புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

ஹொண்ராஸ் சிறை தீ

ஹொண்ராஸ் சிறை தீ பொறியில் விழுந்த கைதிகள்

ஹொண்டூராஸ் சிறையில் எழுந்த தீ 358 பேரின் உயிரைக் காவுகொண்ட போது எத்தனையோ உறவுகளின் இதயங்களை வேரறுக்கச் செய்தது. சென்ற செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு ஹொன்டூராஸின் கொமாயகுவா சிறையில் வெகுண்டெழுந்த தீ சுமார் மூன்று மணிநேரம் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி முழு மூச்சுடன் பெரும் சுவாலைகளைக் கிளப்பியெரிந்தது. செய்தி கேட்ட உறவினர் அயலவர்கள் எல்லோரும் ஆலாய்ப் பறந்து வந்து பார்த்தபோது சிறைக்குள்ளே அமர்க்களமும் அவலக்குரலும் உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு வெளியே தாவிப்பாய்ந்து தப்பித்துக் கொள்ள முயன்றோர் சிறையில் வைத்து எரிக்கப்பட்ட சடலங்கள் போல் கருகிமாண்டனர். களவு, கொள்ளை, கப்பம், கொலை போன்ற குற்றங்களுக்காகத் தண்டனை விதிக்கப் பட்டோர் வாழும் இடமே சிறைச்சாலை. வாரக்கணக்கில் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் இன்னும் ஆயுள் தண்டனைக்கும் உள்ளானாரே இச்சிறையிலிருந்தனர். அச் சிறையில் தீ யேற்பட்டதால் ஆயுள்தண்டனை பெற்ற சிலர் தப்பி யோடியும், மாத வருடக்கணக்கில் அடைக்கப்பட்டோர் வாழ்வேயில்லாமல் சிறைக்குள் சாம்பலானதும் இறைவனின் ஏற்பாடே. என்ன வடிவில் ஆண்டவனின் இந்த ஏற்பாடு வந்ததோ தெரியாது.

இன்னும் சொல்லப் போனால் ஆண்டவனின் ஏற்பாட்டா அல்லது ஏண்டவன் (இயலுமானவன்) ஏற்பாடா இத் தீ விபத்து என்பது இன்னுமே தெரியாது. ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளின் முடிவுகளிலே இது தெரியும். ஹொண்டூராஸ் வடமத்திய அமெரிக்க நாடு. எல்லா நாடுகளிலுமுள்ளதைப் போல் சிறை நீதிமன்றம் பொலிஸ் எல்லாம் இங்குண்டு. மொத்தம் 24 சிறைச்சாலைகளில் எட்டாயிரம் பேரை அடைத்துவைக்க வசதிகளுள்ளன.

ஆனால் நாட்டிலுள்ள 24 மொத்த சிறைச்சாலைகளில் 24 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனராம். அப்படியானால் 16 ஆயிரம் பேர் அளவுக்கதிகம். இதேபோல தீ அனர்த்தம் நிகழ்ந்த சிறையிலும் அளவுக்கு அதிகமான கைதிகளாம். ஏறக் குறைய 250 பேரைக் கொள்ளும் இச் சிறைச்சாலையில் 852 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இங்கு இது வரைக்கும் உலகின் எந்தச் சிறைச்சாலையிலும் ஏற்படாத அனர்த்தம் ஏற்பட்டதையெண்ணி அனைவரும் ஆச்சரிய மடைகின்றனர். சிறைக்காவலர்கள் பொறுப்புடன் நடந்திருந்தால் உரிய வேளைக்கு சாவியுடன் வந்து கதவுகளைத் திறந்திருந்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பில்லையென்கின்றனர். இதனால் சிறைக் காவலர்கள் அதிகாரிகளின் தொழில்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் பக்கச் சார்பற்ற விசாரணைகளும் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயரும் போது அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கண்டனப் பேணிகள் களைகட்டும் வேளையில் நிலைமைகள் மேலும் மோசமடைய வாய்ப்புண்டு. சிறைக்குளுண்டான தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பல சிறைக்கைதிகளை காவலர்கள் சுட்டுக்கொன்றதைக் கண்னால் கண்ட சாட்சிகளும் உண்டு. ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட கணவனைப் பார்க்க வந்த மனைவி கண்ணீரும் கம்பலையுமாக ஒரு கதையைச் சொன்னாள்.

தீயை அணைத்துக் கொண்டு வெளியே பாய்ந்து வரமுயன்ற தன் கணவனை காவல் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டார்களாம் என்கிறாள் இப்பெண். எரிந்து கொள்ளிக் கட்டைகளைப் போல்கிடந்த பிரேதங்களுக்குள் சகோதரனின் சடலத்தைத் தேடிய சகோதரி கோவெனக் கதறி அழுதாள். இந்தக் கொடிய கோர விபத்துப் பற்றி கடுமையான முறையில் விசாரணை வேண்டும் யாரும் இதை மூடிமறைக்க முனையக் கூடாது என்கிறாள் அழுது அழுது இவளுடைய கண்கள் இரத்தத்தின் நிறம் போல் சிவந்திருந்தன. இப்படி எத்தனையோ சோகங்களையும் ஏக்கங்களையும் அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

என்னதான் நடந்ததென்ற உண்மையைக் கண்டறிய அமெரிக்காவில் இருந்து விசேட நிபுணர் குழுவொன்று ஹொன்டூராஸ் புறப்பட்டது. வெடிப்பு, எரிபற்றல் போன்ற துறைகளில் விசேட நிபுணத்துவம் உடையோரே இக்குழுவில் உள்ளனர். ஏற்கனவே இது போன்ற அனர்த்தங்களை ஆராய்ந்து இவ்வனர்த்தங்களின் பின்னணியில் இயற்கையா செயற்கையா என்ற பல திகலூட்டும் தகவல்களை வளங்கிய குழுவே இது.

