புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
அறிவொளி சமுதாயத்தை ஏற்படுத்த கவிதை சிறந்த ஊடகம்

அறிவொளி சமுதாயத்தை ஏற்படுத்த கவிதை சிறந்த ஊடகம்
 

மனிதனை மனிதன் மதித்ததும் கண்டோம்

மனிதனை மனிதன் மிதித்ததும் கண்டோம்

இனியவன் மனிதனா: கொடியவன் மனிதனா:

இரண்டு மற்றவன் எனின் அவன் இறைவன்!

என்ற கவிதைக்கு சொந்தக்காரர், எண்பத்தாறு வயது இளைஞன், ஆமாம்! இன்றும் மிகவும் திடகாத்திரமாக செயலாற்றிக் கொண்டிருக்கும் கவிஞர், ஓவியர், எழுத்தாளன், ஆசிரியன், ஆதி நாகரிக ஆராய்ச்சியாளன், சிந்தனையாளன் என்ற பல்வேறு துறைகளில் தடம் பதித்த கவிஞர் சக்தீ - பால ஐயாவை அவரின் அலுவலகத்தில் சந்தித்தோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத் கோப்பித் தோட்டக் குடியேற்றத்திலிருந்து: பிந்திய தேயிலைத் தோட்டக் குடியேற்றக் காலத்திலிருந்தும் தென்னிந்திய மக்கள், மலையகத் தொழிலாளர்கள், பட்ட துன்ப துயரங்களும், அனுபவித்த வேதனைகளும் எழுத்திலடங்காதவை,

தங்களின் சக்தியை உணராமல், உழைப்பின் பயன் உணராமல், சோர்ந்தும் சோம்பியும் கிடந்த இவர்களைத் தட்டி எழுப்புவதையே குறிக்கோளாகக் கொண்டதாய் கிளம்பியதே மலையக இலக்கியம். இவ்வெழுத்து முயற்சிகளின் முன்னோடிகளாக விளங்கும் கோ. நடேசய்யர், சி. வி. வேலுப்பிள்ளை, கே. கணேஸ், சக்தீ பாலஐயா போன்றவர்கள் சமகாலத்தவர்கள். இவர்களுடைய சிந்தனைகளும் ஒன்றாகவே இருந்திருக்கின்றன.

இந்த மக்களின் விழிப்பு, விடிவு, சுதந்திரச் சமத்துவம் ஆகியவைகளே இவர்களுடைய எழுத்துப் பணிகளின் முனைப்பான அம்சங்களாக இருந்தன. மக்கள் கவிஞர் என்று போற்றப்பட்ட சி.வி. வேலுப்பிள்ளைக்கு பரவலான அறிமுகத்தினையும், புகழையும் கொடுத்த ”in the Ceylon tea Garden”  ஆங்கிலக் கவிதை நூலை “தேயிலைத் தோட்டத்திலே” என்று தமிழாக்கித் தந்தவர் கவிஞர் சக்தீ ஆ. பாலஐயா, இந்தத் தமிழாக்கம் வீரகேசரியில் தொடராக வெளிவந்தது. கண்டி “செய்தி” ரா. மு. நாகலிங்கம் அவர்களால் செய்தி பதிப்பகம் மூலம் நூலாக வெளியிடப்பட்டது. (ஆங்கிலம் 1954, தமிழ் மொழி பெயர்ப்பு 1969) அந்த மொழி பெயர்ப்பு மூலம் இவரின் கவிதா ஆற்றலையும் மொழிப் புலமையையும் அறிந்து கொள்ள முடியும்.

1925 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 26ம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் பிறந்த கவிஞர் 1943 இல் கொழும்புக்கு வந்துள்ளார். தனது உயர் கல்வியாக ஓவியத்தை ஒரு பாடமாக தேர்ந்தெடுத்து கற்று பின் ஆசிரியராகவும், ஆசிரியர்களுக்கு போதிக்கும் விரிவுரையாளராகவும் பணியாற்றிய சக்தீயின் ஓவிய கண்காட்சிகள் (1948-49) கொழும்பில் பல இடங்களிலும் நடைபெற்றுள்ளன.

