புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
யாமறிந்த திரையிசையில்~கொலவெறிபோல்

யாமறிந்த திரையிசையில்~கொலவெறிபோல்

இனிதாவதெங்கும் காணோம்'
 

தனு'pன் ~தங்கிலிஷ்' பாடல்

 

,ந்திரியங்களால் பெறுகின்ற இன்பங்களை ஈஸ்வர சரணார விந்த இன்பத்துக்கு உவமானமாக அடுக்கும் போது, சங்கீதமே முதன்மை பெறுகின்றது. அந்தத் திவ்விய சங்கீதம் தமிழ் சினிமாவில் படும்பாட்டை ஸ்பட்சமாகப் படம் பிடிப்பதே இப்பத்தியின் நோக்கமேயொழிய வேறொன்றறியோம் பராபரமே.

இரசப்புயல் ஏ. ஆர். ரகுமானின் ‘அலை’ முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது என்கிற செய்தியைச் சொல்லாமல் சொல்லிவிட்டுப் போயிருக்கிறது ‘கொலவெறி’ பாடல். அதனுடைய ஆயுள் பற்றியெல்லாம் இப்போது பிரஸ்தாபிப்பது ‘மினக்கெட்ட’ வேலை. ஆகவே அதனை விடுவோம்.) அத்துடன் கணனித் தொழில் நுட்பந்தான் எங்கள் கடவுள் என்று, ஒரு ‘கீபோட்’டை மட்டும் வைத்துப் பாடலுக்கான இசையை உருவாக்கியிருப்பபது மூலம் (உபயம்- பாடலுக்கான வீடியோ) யாரிந்த இசையமைப்பாளர்கள், இவர்களின் இசை வல்லபம் என்னவென்கிற பரம ரகசியமும் போட்டுடைக்கப்பட்டுள்ளது. அதாவது, எவர் வேண்டுமானாலும் பாடல் எழுதலாம், இசையமைக்கலாம் என்கிற ஒரு மாய வெளியை அது உருவாக்கியும் விட்டிருக்கிறது. இதுவும் ஒரு புரட்சிதானே.

தென்னிந்திய சினிமா ரசிகர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். நடிகர்களின் ‘ஸ்டண்ட்’டுகளில் மயங்கி அவர்களைக் கடவுளர்களாயும், அரசியல் தலைவர்களாகவும் நிவேதித்துள்ளதை, அறுபது வயதாகிய பின்னரும் கல்லூரி மாணவனாய் நடிப்பதையும், கிழட்டுவயதிலும் குமரிக்காதல் புரிவதையும், ஐம்பது பேரை அநாயாசமாய் அடித்துத் துவம்சம் செய்வதையும்தங்கள் விசில் ஒலிகளால் நிறையவே நிரூபித்துக்காட்டியவர்கள். எனவே அவர்கள் எதனை முன்னிலைப்படுத்துவார்களென்று எவராலும் சொல்ல முடியாது.

சந்திரலேகா (1948) திரைப்படக் கதாநாயகி ராஜகுமாரியுடன் கனவிலாவது கலவியின்பத்தைச் சுகித்து விடத் துடித்த ஆயிரக் கணக்கானவர்களைச் சொல்வதா! இல்லை அவரது திரைப்படங்களைத் தினமும் கண்டு ரசித்த அவர்களின் பாமரத்தனத்தைச் சொல்வதா, அவ்வாறே அன்றைய நாயகபக்தியுமிருந்தது. இன்றுமிருக்கிறது.

பாடக் கூடியவர்களே நடிகர்களாக முடியும் என்கிற சூத்திரத்தினுள் நடிகர்களாகிய எஸ். ஜி. கிட்டப்பா, தியாகராஜபகவதர் ஆகியோருக்கென்றே தனியொரு ரசிகர் பட்டாளமிருந்தது. அவர்கள் என்ன பாடினார்களென்றே புரியாமலே அவர்களைக் குருட்டுத் தனமாய் ரசித்தவர்களைப் பட்டியலிட முடியாது.

கிட்டப்பா அன்று ‘சுவாரஷ்யம், வசீகரம் புவனமீபெறும் முகம் சந்திரபிம்பம்...’ என்ற மூக்கால் பாடிய பாடலில் என்ன அர்த்தத்தைக் கண்டார்களோ யாமறியோம்.