அற்ககோல், போதை, தீ உள்ளிட்ட துறைகளில் பாண்டித்தியம் பெற்றுள்ளவர்களையுடைய இக் குழுவினர் ஆராய்ச்சிக்கென பல கருவிகளையும் எடுத்துச் சென்று ஸ்தல விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சிலி, அமெரிக்கா, எல்சல்வடோர், கெளத்த மாலா ஆகிய நாடுகள் தீ ஏற்பட்டதற்கான உண்மையை கண்டறியும் ஸ்தல விசாரணைகளுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்ய ஆயத்தமாயுள்ளன. இன்நாடுகளின் உதவிக் கரங்களுக்கு ஹொன்டூரஸ் ஜனாதிபதி நேசக்கரம் நீட்டியுள்ளார். கருகிய சடலங்களை அடையாளம் காணல், காயமடைந்தோருக்கு சிகிச்சையளித்தல், சிறைக்கைதிகளின் விமர்சனங்கள், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தல் என்பவையே ஹொன்டூராஸ் அரசுக்கு முன்னாலுள்ள சவால்கள்.

பிரேதங்களைப் பெறுவதிலும் அடையாளம் காண்பதிலும் இன்னும் இழுபறிகளே உள்ளன. கைதிகளின் தகவல்கள் பதியப்பட்ட புத்தகங்கள், குறிப்புகளில் இருந்தே குத்துமதிப்பாக சடலங்கள் அடையாளம் காணப்படுகின்றன. வியாழக்கிழமை வரை 115 சடலங்கள் கிடைக்கப்பெற்று அடையாளம் காணப்படுவதற்காக பொதுமக்கள் முன்வைக்கப்பட்டன.

சகல சடலங்களும் கறுப்புப் பொலித்தின் பொதிகளில் சுற்றப்பட்டிருந்தன. பொலிஸார் இராணுவத்தினர் காயப்பட்டோரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லல், பிரேதங்களை தேடி எடுத்தல், பொதிசெய்தல் போன்றவேலைகளில் உஷார் ஆகினர். கொமாயகுவா சிறைச்சாலை வளாகத்தின் வேறு ஒரு கட்டடத்தில் ஏற்பட்ட தீயே சிறைச்சாலை மீது தாவியிருக்கலாம் என்று சில அதிகாரிகள் அபிப்பிராயப்படுகின்றனர். அடையாளம் காண இயலாத இடத்தில் இருந்து தொலைபேசியில் உரையாடிய ஒருவன் சிறைச்சாலை மீதான தற்கொலைத் தாக்குதல் குறித்து எச்சரித்ததாகவும் இன்னொரு அதிகாரி கூறுகிறார். இவ்வாறு ஒன்றுக்கொன்று முரணான தகவல்களுக்கு மத்தியிலே ஸ்தல விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பலியானோருக்காக துக்க தினம் அனுபவிக்கும் அளவிற்கு அரசாங்கம் இதை பாரதூரமான விடயமாக கருதியுள்ளது. உறவுகளை இழந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் ஹொண்டுராஸ் அரசு நஷ்ட ஈடுகளை வழங்கவுள்ளது. எவ்வாறாவது மக்களின் மனக்கொதிப்பை அணைக்க வேண்டிய தேவையும் நிர்க்கதியிலும் அந்நாட்டு அரசாங்கம் உள்ளது. குற்றவாளிகளை நற்பிரஜைகளாக மாற்றுவதற்கென்றே சிறைகளும் தண்டனைகளும்.

எல்லா நாடுகளிலும் உள்ள சிறைகள் ஏதோ ஒரு கோணத்தில் வீண்வம்புகளை வரவளைக்கின்றன. கியுபாவின் தீவுகளின் ஒன்றில் அமெரிக்கா நிறுவியுள்ள குவான்தனமோச் சிறைச்சாலை. 2008, 2009 ஆம் ஆண்டுகளில் அகிலத்தை அதிரவைக்கும் கொடுமைகள், சித்திரவதைகள், துன்புறுத்தல்கள் நடந்த சிறைச்சாலை இது.

ஈராக்கில் அபுகிராப் சிறைச்சாலை ஜனநாயக அரங்கில் அமெரிக்காவுக்கு எதிரான கேவலமான விமர்சனங்கள் எழும் அளவிற்கு கைதிகள் இங்கு கொடுமைப்படுத்தப்பட்டனர். உலகெங்கும் அமெரிக்கா முன்னெடுக்கும் பயங்கரவாதத்திற்கெதிரான அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் சந்தேகம் கொள்ளச் செய்தது அபுகிராப் சிறைச்சாலை கொடுமைகள்தான். ஆப்கானிஸ்தான் சிறைகளை தலிப்பான்கள் தாக்க அங்கிருந்த அவர்களின் தோழர்கள் தப்பியோடுவதும், சிறைச்சாலையின் அடியிலிருந்து முன்னூறு, ஐனூறு மீற்றர் ஆளமான குழிகள் தோண்டி தப்பியோடுவதும் சிறைகளில் நடக்கும் சில சில்மிசங்களே. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சிறைச்சாலைகள் சர்ச்சைக்குரியவைகளாக மாறுகின்றன.

சிறைக்கைதிகளும் மனிதர்களே!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.