“மலையக மண்ணில் பிறந்த மக்கள் அனைவருமே தோட்டத் தொழிலாளர்கள் என்ற கணிப்பிலே மட்டும் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள். அது முற்றிலும் உண்மையல்ல இந்திய வம்சாவளி மக்கள் தோட்டத் தொழிலாளர்களாக மட்டும் இருந்ததில்லை. அவர்கள் கலை, இலக்கிய, சமுதாய பண்பாடு, சுதந்திர ஆர்வம் கொண்டவர்களாகவும், கல்வியறிவு மிக்கவர்களாகவும் வாழ்ந்த பேரறிஞர்கள் பலர் இந்திய வம்சாவளி மக்களின் பண்பாட்டுப் பாதுகாவலர்களாக இருந்தனர். அவர்களை எல்லாம் மறந்து வெறுமனே கூலிப்பட்டாளம் என்று கூறுவதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். இற்றைக்கு எழுபது வருடங்களுக்கு மேலாக இதனை வலியுறுத்தி பேசியும், எழுதியும் வந்துள்ளேன்.

“உங்களை எழுத்து துறைக்கு ஈர்த்த சம்பவம் எது?”

“கல்வியும், கலையறிவும், தெய்வ பக்தியும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவன் நான். பால்ய பருவத்திலே இயற்கையாகவே கலைஞானம், கற்பனைச் சக்தி உடையவனாகவே வளர்ந்தேன். கலையறிவும், இயற்கையை ஆய்வும் என்னுள்ளே ஒருவித புதுமையை தோற்றுவித்தது. அதனை கவிதையாக வெளிக்கொணர்ந்தேன். அஃதே என்னை எழுத்துத் துறைக்கு ஈர்த்தது. பின்னாளில் அகிம்சா மூர்த்தி, காந்தியின் தேசபக்தி! வெள்ளயனே வெளியேறு என்ற சுதந்திர கோசம், புரட்சிகவி பாரதியின் வீரமிக்க பாடல்கள் என்பன எனக்கு ஆதாரமாகியன.

நீங்கள் எத்தனையாவது வயதில் கவிதை படைத்தீர்கள்?

“எனது பத்தாவது வயதில் கவிதா ஞானம் என்னுள் தோன்றச் செய்தது, பாரதியின் தாக்கம்’ என்னும் தலைப்பில் சமுதாய விழிப்புணர்ச்சிக்கும், இலங்கையின் சுதந்திரத்திற்கும் கவிதை படைக்கத் துவங்கினேன். எழுத்தார்வம் என்னுள் ஊற்றெடுத்தது. பழமையை உடைத்தெறிந்து புதுமையை நாடி புத்தம் புதிய சிந்தனைகளால், விழிப்பூட்டி, சமுதாயத்தையோ. தேசத்தையோ அல்லது முழு உலகையோ முன்னேற்றிப் புதிய அறிவொளித் தெளிவுடன் அமைக்க வேண்டும். அதற்கு கவிதை மிக சரியான ஊடகமென்று இதனைத் தேர்ந்தெடுத்தேன்.

“உங்கள் பெயரில் சக்தீ - பால ஐயா என்று இருக்கிறதே ஏன்?

ஆம் சக்தீ - பால ஐயா என்று பத்திரிகை உலக ஜாம்பவான் எஸ். டி. சிவநாயகம் சுதந்திரன் பத்திரிகையில் ஆசிரியராக இருக்கும் போது வைத்த பெயர். அதே நிலைத்து நின்று விட்டது.

“நீங்கள் எப்பொழுது கொழும்பிற்கு வந்தீர்கள்? அன்றைய கொழும்பு எப்படி இருந்தது?”

எனது படிப்பு முடிந்தவுடன் அண்ணர் வேலை செய்த தோட்டத்திலே கிளாக்கராக காரியாலயத்தில் வேலை பழகச் சொன்னார்கள். நானோ வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக வேலை செய்ய விரும்பாமல் காந்தி உடை அணிந்து பாரதியின் சுதந்திர சிந்து பாடிய வண்ணம் இயற்கையுடன் சங்கமமாக 1943 ஆம் ஆண்டு தொழில் செய்து கொண்டே படிப்போம் என்ற எண்ணத்துடன் கொழும்பிற்கு வந்தேன். அந்தவேளையில் இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்து வெள்ளைக்காரர்களின் படை கொழும்பில் முகாமிட்டிருப்பதைக் கண்டேன். அந்த வெள்ளைக்கார படை வீரர்களின் நிர்வாக ஒழுங்கு முறைகள் என்னைக் கவர்ந்தன.

அந்த காலத்தில் கொழும்பிற்கு வந்தவுடன் வேலை கிடைத்ததா? படிப்பு செலவிற்கு என்ன செய்தீர்கள்?

