புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 

தமிழகத்தில் தீவிரமாகும் ஊழல் பிரசாரம்?

தமிழகத்தில் தீவிரமாகும் ஊழல் பிரசாரம்?

விஊழல் புகார்கள் இப்போது தமிழக ஆளுநர் ரோசய்யா தங்கியிருக்கும் ராஜ்பவனைத் தட்டத் தொடங்கி விட்டன. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல் புகார் குறித்து விசாரிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேரணி ஒன்றை நடத்தி “அ.தி.மு.க ஆட்சியில் 25 துறைகளில் ஊழல். இது பற்றி விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பேரணியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரமே கலந்து கொண்டிருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊழல் புகார் பற்றி விசாரிக்க கோரும் வழக்கு நிலுவைகளில் இருக்கும் நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் “உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்” என்று அறிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க.வோ இது பற்றி வாய் திறக்காமல் இருக்கிறது. மக்கள் மன்றத்தில் அ.தி.மு.க.வினரின் ஊழல் பற்றி பேசுகிறார்கள். பிரசாரம் செய்கிறார்கள். ஆனால், ஆளுநரிடம் ஊழல் புகார் கொடுப்போம் என்று அறிவித்துவிட்டு சுமார் மூன்று மாதங்களாக அமைதியாக இருக்கிறது தி.மு.க. மற்ற கட்சிகள் ஊழல் புகார் கொடுத்து அ.தி.மு.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தட்டும். இறுதி ரவுண்டில் நாம் களத்துக்கு வரலாம் என்று காத்திருக்கிறதா அல்லது அக்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருக்கும் 2ஜி வழக்கு இப்படியொரு பிரசாரம் மேற்கொள்வதற்கு தடையாக இருக்கிறதா என்பது தெரிய வில்லை.

ஏனென்றால், 2ஜி விவகாரத்தில் இதுவரை இரு வழக்குகள் தி.மு.க.வுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்க இப்போது மூன்றாவதாக ஓர் எப்.ஐ.ஆர். போட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் சி.பி.ஜ கோரிக்கை வைத்து, அந்த விவகாரம் ஜுலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதில் எப்.ஐ.ஆர். போடுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால் 2ஜியில் தி.மு.க. சந்திக்கும் மூன்றாவது வழக்காக வந்துவிடும். 2ஜி சாட்சியங்களை அழிக்க தி.மு.க.வில. உள்ளவர்களும் அப்போது இருந்த சில அதிகாரிகளும் பேசிய உரையாடல்தான் மூன்றாவது வழக்குக்கு அஸ்திவாரம்.

இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் “ஊழல் புகாரை” முன் வைத்து வெற்றி, தோல்விகளை நிர்ணயித்தது. 1977ல் தி.மு.க தோற்றதிற்கும் பின்னர் 1996ல் அ.தி.மு.க தோற்றத்திற்கும் மாநில அரசு நிர்வாகத்தில் இரு கட்சிகள் மீதும் அப்போது சுமத்தப்பட்ட ஊழல் குற்றசாட்டுகள் முக்கியக் காரணம்.

ஆனால், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோல்விக்கு அந்தக் கட்சி மத்திய அரசியல் பங்கேற்ற போது நடைபெற்றதாக கூறப்பட்ட “2ஜி ஊழல்” தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. இப்போது மீண்டும் அ.தி.மு.க.வுக்கு மாநில அரசு நிர்வாகத்தில் தலைதூக்கியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் அக்கட்சியின் வெற்றிக்கு வேட்டு வைப்பதாக அமைந்து விடும் போலிருக்கிறது.

இதற்கு காரணம் அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே “ஊழல் குற்றச்சாட்டு” வளையத்தில் சிக்கிக் கொண்டிருப்பதுதான். தி.மு.க எதிர்க்கட்சியாக இருப்பதால், 2ஜி ஊழல் புகார் தாக்கம் 2011இல் அக்கட்சியின் வெற்றியைப் பாதித்தது போல் இந்த முறை பாதிக்காது என்றே தெரிகிறது. ஏனென்றால் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் மீது என்ன புகார் சொல்லப்பட்டாலும் அதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வ தில்லை.

இது கடந்த கால தேர்தல் வரலாறு. இப்போது தி.மு.க தமிழகத்திலும் ஆட்சியில் இல்லை. மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. அதனால் அவர்களுக்கு “ஊழல் பிரசாரத்தால்” பெரும் தொல்லை வந்து விடும் என்று தோற்றம் ஏதுமில்லை.

அதை மனதில் வைத்துத்தான தி.மு.க சார்பில் மதுரையில் பிரமாண்டமான மாநாடு ஒன்றை மே மாத இறுதி வாரத்தில் கூட்டுகிறார்கள். அதில் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.