதாரங்களே இல்லாதவர்களாக உலவி வருகின்றனர். வாக்குரிமை பறிக்கப்பட்டு, குடியுரிமை மறுக்கப்பட்டு, அரசியல் பிரதிநிதித்துவம் நிராகரிக்கப்பட்டு, உழைக்கவும் சாகவுமே சலுகை வழங்கப்பட்ட இனமாக மலையகத் தமிழினம் உழல்கிறது.

நூறு ஆண்டுகால ஒடுக்குமுறையிலிருந்து இன சமத்துவம் கோரியும், பிறருக்குள்ள மரியாதை தங்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென்றும் மலையகத் தமிழர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். மலையகத் தொழிற்சங்கங்களும் பிற சமூக அமைப்புக்களும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சமூகப் போராட்டத்திற்கு அறிவுலகில் தத்துவார்த்த விளக்கம் தரும் அறிவுஜீவிகளும் மலையகத்தில் உருவாகி வருகின்றனர் என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.