புத் 67 இல. 48

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 16

SUNDAY NOVEMBER 29 2015

 

இல்லை என்பதுவும் குறை கூறலும் இயலாமையின் வெளிப்பாடாகுமோ?

இல்லை என்பதுவும் குறை கூறலும் இயலாமையின் வெளிப்பாடாகுமோ?

இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் கண்டு தமிழ் மக்களது வாழ்வில் நிலையான நிம்மதியைத் தோற்றுவிக்க முயற்சி எடுப்பதை விட்டுவிட்டு எந்த வெளிநாட்டு இராஜ தந்திரிகள் இலங்கைக்கு வந்தாலும் ஓடிச் சென்று குறை கூறுவதனை மட்டுமே மேற்கொண்டால் தீர்வு எப்படிக் கிடைக்கும் எனத் தமிழ்த் தலைமைகள் மீது தமிழ் மக்கள் குறைகூறத் தலைப்பட்டுள்ளனர். இல்லை இல்லை என்பதுவும், இதுவரை எதுவும் நடக்கவில்லை என்பதுவும், சிறு விடயத்திற்கும் அடுத்தவரை நம்பியிருப்பதுவும் இயலாமையின் வெளிப்பாடோ என தமிழ் மக்கள் சந்தேகத்துடன் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

உண்மையில் இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தலைமைகள் நன்கு அலசி ஆராய வேண்டும். தமிழ் மக்களுக்கான தீர்வினைக் காண அவர்களும் சிறிதளவேனும் முயற்சியை எடுக்க வேண்டும். மக்களிடம் வாக்குகளைப் பெற்று அதன் மூலமாகக் கிடைக்கப்பெற்ற பதவிகளுக்குரிய அரசாங்கத்தின் சலுகைகளை மட்டும் அனுபவிக்கத் தெரிந்தவர்கள் மக்கள் தமது வாக்குகள் மூலமாக வழங்கிய பதவிகளைப் பயன்படுத்தி மக்கள் பணியாற்றவும் சிறிது முயல வேண்டும்.

மக்கள் தமக்கு ஆணையை வழங்கிவிட்டால் அதனைக் கண்டு பயந்து அரசாங்கம் உடனடியாகத் தீர்வினைத் தந்து விடும் என நினைப்பது தவறு. கிடைத்த பதவிகளையும், மக்களது ஆதரவையும் பயன்படுத்தி அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தைகளை நடத்தி சிறிது சிறிதாக அதேவேளை ஒவ்வொன்றாக விடயங்களைப் பெற முயற்சிக்க வேண்டும். இதனை விடுத்து வெளிநாட்டு இராஜதந்திரிகள் வரும்போதெல்லாம் ஓடிச் சென்று அரசாங்கம் ஏமாற்றுகிறது, அரசாங்கம் தீர்வினை வழங்குவதாக இல்லை, எமக்கு உதவி செய்யுங்கள் எனக் குழந்தைப் பிள்ளைகளைப் போன்று செயற்படுவது அழகல்ல.

முன்னொரு காலத்தில் இவ்வாறு சர்வதேசத்திடம் கூறி வந்தமையை ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் அப்போது பேச்சுச் சுதந்திரம் இருக்கவில்லை. கடந்த ஆட்சியில் தீர்வினை வழங்க அந்த அரசாங்கம் முயற்சிக்கவும் இல்லை. அதனால் நிச்சயம் சர்வதேசத்தின் உதவி தேவைப்பட்டது. ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை. தமிழ்த் தலைமைகளின் கோரிக்கை காரணமாக முழுத் தமிழரும் இணைந்தே இந்த நல்லாட்சி அரசாங்கத்தைக் கொண்டு வந்தார்கள். அதனால் அதனைப் புரிந்து கொண்டு இந்த அரசாங்கமும் தமிழ் மக்களது பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஆர்வமாக உள்ளது.

இந்நிலையில் தாம் தமது தரப்பில் எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாது இப்போது மஹிந்த ராஜப க்ஷவின் தலைமையிலான அரசாங்கம் ஆட்சி செய்வதுபோல சர்வதேசப் பிரதிநிதிகளிடம் சென்று இன்றைய அரசாங் கத்தைக் காட்டிக் கொடுக்கும் அல்லது விமர்சிக்கும் வகையில் குறை கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நல்லாட்சி அரசாங்கம் இதுவரை தமிழருக்கு விரோதமாக அல்லது எதிராக ஒருசிறு தவறையேனும் செய்யவில்லை. மாறாக தமிழர் தீர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அக்கறை செலுத்தி வருகின்றனர்.

எனவே இனியாவது தமிழ்த் தலைமைகள் இல்லை, இல்லை எனக் கூறுவதையும், நாம் கை கட்டியிருக்க அரசாங்கம் தானாக வந்து எல்லாவற்றையும் தரும் என நினைத்துக் கொண்டு இருப்பதையும் கைவிட வேண்டும். தம்மாலான முயற்சிகளைத் தாமும் மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக கடந்த ஆட்சியில் வடக்கில் தமக்கு எவ்விதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ள அரசாங்கம் இடமளிக்கவில்லை எனக் குறை கூறி வந்தனர். இப்போது இன்றைய அரசாங்கம் ஆளுனரை மாற்றியுள்ளதுடன் வட மாகாண சபைக்கு அம்மாகாண மக்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் சகலவிதமான அதிகாரங்களையும் வழங்கியுள்ளது.

ஆனால் இதனைத் தமிழ்த் தலைமையினால் பயன்படுத்தத் தெரியாமலுள்ளது. இதுவே உண்மை. முன்னைய ஆட்சியில் குறைகூறியதில் அர்த்தம் இருந்தது. இப்போதும் அதனையே கூறினால் எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதனைத் தமிழ்த் தரப்பு ஏன் இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. இதனை விடவும் அவர்களது எதிர்பார்ப்பு என்னவாக உள்ளது? வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து அதேபோன்று மக்களது ஆணையின் மூலமாகக் கிடைத்த பதவிகளை வைத்து இனப்பிரச்சினைக்கும் தீர்வினைக் காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும்.

எமது முயற்சியில் நாம் முன்னேறிச் செல்வதை விடுத்து எந்நேரமும் அடுத்தவர் கைகளை எதிர்பார்த்திருப்பவர் போன்று இருந்தால் எந்த முன்னேற்றமும் கிடைக்காது. மாறாக அது மேலும் வீழ்ச்சியையே தரும். அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பலத்தை மேலும் பலமாக்கி மக்களுக்கான பயணத்தைத் தொடர வேண்டும். அத்துடன் எல்லா அரசாங்கங்களையுமே குறைகூறிக் கொண்டிருந்தால் எப்போது எந்த அரசாங்கத்தில் திருப்தி காணப் போகிaர்கள்?

எனவே அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் தமக்கிடையேயான பதவிப் போட்டிகளைத் தவிர்த்து மக்களுக்காக தமக்கிடையே போட்டி அரசியலை நடத்த முன்வர வேண்டும். இல்லையேல் பதவி ஆசைகளுக்காக நீங்கள் உங்களுக்குள் முட்டி மோதுவதை மறைக்கவே அரசாங்கங்களைக் குறை கூறித் திரிவதாக மக்கள் தமது மனதிற்குள் நினைப்பது உண்மையாகிவிடும் என்பதே எமது கருத்தாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.