(அன்றைய பாடலுக்கான அர்த்தங்களைப் புரிய தமிழகராதி அல்லது நிகண்டு போன்றவற்றை புரட்டியே ஆகவேண்டும்.) அமெரிக்கக் கறுப்பர்கள் போதையில், அநேகமாகக் கெட்ட வார்த்தைகளை தாளக்கட்டோடு RAP என்று பாடியதையும் நாம் விட்டுவைக்கவில்லை. இந்தக் கைங்கரியத்தையும் தமிழ் சினிமாதான் அறிமுகம் செய்து வைத்தது. அங்கும் அவர்கள் பிரயோகித்த மொழி புரியாது போனதும் ஒரு வசதிதான். இதன் வழி வழியேவந்த தனுஷின் ‘கொலவெறி’ பாடலின் தரத்தை மோசமாக மட்டிட்டு எழுதுவதும், பேசுவதும் ஏனோ? ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு கவிஞன் வாழ்கின்றான் என்பதை தனுஷ் நிரூபிக்க முயல்வது தவறா?

ஆனாலும் மிகுந்த பாண்டியத்தியம் பெற்ற ஒரு சிலரால் மட்டும் விளங்கிக் கொள்ள முடிந்த விபுலானந்த அடிகளாரின் யாழ்நூலுக்கு, தி A Little Bit Of Physics + A Little Bit Of Music + Alittle Bit of Tamil என்று ஒரு காலகட்டத்தில் சமீகரணம் சொல்லப்பட்டது. போல, தி A Lot Of English + A Bit Of Tamil = கொலவெறி என்று சமீகரணம் சொல்வதும் பொருந்தும்.

தனுஷ் என்கிற கவி (இது வேறு கவி) தங்கிலிஷ் இல் (தமிழ் + இங்கிலிஸ் + தங்கிளிஷ்) எழுதிய இப்பாடலில் என்ன பிழை கண்டீர், சொல்லிலா இல்லை பொருளிலா?

“கல்தரையில் கைபோட்டு நீந்துகின்ற மனிதா, காலமிட்ட கட்டளையை மாற்றுவது எளிதா?” என்று மனித உழைப்பைக் கொச்சைப்படுத்திய கண்ணதாசனின் பிற்போக்கான வரிகளை விட “கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்... கால்களை வருடுவேன்.. விரலுக்குச் சொடுக்கெடுப்பேன்... என்று பெண்பித்துப் பிடித்து பிதற்றிய வைரமுத்துவை விடவா தனுஷ் மோசமாக எழுதிவிட்டார். ஆங்கிலம் கலந்து நீங்களெல்லாம் தமிழ் பேசலாமென்றால் தனுஷ் ஏன் பாட்டெழுதக் கூடாது. தனுஷ்மீது அத்தனை கொலைவெறியா உங்களுக்கு?

ஒரு முப்பரிமாண (3 டீ) திரைப்படத்தை ரசிப்பது போல்தான் இப்பாடலை ரசிக்க வேண்டுமே தவிர இருட்டுக்குள்ளிருந்து கறுப்புக் கண்ணாடியோடு ரசிக்க வேண்டாம்.

தமிழிசையில் காணப்படும் எட்டுவித ‘உருப்படிகளில்’ ஒன்றான ‘லெளகிக கான உருப்படி’ வகையைச் சேர்ந்ததுதான் இப்பாடல். (உலகே மாயம் வாழ்வே மாயம் என்கிற தேவதாஸ் பாடலைப் போல)

