புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 

short stories

ஏ.k.அப்துல் றகுமான் ஏறாவூர் - 06

மெதுவாகத் தூறிக்கொண்டிருந்த மழைத்தூறல் தகட்டுக் கூரையில் தடதடவெனும் ஓசை லயத்துடன் பெருமழையாகப் பெய்யத் தொடங் கிய வேளை காற்றும், நானும் சளைத்தவனல்ல என்று ஆக்ரோசமாக வீசத் தொடங்கியது.

இடையிடையே காதைச் செவிடாக்கும் இடி முழக்கம். கண்ணைப் பறிக்கும் மின்னல் என இயற்கையின் வெறித்தாண்டவம் பூமியில் அரங்கேறிக் கொண்டிருந்தது.

நீண்ட நாட்களாக வரட்சியால் காய்ந்து பிளந்து கிடந்த பூமித்தாய் தன் தாகம் தீர வாஞ்சையுடன் நீரை வாங்கிக் கொண்டதுடன் தனக்கேயுரிய மண் மணத்தைக் காற்றில் பரப்பிக் கொண்டிருந்தது.

இந்த வேடிக்கைகளெல்லாம் வெளியில் நடந்து கொண்டிருக்கத் தகட்டுக் கொட்டிலினுள்ளே காற்றினால் தள்ளப்படுகின்ற கதவுக்கு உரலொன்றை முட்டுக்கொடுத்தவாறு தனிமையும் பயமும் கலந்த அச்ச உணர்வுடன் சரீனா என்ன செய்வதென்றறியாத நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தாள்.

வீசுகின்ற காற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத குப்பி விளக்கு அணையட்டுமா? அல்லது சிறிது நேரங்கழித்து அணையட்டுமா? என்றவாறு அல்லாடிக் கொண்டிருந்தது. அதேநேரம் வேகமாக வரும் காற்றுக்குத் தாழ்ப்பாளில்லாத தகட்டுக் கதவு வழிவிட்டு விரியப் பார்க்கிறது.

உரல் மட்டும் போதாது பெரிய தடியொன்றையும் இறுக்கிய பிறகுதான் கதவு மெளனம் காத்தது.

வீசுகின்ற காற்றும் குளிர் மழைச் சாரலும் சேர்ந்து வெறும் பாயில் சரியாகப் போர்த்தப்படாத நிலையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு வயதான சரீனாவின் குழந்தை எழுந்து பயந்து அழத் தொடங்கியது.

கதவைப் பலப்படுத்துவதில் கவனமாயிருந்த சரீனா ஓடிவந்து குழந்தையைத் தூக்கி அரவணைத்த அதே நேரம் கதவு மீண்டும் தடதடத்தது.

ஆனால் இம்முறை காற்றினால் ஏற்பட்ட தள்ளலாக இல்லாமல் யாரோ கதவைப் பலமாகப் பிடித்துத் தள்ளியதாகவே சரீனாவுக்குத் தோன்றியது.

அந்தக் குளிரான வேளையிலும் சரீனாவுக்குச் சில்லென்று வியர்த்தது.

“யாரது?” என்று குரல் கொடுத்த சரீனாவுக்குப் பதிலெதுவும் வெளியிலிருந்து வரவில்லை.

சொற்பநேர அமைதிக்குப் பின் மீண்டும் கதவு தள்ளுப்படக் குழந்தையை அணைத்துக் கொண்டே எழுந்தவாறு அதட்டும் தொனியில் “யாரு கதவத் தள்ளுற” என்று குரலை உயர்த்திக் கேட்ட பின்தான் “நான்தான்” என்று தணிந்த குரலில் பதில் வந்தது.

