புத் 67 இல. 19

மன்மத வருடம் சித்திரை மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ரஜப் பிறை 20

SUNDAY MAY 10 2015

 

 
மண் மீட்புப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி

சொந்த மண்ணில் மீள்குடியேற வேண்டும் எனும் மக்களின் இலட்சியக் கனவு நனவாகி வருகின்றது

தமிழரின் சம்பூர் விடுவிப்பு:

மண் மீட்புப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி

புதிய அரசிற்கு சம்பந்தன் நன்றி: எவரும் எதிராக செயற்பட வேண்டாமெனவும் கோரிக்கை

முதலீட்டு வலயத்துக்காக முன்னைய அரசால் சுவீகரிக்கப்பட்ட திருகோண மலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியை தற்போதைய அரசு மக்களிடமே மீளக் கையளித்தமையை நாம் வரவேற்கின் றோம். இது தமிழ் மக்களின் மண் மீட்புப் போராட்டத்திற்குக் கிடைத்த முதலாவது மாபெரும் வெற்றியாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த சொந்த மண்ணில் மீள் குடியேறி தொழில் செய்து சுதந்திரமாக வாழவேண்டும் என்ற தமிழ் மக்களின் இலட்சியக் கனவு நனவாகி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வேண்டும் என்பதில் உறுதியாக விடாப்பிடியாக இருந்து வந்த சம்பூர் பகுதி மக்களின் இந்த விடாப்பிடி தற்போது புதிய அரசில் வெற்றியளித் துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பகுதியில் முதலீட்டு வலயத்துக்காக சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் 818 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்படு வதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

கிழக்கில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து சம்பூரில் இருந்தும் மக்கள் பலர் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறினர். இதனையடுத்து அந்தப் பகுதியில் 818 ஏக்கர் காணி (மக்கள் குடியிருப்புகள்) முதலீட்டு வலயத்துக்காகவும், 237 ஏக்கர் காணி (மக்கள் குடியிருப்புக்கள்), கடற்படை முகாமுக்காகவும், 540 ஏக்கர் காணி (விவசாய நிலங்கள்) அனல் மின் நிலையத்துக்காகவும். 40 ஏக்கர் காணி (விவசாய நிலங்கள்) மின்சார சபைக்காக வும் கடந்த அரசால் சுவீகரிக்கப்பட்டி ருந்தது. இந்தக் காணிகளை விடுவிக்குமாறு நாம் கடந்த அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன் மக்கள் போராட்டங்களையும் நடத்திவந்தனர்.

ஆனால் குறித்த காணிகளை விடுவித்து மக்களை விரைவில் குடியேற்றுவோம் என்று கடந்த அரசு வாக்குறுதிகளை வழங்கி வந்த போதிலும் இறுதிவரைக்கும் அதனை நிறை வேற்றவில்லை. இந்நிலையில் இடம்பெயர்ந்த சம்பூர் மக்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வேண்டும் என்பதில் உறுதியாக விடாப்பிடியாக இருந்துவந்தனர். மக்களின் இந்த விடாப்பிடி தற்போது புதிய அரசில் வெற்றி யளித்துள்ளது.

சம்பூர் பகுதியில் முத லீட்டு வலயத்துக்காக சுவீகரிக்கப்பட்ட மக்க ளின் 818 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்படும் வர்த்தமானி அறிவித் தலில் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார். இதனை நாம் வரவேற்கின் றோம். இதேவேளை சம்பூர் பகுதியில் கடற்படை முகாமுக் காக சுவீகரிக்கப்பட்ட 237 ஏக்கர் காணியும் விரைவில் விடுவிக்கப்படும் என்று மைத்திரி அரசு எமக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளது.

புதிய அரசு சம்பூரில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு முன்வந்துள்ளமைக்கு நாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். குறிப்பாக, இதற்காகப் பாடுபட்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் கடந்த பத்து வருடங்களாக வேறு இடங்களில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வரும் சம்பூர் மக்கள் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் மைத்திரி அரசின் இந்த நல்லெண்ண நடவடிக்கைக்கு எதிராக எவரும் செயற்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். இதேவேளை, சம்பூரில் மீள்குடியேறவுள்ள மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு நாம் அரசை வேண்டிக்கொள்கின்றோம் என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.