புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா : இந்தியா, இலங்கையிலிருந்து பக்தர்கள் வருகை

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா : இந்தியா, இலங்கையிலிருந்து பக்தர்கள் வருகை

இருநாட்டு அருட் தந்தையர்களும் இணைந்து கூட்டு திருப்பலி

கச்சதீவு புனித அந்தோனி யார் ஆலய வருடாந்த திரு விழா இன்று வெகு சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது.

இலங்கை- இந்திய அரசாங்கங்களின் அனுசரணையுடன் நடைபெறும் வரலாற்றுப் புகழ்மிக்க கச்சதீவுத் திருவிழாவில் இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இம்முறை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இலங்கையிலிருந்து ஆறாயிரம் பக்தர்கள் கலந்து கொள்வதுடன் இந்தியாவிலிருந்து நான்காயிரம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனரென இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இரு நாட்டினதும் அருட் தந்தையர்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக திருவிழா திருப்பலி நிறைவேற்றப்படவுள்ளது.

வருடா வருடம் கச்சதீவு திருவிழா நடைபெற்று வந்தாலும் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலங்களில் மிகக் குறைவான பக்தர்களே திருவிழாவில் கலந்து கொண்டனர்.

யுத்தம் முடிவுற்ற நிலையில் கடந்த வருடம் கச்சதீவு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இலங்கைக் கடற்படையினர் அதற்குப் பூரண பங்களிப்பைச் செய்ததுடன் பாதுகாப்பு மற்றும் யாத்திரிகர்களுக்கான பயண வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.

இலங்கை இந்திய மீனவர்களுக் கிடையிலான பிரச்சினை உக்கிரமடைந்திருந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இலங்கை மீனவர்களுக்கும் இந்திய மீனவர் சமூகத் தலைவர்களுக்குமிடையில் கச்சதீவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நிலமை சுமுகமாக்கப்பட்டரமையும் குறிப்பிடத்தக்கது.

இம்முறையும் இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையில் கச்சத்தீவு திருவிழாவின் போது பேச்சுவார்த்தைகள் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இம்முணை கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நேற்றைய தினமே ஆரம்பமாகி நேற்றிரவு நவநாள் வழிபாடுகள் நடைபெற்றன.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பே இலங்கை இந்திய யாத்திரிகள் கச்சத்தீவு வருகை தர ஆரம்பித்தனர் இதற்கான அனுமதியையும் கச்சதீவில் இரவு தங்குவதற்கான அனுமதியையும் இலங்கைக் கடற்படையினர் வழங்கியுள்ளனர்.

இம்முறையும் திருவிழா திருப்பலியினை இலங்கை இந்திய அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியாக நடத்தவுள்ளனர். திருவிழா திருப்பலி இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகையும் தமிழ் நாட்டிலிருந்து ஆயர் ஒருவரும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பில் உறுதிப்படுத்த முடியவில்லை.

இம்முறை திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கடற்படையினருடன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் அதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர்.

குறிகட்டுவான் நெடுந்தீவு துறைகளுக்கூடாக படகுகள் மூலம் பக்தர்கள் கச்சதீவுக்குப் பயணிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குடிநீர், மருத்துவ வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் அம்புலன்ஸ் படகுச் சேவையும் சேவையிலீடுப டுத்தப்பட்டுள்ளன.

இந்திய பக்தர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கச்சதீவுக்கு வருகை தந்துள்ளதுடன் இந்திய கடற்படையினரும் இணைந்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். திருவிழா நடைபெறும் தினங்களில் இலங்கைக் கடற்படையினர் கச்சதீவைச் சுற்றி பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

வழமை போன்றே இரு நாட்டு யாத்திரிகளுக்குமிடையில் வர்த்தக நடவடிக்கைகளுக்கான அனுமதி மறுக்கப் பட்டுள்ளதுடன் பொலித்தீன் பைகள் பிளாஸ்டிக் போத்தல்களும் பாவணைக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

இரு நாடுகளிலும் மீனவர்கள் பெரும் பாலும் கத்தோலிக்கர்களாக இருப்பதால் முடிவுக்கு வராத இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்கு இம்முறைக் கச்சதீவு திருவிழா தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வழிவகுக்குமென்பதே இரு தரப் பினரதும் எதிர்பார்ப்பாகும். (ஸ)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.