புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
தடைகள்' எமக்கு தடையல்ல

தடைகள்' எமக்கு தடையல்ல

தொடர்ந்தும் இலங்கைக்கு நாம் எரிபொருளை விநியோகிப்போம்

ஈரான் தூதுவர் முஹம்மத் நாபி ஹஸனீ பவர்

தடைகள் எவ்வடிவில் வந்தாலும் நாம் நிலை தடுமாற மாட்டோம். எமது நிலைப்பாட்டிலும் நாம் உறுதியாகவே இருக்கிறோம்.

பொருளாதாரத் தடைகளால் இலங்கை போன்ற நட்பு நாடுகள் அல்லற்படுவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.

இலங்கையிலுள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் கலாநிதி முஹம்மத் நாபி ஹஸனீ பவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

தமது புல்லர்ஸ் வீதி வாசஸ்தலத்தில் குறிப்பிட்ட சில முக்கிய ஊடகவியலாளர்களுடன் தூதுவர் ஹஸனீ பவர் சுமுகமாகக் கலந்துரையாடினார்.

வளர்ச்சி அடையும் நாடுகளை பிளெக்மேர் செய்வதன் மூலம் அமெரிக்கா தேவையற்ற பிரச்சினைளைத் தோற்றுவிக்கின்றது.

இலங்கை போன்ற நாடு முப்பதாண்டு யுத்தத்தின் பின்னர் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் இக்காலகட்டத்தில் இலங்கை இடறுவதை நாம் அனுமதிக்கமாட்டோம்.

தம்மை "உலகப் பொலிஸ்'காரனாக மாற்றிக் கொண்ட வொஷிங்டன் அதன் அடாவடித்தனங்களை நிறுத்த வேண்டும்.

மேற்கு நாடுகளையும் அமெரிக்காவையும் மையமாகக் கொண்டு உலகப் பொருளாதாரத்தை ஆசியமயமாக்குவதற்கு ஈரான் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் விதித்துள்ள பொருளாதாரத்தடைகள் பற்றி நாம் கதிகலங்கவில்லை, பொருட்படுத்தவும் இல்லை.

ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற பெரும்நாடுகள் எமது நாட்டிலிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்கின்றன.

இதன் வாயிலாக எமது பொருளாதாரம் வலுவடையும் வழிவகைகள் உருவாகியுள்ளமை மகிழ்ச்சி தருகிறது.

என்ன தடைகளை அவர்கள் விதித்திதாலும் எமது பொருளாதாரம் ஸ்திரமாகவே உள்ளது.

எமது பொருளாதார வளர்ச்சி 6 முதல் 8 வீதமாக அதிகரித்துள்ளமை நல்ல அறிகுறிகளாகும்.

இலங்கைக்கான எரிபொருள் விநியோக நிலைமை தொடர்பாக பலதரப்பட்ட விடயங்கள் பல கட்டங்களாக ஆராயப்பட்டுள்ளன.

இலங்கை அரசியல் முக்கியஸ்தர்கள் டெஹ்ரான் சென்று நிலைமைகளை ஆராய்ந்து திரும்பியுள்ளனர்.

பல தெரிவுகளை நாம் எம்வசம் வைத்துள்ளோம். இலங்கை அரசுக்கு எமது நிலைப்பாட்டை நாம் தெளிவுபட அறிவித்துள்ளோம்.

என்ன தடைகள் விதிக்கப்பட்டாலும் இலங்கைக்கான எரிபொருள் இலங்கைக்குக் கிடைத்தே தீரும்.

இந்தியாவுக்கும் எமக்கும் இடையிலான வருடாந்தம் 12 பில்லியன் அமெரிக்க டொலர் களுக்கு வாணிப, வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தங்கத்தைக் கொடுத்தாவது எம்மிடமிருந்து எரிபொருளை இந்தியா வாங்கும் நிலைமையே காணப்படுகின்றது.

அமெரிக்காவில் ஒரு தலைப்பட்சமான தடைகளை சீனா, இந்தியா நாடுகள் ஆதரிக்கவில்லை.

ஆசியாவில் ஈரான் இஸ்லாமியக் குடியரசு சக்திமிக்க பொருளாதார நிலையில் இருப்பதால் ஆசிய நாடுகளில் பொருளாதாரமே வளர்ச்சி காணும்.

நாம் மேற்கொண்ட அணுசக்தி திட்டம் சமாதானத்துக்கே.

விஞ்ஞான, தொழிநுட்ப, ஆராய்ச்சித் துறைகளில் நமது முன்னேற்றம் மகத்தானது.

விண்வெளியில் செய்மதியை ஏவிய முதலாவது முஸ்லிம் நாடு ஈரான் என்பதில் நாம் பெருமைப்படுகிறோம்.

எட்டு ஆண்டுகள் தொடர்ந்த யுத்தம் முடிந்தும் கூட ஈரானை மேற்குலகம் நசுக்கவே பார்க்கிறது.

தடைகளை விதித்து இயலுமான ஆபத்துக்களையே உருவாக்கப் பார்க்கிறது.

2006 ஆம் ஆண்டில் ஈரான் மத்திய கிழக்கின் முதலாவது குளோன் முறையிலான ஆட்டுக்குட்டியைப் பிறக்கச்செய்தது.

ஈரானிய விஞ்ஞானிகள் பல குறிப்பிடத் தக்க பங்களிப்புக்களை உலக விஞ்ஞான, தொழில் நுட்பத்துறை மேம்பாட்டுக்கு வழங் கியே வருகின்றனர்.

சகலருக்கும் புதியதும், சிறப்பானதுமான எதிர்காலத்தை உருவாக்குவது அறிஞர் பெருமக்களின் பொறுப்பாகும்.

இதில் ஒரு இனம், மற்றைய இனத்தின் கலா சாரங்களை கையில் வைத்திருக்க இடமளி க்க முடியாது. சகல கலாசாரங்களும் மதிக்கப் பட வேண்டும். மிரட்டல்கள் கூடாது.

இவ்வாறு தூதுவர் ஹஸனி பவர் பத்திரி கையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் ஈரான் தூதுரக இரண்டாவது கவுன்சிலர் அலி அக்பர் பாபா வும் கலந்து கொண்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.