“நான்தானிண்டா யாரு” “நான்தான் கனிபா வந்திரிக்கன் சத்தம் போடாமக் கதவத்துற” என்ற பதிலைக் கேட்டதும் நிலை குலைந்து போன சரீனா தன்னைச் சுதாகரித்துக் கொண்டே “இன்நேரம் எதுக்காக நானா வந்தீங்க என்ன விசயமெண்டாலும் காலைல வாங்க இப்ப தொல்லப் படுத்தாமப் போங்க ஒங்கட உடன் பிறப்பா நெனச்சிக்கேக்கன் ஆண்டவனுக்காவன்டிப் போங்க” அழுகுரலில் சரீனா கூறி முடிக்கவும் “சரீனா நான் ஒன்னச் சந்திக்கத்தான் இந்த மழையிலையும் காற்றிலயும் வந்த உள்ளுக்கு வாங்கண்டு ஒரு வார்த்த செல்லாம யாரயோ ஊரானத் திரத்துறாப்போல என்னையும் திரத்துறியே கதவத்துற”

“நீங்க இப்ப போகல்லண்டா நானும் புள்ளயும் குப்பி விளக்க ஊத்திக்கிட்டுப் பத்தவெச்சிக்கிட்டுச் செத்துப் போவம்”

“சேச்சே அப்படி மடத்தனமான காரியமெல்லாம் செஞ்சி போட்றாத செரி நானிப்ப போறன் ஆறுதலா இருந்து யோசிச்சிப் பாரு இந்த நிலமயில என்ன உட்டா ஒனக்கு யாரு இரிக்கா அத உணந்துக்க நான் நாள இரவைக்கு வாறன்” அந்தக் குரலில் மதுபோதையின் வீச்சை உணரக் கூடியதாக இருந்தது.

கனிபா இரண்டு குழந்தைகளின் தந்தை மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு வரும் பணத்தை மதுவுக்கும் மாதுவுக்குமாகச் செலவழிப்பதும் நிரந்தரத் தொழிலேதுமில்லாத கட்டாக்காலியாய் ஊரைச் சுற்றுவதும் தான் அவனது வேலை. தனது கணவனின் நண்பன் என்ற காரணத்தால்தான் அறிமுகமானவன்.

“ஆண்டவனே மேலும் மேலும் ஏன் இப்பிடிப் போட்டு என்னச்சோதிக்கா நானப்பிடியென்ன பாவம் செஞ்சன்”

சரீனாவின் விழிகளில் கண்ணீர் ஆறாகப் பொங்கியது. வெளியே மழை இன்னும் வேகம் கூட்டியது. இளமையின் செல்வச் செழிப்பில் சிட்டுக் குருவியாய்ப் பறந்து திரிந்த சரீனா இன்று யாருமற்ற அநாதையாய் உணவின்றித் தங்க இடமின்றி அனுசரிப்பார் யாருமின்றி வாழும் இன்றைய நிலையை எண்ணிப் பார்த்தால் தானெப்போதோ இறந்து போயிருக்க வேண்டும், ஆனால் விதி விடவில்லை. இன்று அவளை நம்பி வாழும் இந்தச் சின்னஞ்சிறு மழலைக்காக வாழ வேண்டியுள்ளது. கடற்கரையை அண்டியதான அவளது அழகிய கிராமம் எந்த நேரமும் கரையைத் தழுவும் அலைகளின் தாலாட்டில் வளர்ந்தவள். அவளது தந்தையார் மிகவும் பிரபலமிக்க மீனவர், பல படகுகளுக்குச் சொந்தக்காரர். அப்படிப்பட்ட குடும்பத்தில் ஒரேயொரு மகளான படியால் சரீனாவுக்கு எந்தக் குறையுமில்லை.

எதுவும் கேட்டவுடன் கிடைக்கும். அப்படிப்பட்ட செல்வமகளாய் வாழ்ந்தவள். அவளது வயதை ஒத்த பெண்கள் அவளைப் பார்த்துப் பொறா மைப்படுமளவுக்கு நேரத்துக்கு ஒரு ஆடை நாளுக்கு ஒரு நகையென்று அலங்கரித்துக் கொண்டு வலம் வருவாள். யார் கண்பட்டதோ அல்லது விதியின் விளையாட்டோ?

