புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
Dextromethorphan கலந்த மருந்துகளுக்கு இலங்கையில் தடை

Dextromethorphan கலந்த மருந்துகளுக்கு இலங்கையில் தடை

இருமலுக்காகப் பயன்படுத்தப்படும் பாணி மருந்து வகைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள டெக்ஸ்ரோ மெதோபன் (Dextro Methorphan) எனும் இரசாயனப் பதார்த்தம் சேர்க்கப்பட்டுள்ள சகல மருந்து வகைகளையும் தடைசெய்வதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது.

உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மேற்படி டெக்ஸ்ரோ மெதோபன் என்ற இரசாயனப் பதார்த்தம் அடங்கிய மருந்து வகைகள் பாதுகாப்புக் காரணங்கள் கருதி தடைசெய்ய முடிவுசெய்துள்ளதாக தேசிய அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துக் கட்டுப் பாட்டு அதிகார சபையின் பணிப் பாளர் டொக்டர் ஹேமந்த பெனரகம தெரிவித்தார்.

இருமலைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் டெக்ஸ்ரோ மெதோபன் என்ற பதார்த்தம் இருமல் பாணி வகைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தைப் பயன்படுத்தியதால் அண்மையில் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் குஜ்ரல்வாலா பிரதேசங்களில் சுமார் 60ற்கும் மேற்பட்ட மரணங்கள் சம்பவித்ததுடன், பலருக்கு பக்கவிளைவுகளும் ஏற்பட்டிருந்தன. இது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கையொன்றை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை அடுத்தே குறிப்பிட்ட இரசாயனப் பொருள் அடங்கிய மருந்துப் பாணிகளைத் தடைசெய்ய அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படுகின்ற இருமலுக்கான இந்தப் பாணி மருந்தில் பயன்படுத்தப்படுகின்ற டெக்ஸ்ரோ மெதோபன் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் இறுதியில், இந்தியாவில் தயாரிக்கப்படும் டெக்ஸ்ரோ மெதோபன் என்ற இரசாயனப் பதார்த்தத்தில் லிவோ மெதோபன் (Livo Methophan) என்ற நச்சு கலந்த இரசாயனப் பதார்த்தமும் கலக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வேறு நாடுகளில் தயாரிக்கப்படுகின்ற மருந்து வகைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற மூலப்பொருட்களை பயன்படுத்துவதால் குறித்த டெக்ஸ்ரோ மெதோபன் ஏனைய நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டிருக்கலாம். இதனால் டெக்ஸ்ரோ மெதோபன் என்ற பதார்த்தத்தின் தரம் தொடர்பாக மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்படி விடயங்களை கருத்தில்கொண்டு டெக்ஸ்ரோ மெதோபன் உள்ளடக்கப்பட்டுள்ள சகல மருந்து வகைகளையும் உடனடியாக அமலுக்கு வரும் விதத்தில் தடைசெய்வதற்கு அதிகாரசபை வெள்ளிக்கிழமை முடிவு செய்தது. இது தொடர்பாக முழுமையான, விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு குறித்த மூலப்பொருள் பாதுகாப்பானது, பாவனைக்கு உகந்தது என்ற உத்தரவாதம் அந்த நாட்டின் மருந்துப் பொருள் அதிகாரசபையின் ஊடாக வழங்கப்படும்வரை தாம் எடுத்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தேசிய அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த பெனரகம தெரிவித்தார்.

இருப்பினும் டெக்ஸ்ரோ மெதோபன் என்ற இரசாயனப் பதார்த்தம் உள்ளடக் கப்படாத இருமலைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் வேறு பாணி வகைகள் சந்தையில் இருப்பதால் நோயாளிகளுக்கு இருமல் பாணியைப் பெறுவதில் அசெளகரியம் ஏற்படமாட்டாது. டெக்ஸ்ரோ மெதோபன் உள்ளடக்கப்பட்ட பாணி வகைகளை சந்தையிலிருந்து அப்புறப்படுத் துவதால் பாரிய பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ள)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.