எனது மூத்த சகோதரரின் சிறு, சிறு பண உதவி மூலம் அந்தக் காலத்திலே கொழும்பு தொழில்நுட்ப கல்லூரியின் ஓவியத்தை ஒரு பாடமாக தேர்ந்தெடுத்து கற்றேன். வறுமை வாட்டியது, காலி முகத்திடல் எனக்கு அன்புக்கரம் நீட்டி +விரி(=r>ஜி. தனியே அமர்ந்து கடல் அலைகளையும், தூரத்தே வான் விளிம்பில் அதில் மாறி, மாறி உருவெடுக்கும் மேகத்திரைகளையும் பார்த்து ரசிப்பேன். அந்த வேளையில் உள்ளத்தில் எல்லை இல்லாத கவிதா இன்பம் ஊற்றெடுக்கும், அவைகளை மறுநாள் கவிதையாக எழுதிவிடுவேன்.

உங்களின் பத்திரிகைத்துறை பங்களிப்பு எவ்வாறு அமைந்தது?

1949 ஆம் ஆண்டுக்குப்பின் என்னுடைய கவிதைகள், கட்டுரைகள், போன்றவைகள் சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு போன்ற ஏடுகளில் அடிக்கடி பிரசுரம் பெற்றன. தமிழக ஏடுகளான கல்கி மற்றும் சி. என். அண்ணாத்துரையின் ‘திராவிடநாடு’ போன்றவற்றில் பிரசுரம் பெற்றன. 1954 ஆம் விரகேசரி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பணியாற்றினேன். 1963 ஆம் ஆண்டு ஆண்டு தினகரனின் கலை மண்டலம் பகுதியில் ‘மேல்நாட்டு ஓவியர்கள்’ என்னும் தலைப்பிலும் பல ஆக்கங்களை படைத்துள்ளேன். அதே காலகட்டத்தில் சுதந்திரனில் மலைநாட்டு அறிஞர்கள் என்னும் தலைப்பிலும் தொடர் கட்டுரை எழுதி வந்தேன். தமிழ் ஒளி (1954) வளர்ச்சி (1956) ஆகிய சஞ்சிகைகளையும் வெளியிட்டுள்ளேன். மக்கள் கவிஞர் சி. வி. வேலுப்பிள்ளை வெளியிட்ட ‘மாவலி’ என்ற மாத சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் சில காலம் பணிபுரிந்துள்ளேன்.

“தங்களின் நூல் வெளியீட்டு முயற்சிகள் எவ்வாறு அமைந்தன?”

ஆசிரியர்களுக்காக ‘மனோ தத்துவமும் கலையும் போதனா முறையும்’ 1952ம் ஆண்டே ஒரு நூலை வெளியிட்டேன். அதன் பின் 1956 இல் சொந்த நாட்டிலே, என்ற நூலும், தேயிலைத் தோட்டத்திலே (மொழிப் பெயர்ப்பு) 1969 சக்தீ பாலையா கவிதைகள் துரைவி வெளியீடு 1998 ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.

“எனது கலைப் பணியை பொறுத்த வகையில் ஒரு சில நூல்களுக்கு அட்டைப் படம் வரைந்துள்ளேன். ஆசிரியர்களுக்கு ஓவியம் பாடம் போதித்துள்ளேன், 1991 முதல் 1994 வரையிலான காலப்பகுதியில் தேசிய அருங்கலைச் சபையில் அங்கம் வகித்து மாகாண சபைகளில் நடந்த கைவினை கலைக் கண்காட்சிகளின் மத்தியஸ்தராக கடமையாற்றியுள்ளேன். மலையகக் கலாசார மேம்பாட்டுக் குழு அங்கத்தவராகவும் இருந்தேன்.

தங்களது அரசியல் செயல்பாடுகள் பற்றி.....?

எனது அரசியல் செயல்பாடுகள் என்பது வெறுமனே மக்களின் வாக்குகளை நோக்காகக் கொண்டதல்ல. 1961 களில் இந்திய வம்சாவளிப் பேரவை (இலங்கை)யை தொடங்கி இலங்கை - இந்திய மக்களின் துயர் துடைக்க பணிபுரிந்துள்ளேன். வேறு நேரடி அரசியல் எனக்கு இல்லை.

“தங்களுக்கு கிடைத்த பட்டம், கெளரவங்கள்?”

கலை இலக்கிய பணிக்காக 1987 இல் ‘கவிச் சுடர்’ பட்டமும், 1994 ஆம் ஆண்டு “தமிழ் ஒளி” பட்டமும், இலங்கை கம்பன் கழகம் 1998 ஆம் ஆண்டு ‘மூதறிஞர்’ விருதும் வழங்கி கெளரவமும் செய்துள்ளது. வேறு பல அமைப்புகளும் என்னைப் பாராட்டி கெளரவம் செய்துள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.