அன்று ஒரு நாள் தனது நண்பியின் அழைப்பை யேற்று அவர்களது வீட்டில் நடந்த வைபவம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்த வேளைதான் அந்தத் துயரப் பேரலை எழுந்தது. செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. சுனாமியென்ற ஆழிப்பேரலை அனர்த்தமேற்பட்டது. அதனால் பல்லாயிரம் மனித உயிர்கள் பலிகொள்ளப் பட்டதாகவும் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிந்ததாகவும் செய்தி கேட்ட சரீனா ஆற்றாத் துயரில் அழுதாள் புரண்டாள் தனது அன்புத்தாய் தந்தைக்கும் உறவுகளுக்கும் என்ன நடந்ததோ? என்றறியாத நிலையில் தனது நண்பியின் உறவினர் சிலரது துணையோடு சென்று பார்த்தபோது தனது அழகிய கிராமம் முற்றாக அழிந்திருப்பதையும் பார்க்குமிடமெல்லாம் இறந்தவர்களின் சடலங்கள் காணப்படுவதையும் தனது வீடு இருந்த இடம் அடையாளம் காண முடியாதபடி ஒரு மணல் மேடாக இருப்பதையும் கண்ட சரீனா தலையிலடித்துக் கதறினாள். “நான் மட்டும் ஏன் உயிர் பிழைத்தேன் எனது உறவுகளில்லாத போது நான் மட்டும் வாழ்வதா?” எனக் கதறியபடி கடலை நோக்கி வேகமாக ஓடினாள். ஆனாலும் அவளுடன் வந்தவர்கள் பிடித்துத் தேற்றி ஆறுதல் கூறி மீண்டும் வலுக்கட்டாயமாக நண்பியின் வீட்டுக்கே அழைத்துச் சென்றார்கள்.

பல நாட்களாகச் சரீனா உறவின்றித் தூக்கமின்றி அழுதழுது மயக்கமுற்ற நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுத் தேறியவளாக மீண்டும் நண்பியின் வீடே தஞ்சமானது.

என்ன செய்வதென்றறியாத நிலையில் சரீனா பைத்தியம் பிடித்தவள் போல காணப்பட்டாள். நீண்ட நாட்களாகியும் சரீனாவின் நடவடிக்கையில் மாற்றமில்லாததைக் கண்ட சிலர் பல்வேறு ஆலோசனைகளையும் கூறினர்.

அதிலொன்றுதான் சரீனாவுக்குத் திருமணம் முடித்து வைப்பது. அதன் மூலம் மன நிலையில் மாற்றத்தைக் கொண்டுவரலாமென்பது அதன்படி நண்பியின் சகோதரனையே திருமணம் முடித்து வைத்துவிட்டார்கள். இதில் சரீனாவுக்கு கடுகள வும் சம்மதமில்லை ஆனாலும் வலுக்கட்டாயத் திருமணம் நடந்தேறியது.

தனது திருமணம் எப்படி ஊரே பேசும்படி கோலாகலமாகச் செய்யப்பட வேண்டுமெனத் தாய்தந்தை எவ்வளவு திட்டங்கள் போட்டு வைத்திருந்தார்கள் கற்பனைக் கோட்டைகள் கட்டியிருந்தார்கள். அவையெல்லாம் தவிடு பொடியாகி இன்று நினையாப் பிரகாரமாய் இப்படியோர் திருமணம் என்பது சரீனாவைப் பொறுத்தவரை நரகத்தில் பிடித்துத் தள்ளியது போலவே இருந்தது.

தனக்கு மாலையிட்டவனோ உலகிலுள்ள அனேக தீய பழக்கங்களுக்கு அடிமையானவன் என்பதை மிகக் குறுகிய நாட்களுக்குள் சரீனாவால் அறிந்து கொள்ள முடிந்தது. அதனால்தானோ என்னவோ இவ்வயது வயதுவரை அவனை யாரும் தேடவில்லை.

சரீனாவுக்குச் சட்டியிலிருந்து அடுப்புக்குள் வீழ்ந்ததைப் போல சோதனைகளும் துயரங்களும் மாறி மாறி ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. திருமணம் முடித்துச் சில நாட்களுக்குள் வீட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டன. சரீனாவின் கணவனுக்கு நாளாந்தம் புகைக்கும் போதைக்குமாகப் பணம் தேவைப்பட்டது.

