புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 
துருக்க ரஷ்யாவின

ரஷ்யா போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியபோது விளாடிமிர் புடின் பெரிதாக அகராதி புரட்டி வார்த்தைகளை தேடி ஆத்திரத்தை வெளிப்படுத்தவில்லை. முதுகில் குத்தும் வேலை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார். ஆயிரம் வார்த்தைகளை ஒன்று சேர்த்து திட்டியிருந்தால் கூட இந்த ஒரு வார்த்தை சொல்லும் அர்த்தத்திற்கு நிகராகி இருக்காது.

துருக்கி தெரிந்தே விமானத்தை சுட்டுவிட்டது, சுட்டது போக அதுபற்றி எம்மிடம் பேச்சுக்காவது மன்னிப்புக் கேட்கவில்லை, பதிலுக்கு எமது எதிரி நாடுகளிடம் போய் ஆலோசித்துவிட்டது, அப்படியா நாம் பழகி னோம்? என்று புட்டின் சொன்ன முதுகில் குத்தும் கதைக்கு எத்தனையோ அர்த்தங்கள் எடுக்கலாம்.

இந்த விவகாரம் குறித்து துருக்கினதும், ரஷ்யாவினதும் இராஜதந்திர அரசியல் ஒருவகையில் பார்த்தால் சிறுபிள்ளை விளையாட்டோடு ஒப்பிடலாம். அதாவது, நான் அடிப்பது போல் போகிறேன் நீ பிடிப்பது போல் பிடி என்று பொய் கோபம் காட்டுவதாகவே எடுக்க வேண்டும்.

கடந்த செவ்வாய்க்கிழமை சிரிய - துருக்கி எல்லையில் பறந்து கொண்டிருந்த எஸ்.யூ.24 ரஷ்ய போர் விமானத்தை துருக்கியின் எப்-16 ஜெட் விமானம் ஏவுகணையால் தாக்கி வீழ்த்திய சம்பவம் சர்வதேச அளவிலான யுத்தம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு போதுமானதாக இருக்கும். ஏனென்றால் துருக்கி என்பது நேட்டோ அங்கத்துவ நாடு, வெளிப்படையாக இல்லாவிட்டாலும் ரஷ்யாவுக்கு நேட்டோ என்றால் பரம எதிரி.

ஏற்கனவே இரு தரப்புக்கும் இடையில் தலைக்கு மேல் முறுகல் இருக்கிறது. பட்டாசு கொளுத்தி விட்டாலும் சண்டைக்குப் போகும் சூழலே இருந்து வந்தது.

இது ஒரு பக்கம் இருக்க விமானம் துருக்கியின் வானுக்குள் அத்துமீறி நுழைந்ததாலேயே சுட்டு வீழ்த்தியதாக துருக்கி சொல்கிறது. ஆனால் இது வடிகட்டிய பொய் என்று சொல்லும் ரஷ்யா விமானம் சிரிய வானுக்குள்ளேயே இருந்தது என்கிறது. விமானம் ஏதோ புஷ்வானம் போல் எரிந்துகொண்டு விழுந்தது சிரியாவுக்குள் ஆகும்.

விழுந்த விமானத்தில் இருந்து பரசூட்டைக் கொண்டு தரையிறங்கிக் கொண்டிருந்த ஒரு விமானியை குருவி சுடுவது போல் சுட்ட கிளர்ச்சியாளர்கள் அந்த படத்தை இணையதளத்தில் போட்டு விளம்பரம் தேடிக் கொண்டனர். மற்றொரு விமானி உயிர் தப்பிவிட்டார். விமானம் ஒரு வினாடிக்கிக் கூட துருக்கி பக்கம் போகவில்லை என்று அந்த விமானி சொல்கிறார்.

துருக்கியின் பக்க நியாயம் ஒன்றே ஒன்றுதான், எமது எல்லைக்குள் வந்தால் சுடுவதற்கு எமக்கு லைசன்ஸ் இருக்கிறது என்பதாகும். ஆனால் ரஷ்யாவோ நான் உங்கள் எல்லைக்குள் வரவே இல்லை என்று பதில் தர்க்கம் புரிகிறது.

