புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
உலகின் மறுமலர்ச்சிக்கு வித்திடும்

உலகின் மறுமலர்ச்சிக்கு வித்திடும்

இன்றைக்கு உலகில் தர்மம் இல்லை, மனிதநேயம் அருகிவிட்டது என்று ஒவ்வொருவரும் கூப்பாடு போடுகின்றனர். நம்பிக்கை ஊட்டுகின்ற ஒரு ஒளி உதயமாகி இருக்கிறது. சிவராத்திரி என்பதன் ஆன்மீக இரகசியத்தை மக்கள் சரியாகப் புரிந்து கொள்வார்களேயானால் மறுமலர்ச்சி எளிதாகவே ஏற்பட்டுவிடும்.

ஏனெனில் சிவராத்திரியாகிய இப்புண்ணிய காலம் சைவசம்பிரதாயத்தைச் சார்ந்த பக்தர்களுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள முக்கிய தர்மங்கள், புராதன கலாசாரங்கள் சார்ந்த உலகிலுள்ள எல்லா ஆத்மாக்களுக்காகவுமே என்பது புரியும்.

உதாரணமாக எல்லாவற்றிக்கும் முன்பாக எப்போது இந்த சிருஷ்டி தமோகுணம் உடையதாக ஆகிவிட்டதோ, அறியாமை அந்தகாரத்தில் மூழ்கிவிட்டதோ, அப்போது ஒரு அகண்டாகாரஜோதி உதித்தது என்றும் அந்த ஜோதிலிங்கம் புதுயுக ஸ்தாபனைக்கு காரணமாக இருந்தது எனவும் பகவத் கீதையின் ஆதி அத்தியாயத்திலேயே எழுதப்பட்டுள்ளது.

பாரதத்தில் சிவனுக்கு ஊரெல்லாம் ஸ்தலங்கள் உள்ளன. கிழக்கே காசியில் விஸ்வநாதர், வடக்கே அமரநாத், தேற்கே இராமேஸ்வரத்தில் இராமநாதர், மேற்கே குஜராத்தில் சோமநாத், உஜ்ஜெயினில் மகாகாளேஷ்வர், இமயத்தில் கேதாரநாத், மத்திய பிரதேசத்தில் ஓங்காரநாத், துவாரகையில் புவனேஷ்வர் ஆகியன முக்கிய ஸ்தலங்களாகும். இவ்வாறு பாரதத்தில் மட்டுமல்லாது வெளி நாடுகளிலும் முக்கிய கலாசார சின்னங்களில் சிவனுடைய அடையாளங்கள் உள்ளன.

உலகம் முழுவதிலும் பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. தர்மம், அரசியல் இரண்டும் சக்தியிழந்துவிட்டன. இந்நிலையில் மனிதன் மாறவேண்டும், உலகம் மாறவேண்டும் என்ற குரல் மனிதனுடைய அந்தராத்மாவில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. கலியுகத்தின் கடையின் லட்சணம் எவ்வாறு இருக்கும் என்று சாஸ்திரங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. நேர்மையற்ற வணிகம், விவேக அடிப்படை தவறிய விஞ்ஞானம் அன்பில்லாத ஆதிக்கங்கள் தர்மத்தின் பெயரால் இம்சைகள், வறுமையின் கொடுமையான நிலைகள் என்பன இந்நேரத்தில் காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்திலேயே சிவன் அவதாரம் செய்து உடல் உணர்வில் நான், நீ, பணம், பதவி என அங்கலாய்க்கும் ஆத்மாக்களான தனது குழந்தைகளுக்கு உடலில் வாழும் நீங்கள் அழிகின்ற இந்த உடல் அல்ல அழியாத ஆத்மா, ஆத்மா இவ்வுடலில் எங்கே இருக்கின்றது? ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையிலான அநாதியான உறவு என்ன? பரமாத்மாவாகிய இறைவனை அடையும் வழி என்ன, போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை தந்து கர்மச் சிதையில் எரிந்து போன தனது குழந்தைகளை ஞானச் சிதையில் அமர்த்தி அலங்கரிக்கின்றார். அது மட்டுமல்லாது விதியை எழுதுபவன் நான் அல்ல. அதற்கு நீயே பொறுப்பாவாய், நீ செய்யும் கர்மத்திற்கேற்ப நீயே உனது விதியை தீர்மானிக்கின்றாய், ஆகவே இந்த செங்கமயுகத்தில் ஆத்ம உணர்வை பயிற்சி செய்து சிவ சிந்தையுடன் சிவனை நினைவு செய்வதன் மூலம் பாவங்களை வெற்றிகொள்ளும் இலகுவான வழிமுறையைக் கற்பிக்கின்றார்.