வருமானமில்லாத செலவினால் சரீனாவின் காதில் கழுத்தில் இறுதியாக மிஞ்சியிருந்த நகைகளும் விற்றுத் தீர்ந்தாகிவிட்டது. இறுதியில் வீட்டை விட்டு இருவரும் வெளியாக வேண்டிய சூழ்நிலை வயிற்றிலும் கருவொன்று உருவாகிவிட்டது. தூரத்திலுள்ள நண்பன் கனிபா உதவி செய்வானென்ற நம்பிக்கையோடு சரீனாவை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

போதைப் பொருள் வைத்திருந்த காரணத்தினால் சிறையிலிருக்கும் போது பழக்கமானவன்தான் கனிபா. சரீனாவையும் கணவனையும் கண்டவுடன் வரவேற்று உபசரித்தான். தனக்குச் சொந்தமான தகரக் கொட்டிலொன்றை அவர்கள் தங்குவதற்காக வேண்டித் துப்பரவு செய்து கொடுத்தான்.

ஆனால் எந்த அடிப்படை வசதிகளோ மின்சாரமோ இல்லாத அந்த இடத்தில் வாழ்வதென்பது செல்வச் செழிப்பில் வாழ்ந்த சரீனாவுக்கும் நரக வேதனையாக இருந்தது.

கர்ப்பிணிப் பெண் தண்ணீரெடுக்க நீண்ட தூரம் செல்ல வேண்டும். விறகு தேட வேண்டும். எல்லாமே தனது கையால்தான் ஆக வேண்டும் என்ற நிலை சரீனாவுக்கு. கூப்பிடு தொலைவில் ஒரு குடிசை அதில் வயதான பெண் பாத்திமா தனது பார்வையற்ற கணவனுடன் வாழ்ந்து வந்தார். அவர்தான் சில நேரங்களில் பேச்சுத்துணை.

காலையில் நண்பன் கனிபாவுடன் புறப்பட்டுச் செல்லும் கணவன் மாலையில் மது போதையுடன் தான் வீட்டுக்கு வருவான் நாளாந்தம் உழைக்கும் பணம் அவனது செலவுக்கே போதவில்லை. சரீனாவுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. அக்கம் பக்கத்தில் உதவி செய்வதற்கு யாருமில்லை.

அந்த பின்தங்கிய கிராமத்தில் இருந்த ஒரே யொரு கடை முஸ்தபா மாமாவுடைய கடை தான். அங்குதான் சரீனா தேவையானவற்றை வாங்கிக்கொள்வாள். தனிக்கட்டை வயதானவரா னாலும் அன்பான நல்ல இறை பக்தியுள்ள மனிதர். சரீனாவை எப்போதும் சாமான் இல்லையென்று வெறுங்கையுடன் அனுப்பிய தில்லை. இந்த இடத்தில் இப்படிப்பட்ட நல்ல மனித¨ன் உதவி கிடைக்கக் கிருபை செய்த இறைவனைத் துதித்துக் கொள்வாள் சரீனா.

நாட்கள் பறந்தன சரீனாவும் ஒரு ஆண் குழந்தைக்குத் தாயாகி விட்டாள். இப்போது தனக்கு இருக்கும் துணையும் ஆறுதலும் தனது மகன் மட்டும்தான். தனது மகனை முத்தமிடும் போது தன்னைப் பிடித்த துயரங்கள் சற்றுத் தொலைவுக்குச் செல்வதான உணர்வு அவளுக்கு.

இந்தக் கிராமத்திற்கு வந்ததிலிருந்து தான் அனுபவித்துவரும் நரகவேதனையான வாழ்க் கைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டுவரும் வேளையில்தான் ஒருநாள் மீண்டும் ஒரு பேரிடியேற்பட்டது.

