புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
துணிந்தால் துன்பமில்லை, சோர்ந்துவிட்டால் இன்பமில்லை!

துணிந்தால் துன்பமில்லை, சோர்ந்துவிட்டால் இன்பமில்லை!

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்கள் மீதான வன்முறை தொடர்பாகப் பல்வேறு கருத்துகள் வார மஞ்சரியில் வெளியாகி யிருந்ததைப் பார்த்திருப்பீர்கள். ஆண்கள் நினைத்த மாத்திரத்தில் வேண்டிய இடமெல்லாம் சுற்றித்திரிய முடிகிறது. ஆனால் பெண்கள் முகம் கழுவினாலே எங்கே போகிறாய் என்று கேட்கிறார்கள் ஆண்கள் என்ற வாக்கியம் நிறைய பெண்களின் மனதைத் தைத்திருப்பதாகக் கேள்வி.

ஆண், பெண் என்பதில் இயற்கையாகவே விதித்துவைக்கப் பட்டிருக்கின்ற சில மாற்றங்களை நாம் மாற்ற முடியாதுதான். ஆனால், பெண்களின் உள் மனதில் பொதிந்து கிடக்கும் ஆயிரமாயிரம் எண்ணக்கோலங்களைப் பற்றி யாரும் பெரிதாக சிந்திப்பதாக இல்லையே என்பது பெரும்பாலான பெண்களின் ஆதங்கமாக உள்ளது. திருமணம் முடித்துவிட்டதோடு அவர்களின் உணர்வுகள், உரிமைகள் யாவும் விலங்கிடப்பட்டுவிட்டதாகவே சில பெண்கள் உணர்கிறார்கள். இதனால் எழுபது சத வீதமான குடும்ப வாழ்க்கை கண்ணீரில் கரைவதையும் சமூகக் கட்டுப்பாடுகளுக்குப் பயந்து போலியான வாழ்க்கையினை நிர்ப்பந்தத்தின்பேரில் தொடர்வதையும் வெளியில் சொன்னால் மட்டுமே அடுத்தவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.

எத்தனையோ ஆசைகளை மனதிற்குள் பூட்டி வைத்திருந்த பெண்கள், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தாம் கணவனாக்கிக்கொண்ட ஓர் ஆண் மகனால் பின்னர் சிறைப்பிடிக்கப்பட்டுவிட்டதாக எண்ணிக் கலங்குகின்றனர். இதில் சமூகக் கட்டுக்கோப்புகளைத் தகர்த்தெறிந்து ¦ளியில் வந்தவர்களும் இல்லாமல் இல்லை. பொதுவாகவே ஆண்கள் பெண்களின் மனதை அறிவதற்குத் தவறிவிடுகிறார்கள் என்றும் ண்களின் அற்பமான ஆசைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்ளவே எப்போதும் விரும்புகிறார்கள் என்றும் பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். அதனைவிடவும் பெண்ணின் உணர்வுகளைத் துச்சமாகவே ஆண் நோக்குகிறான் என்பது பிரதானமான குற்றச்சாட்டு. இதில் விதிவிலக்கானவர்களுக்கு நாம் ஆற அமர தலைவணங்கலாம்.

பெண்ணை ஒரு போகப்பொருளாக மட்டும் நோக்கும் சிந்தனை மாற வேண்டும் என்பதுதான் அழுத்தி வலியுறுத்தப்படும் கருத்து. அதேநேரம் குடும்பத்தில் அடக்கி ஒடுக்கப்படுவதும் தீர்மானம் எடுக்கும் அதிகாரத் திலிருந்து விலக்கி வைக்கப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்கிறாள் ஒரு சமூக ஆர்வலரான சகோதரி. இதன் மூலமே பொய்யான வாழ்க்கையிலிருந்து நிஜவாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்கிறார் அவர்.

உண்மையில் பெண்ணின் மன ஆழத்தை அறியும் பயணத்தில் ஆண்கள் தோற்றுத்தான் போகிறார்கள். அதில் எவ்வாறு வெற்றி காண்பது என்பதைப் பற்றி நாம் ஆற அமர சிந்தித்துக்கொள்ளலாம். பூப்போன்ற மனங்கொண்ட பெண்ணைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். ஏனெனில் பெண்களின் கண்ணீர் கூரிய வாளைப் போன்றது. பிறகென்ன ஆபத்தைப் பற்றி விபரிக்கத்தான் வேண்டுமா? பெண்ணை மிருதுவாக, மென்மையின் நாதமாகக்கொண்டு அவளின் எண்ணத்தைப் புரிந்த நாதனாக ஆண்கள் மிளிர வேண்டும் என்பதற்காக ஆற அமர இந்தச் சிந்தனை. அதற்காக ஆண்களின் மனவோட்டத்தை இங்கே மறுதலிக்கவில்லை.

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது எல்லா சமூகக் கட்டமைப்புகளிலும் பரவி விரவி வருகின்ற ஒரு கொடிய நோயாக உள்ளது. இதில் சமூகம், பிரதேசம் என்ற பாகுபாட்டு வரைவிலக்கணத்திற்கு இடமில்லை. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம் எனப் பரந்துதான் இந்நோய் காணப்படுகிறது. என்றாலும் மலையகத்தின் சில பிரதேசங்களில் நமக்குக்கிடைத்திருக்கின்ற சில தகவல்கள் பற்றி இந்த வாரம் நாம் கட்டாயம் கவனம் செலுத்தியாக வேண்டும்.

ஒரு சமூகத்தின் அச்சாரமாக விளங்கும் கல்வித்துறையின் ஆணி வேரையே அரிக்கும்படியான சில நிகழ்வுகள்பற்றிய தகவல்கள் பாரதூரமானவையாக உள்ளன.

குட்டி இலண்டன் என்ற குளிர் பிரதேசத்திற்குச் செல்லும் பாதையில் உள்ள பாடசாலைக்கு அருகில் நடத்தப்படும் ஓர் உணவகம் மாணவர்களின் கேளிக்கைக்கெனத் தனியான இடத்தை ஒதுக்கிக்கொடுத்துள்ளதாகத் தகவல் அறிந்து எல்லோரும் ‘சீ..சீ..’ என்கிறார்கள்.

இந்த உணவகத்திற்கு அருகில் உள்ள பாடசாலையில் பயிலும் உயர் வகுப்பு மாணவர்கள் புகையைக் கிழித்து வானத்தைத் துளைப்பதற்கு இந்த உணவகத்தில் தனியான ஒரு பிரிவு இயங்குகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இடைவேளை நேரத்தை இப்படிப் பாழ்படுத்துவதற்கென இந்த உணவகத்தினர் வழிசமைப்பது பற்றி கல்வித்திணைக்கள அதிகாரிகளன் கவனத்திற்குக்கொண்டு சென்றுள்ளபோதிலும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள். தாம் சென்றால் அவசரத்திற்கு உள்ளது இந்தக் கடைதான் என்று எண்ணி நடவடிக்கையாவது கத்திரிக்காயாவது என்று எண்ணலாம். அல்லது வர்த்தக நடவடிக்கைக்கும் என்ன தொடர்பு என்றும் கைகழுவலாம். பரவாயில்லை. உரிய அதிகாரிகளின் கவனத்திற்காவது கொண்டு செல்லலாம். அதற்கு போதிய தாரங்கள் தேவை என்பீர்கள். இந்தத் தகவல் தற்காலிகமான முதல் தகவல் அறிக்கையாக இருக்கட்டும். விபரங்கள் விலாவாரியாக ஆற அமர தொடரும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.