முடிவுற்ற துன்பங்களில் இருந்து விடுதலையும், நிவாரணமும், மன அமைதியும் வேண்டி இறைவனை மனிதர்கள் ஜன்மஜன்மாந்திரங்களாக ஏங்கி அழைத்தனர். மனிதர்களின் அழைப்பை ஏற்று கலியுகத்தின் இறுதிக்கும், சத்திய யுகத்தின் ஆரம்பத்திற்கும் இடையில் இருக்கின்ற இந்த உலக நாடகச் சக்கரத்தின் இறுதியில் அதி மங்களகரமான சங்கமயுகத்தில் கருணைக் கடலாகிய சிவபரமாத்மா எங்களுக்கு அடைக்கலமளிப்பதற்காக பரந்தாமத்தை விட்டு இந்த சிருஷ்டி அரங்கத்திற்கு இப்போது வந்துள்ளார். ஆதலால் உடல் அபிமானத்தை மறந்து ஆத்ம உணர்வு பெறுவோம். சிவனை அன்புடன் நினைவு செய்து தூய்மை அடைவோம்.

ஆத்மாக்களின் தந்தையாகிய சிவனின் நினைவில் சதா நிலைத்திருக்கும் போது அதாவது அவருடன் வாசம் (உபவாசம்) செய்தால் இயல்பாகவே சகல தீய குணங்களும் எம்மை விட்டு அகன்று விடுவதால் ஆத்மா சக்தி பெறுவதால் நாம் கவலைகளாலும் எத்துன்பத்தினாலும் தாக்கப்படுவதில்லை. சிவனின் நினைவு பேரானந்தப் பெரு வாழ்விற்கு வழிவகுக்கின்றது.

ஆத்மா சத்தியத்தை உணர்ந்து அறியாமையில் இருளில் இருந்து விழிப்படைந்து காமம், கோபம், லோபம், போன்ற விகாரங்களில் இருந்தும் தூய்மையற்ற வீணான எண்ணங்களை மனதுக்கு வழங்காமல் இருப்பதில் இருந்தும் விரதம் காத்து உபவாசம் இருப்பதே உண்மையான சிவராத்திரியாகும்.

லெளகீகக் குடும்ப வாழ்க்கையில் அன்பான இனிமையான ஒரு தந்தை அவரது குழந்தைகளின் மீது எவ்வளவு அதிகமான அன்பைக் கொண்டுள்ளார் என்பதை நாம் அறிவோம். அதைவிட அன்பே மயமான பரமதந்தை சிவன் தனது குழந்தைகளான எம் மீது எத்தகைய எல்லையற்ற அன்பைக் கொண்டுள்ளார். அத்தகைய அன்புத் தந்தை தனது குழந்தைகளான எம்மை எல்லையற்ற துன்பங்களில் இருந்து விடுவித்து சந்தோஷமான சத்திய உலகிற்கு அழைத்து செல்வதற்கு எம்மைத் தயார்படுத்தும் காலமே சங்கமயுகமாகும். இந்த சங்கமயுகத்தில் பூவுலகுக்கு வந்து தனது பிரியமான குழந்தைகளான எமது அன்பை எதிர்பார்த்து அவர் தனது திவ்ய கரங்களை நீட்டிய வண்ணம் இருக்கின்றார். அக்கரங்களை பற்றிய வண்ணம் அவரின் நினைவு என்ற படகில் ஏறி கலியுகம் என்ற துன்பக்கடலை கடக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். எமக்கான பாதுகாப்பும் அதுவே ஆகும்.

அன்புக் கடலான தந்தை சிவனை உள்ளன்புடன் நினைவு செய்வதன் மூலம் அவரது அன்பான அரவணைப்புக்கு இலகுவில் பாத்திரமாகிவிட முடியும். இந்த சங்கம யுகத்தின் சிறப்பியல்பானது சங்கமயுகத்தின் ஒவ்வொரு விநாடியும் ஆத்மாக்கள் தந்தையுடன் இனிமையான சந்திப்பை ஏற்படுத்தக் கூடிய மங்களகரமான நேரமாகும், இதுவே நாம் பிறவி பிறவியாகச் செய்த பக்திக்கான பலனுமாகும்.

சிவனின் நினைவில் அதீந்திரிய சுகத்தைக் கொண்டாடும் எங்களின் சூழலும் இயல்பாகவே தூய்மை அடைகின்றது. அத்தகைய நாங்கள் வாழும் வீடும், நாடும் சுபீட்சம் பெற, நாங்கள் வாழும் உலகம் மறுமலர்ச்சி காண்கின்றது. எங்களுக்கு அடுத்த 21 பிறவிகளுக்கு அமரதேவ பதவி பிராப்தியாகும்.

இப்பிறவிகள் அமையவிருக்கும் உலகம் மரணத்தை வென்ற உலகமாகும். அது அகண்ட அன்பு ஆனந்த சாம்ராஜ்யமாக இருக்கும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.