புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

 
religon - 1

கொழும்பு, கிராண்ட்பாஸ், டிவோஸ்லேன் அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் சுவாமி தேவஸ்தான புனராவர்த்தன ஜீர்ணோத்தாரான அஷ்டபந்தன பஞ்ச குண்ட பக்ஷ பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் டிசம்பர் 06ஆம் திகதி ஞாயிறு காலை 8.00 மணிமுதல் 9.00 மணிக்குள் வரும் சுபவேளை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இக்கட்டுரை அவ்வாலய பிரதம குருவினால் எழுதப்பட்டுள்ளது.

அறியாமையெனும் இருளகற்றி

ஞான ஒளியினைத் தந்து காக்கும்

ஆபத்துத்தாரண

வைரவக் கடவுள்

எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் பரம்பொருள் என நாம் வணங்கும் முழுமுதற்கடவுளான சிவப்பரம் பொருளிலிருந்து வேறல்லாத மூர்த்தங்களாக விநாயகர், முருகன், வைரவர் வீரபத்திரர் தோற்றம் பெற்றார்கள் எனவும், சிவப்பரம் பொருளின் அறுபத்து நான்கு மூர்த்தி வேதங்களில் சிறப்பித்துச் சொல்லப்படுவது வைரவ மூர்த்தமேயாகும் என்றும் வேதாகம சாத்திரங்கள் கூறுகின்றன.

வைரவக் கடவுள் தத்துவ குணத்தில் தாமத குணத்தர், “சங்காரருத்திரர்” என அவர் அழைக்கப்படுகிறார். சகல மாயா சம்பந்தங்களையும் சம்ஹரித்து ஆன்மாக்களை ஈடேற்றும் கோலமே அவரவது வடிவம். சுத்த நிர்வாண கோலத்தை உடையவர். “உடற்பற்று இருந்தால் ஆடை இல்லாதிருக்க முடியாது என்பதால் அதையும் விட்டுவிடு” என்பதே அவரது அந்த நிர்வாணக் கோலம். பிரமனின் சிரசை நகத்தால் கிள்ளி எறிந்தவர் என்பதலால் கோர வடிவம் கோப வடிவுமாகக் காட்சி தருபவர். சிவந்த அக்கினிச் சுவாலைகளையுடைய சுடா முடியைத் தாங்கியவரும், பாதிச் சந்திரனைச்சிரசில் தரித்திருப்பவரும், செம்மேனி கொண்டவரும் ஒளிமயமாய் விளங்குபவரும் சூலம், கபாலம், பாசம், டமருகம், பரசு இவற்றைக் கைகளில் தாங்கியவரும், உலகத்தைக் காப்பாற்றுபவரும், பாவிகளிடம் பயங்கரமான தோற்றத்தையளிப்பவரும், வேதங்களாகிய நாயைத் தனது வாகனமாகக் கொண்டவரும், மூன்று சிவந்த திருக்கண்களையுடையவரும், என்றும் ஆனந்த வடிவினராய் மிகுந்த கோலாகலமாக இருப்பவரும், பூத கணங்கள், பிசாசுக் கூட்டங்கள் இவற்றிற்கு நிகரற்ற தலைவனாயுமிருப்பவரும் வைரவப்பெருமானே என அவரது பிரதிமா லட்சணம் விளக்குகிறது. மனிதனின் அந்திம காலத்தின் போது மயானத்தில் காத்து நின்று பாவங்களை நீக்கி அவனைச் சுவர்க்கத்துக்குப்புவதால் “அந்திம கால புருஷரென” இவர் அழைக்கப்படுகிறார். ஷேத்திரபாலர் எனப்படும் வைரவப்பெருமானின் சொரூபம் புராண இதிகாசங்களில் சிறப்பாக விபரிக்கப்பட்டுள்ளது. ஷேத்திரபாலர் என்பது ஷேத்திரம் + பாலர் என விரியும். ஷேத்திரம் என்பது திருக்கோயில். பாலர் என்பது காவல் புரிபவர் என்னும் கருத்தைத் தருவதால் வைரவப் பெருமான் திருக்கோயிலைக் காவல் புரியும் கடவுள் எனப்படுவர்.

திருமால் சிவசக்தியை நோக்கி வணங்கினார். அருள் பெற்றார். மாயை நீங்காத பிரம்மாவோ தனது தலையால் (ஐந்து தலைகளால்) சிவனை இகழ்ந்தார். தானே சிவப்பரம் பொருள் என அகந்தையில் நின்றார். ஐந்து தலையுடையதால் தானும் சிவனும் ஒன்று எனச் செருக்கடைந்தார்.

சிவபெருமான’ பிரம்மனின் பாவத்தைப் போக்கவும் தேவர்களின் செருக்கையடக்கவும் திருவுளங்கொண்டார். தனது இதயத்திலிருந்து வைரவக்கடவுளைத் தோன்றச் செய்தார். சிவபிரான் அந்த வைரவப்பெருமானைப் பார்த்து எம்மை இகழந்த இப்பிரமனது உச்சந்தலையைக் கொய்து எடுப்பாயாக என ஆணையிட்டார். சிவனின் ஆணையை வைரவர் நிறைவேற்றினார்.

