புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
'உயிரோட்டமான ஓவியத்தை கணனியால் தரமுடியாது'

'உயிரோட்டமான ஓவியத்தை கணனியால் தரமுடியாது' தூரிகை மூலம் உயிரோவியமாக்கும் ஓவியர் எஸ்.டி.சாமி

மலையுச்சியில் அமர்ந்தபடி தூரத்துப் பார்வைகளைத் தூரிகையால் வரையாமல் நடந்து பார்த்து வியர்வையில் நனைந்த சந்தோஷத்தை அனுபவித்து வர்ணத்தால் விபரிப்பவர்தான் எஸ். டி. சாமி. பத்திரிகை ஜாம்பவானால் செம்மைப்படுத்தி பட்டைத்தீட்டி பத்திரிகையுலக பாசறையில் வளர்க்கப்பட்ட ஓவியர் சாமியின் வரைந்த, வளர்ந்த பக்கங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்.

வித்தியாரம்பக் கல்வியிலிருந்தே கலையோடு ஒட்டி உறவாட முக்கனி கலந்த சுவைபோல் இயல், இசை, நாடக நண்பர்கள் உறவு இன்று அதிமேதகு ஜனாதிபதியின் நேரடி பாராட்டைப்பெறும் அளவுக்கு சாமியின் கைவண்ணம் பிரகாசித்திருக்கிறது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதல்லவா. அவரிடமே பேசுவோம்.

* தாங்கள் பிறந்தகத்தைப் பற்றி கூறுங்கள்

எஸ். துரைசாமி என்ற பெயரைக் கொண்ட நான் கொழும்பு திம்பிரிகசாயவில் பிறந்தேன். என் பெற்றோர்களின் வாழ்விடமே அது. ஆரம்பக் கல்வியை பம்பலப்பிட்டி றோ. க. த. கலவன் பாடசாலையில் ஆரம்பித்தேன். அதன்பின் கொம்பனித் தெருவிலுள்ள நெஷனல் கல்லரியில் தொடர்ந்தேன். ஏனைய பாடங்களைவிட சித்திரப் பாடத்திலேயே எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. எல்லா கொப்பி, புத்தகங்களிலும் சித்திர வேலைப்பாடாகத்தான் இருக்கும். இதைக் கண்ணுற்ற ஆசிரியர்களும் ஊக்குவித்தார்கள். எனது சக பள்ளி நண்பரான அந்தனி ஜீவா எழுதுகோலை ஊன்றுகோலாக்கிக் கொண்டதுபோல் என் ஓவியக் கலை உலகுக்கும் வழிகாட்டியாக இருந்தார். பள்ளிக்காலம் முதல் அவரின் எழுத்துக்கும் என் ஓவியத்துக்கும் நெருங்கிய உறவு இருந்ததை மறக்க முடியாது.

* பள்ளி பருவம் முடிந்ததும் தொழிலில் கால்பதித்த காலம் எப்படி?

தனியார் வர்த்தக விளம்பரத்தாரரின் நிறுவனத்தில் இணைந்திருந்தேன். விளம்பர ஓவியத்துறையை வாழ்வாகவும் தொழிலாகவும் ஆக்கிக் கொண்டேன்.

சுமார் பதினைந்து ஆண்டுகள் நாடகங்களுக்கு விளம்பர போஸ்டர், நூல்களுக்கு முகப்பு அட்டை, வர்த்தகப் பொருட்களுக்கேற்ற வசீகர விளம்பரம் என காலங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

* நாடகங்களுக்கு தீட்டிய விளம்பர போஸ்டர்களை நினைவு கூறமுடியுமா?

நண்பர் அந்தனி ஜீவாவின் அக்கினி பூக்கள், கவிதா போன்ற நாடகங்களுக்கும் வெள்ளிநிலா கலாலயத்திற்காக முக்கோணத்தில் மூவர், கோடில்லா கோலங்கள். யாருக்காக? கஞ்சன் கந்தசாமி, பாதையோரத்து சீதை, ஒன்று எங்கள் ஜாதியே போன்ற நாடகங்களுக்கு ஓவியங்கள் தீட்டி திருப்தி அடைந்தேன்.

* நூல் முகப்பு அட்டை தீட்டிய ஓவியங்கள் பற்றி....

இதுவரை 1000க்கும் மேற்பட்ட அட்டைப் படங்களை வரைந்து சாதனைபடைத்த ஓவியன் என்ற வகையில் நான் பெருமைப்படுகிறேன். ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட சஞ்சிகைகளுக்கு அட்டைப்படம் வரைந்துள்ளேன். சாகித்திய பரிசுவென்ற பல நூல்களுக்கும் ஓவியம் தீட்டியுள்ளேன்.

