புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
புத்துயிர் பெறும் ஹிங்குரான சீனித் தொழிற்சாலை

புத்துயிர் பெறும் ஹிங்குரான சீனித் தொழிற்சாலை

சீந்நியராட்சியில் கட்டுண்டிருந்த எமது தாய்த்திரு நாட்டுக்கு 1948களில் சுதந்திரம் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தொடர்ந்து வந்த தசாப்தங்கள் பொருளாதார ரீதியிலான தன்னிறைவுச் சுதந்திரத்தை அடைந்து கொள்ள அவசியம் ஏற்பட்டது.

சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாட்டின் சூழலும், இயற்கையின் ஆதிக்கமும் விவசாயக் கைத்தொழில், மற்றும் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை என்பவற்றுக்கே அதிக வாய்ப்பாகவும்; மீன்பிடி மற்றும் வேளாண்மைத் தொழிலுக்கும் சாதகமானதாகவும் விளங்கியது.

இதனடிப்படையில் தேச பிதா டீ. எஸ்.ஸின் விவசாயப் புரட்சி நடவடிக்கைகளும் குடியேற்றத் திட்டங்களும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உந்து சக்தியாக விளங்கின.

கிழக்கு மாகாணத்தின் ‘கல்ஓயா’ குடியேற்றத்திட்டமும் நீர்ப்பாசனத் திட்டமும் விவசாயப் பொருளாதாரத்துக்கான அடித்தளத்தை இட்டன என்றால் மிகையல்ல.

கிழக்கின் அம்பாறை மாவட்டம் நெற்பயிர்ச்செய்கையை முன்னிலைப் படுத்திச் சென்ற கையோடு மற்றுமொரு கைத்தொழில் முயற்சிக்கும் தன்னை அர்ப்பணிக்க வேண்டிய தேவை காலத்தின் கட்டாயமாக்கப்பட்டது. 1960களில் ஹிங்குராண என்ற இடத்தில் சீனித் தொழிற்சாலை ஒன்றும் அதனுடன் இணைந்து மதுசார உற்பத்தி பசளைத் தயாரிப்பு என்பனவும் சந்தை வாய்ப்புக்களைப் பெற்றன. நாட்டின் சீனித் தேவையில் இது 40 சதவீத பங்களிப்பை வழங்கியது.

1960களில் தொடங்கிய உற்பத்திப் பயணத்தை மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் 1990யில் பயங்கரவாத நடவடிக்கைகளினால் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக 4000 குடும்பங்கள் தொழில் வாய்ப்பை இழந்ததுடன் மேலும் 5000 குடும்பங்கள் மறைமுக உடலுழைப்பு மூல வருமானங்களை இழக்கலாயின.

சுமார் இரண்டு தசாப்தங்களாக மூடுப்பட்டுக் கிடந்த ஹிங்குராண சீனித் தொழிற்சாலையின் கோடிக்கணக்கான பெறுமதியுடைய இயந்திரங்கள் துருப்பிடித்து அழிந்து வரும் நிலையில் நாட்டில் ஏற்பட்ட அமைதிச் சூழல் சீனித் தொழிற்சாலையின் இயக்கத்துக்குப் புத்துயிர் அளித்துள்ளதெனலாம்.

நாட்டிலுள்ள தொழிற்சாலைகளைப் புனரமைத்து உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பிரகாரம் ஹிங்குராண சீனித் தொழிற்சாலை இன்னும் ஒரு சில வாரங்களில் தனது உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. சீனிக் கூட்டுத்தாபனம் எவ்வித பிரச்சினைகளும் இன்றி இயங்கிய காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் 5500 ஹெக்டயர் காணி கரும்புச் செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்டது.

தொழிற்சாலை மூடப்பட்டதையடுத்து மேற்படி காணிகள் அனைத்தும் நெற்பயிர்ச் செய்கைக்கு உள்வாங்கப்பட்டு கடந்த 20 வருட காலமாக உற்பத்தி நடைபெற்றும் வருகின்றது.

2011ம் ஆண்டில் சீனித் தொழிற்சாலையின் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதையடுத்து முதற்கட்டமாக 800 ஹெக்டயரில் மட்டுமே கரும்பு செய்கை பண்ணப்பட்டுள்ளது. இவ்வருடத்தில் மேலும் 1200 ஹெக்டயரில் கரும்பு பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஹிங்குரான மேற்கு, ஹிங்குரான கிழக்கு, கல்மடு வலயம் என்பனவற்றில் மீள்கரும்புச் செய்கை பண்ணப்படவுள்ளது.

விவசாயத்தில் ஊறிப்போன மக்களை மீண்டும் கரும்புச் செய்கைக்கு உள்வாங்குவதில் சீனித் தொழிற்சாலை நிருவாகம் பல சிரமங்களை எதிர்நோக்கிய போதிலும் கலந்துரையாடல்கள், ஊக்குவிப்புகள் ஊடகவியலாளர்கள் சமயத்தலைவர்கள் ஆகியதரப்பினருடன் நிருவாகம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் நல்ல பலனை அளித்துள்ளதால் சீனி ஆலை நிருவாகமும் விவசாயிகளும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதை அறிய முடிகின்றது.