பிறகென்ன சண்டைபிடித்துக் கொள்ள வேண்டியது தானே, என்று யாரேனும் உசுப்பேற்றினால் அதனை கேட்கும் அளவுக்கு துருக்கியும் ரஷ்யாவும் காதில் பூ சுற்றியவர்கள் அல்ல.

இப்போதெல்லாம் இரண்டு நாடுகளும் இந்த விவகாரத்தை ஒட்டி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது நன்றாக தெரிகிறது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டவுடன் துருக்கி உடனடியாக தனது நேட்டோ நண்பர்களை நாடியது, ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு சுட்டதற்கு நியாயம் சொல்லி கடிதம் எழுதியது, ஜனாதிபதி எர்துகான் பாதுகாப்பு தரப்பினருடன் அவசர கூட்டத்தை நடத்தியது என்று பரபரப்பு காட்டியது.

மறுபக்கம் ரஷ்யா துருக்கியுடனான இராணுவ ஒத்துழைப்புகளை இடைநிறுத்தியது, ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் துருக்கி பயணம் உடன் இரத்து செய்யப்பட்டது, நாட்டு மக்கள் துருக்கிக்கு போவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது, துருக்கி ஏற்றுமதி பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன, ரஷ்யாவின் விமான எதிர்ப்பு கட்ட மைப்பு சிரியாவில் இருந்து துருக்கி பக்கமாக திருப்பி வைக்கப்பட்டது. அடடா! பெரிதாக ஏதோ நடக்கப்போகிறது என்று ஆர்வமாக பார்த்திருந்தால் பாவம் ஏமாந்து போவீர்கள்.

இப்போது இந்த இரு நாடுகளும் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகளை கொச்சையாக செல்வதென்றால் பம்மாத்து விளையாட்டு என்று குறிப்பிடலாம். இதைப் போய் விறுவிறுப்பாக பார்த்துக்கொண்டிருந்தால் கடைசியில் ஆறு பந்துக்கு ஆறு ஓட்டங்கள் என்றிருக்கும் போது மழை குறுக்கிட்ட கதையாகப் போய்விடும்.

ரஷ்யாவும் துருக்கியும் இப்படி பரபரப்பாக நடவடிக்கைகளில் குதித்தாலும் இன்றைய சூழலில் இந்த இரு நாடுகளாலும் சண்டை பிடிக்க தெம்பில்லை.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் துருக்கிய ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகானுக்கும் இடையே எத்தனையோ விடயங்களில் பொருந்திப் போகிறது. கடந்த காலத்தில் நாட்டில் ஜனாபதியாக பதவியேற்க அரசியலமைப்பில் தடங்கல் வந்தபோது அதனையும் தனது சாமர்த்தியத்தால் சாளித்தவர்தான் இந்த புடின். இதே வழியையே எர்துகானும் பின்பற்றுகிறார். இருவரது அரசியல் வாழ்க்கையை பார்த்தால் அவர்களின் ஆதரவாளர்கள் குருட்டுத்தனமான ஆதரவாளர்களாக இருப்பதோடு எதிர்ப்பாளர்கள் பரம எதிரிகளாக இருக்கின்றனர். இதற்கு இடையே நடுநிலையானவர்கள் மிக சொற்பமே. இருவரும் தம்மை ஹீரோ அந்தஸ்த்தில் வைத்துக்கொண்டு அரசியல் நடத்துபவர்கள். இப்படிப்பட்ட பின்னணியில் ஏதாவது பிரச்சினை வந்தால் தமது ஹீரோ அந்தஸ்த்துக்கு பாதகம் ஏற்படாமலேயே அதனை கையாள வேண்டிய கடமை இருவருக்கும் இருக்கிறது. இந்த விமான தாக்குதல் விவகாரத்திலும் இந்த இரு தலைவர்களும் இன்று அதனைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

என்றாலும் நடைமுறையில் துருக்கியால் ரஷ்யாவுடன் மல்லுக்கு போக முடியாது. ஏற்கனவே நாட்டு அரசியலில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன.

எர்துகான் அரசு ஒருமுறை தேர்தலில் பெரும்பான்மையை இழந்து படாத பாடுபட்டே மறு தேர்தலில் ஆட்சியை பிடித்தது. எதிர்க்கட்சிகள் எங்கே என்று கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் நேரம் இப்போது ரஷ்யாவுடன் சண்டைக்குப் போனால் ஆட்சிக்கே ஆபத்தாகவும் முடியலாம் என்று எர்துகான் நினைத்தால் அதில் நியாயம் இருக்கிறது.