* சினிமாத்துறையில் எந்தவகையில் பங்களிப்பு அளித்துள்Zர்கள்?

நண்பர்கள் செல்வா, சத்யன் ஆகியோரின் மூலமாக திரையுலக தொடர்பு கிடைத்தது. இலங்கையில் தயாரிக்கப்பட்ட வாடைக்காற்று திரைப்படத்திற்கு டைட்டிலையும், பத்திரிகை விளம்பரங்களையும் தீட்டிக்கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வி.பி. கணேஷனின் நாடு போற்ற வாழ்க திரைப்படத்திற்கான விளம்பர ஓவியங்களையும், 1983ம் ஆண்டு காமினி பொன்சேகா, தியாகராஜன், சொப்னா, தீபா நடித்த இலங்கையில் தயாரான ‘இளைய நிலா’ திரைப்படத்திற்கு டைட்டிலும், விளம்பர ஓவியங்களும் பொறுப்பேற்று முடித்துக்கொடுத்துள்ளேன். துரதிர்ஷ்டவசமாக கறுப்பு ஜுலையால் இப்படம் திரைக்கு வரமுடியாமல் போய்விட்டது. பெரும் வேதனை தரக்கூடிய சம்பவங்கள் இக்கால கட்டத்தில் நடந்தேறிவிட் டது.

ஷர்மிலாவின் இதய ராகம் கதையை ஏ. ஏ. ஜுனைதீன் தயாரித்த போது அதன் டைட்டிலையும் விளரம்பர ஓவிய பொறுப்புகளையும் அத்தோடு நிர்வாகப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு அதை மிகத்திறமையாக செய்து கொடுத்து எல்லோரின் பாராட்டையும் பெற்றேன்.

* இந்த அளவு விளம்பரத்துறையில் முத்திரை பதித்த நீங்கள் பத்திரிகைத்துறையில் எப்படி பிரவேசமானீர்கள்?

இலங்கையின் பிரபல பாடகர் வி. முத்தழகு ஒரு நிகழ்ச்சிக்காக விளம்பர போஸ்டர் ஒன்றை வரைந்து தரும்படி என்னிடம் கேட்டிருந்தார். நான் ஏற்கனவே கூறியது போல முக்கனிச்சுவை கலந்த நண்பர்களில் இவரும் ஆத்மார்த்த நண்பரொருவர். ஏ. எம். ராஜாவின் குரலையொத்த சாரீரம் இவருக்கு. நான் வரைந்து கொடுத்த விளம்பர ஓவியத்தை பத்திரிகை விளம்பரத்திற்காக தினபதி ஆசிரியராகவிருந்த எஸ். டி. சிவநாயகத்திடம் காட்டியுள்ளார். ஓவியத்தை கண்ணுற்ற ஆசிரியர் சிவநாயகம், ‘இதை வரைந்தவர் யாரப்பா? இவரை எனக்கும் ஒருமுறை அறிமுகப்படுத்தி வை’ என்று சொல்லியிருக்கிறார்.

அந்தத் தகவலைத் தந்திபோல் எடுத்து வந்த நண்பர் முத்தழகு, இரண்டொரு வாரங்களில் என்னையும் அழைத்துக்கொண்டு தினபதி காரியாலயத்திற்குச் சென்றார்.

என்னைச் சந்தித்த சிவநாயகம், நான் ‘வரைந்த சில சித்திர வேலைப்பாடுகளைப் பார்த்தார். பத்திரிகைகக்கு ஏற்ற மாதிரி சித்திரம் போட முடியுமா என்று கேட்டார். விளம்பரமொட்டிய சித்திரங்களைத் தவிர மற்ற அனுபவம் இல்லை என்றேன். கையோடு எடுத்துச் சென்ற சில ஓவியங்களில் அவர் திருப்திப்பட்டிருக்க வேண்டும் போலி தெரிந்தது. பரவாயில்லை நாளையிலிருந்து கந்தோருக்கு வந்து வரைந்து கொடு என்றார். பத்திரிகைத் துறையின் என்முதல் கால் பதிவு அது.

பத்திரிகை ஓவியத்துறையின் நெளிவு சுழிவுகளை ஒரு மாணவனாக இருந்து அவரிடம் கற்றுக் கொண்டேன். பத்திரிகைத் துறையில் ஓவியர் எஸ். டி. சாமி என்று என்னை இனங்காட்டிய பெருமை எஸ். டி. சிவநாயகத்தை சாரும்.

