புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
அன்புடீனின் நெருப்பு வாசல்

அன்புடீனின் நெருப்பு வாசல்

யதார்த்த வாழ்வியலின் சித்தரிப்பு

“ஓர் எழுத்தாளன் தலைசிறந்த ஆக்கப்படைப்பாளனாக விளங்க வேண்டுமானால் தன்னிலிருந்தே தன்னை விடுவிக்க வேண்டும்” என்று ஓர் அறிஞன் கூறியதற்கொப்ப ஆசுகவி அன்புடீன் நாடறிந்த எழுத்தாளர், இலக்கிய உலகிற்குள் தன்னை விடுவித்து மீண்டும் ஒரு நூலை “நெருப்பு வாசல்” எனும் தலைப்பில் சிறு கதைத் தொகுப்பாக (20.02.2012) வெளியிடுகின்றார். உண்மையில் ஆசுகவி தென்கிழக்கின் தலை சிறந்த கவிதை பொழிப்பாளர்களுள் மூத்தவராகவே மிளிர்கின்றார். கதை, கவிதை, கட்டுரை, ஆக்கப்படைப்புக்கள், மேடைப்பேச்சு, மேடை நடிகன் என்று பல்வேறு தோற்றப் பொழிவுகளுக்கும், பாத்திரங்களுக்கும் சொந்தக்காரர் இந்த ஆசுகவி, நீண்டகாலம் இலக்கிய உலகிற்குள் நன்கு அறியப்பட்டவர்.

நூலாசிரியர் அன்புடீன் “நம்பி கைவைத்த நம்பிக்கை” எனும் தலைப்பில் அவருரை அமைகிறது. இத்தலைப்பு எங்கோ இடிக்கிறது. பேனாபிடித்தவனின் நிலையை தத்ரூப வடிவில் நூலை வெளியிடும் நிலை பற்றியும், எழுத்தாளனுக்கு சமுதாயத்திலிருக்கின்ற எதிர்க்கைகளை ஒருங்கே அமைத்து தனது கடந்தகால வாழ்க்கையில் பல்வேறுபட்ட சமுதாயத்தினரின் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட நினைவாடல்கள் ஊடாக தன்னுள் ஏற்பட்ட நெருடல்களை கதைகளாக வடித்தெடுத்து எழுத்துருவம் கொடுத்து தாம் பெற்ற சுகவிசாலங்களை சுவைபட கடைந்தெடுத்து நூலாக வடித்த இந்த நெருப்பு வாசல் எவ்வளவு துன்பம் நிறைந்தது என்பதை கூறாமலே கூறுகின்றாரா? தலைப்பினுள் இவ்வளவு விடயங்களை எத்தனை ஆண்டுகள் கடத்தி வந்துள்ளார் என்பதனால்தானா கவிஞன் என்பவன் தன்னிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கூறுவது!

தொகுப்புக்குள் நுழைந்தால் அங்கே பதினான்கு சிறு கதைகள் அச்சொட்டாகத் தெரிகிறது. “ஒரு கிராமத்துச் சிறுமி அசைபோடுகிறாள், கடல் நீரின் கண்ணீர், மலர்ந்தும் மலராத ஒரு மல்லிகையின் மனவெளி, உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின், ஒரு தலை ராவணன், நெருப்பு வாசல், அமைதி மூழ்கிய பேரழுகை, ஒரு மழை நாள், சலனம் சபலம் சபதம், வீணான கோழிக்குறுக்கும் கோதான கோழி முட்டையும், தேவதைகள் சாவதில்லை. குணம், அழகின் விலை, பருந்துகள்” என அவை வாசலுக்குள் செல்கின்றன.

1975 ஆம் ஆண்டில் தான் எழுதிய ஒரு கிராமத்துச் சிறுமி அசைபோடுகிறாள் கதையூடாக கட்டாயக் கல்வி பற்றியும், சிறுவர் மீதான கல்வி உரிமைகளையும், கல்வி மேம்பாட்டையும் விபரிக்கும் கதாசிரியரின் முற்போக்குச் சிந்தனை கல்வியியலாளர்களையும் மிஞ்சிவிடுகிறது. “நல்லாப்படிக்கனும் எண்டு எங்க உம்மாவுக்கு கொள்ளை ஆசை. ஏனெண்டால் இதாருமே எங்கட குடும்பத்தில் படிச்சதில்ல....” எனும் சிறுமியின் கல்வி மீதான பற்றினை எடுத்தாண்டு குடும்பச்சுமை, ஏழ்மை வாழ்வின் காலச்சக்கரத்தை கொண்டு செல்லும் பாணியோ தனிப்பாணி.

இத்தகைய வெளியீடுகளை வெளிக்கொணர்வதிலுள்ள பிரசவ வேதனைகளையும் தாண்டி நம்பிக்கையுடன் “நெருப்பு வாசல்” சிறுகதைத் தொகுதியினை கலாபூஷணம் ஆசுகவி எதிர்வரும் 2012.02.20 ஆம் திகதி அட்டாளைச்சேனையில் வெளியிடுவதன் மூலம் சிறுகதை உலகில் நுழைகின்றார். தென்கிழக்கின் சிறுகதையாசிரியர்களுள் தனி முத்திரை பதிப்பார் ஆசுகவி அன்புடீன். இவரின் முயற்சிகள் தொடர இலக்கிய உலகினுள் இளையவர்களும் உட்புக ஆசுகவி போன்ற கவிஞர்களின் கள்ளமில்லாச் சொறிவுகள் தழைத்தோங்க இவரது வெளியீடுகள் சிறப்பாய் அமைய நாமும் வாழ்த்துகின்றோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.