அண்மையில் நிருவாகத்தினருக்கும் உற்பத்தியாளர்களுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது விவசாயிகளால் முன் வைக்கப்பட்ட பத்தொன்பது கோரிக்கைகளில் 16 கோரிக்கைகளுக்குத் தீர்வுகிட்டியுள்ளது. எஞ்சியுள்ள 03 கோரிக்கைகளுக்கும் நல்ல தீர்வு கிட்டுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சீனித் தொழிற்சாலையின் நடவடிக்கைகளில் 51 சதவீதமானவை அரசினாலும் 49 சதவீத மானவை கல்ஓயா கம்பனியாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் அரசின் 5 பணிப்பாளர்களும், கம்பனியின் 4 பணிப்பாளர்களும் நிருவாகத்தைக்கொண்டு நடாத்தவுள்ளனர். சுமார் இரண்டாயிரத்து நூறு கோடி ரூபாவில் 1300 கோடி ரூபா நிதி கிடைக்கப்பெற்று 80 சதவீதமான புனரமைப்பு வேலைகள் பூர்த்தியடைந்துள்ளதை நிருவாகத்தினர் ஊடகவியலாளர்களுக்கும் உற்பத்தியார்களுக்கும் காண்பித்தனர்.

முதற்கட்டமாக கரும்பு அறுவடை செய்வதற்குள் இந்தியாவிலிருந்து பதப்படுத்தப்பட்ட பாணி இறக்குமதி செய்யப்படவுள்ளது. பெப்ரவரி தொடக்கம் ஜூன் வரை இறக்குமதி செய்யப்பட்ட பாணியின் மூலமே உற்பத்திகள் நடை பெறும்.

உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டயர் காணிக்கு முப்பதாயிரம் ரூபா பணம் கடனாக வழங்கப்பட்டு மூன்று தவணைகளில் இப்பணம் கழிக்கப்படும் அத்துடன் 15 அந்தர் உரம், கிருமிநாசினி என்பனவும் வழங்கப்படும். அது மட்டுமன்றி ஒரு ஹெக்டயருக்கு 10 தொன் நடுகைக்கரும்பும் வழங்கப்படவுள்ளது.

கோயம்புத்தூர் 10,775 ரக கரும்பை விவசாயிகள் விரும்புகின்ற போதும் புதிதாக உடவளவஆய்வு நிலையத்தில் கண்டு பிடிக்கப்பட்ட 14 வகையான கரும்பு இனங்களிலிருந்து தகுதியானவை என்று சான்றளிக்கப்பட்ட 9 வகையான கரும்பு இனங்களை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கரும்பு உற்பத்தியைப் பொறுத்தமட்டில் நட்டு ஒருவருடம் சென்றபின்னரே முதலாவது அறுவடை நடைபெறும் அதனைத் தொடர்ந்து இன்னும் மூன்று முறை அறுவடை குறுகிய காலங்களில் நடைபெறும்.

ஒரு ஹெக்டயரிலிருந்து அறுவடையாக சுமார் நூறு தொன் கரும்பு கிடைக்கும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.

ஒரு தொன் கரும்புக்கான சந்தை விலை 4000 ரூபா. விவசாயி ஒருவர் ஒரு ஹெக்டயரில் கரும்பு உற்பத்தி செய்யும் போது நான்கு இலம்சம் ரூபாவை சம்பாதிக்கும் நிலை ஏற்படுகின்றது.

உற்பத்திச் செலவுக்கு ஒன்றரை இலட்சம் ரூபா செலவாகின்றது. தேறிய வருமானம் இரண்டரை இலட்சம் ரூபாவாகும்.

அம்பாறை மாவட்டத்தில் ஹிங்குராண சீனித் தொழிற்சாலை புனர் நிர்மாணம் பெறுவதனால் பணச்சுற்றோட்ட அதிகரிப்பும், வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அபிவிருத்தி என்பனவும் விருத்தியடையவுள்ளது.

இது தவிர நிலம், நீர், வளி மாசமடைதல் தொடர்பான புதிய நடைமுறைகளும் கையாளப்படவுள்ளதால் எல்லாமே சுபமாக அமையப் போகின்றது.

என அரச தரப்பு நிருவாகிகளும், கல்ஓயா கம்பனி நிருவாகிகளுமான பிரதம நிறைவேற்றுப்பணிப்பாளர் காமினி கே. பி. ரத்நாயக்க, பயிராக்கல் முகாமையாளர் நயனா டீ. இஸட் அபேசேகர, உற்பத்தி முகாமையாளர் டீ. என். தயாரெத்ன, விவசாய அதிகாரி ஏ. எப். ஹரீஸ், வெளிகள உத்தியோகத்தர் எம். எஸ். எம். முக்தார் ஆகியோர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.