* வேறு பத்திரிகைகளில் உங்களின் பங்களிப்பு எப்படி?

நம் நாட்டுப் பத்திரிகைகளான தினபதி, சிந்தாமணியில் தொடங்கி தினகரன், தினந்தந்தி, நவமணி, சுடர் ஒளி, புதியபூமி, செந்தணல், வீரகேசரி, வார வெளியீடுகளான இசை உலகம், சுகவாழ்வு, விடிவெள்ளி, சூரியகாந்தி, விஜய் வெளியீடுகள் என்று ஒரு நீண்ட பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

* ஓவியத்துறையோடு வேறு ஏதும் சேவைகள்?

கலை பணியோடு இறைப்பணியும் புரியும் நோக்கில் இறை தந்த கொடை ஓவியக் கலையை திருமறைக் கலாமன்றம் வெளியிடும் காலாண்டுச் சஞ்சிகையான கலைமுகம் முதல் மற்றும் அவர்கள் வெளியிடும் அத்தனை கிறிஸ்தவ நூல்களுக்கும் நானே ஓவியங்கள் வரைகின்றேன்.

திருமறைக் கலாமன்றம் மூலம் என் ஓவியப்படைப்புகள் புலம்பெயர் தமிழர்கள் வாழும் உலகின் எல்லாப் பாகங்களையும் சென்றடைகின்றன என்பதை நினைக்க பெருமிதமாக இருக்கின்றது.

* அண்மையில் நடந்த ஓவியக் கண்காட்சியில் உங்களது பங்களிப்பைப் பற்றிக் கூறுங்கள்?

இலங்கை சித்திரக் கதையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சித்திரக் கண்காட்சியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த எழுபத்தைந்து பேரின் ஓவியங்களும் சிறுபான்மை இனத்தைச் சார்ந்த ஒரே ஒரு தமிழன் என்ற ஒரு தனிமரமாக என் ஓவியமும் இடம்பெற்றிருந்தன. இலங்கையின் அதி மேன்மைதகு ஜனாதிபதி முதல் பாமரர்கள் வரை வருகை தந்து என் ஓவியத்தைப் பார்த்து ரசித்தார்கள். நான்கு தசாப்த எண் கலை பயணத்தில், என் ஓவியத்திற்கு கிடைத்த மகுடமாக போற்றி அந்நாளை நினைவு கொள்கிறேன். இருந்தாலும் ஒருகுறை எண் ஓவியத்தைப் பார்த்து இரசித்த ஜனாதிபதி “இவ்வளவு பெரிய ஓவிய அரங்கில் ஒரேயொரு தமிழரின் ஓவியம்தான் இடம்பெறுகிறதா’ என்று கேட்டு குறைபட்டார் என் ஓவியத்தை ஆழ்ந்து அனுபவித்த அவருக்கு தமிழர்களின் ஓவிய எண்ணிக்கை குறைந்தது பெரும் குறையாகப்பட்டது.

* ஏன் ஏனைய தமிழ் ஓவியர்களுக்கு இடம்கொடுக்கவில்லையா?

இல்லை! ஓவியர்களில் பேதமில்லை. தாராளமான வரவேற்பு இருக்கிறது. ஆனால் சித்திரக் கதையாளர் அமைப்பில் என்னைத் தவிர வேறு எந்தத் தமிழ் ஓவியர்களும் உறுப்பினர்களாக இல்லை.

நான் அந்த அமைப்பில் ஸ்தாபக உறுப்பினராக அங்கம் வகித்து வருகிறேன். தமிழ் சித்திரக் கதையாளர்கள் பெரும்பாலும் குறைவும் ஒரு காரணம். இருப்பவர்களும் இப்படியான அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதில் அசமந்தப் போக்காக இருந்துவிடுகிறார்கள். அகில இலங்கை ரீதியில் நடைபெறம். இப்படியான சந்தர்ப்பங்களில் தங்கள் வாய்ப்பையும் இழந்து விடுகிறார்கள்.

ஆரம்பகால தமிழ் சித்திரக் கதை ஓவியங்களாக சித்திரா பத்திரிகைக்கு ஸ்ரீஸ்கந்தராஜா, ஹ¤னா (ஹ¤ஸைன்), ஸ்ரீகாந் சந்ரா என்று பிரபலமான ஓவியர்கள் இருந்தார்கள். 1983க்குப் பிறகு இவர்களின் பங்களிப்பெல்லாம் மங்கிவிட்டது. வளரும் இளைய தலைமுறை ஓவியங்கள் இவ்வாறான வாய்ப்புகளுக்கு தங்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

* எழுத்துத்துறையில் உங்கள் ஆர்வம் எப்படி?

