புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
பூ கொடுத்து நடித்ததில் பூகம்பம் வெடித்தது

பூ கொடுத்து நடித்ததில் பூகம்பம் வெடித்தது

இவ்வாரம்

கலைஞர்

கலைக்கமல்

நம் நாட்டு கலை இலக்கிய வானில் ஜொலிக்கும் நட்சத்திரமாக திகழ்பவர்தான் கலைக்கமல், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பாடிய பெருமை இவருக்கு உண்டு.. கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக பாடிவரும் இவர் தனி மனித இசை நிகழ்ச்சியாக நடாத்திவரும் ‘கீத்ராத்’ இசை நிகழ்ச்சி இதுவரை இருபத்திநான்கு மேடைகளில் முழங்கியிருக்கிறது சென்னை கலைவாணர் அரங்கு, காயல்பட்டினம், சுவிஸ், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இவரின் இசைக் கச்சேரிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் புகழ் பெற்ற பாடகர்களான டி. எம். செளந்தரராஜன், இசைமுரசு ஈ. எம். ஹனீபா, ஷெய்க் முகம்மது, ஜமுனா ராணி ஆகியோருடன் ஒரே மேடையில் பாடிய வரலாறும் இவருக்கு இருக்கிறது. இசை, எழுத்து என்று எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கலைக்கமலை ஒரு இனிய காலைப் பொழுதில் சந்தித்துப் பேசினோம்.

பெதுரு பஜாவில்..

“நான் புதுக்கடை புதல்வனாக இருந்தாலும் எனது பூர்வீகம் கேராளாதான். எனது தந்தையின் தந்தையார் கேரளாவை பிறப்பிடமாகவும் மலையாளத்தை தாய் மொழியாகவும் கொண்டவர். கேரளாவில் பூவாறு தான் எனது பாட்டனின் ஊர். அவர் பெயர் அப்துல் காதர், எனது பாட்டனார். திருமணம் முடித்து நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாததால் பூவாறு பள்ளிவாசலில் நேர்த்திக்கடன் போட்டு தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளைதான்... எனது தந்தையார் மூசிக்நூரி மஹ்தூம் ஏ. காதர். அவரும் பெரிய பாடகர் பிற்காலத்தில் அவர் கொழும்பு புதுக்கடையில் வந்து தங்கிவிட நான் அவருக்கு மகனாக பிறந்து புதுக்கடை வாசியானேன்.

எனக்கு மொத்தமாக பத்து சகோதர சகோதரிகள். நான் நாலாவது. எனது குடும்பம் ஒரு இசைக் குடும்பம். எனது தந்தைதான் எனக்கு இசை ஆசான். எனது சகோதரர்களில் உபைத் மஹ்தூம், ஸைபுல்லாஹ் மஹ்தூம், அஸ்லம் மஹ்தூம் ஆகியோரும் பாடகர்களாக இருக்கிறார்கள். எனது தாயாரின் பெயர் ஐனுல் ஸெக்கியா என்கிறார் கலைக்கமால். கலைக்கமலின் தந்தையார் இலங்கை வானொலியில் நாற்பது ஆண்டுகளாக பாடகராக இருந்தவர். அதேபோல்தான் கமலும் ரூபவாஹினி, இலங்கை வானொலியில் (ஒடிசன் ஆர்ட்டிஸ்) தேர்வு செய்யப்பட்ட பாடகராக இன்று வரை இருந்து வருகிறார்.

திருமணத்தின் போது கலைக்கமல், யெஸ்மினா

‘கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியில் தான் எனது ஆரம்பக் கல்வி தொடங்கியது. அங்கேயே சாதாரண தரம் வரையும் பயின்றேன். பாடசாலை நாட்களில் நான் ரொம்பவும் சாது. ஆனால் இசை ஆர்வம் காரணமாக வகுப்பில் ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் பெஞ்சில் தாளம் போட்டுக் கொண்டு பாட்டுப் பாடுவது எனக்கு பிடிக்கும். பாடசாலையில் எனக்கு அகரம் கற்பித்த ஆசிரியரின் பெயர் ஞாபகத்தில் இல்லை. ஆனால் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த என் தமிழ் ஆசான் ஏ. எல். எம். பத்தாஹ் மாஸ்டரை நினைவில் வைத்திருக்கிறேன். அவரை மறக்கத்தான் முடியுமா என்கிற கமாலுக்கு இரண்டு பெண்ணும் ஒரு ஆணுமாக மொத்தம் மூன்று பிள்ளைகள்.

நீங்களோ கலைக்கமல் அப்போ உங்கள் திருமணமும் காதல் திருமணம் தானே என்று எமது சந்தேகத்தை கேட்டோம். கலைஞன் என்றால் காதல் திருமணம்தான் செய்ய வேண்டுமா...? நான் கலை உலகில் பிரவேசித்த நேரம் ரொம்பவும் பிஸியாக இருந்தேன். எல்லாக் கலைஞர்களைப் போலவே எனக்கும் காதல் ரசம் சொட்டும் கடிதங்களும், பாராட்டுக் கடிதங்களும் வந்து குவிந்து கொண்டிருந்தது. எனது குரலால் ஈர்க்கப்பட்ட நான்கு பெண்கள் என்னை மணம் முடிக்க விரும்பினார்கள். என்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாக சொன்னார்கள். ஆனால் அவைகள் என் காதில் விழவில்லை.