துன்பியலை (Soup) லெளகீகம் கலந்து ஒலிக்கும் இப்பாடல (Soup Song) ‘நவரசக் கன்டன’ போன்ற மிகக் குறைந்த (நான்கு) ஸ்வரங்களைக் கொண்ட ஏதோவொரு புதிய , பெயரிடப்படாத ராகத்தில் அமைந்திருப்பது இதன் சிறப்பு. இதன் நுட்பமான தாளக்கட்டுக்களை (பார்க்க வீடியோ) இசையமைப்பாளரானவர் விரல்களைக் கொண்டு கணக்கிட்டு அவிழ்க்கும் விதமும், தனுஷ் Rhythm O. K என்று Thumb up  செய்வதும், பேரிசையின் பெருமுடிச்சொன்று அவிழ்ந்துவிடும் பிரமையை நமக்கு உணர்த்தவில்லையா, ஆகவே மெலெழுந்தவாரியாக இப்பாடலை விமர்சிப்பதோ, இப்பாடல் மூலம் தனுஷ் பெற்ற பிரமேயத்தைக் கொச்சைப்படுத்துவதோ தகாது. நாம் அன்றாடம் பிரயோகிக்கும் ஆங்கிலச் சொற்களை வைத்து ‘அம்மானை’ யாரும் இப்பாடல், ‘அழகு ஆபத்தானது’ என்கிற மகா தத்துவத்தை, ‘பொன்னிற மேனி கொண்ட பெண்மையின் அந்தரங்கம்’ இருளானது (தமிழ் மொழியெர்ப்பு) என்கிற வரிகள் மூலம் உணர்த்தவில்லையா? அவ்வாறெனில், தனுஷ் ஒரு தத்துவக் கவிஞனுமல்லவா? காதலின் ஏக்கத்தை மிகச் சாதாரண வரிகளில் விளம்பும் இப்பாடல் புரியவில்லையென்றால் வேறென்னதான் செய்வது. பாடலில் அவர் கையாளும் ‘பியர்’ ‘ஸ்கொட்ச்’ போன்ற பெயர்ச்சொற்களை எவ்வாறு தமிழ்ப்படுத்துவது. ‘மது’ என்று பொதுப்படையாகச் சொன்னால் பாடலின் ‘கிக்’ போய்விடுமல்லவா? அத்தோடு ஞானத்தின் பிறப்பிடமே மது என்கிற அவரது தத்துவமும் அடிபட்டுப் போய்விடுமல்லவா? இதனையும் ஒருவித ‘கவிநுட்பம்’ என்று ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை?

தனுஷ் தனியே ஆங்கில வார்த்தைகளைக் கொண்டுதான் பாடலை எழுதினார் என்று எவ்வாறு சொல்வீர்கள்? ஒவ்வொரு ஆங்கில வார்த்தையின் முடிவிலும் ஸி என்கிற ‘உகரம்’ சேர்க்கப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். ஆங்கிலத்துள் தமிழைக் கொணர்ந்த இத் தமிழ்ப்பணியை நீங்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை.

(உ+ம்) Bear - U Scotck - U
பியர் -2 ஸ்கொட்ச் -2

அடுத்து, தனுஷின் குரலைக் கவனித்துப் பாருங்கள். கழுத்தளவு நீருக்குள் நின்று அவர் குரல் சாதகம் செய்திருப்பது புரியும். வேறொன்றுமல்ல. இடையிடையே குரல் நடுக்கமுற்று முடிவில் எதிரொலிப்பது போல் ஒலிப்பதைத்தான் குறிப்பிடுறேன். பாடலே ஒரு நவீன கவிதைதான். இடையில் வரும் ‘பாப்பாப்பா பான்... பாப் பாப்பாப்பான் பான்...” என்பதெல்லாம் தனுஷ் தமிழுக்கு அறிமுகம் செய்யும் புதிய சொற்கள். ஆனால் அதன் அர்த்தம் அவருக்குப் புரியும் போது அதை தமக்கு விளக்குவார்.

இதன்பிறகு, ‘துன்பியல் பாடல்களின் (Soup Song) தந்தை. எனத் தனுஷ் திரையுலகில் முடி சூட்டப்படக் கூடிய வாய்ப்புகளும் உருவாகுமென்பதை மறுப்பதற்குமில்லை. அத்தோடு ‘இம்’ மென்றால் நூறும், ‘அம்’ மென்றால் ஆயிரமும் பாடலெழுதும் வல்லமையும் அவர் பெற்றுவிடுவார். இது நமக்குப் பெருமைதானே. தமிழ் திரைப்படப் பாடலாசிரியர்களால் “உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” என்றுமவர் அழைக்கப்படலாம் யார் கண்டார். துன்பியலாளர்களுக்கு (Soup Song) அர்ப்பணிக்கப்பட்ட இப்பாடல், ‘ஓஸ்கார்’ ‘கிராமி’ போன்ற விருதுகளைப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ் திரையுலகில் ரகுமானும், வயிரமுத்துவும் (ரகுமான் பா-தி, வயிரம் பா-தி) கலந்த புதியதொரு கலவையாக தனுஷ் வடிவெடுத்துள்ளார் என்பதே நிதர்சனம். பெண் கொடுத்தார் ஆசீர் அவருக்கிருக்கும் வரை அனியவரை அசைக்க முடியாது.

திரையிசைப் பாடல்களில் இலக்கிய ரசனை இல்லையென்று வாதிடுபவர்கள் இனியாவது தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்.

இனியொன்ன முத்தமிழோடு, தந்தைத் தமிழ், பிள்ளைத் தமிழென ‘தனுஷ் தமிழும்’ இணைந்தோர் புதிய தமிழ் உருவாகும். HATS OFF தனுஷ்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.