வார மாத சஞ்சிகைகளுக்கு நிறைய சிறுகதைகள் எழுதியுள்ளேன். சித்திரக் கதைகள் நிறைய சித்தரித்திருக்கிறேன். கதையின் கருவிற்கு உரு கொடுப்பதே எனக்குக் கிடைத்த கொடையாக அமைந்துவிட்டது.

* கதை, கட்டுரை, ஓவியக் கலைஞர் என்று அறிமுகமான உங்களை எந்த வகையில் அங்கீகரித்துள்ளார்கள்.

மலையக இலக்கிய மன்றத்தால் ‘ரத்னதீப’ விருது, இந்து கலாசார திணைக்களத்தினால் ‘கலாபூஷணம்’ ‘ஓவியச் சுடர்’ போன்ற கெளரவ விருதுகளையும், அவ்வப்போது நடைபெறும் நூல் வெளியீடுகள், நாடக அரங்கேற்றங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் என் ஓவியப் பங்களிப்பைக் கெளரவித்து ரசிகர்கள் முன்னிலையிலேயே பெருமைப்படுத் தியிருக்கிறார்கள். அமைச்சர்களாகவிருந்த ராஜதுரை புத்திரசிகாமணி பி. பி. தேவராஜ், எம். எச். முகம்மத், எம். எச். எம். அஸ்வர் ஆகியோரும் மேடைகளில் கெளரவித்திரு க்கிறார்கள். பாராட்டுகளில் முத்தாய்ப்பாக அண்மையில் நடந்த ஓவியர் கண்காட்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் எம். டி. ஜயரத்ன இருவரும் என் ஓவியத்தை நேரடியாகப் பார்த்து ரசித்து என்னுடன் உரையாடியது எனக்குக் கிடைத்த உச்ச கெளரவம் என்றே நினைக்கிறேன்.

* கலையுலகப் பயணத்தில் மறக்க முடியாத சம்பவங்கள்

ஷர்மிளாவின் இதயராகத் துக்கு கலை இயக்குனர் என்ற பதவியோடு அதன் நிர்வாகப் பொறுப் பையும் செய்திருந்தேன். இத்திரைப் படத்தைப் பார்த்த தென்னிந்திய திரைப்பட விநியோகஸ்தர் ஒருவர் படத்தின் பெயர் பட்டியலை தயாரிப்பதில் நம் நாட்டுக்காரன் இந்த ஆள்கிட்ட பயிற்சி எடுக்கணும் ஸார்” என்று கூறியது எனக்கும் ஏதோ சர்வதேச புகழே கிடைத்தமாதிரியிருந்தது.

* ஓவியக் கலையில் மேலும் எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிaர்களா?

கலை இலக்கியவாதிகள் பத்திரிகை உலக ஜாம்பவான்கள் பெருந் தலைவர்கள், நமக்கும் நம் நாட்டுக்கும் பெருமை தேடிக் கொடுத்த எல்லோரையும் படமாக வரைந்து அவர்களுடைய சாதனைக் குறிப்புகளையும் எழுதி, கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்ய நினைந்திருக்கின்றேன். அதற்கு எனக்கு உதவிகளை செய்வதாக எழுத்தாளரும், கவிஞருமான மேமன்கவி அவர்கள் கூறி உள்ளார். எல்லாத் தலைவர்களுடைய படங்களையும் குறிப்புகளையும் தருவதாகச் சொல்லி இருக்கிறார்.

* கணனியின் வருகையால் உங்களைப் போன்ற பத்திரிகைதுறை ஓவியர்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அறிகிறோம். இது உண்மையா?

என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. கதாசிரியரின் கற்பனைக்கேற்ப கதாபாத்திரங்க ளையும் சம்பவங்களுக்கு பொருத்தமான சித்திரங்களை வரைவதும், பாத்திரங்களுக்குரி த்தான குண, நலன்களை அவற்றின் ஒரு ஓவியனால்தான் படைக்க முடியும். கணனி மூலமாக அதைச் செய்ய முடி யாது என்பது என்னுடைய தனிப் பட்ட கருத்து. ஒரு ஓவியனால் வரையப்பட்ட படங்களை கணனியின் உதவியுடன் மெரு கூட்டமுடியுமே தவிர உயிரோட்டமான ஓவியத்தைப் படைக்க முடியாது என்பதே என் அனுபவம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.