மறுபக்கம் நாட்டில் குர்திஷ் பிரிவினைவாதிகளின் தொந்தரவு பொறுக்க முடியாத நிலையில் இருக்கிறது. அயல் நாட்டில் இருக்கும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு அடிக்கடி நாட்டுக்குள் புகுந்து வாலாட்டி விட்டு போகும் சூழல். இப்போது போய் ரஷ்யாவை வம்புக்கு இழுத்தால் துருக்கியும் கடைசியில் சிரியாவின் நிலைமைக்கு வந்துவிடும் என்று எர்துகானுக்கு நன்றாக தெரியும்.

இதுவெல்லாம் துருக்கியின் தனிப்பட்ட பிரச்சினை. துருக்கி யுத்தத்திற்கு போவதென்பது துருக்கியின் பிரச் சினை மட்டுமல்ல. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என்று மேற்குலக பிரச்சினையாகும். ஏனென்றால் துருக்கி என்பது தனியாளல்ல. அது நேட்டோ அங்கத்துவ நாடு. துருக்கிக்கு ஆபத்து என்றால் நேட்டோ உதவுவது கட்டாயமாகும்.

எனவே, துருக்கி சண்டைக்கு போகிறதென்று அமெரிக்காவால் அறிக்கை வாசித்து விட்டு வேடிக்கை பார்க்க முடியாது. எனவே, ரஷ்யாவோடு இன்றைய நிலையில் யுத்தம் ஒன்றில் சிக்கிக் கொள்ள மேற்குல நாடுகள் விரும்பவில்லை.

அதற்கு ஐ.எஸ். குழுவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பிரான்ஸ் தாக்குதலுக்கு பின்னர் மேற்குலகின் ஒரே நோக்கம் ஐ.எஸ்ஸ¤க்கு எதிராக பரந்த கூட்டணி ஒன்றை சேர்ப்பது. இதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டே நாடு நாடாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார். கடந்த வியாழக்கிழமை கூட ரஷ்யாவுக்குப் போய் புடினை சந்தித்திருந்தார்.

எனவே, விடாப்பிடியாக துருக்கி துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சண்டைக்கு போனாலும் அமெரிக்கா அமைதித் தூதுவர் பாத்திரத்தில் நடிக்கத்தான் இப்போது வேஷம் கட்டியிருக்கிறது.

மறுபக்கம் ரஷ்யாவின் நிலைமையும் இப்படித்தான். ஏற்கனவே உக்ரைன் விவகாரத்தால் மேற்குலகை போது மான அளவுக்கு பகைத்துக் கொண்டு பொருளாதார தடைகளையும் வாங்கிக் கட்டிக்கொண்டது. இந்த நிலை யில் துருக்கியை கிளறிக்கொண்டு மேற்குலகை இன்னும் பகைத்துக் கொள்ளும் தேவை இருக்காது.

வெளிநாட்டு, உள்நாட்டு அரசியல் ஒருபக்கம் இருக்க துருக்கிக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒருவரை ஒருவர் தங்கியிருக்கும் நிர்ப்பந்தம் பெரிதாகவே இருக்கிறது.

ரஷ்யா என்பது துருக்கியின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக நட்பு நாடு. துருக்கியின் 60 வீதமான வலுசக்தி ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ரஷ்யா சுற்றுலா பயணிகள் அதிகம் போகும் நாடுகளில் துருக்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ரஷ்யாவில் தங்கியிருக்கும் துருக்கியின் ஆடை உற்பத்தி மற்றும் கட்டுமான வர்த்தகம் பிரமாண்டமானது. 100க்கும் அதிகமான துருக்கியின் கட்டுமான நிறுவனங்கள் ரஷ்யாவில் இயங்குகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

எனவே, எப்படிப் பார்த்தாலும் துருக்கியும் ரஷ்யாவும் மல்லுக்கு போவதற்கான சாத்தியங்கள் இல்லவே இல்லை. இந்த இரு நாடுகளும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று நிரூபிக்கும் பிரயத்தனத்திலேயே இப்போது தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.