காட்டில் மரம் வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த தனது கணவன் அடிபட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாகவும் நாளை காலையில் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு ஆயத்தமாயி ருக்குமாறும் கூறிச்சில நூறு ரூபாத் தாள்களைச் சரீனாவின் கையில் கொடுத்துவிட்டுக் கனிபா சென்றதிலிருந்து அழுது கொண்டிருந்த சரீனாவுக்குப் பாத்திமா எவ்வளவோ ஆறுதல் சொல்லிப்பார்த்தும் சரீனாவால் துயரத்தை அடக்க முடியவில்லை. “நல்லதோ கெட்டதோ எனக்காக இருந்த ஒரு சீவன் என்னாச்சோ ஏதாச்சோ ஆண்டவனே என்ட புருசனக் காப்பாத்து” என்று புலம்பினாள். அதிகாலையிலேயே வைத்தியசாலையை அடைந்த சரீனா தோளில் தனது மகனையும் சுமந்தவளாகத் தனது கணவன் அனுமதிக்கப்பட்டிருந்த கட்டிலுக்குச் சென்றபோது அது வெறுமையாகவே இருந்தது.

பதட்டத்துடன் பக்கத்திலிருந்த தாதியிடம் சரீனா விசாரித்தபோது அதிகாலையில் உயிர் பிரிந்ததாகவும் சடலம் சவச்சாலைக்கிச் சென்று விட்டதாகவும் தாதியிடமிருந்து தகவல் கிடைத்தது.

இதைக் கேட்ட சரீனாவுக்கு அந்தப் பாரிய கட்டடமே இடிந்து தலையில் வீழ்ந்தது போன்று இருந்தது. நேற்றுக் காலையில் தனது கணவன் வேலைக்குச் செல்லுமுன் தனது மகனை மாறி மாறி முத்தமிட்டதும் வழக்கத்திற்கு மாறாகத் தனது நெற்றியில் முத்தமிட்டதும் இறுதியாகப் பெற்ற பிரியா விடைதானோ என இப்போது எண்ணித் துடித்தாள். கணவனைப் பார்க்கலாமென்று ஓடிவந்தவள் கணவன் உயிர் பிரிந்த கட்டிலிலேயே விழுந்து அழுதாள்.

பலர் கூடிய இடத்தில் நான் இப்படி நடந்து கொள்கிறேனே என்ற சிந்தனை சிறிதுமின்றித் தீயிலிட்ட புழுவாகத் துடித்தாள். கனிபா எவ்வளவோ ஆறுதல் கூறிப் பார்த்தும் அடங்காத சரீனா “நீதாண்டா பாவி என்ட புருசனக் கொண்ட” என்று கனிபாவின் மீது ஆக்ரோசமாகப் பாய்ந்து மார்பின் மீது அடித்தாள் இதைச் சற்றும் எதிர்பாராத கனிபா நிலைகுலைந்து விழுந்தான். சரீனாவுக்குத் தனது கணவனின் சடலத்தைக் கூடப் பார்க்கக் கிடைக்காதபடி அங்கிருந்து காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டாள்.

சரீனாவுக்கு இந்த உலகில் உறவுகளென்று யாருமில்லாத நிலையில் உரிமையென்று எதுவுமில்லாத நிலையில் மீண்டும் தனது குழந்தையுடன் தான் வாழ்ந்த கிராமத்திற்கே நடைப்பிணமாகத் திரும்பினாள்.

தனது கணவனின் உறவினர்களால் சடலம் எடுத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. தனது கணவனின் முகத்தையாவது ஒரு தரம் இறுதியாகக் காணக் கிடைக்கவில்லையென்ற துயரம் மரணச் சடங்கைத் தனது இடத்தில் நடத்த முடியவில்லையே என்ற வேதனையும் அடக்க முடியாத மனக்குமுறல்களையெல்லாம் பாத்திமாவிடமே கொட்டித் தீர்த்தாள்.

