புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 
தாமதமான தீபாவளி மேலதிக முற்பணம் ரூபா3,500 டிசம்.04 வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம்

தாமதமான தீபாவளி மேலதிக முற்பணம் ரூபா3,500 டிசம்.04 வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம்

தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தையில் மேலும் பல விடயங்கள் ஆராய்வு

தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் இன்னும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படாததன் காரணமாக தொழிலாளர்களின் தீபாவளி பண்டிகை தேவைக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மேலதிக முற்பணமாக 3,500 ரூபாவை பெற்றுக்கொடுக்கும் தீர்மானம் அமைச்சரவையில் கொண்டு வரப்பட்டது.

எனினும் தேயிலை சபையின் ஊடாக பிராந்திய கம்பனிகள் அதனை பெற்றுக்கொடுப்பதில் உள்ள தாமதங்களை ஆராய்ந்து தாமதங்களை துரிதமாக்கவும் சம்பள உயர்வு குறித்து கலந்துரை யாடுவதற்குமான சந்திபொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கான மேலதிக முற்பணத்தை வழங்குவதில் உள்ள சிக்கல்கள் ஆராயப்பட்டு டிசம்பர் நான்காம் திகதி முன்பாக சகல தொழிலாளர்களுக்கும் இதனை வழங்கி வைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கடன் என்ற வகையில் இதனை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு தொழிலா ளியிடம் இருந்தும் விண்ணப்பங்களை பெறுவதில் இருந்த தாமதமே இதற்கான காரணம் எனவும் எதிர்வரும் 30ம் திகதியோடு இந்த விண்ணப்பம் பெறும் கால எல்லை முடிவடைவதன் காரணமாக டிசம்பர் 4ம் திகதி முன்பதாக அதனை பெற்றுக்கொடுக்க முடியும் என தோட்ட முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

அதேநேரம் இலங்கை தேயிலை சபை தலைவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர்கள் மனோ கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்தனர். மேலும் சம்பள அதிகரிப்பு குறித்து தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்கும் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் குறித்தும் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துரை யாடப்பட்டது.

இந்தச் சந்திப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர் ப. திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், அ. அரவிந்தகுமார் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர். ராஜாராம் ஆகியோரும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் சார்பில் ரொஷான் ராஜதுரை, மாலிக் குணதிலக ஆகியோர் கலந்து கொண்டனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.