புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

* அறிக்கை மட்டும்தான் ஆவது எதுவுமில்லை

வவுனியாவிற்கு பெரும்பான்மையின அரச அதிபரை நியமித்தது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆவேசமான அறிக்கைகள் அம்புகளாக வந்த வண்ணமுள்ளது. ஆனால் இன்றுவரை ஆனது ஒன்றுமே இல்லை. அந்த அரச அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்று நாட்கள் பல உருண்டோடிவிட்டது. தமிழ் மக்கள் தனித்து வாழும் கிளிநொச்சி கச்சேரி ஊடக அதிகாரியாக பெரும்பான்மை இனத்தவர் பதவியேற்று பல மாதங்களாகி விட்டது. அப்போதும் இப்படித்தான் பல கூக்குரல்கள், ஆனால் இறுதியில் எல்லாம் அறிக்கையோட சரி, ஆவது ஒன்றுமில்லை போலுள்ளது.

* பேச்சு பேச்சாக இல்லாது செயலிலும் நடக்க வேண்டும்

அவமானத்தின் சின்னங்களாக மலையகத்தில் லயன் வீடுகள் அமைந் துள்ளன என்று இளம் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் பாராளுமன்றத்தில் வைத்துக் கவலைப்பட்டிருக்கிறார். மிக நல்ல விடயம். ஐம்பது அறுபது வருடங்களாக எத்தனையோ பெரிய பெரிய தொழிற் சங்கள் அதன் தலைவர்கள் இருந்தும் மாற்றமுடியாத ஒன்றை மாற்றும் முயற்சி. பேச்சை தொலைக்காட்சியில் பார்க்கும் போதும் பத்திரிகையில் வாசிக்கும்போதும் நன்றாக உள்ளது. பேச்சு பேச்சாக இல்லாது செயலிலும் நடந்தால் உண்மையிலேயே சந்தோஷம்.

* தலைவராக இருக்கத் தகுதியுடைய பத்திரிகைத்துறை ஜாம்பவான்

கடந்த வியாழக்கிழமை காலை தொலைபேசி அழைப்பொன்றில் ஊடக நிறுவனங்களில் ஒரு விதமான பரபரப்பு நிலை காணப்பட்டது. காரணம் தமிழ் மட்டுமல்ல சிங்கள, ஆங்கில ஊடகத்துறையிலும் ஜாம்பவானாகத்திகழும் ஒருவரின் பெயரைக் கொண்ட ஒரு அறிஞர் இறந்துவிட அது இவர் எனத் தவறுதலாக கதை பரவி விட்டது. எங்கு பார்த்தாலும் சுமார் இரண்டு மணி நேரமாக இதுவே பேச்சு. கிழக்கிலிருந்து ஊடக நண்பர்கள் சிலர் அவருக்கே நேரடியாக தொலைபேசியை எடுத்துக் கதைத்த பின்னர்தான் நிம்மதி அடைந்தார்களாம். ஒருவர் தனது வாழ்நாளில் எந்தளவிற்கு நண்பர்களைச் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்பதை இவர் நேரடியாகவே கண்டுவிட்டார். அவர் அந்த ஊடக அமைப்பிற்கு மட்டுமல்ல 56 கிளை அமைப்புக்களின் தாய்ச் சங்கத்திற்கும் தலைவராக இருக்கத் தகுதியுடையவர்தான்.

* கலைஞருக்குக் கிடைக்கும் மிகப் பெரிய கெளரவம்

நம்நாட்டுக் கலைஞர் என்றால் எல்லோருக்கும் தெரியும். அவர் கலைஞர் கலைச்செல்வன்தான் என்று. இன்று கொழும்பில் அவருக்கு மாபெரும் கெளரவம் கிடைக்கிறது. அரச சாகித்திய விருதை ஒருமுறை பெறுவதே கடினம். இதில் இவர்மூன்று தடவைகள், உண்மையிலேயே பாராட்டிக் கெளரவிக்கத்தான் வேண்டும். அத்துடன் கலைஞரைப் பாராட்ட வேண்டுமென்று ஒற்றைக் காலில் விடாப்பிடியாக நின்ற வியாபார மற்றும் அரசியல் கலைஞர் கொடைவள்ளல் முத்தப்பன் செட்டியாரையும் பாராட்டாமலிருக்க முடியாது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.