“எல்லாம் விதிப்படி நடந்தது நடந்து முடிஞ்சி இனி இரிக்கிறதப் பாரு மகள் புள்ளயும் பாலில்லாமக் கிடந்து துடிக்கான் யோசிச்சிக்கிட்டு இருக்காம எழும்பு எல்லாத்துக்கும் ஆண்டவ னிருக்கான்” என்று கூறிய பாத்திமா சரீனாவுக்கான இத்தாக் கடமைக்கான ஏற்பாடுகளை இயலாத முதுமையிலும் ஒரு தாயாக நின்று அவசரமாகச் செய்து கொடுத்தார்.

கணவனிறந்தால் முஸ்லிம் பெண்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டியது இத்தாக் கடமை அதைச் சரீனா முழுமையாக நிறைவேற்றினாள். அதற் குப் பாத்திமாவிடம் கனிபா வழங்கி வந்த பண உதவியும் பாத்திமாவின் அனுசரணையுமே இன்றியமையாததாக அமைந்தன.

நான்கு மாதமும் பத்து நாளும் துரித வேகத்தில் கடந்தன. மீண்டும் வெளியுலகப் பிரச்சினைகளுள் சரீனா தள்ளப்பட்டாள். பொருளாதாரப் பிரச்சினை. பாதுகாப்பற்ற நிலை, எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வ தென்றதுவும் புரியாத தடுமாற்றம்.

தன்னைக் கொத்தும் கழுகாய்ச் சுற்றி வட்டமிடும் கனிபாவின் அச்சுறுத்தல், இப்படிப் பல சக்கரங்களுக்குள் சிக்கிய கரும்பாய் சரீனா அல்லலுறுவதைப் பாத்திமாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வாகப் பல முறை பாத்திமா ஒரு ஆலோசனை வழங்கினார். “மகள் சரீனா நீ எத்தனை நாளைக்குத்தான் இப்படிக் கிடந்து கஷ்டப்படப் போறா உனக்கு யாரு இரிக்கா நானும் ஆயிரம் நோயோட கிடக்கன் நான் கண் மூடினா ஒன்ன யாரு பாக்குற அதுதான் செல்லுறன் நீயொரு கல்யாணம் முடி அதுதான் எல்லாப் பிரச்சினைக்கும் ஒரே தீர்வு”

“சும்மா போங்க மாமி எனக்கு இனியென்ன கலியாணமும் காட்சியும் எல்லாம் முடிஞ்சி பெயித்து இனி என்ட புள்ளய நல்லா வளத்தெடுக்கிறதுதான் கடமை”

“சரீனா நான் செல்லுறதக் கேளு நீ இப்படித் தனியா இருந்தாக் கனிபா போல ஆக்களுக்குத் தப்ப ஏலாது. அது மட்டுமில்ல ஒனக்கு வருமானம் ஒண்டுமில்ல எப்படி வாழப் போற அதுதான் அன்டக்கி என்னக் கூப்பிட்டு முஸ்தபா மாமா கதச்சவரு விருப்பமிண்டாச் செல்லு நான் போய்ச் செல்லுறன்”

பாத்திமாவின் ஆலோசனையைக் கேட்ட சரீனாவுக்கு ஆத்திரப்படுவதா இல்லை ஆற அமர யோசித்து முடிவெடுப்பதா என்று ஒன்றுமே தோன்றவில்லை.

“மாமி நீங்க செல்லுறது செரியா வருமா அவரு எனக்குத் தகப்பனுக்குப் பாக்கணும் அப்படி இருக்க இது செரிப்பட்டு வருமா அத உடுங்க ஆண்டவன் உட்ட வழி நடக்கிறது நடக்கட்டும்” என்று சரீனா தட்டிக்கழித்தே வந்தாள். ஆனால் ஒவ்வொரு இரவும் பயத்துடன் கழிக்க வேண்டிய இரவாகவே கனிபாவின் நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருந்தது.

அதே நேரம் முஸ்தபா மாமாவின் கடைக்கும் பாக்கி அதிகரித்துக்கொண்டே இருந்தது. இவையெல்லாவற்றிற்கும் தீர்வு பாத்திமா மாமி கூறியபடி செய்வதுதான் என்று சரீனா ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள்.