மாவிரதம், காபாலிகம், காளாமுகம், பாசுபதம் எனும் சைவப்பிரிவினரின் பிரதான வழிபடு மூர்த்தியாக வைரவக்கடவுள் போற்றப்படுகின்றார். ஆபத்துத்தாரண வடுக மூர்த்தியான வைரவர், “பராக்யம்” எனும் நூலில் அசிதாங்க வைரவர், குரு வைரவர், சண்ட வைரவர், குரோத வைரவர், உன்மத்த வைரவர், கபால வைரவர் பீஷண வைரவர், சம்ஹார வைரவர் என அஷ்ட வைரவராகப் போற்றப்படுகின்றார்.

அஞ்ஞான இருளகற்றி ஆணவம் நீக்கி ஞானம் தந்து காப்பதால் ஞான வைரவரென்றும் காலச் சக்கரச் சுழற்சியினால் துன்புறும் பக்தர்களைக் காப்பதால் “ஆபத்துத்தாரண வைரவர்” எனவும் (காசியிலிறந்தோர்க்கு யம பயம் கிடையாது. தண்டனை கொடுக்க யமனுக்கு அதிகாரமும் கிடையாது. காசியில் காலனின் அதிகாரம் வைரவருக்கு மட்டுமே கிடைத்தமையினால்) காசியிலுள்ள வைரவர் கால வைரவர் என்றும், தெய்வத்தின் உறைவிடமான ஷேத்ரத்தையே (ஆலயத்தையே) பரிபாலனம் செய்வதால் “ஷேத்ரபாலர்” என்றும், வேண்டுவோர்க்கு வேண்டு வரமளிப்பதால் “குரு வைரவர்” என்றும் போற்றப்படுகின்றார்.

சித்திரை மாதத்துப் பரணி நட்சத்திரமும் ஐப்பசி மாதத்துப் பரணி நட்சத்திரமும், மங்கள வாரமெனும் செவ்வாய்க் கிழமையும், அஷ்டமித்திதியும், திருவாதிரை நட்சத்திரமும், வைரவழிபாட்டிற்குச் சிறப்புயடைய தினங்களாகும். கார்த்திகை மாதத் தேய்பிறை அஷ்டமியை வைரவப் பெருமாளின் ஜென்மாஷ்டமி எனவும் கூறப்பட்டுள்ளது. தயிரன்னம், மிளகு அன்னம், வடைமாலை என்பவை வைரவருக்கு மிக உகந்த நைவேத்தியங்களாகும். செவ்விரலிப்பூ அவருக்கான அர்ச்சினை மலராக அர்ச்சிக்கப்படுகிறது.

பொன்னும் பொருளும் பெருகவும், கடன், பிணி, தரித்திரம் நீங்கிடவும் வேண்டி வழிபாடு செய்தால் “சுவர்ணாகர்ஷண” வைரவரின் சகல செளபாக்கியங்களையும் பெறலாம். அமர்ந்த நிலையில் தன் மடியில் வைரவியை அமர்த்திக் கொண்டு ஒரு கரத்தில் அமுதகலசமும் ஒரு கரத்திற் சூலமும் கொண்டு வைரக் கிரிடமும் பொன்னா பரணமும் பட்டு வஸ்திரமும் அணிந்து தம்பதி சமேதராய் காட்சி தருபவர் “சுவர்ணாகர்ஷண” வைரவர்.

இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வைரவர் வழிபாடு மிகச்சிறப்பானதாக அனுஷ்ட்டிக்கப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு ஊரிலும் அரசடி வைரவர், புளியடி வைரவர், விளாத்தியடி வைரவர் என வைரவர் வழிபாடும் சிறப்படைகின்றது. திரிசூல வழிபாடு மரபுவழியாக வளர்ந்து செல்வதைக் காணலாம். தென்னிலங்களையிற் கூட புதிய வீடு, மனை, கட்டடங்கள் அமைக்கும் போதும்சரி அமைத்த பின்னரும் சரி வைரவர் பூசை செய்து வீட்டைக் காவற்படுத்துவது வழமையாகியுள்ளது.

கொங்கணமுனிவர் வைரவப் பெருமானைத் தொடர்ந்து வழிபாடியற்றித் தியானித்ததால் முத்தி பெற்றார். தமது சக்தியை இழந்து தவிர்த்து அஷ்ட லட்சுமிகள் வைரவப் பெருமானை வழிபட்டுத் தமது இழந்த சக்தியைப் பெற்றகர்.

வாழ்வில் ஏற்படும் சகல தடைகளும் நீங்கி நல்வாழ்வு பெறலாம். எம்மைப் பீடித்த வியாதிகள் நீங்கிவிடும். கல்வி, தொழில் வாய்ப்பு என்பவற்றில் முன்னேற்றம் காணலாம். வைரவப் பெருமானை மனதில் நிறுத்தி வழிபாடு செய்தால் நல்வாழ்வு பெறலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.