வெளியே மழை நின்று மிகவும் அமைதியாகக் கிழக்கு வெளுத்தது. இரவு எதுவுமே நடவாதது போல வானம் தெளிவாகப் பளிச்சென்றிருந்தது. இரவு முழுக்கத் தனது கடந்த காலத்தைப் பற்றிய சிந்தனையிலிருந்த சரீனா எழுந்து கதவைத் திறக்கவும் பாத்திமா மாமி “சரீனா” என்றழைத்தபடி வரவும் சரியாக இருந்தது. “ஒள்ளப்பம் தேயிலத்தூள் இருந்தாத் தாவன் தண்ணி போட்டன் தூளில்ல” என்று கூறியபடியே “இது என்ன கதவடியில ஒரு பார்சல் இரிக்கி” குனிந்து தூக்கிய பாத்திமா மாமியை நிமிர்ந்து பார்த்த சரீனாவுக்கு விளங்கி விட்டது இரவு கனிபா கொண்டு வந்த அன்பளிப்புப் பொதிதானது. அதை வெளியே காட்டாமல் “மாமி அது எந்த நாயின்டான தூக்கி வந்து போட்டிருக்கும் அதத் தூக்கியெறிஞ்சி போட்டு உள்ளுக்கு வாங்க ஒரு விசயம் செல்லணும்”

என்னடி மகளே காலங்காத்தால விசயம் கிசயம் இண்டு என்னவெல்லாம் செல்றா என்ன விசயம்?” பாத்திமா மாமி கேள்விக்கணை தொடுத்தவாறே கதவடியிலிருந்த உரலில் உட்கார்ந்தார்.

“ஒண்டுமில்ல மாமி நானும் ரவெல்லாம் இருந்து யோசிச்சிப் பார்த்தன். இப்படியே இருந்து என்ட நிலம என்ன முடிவாகும் காணாதத்துக்கு ஒரு புள்ளக்குட்டியும் கிடக்கு அதுதான் நீங்க எத்தனையோ தரம் செல்லி இரிக்கிaங்க நானும் வாணா வாணாண்டு தட்டிக்கழிச்சே வந்தன் ஆனா இப்ப பாத்தா நீங்க செல்றதுதான் செரிபோல கிடக்கு அதுதான் மாமி அவரு எப்பிடி?”

“என்ட ஆண்டவனே இப்பண்டாலும் உனக்கு அல்லாஹ் நல்லறிவத்தந்தானே முஸ்தபா மாமா தங்கமான மனிசன் பொஞ்சாதி காலஞ்செண்டதுக்குப் புறவு அவரு தனி மனிசனாத்தான் இரிக்காரு வயசிதான் கூட ஆனாப் பாக்குறதுக்கு இளந்தாரி போலதானிரிக்காரு நீதான் பாத்திருப்பியே நானா செல்லணும். பயபக்தியான மனிசன் ஒன்னயும் புள்ளயும் நல்லா ஒரு குறையுமில்லாம வெச்சிருப்பாரு இப்படிக் கிடந்து எவ்வளவு நாளைக்கிக் கஷ்டப்படப் போறா இனி இன்டாலும் நிம்மதியா வாழ்ற வழியப்பாரு” பாத்திமா மாமியின் நீண்ட விளக்கத்தை மனதுக்குள் வாங்கிக் கொண்ட சரீனா இனித் தன்னால் துன்பங்களைத் தாங்க முடியாது என்ற விரக்தியின் உச்சத்தில் தனது பாதுகாப்புக்காகவும் மகனின் எதிர்காலத்துக்கா கவுமான ஒரு தீர்க்கமான முடிவுடன் “செரி மாமி எனக்குச் சம்மதம் இண்டு அவருகிட்டச் செல்லி ஆக வேண்டியதப் பாக்கச் செல்லுங்க” இந்த வார்த்தைக்காகவே காத்திருந்தவ போல பாத்திமா மாமி மகிழ்ச்சியுடன்” இந்தா போறன் நீ வெளிக்கிடு”

சரீனா மீண்டும் ஒரு புதிய வாழ்வுக்கான பாதையில் காலெடுத்துவைக்க ஆயத்தமானாள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.