எனக்கு தெரிந்ததெல்லாம் எனது தந்தையின் நேசமும், அவரின் விருப்பமும் தான். அதன்படி அவர் பார்த்த பெண்ணையே திருமணம் முடித்துக் கொண்டேன். எனது மனைவியின் பெயர் யெஸ்மினா. இன்று வரை எனது குடும்ப வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஆனால் ஒரே ஒருநாள் நடந்த சம்பவத்தை இங்கே குறிப்பிடுகிறேன். அப்போ நான் நிறைய கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்த நேரம். இளம் பாடகிகளோடு ஜோடி சேர்ந்து பாடுவதை ரசிப்பவர் என் மனைவி. பாட்டுக் கச்சேரிகளுக்கு நானும் நிலாமதியும் ஒரே ஆட்டோவில் ஏறிப் போகும் போது வாசலில் நின்று புன்னகையோடு கையசைப்பவர் அந்தளவிற்கு என் மீது துளியளவும் சந்தேகம் கொள்ளதவர்.

முபாரிஸ், நிரோஷா, கலைக்கமல்

ஒருமுறை விஜயராஜா தொலைக்காட்சிக்காக தயாரித்து வழங்கிய ‘வண்ணப் பூக்கள்’ நிகழ்ச்சியில் ஆரம்ப பாடலாக காதல் என்பது என் நெஞ்சில் உள்ளது.... என்ற பாடலை தயார் செய்து வைத்திருந்தவர் என்னிடம் சொன்னார். ‘கமால் மேடையில் சிலை மாதிரி பாடுவதைவிட நடிப்போடு இந்தப் படலை படமாக்கினால் நன்றாக இருக்குமே” என்றார். அவரின் கருத்துக்கு நான் ஒப்புதல் அளித்ததோடு நடிக்கவும் சம்மதித்தேன். படப்பிடிப்பு விக்டோரியா பார்க்கில் நடைபெற்றது. அந்தக் காட்சியில் என்னோடு மறைந்த பிரபல பாடகி ராணிஜோசப் பாடி நடித்தார். நானும் ராணி ஜோசப்பும் பாடலுக்கு அபிநயங்கள் செய்தபடி நடித்தோம். ஒரு காட்சியில் அந்தப் பாடலில் வரும் வார்த்தைகளுக்கு அமைய ஒரு ரோஜாப்பூவை எடுத்து ‘பெண் பூவே... ‘ என்று பாடிப் பாடியே நான் ராணி ஜோசப்பிடம் கொடுப்பேன். படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு சென்றேன்.

என்னோடு எனது நண்பர் இரும்புக்கடை இளையராஜா வந்தார். வீட்டிற்கு வந்த சில நிமிடங்களில் எனது மனைவி எங்களுக்கு தேனீர் பரிமாறுவதற்காக தேனீர் தட்டுடன் வந்தாள். அப்போது நண்பர் இரும்புக்கடை இளையராஜா அவளிடம் ‘கலைக் கமால் நன்றாக பாடுவார் என்பது தெரியும். ஆனால் அவர் நன்றாக நடிக்கவும் செய்வார் என்பதை இன்றுதான் புரிந்து கொண்டேன்’ என்று அவன் சொன்னதும் எனது மனைவியின் முகம் மாறியது.

உடனே அவள் ‘அப்படி என்ன நடித்தார்’ என்று வினவினாள் அதற்கு இளைராஜா ராணி ஜோசப்புக்கு ரோஜாப்பூ கொடுத்தார்’ என்றதும் எனது மனைவியின் கையிலிருந்து தேனீர் கோப்பைகள் நழுவி தரையில் விழுந்து சிதறியது. என் மனைவியின் கோபம் எனக்கு அப்போதுதான் புரிந்தது. பாடுவதற்கு லைசன்ஸ் வழங்கிய என் மனைவிக்கு நடிப்பதில் விருப்பமில்லை. இனி நான் நடிக்க மாட்டேன் என்று அவளுக்கு நான் சத்தியமும் செய்து கொடுத்துவிட்டேன். அந்த சத்தியத்தை இன்றுவரையும் காப்பாற்றி வருகிறேன்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று ஒரு பாடல் இருக்கிறதே அது எனக்காக பாடப்பட்ட பாடலாகத்தான் நான் நினைக்கிறேன். எனக்கு அமைந்த மனைவி பிள்ளைகள், மாமியார், பெற்றோர்கள் எல்லாரையும் எனக்கு கிடைத்த வரமாகத்தான் கருதுகிறேன். என்ற கலைக்கமலுக்கு இந்தியா செல்வதென்றால் ரொம்பவும் பிடிக்குமாம். இதுவரை நாற்பத்தொரு தடவை அந்த நாட்டிற்கு சென்றிருக்கிறாராம்.

என் முதலாவது விமானப் பயணத்தை இன்று நினைத்துப் பார்த்தாலும் இனிமையாகத்தான் இருக்கிறது. விமானப் பயணத்தின் போது நன்றாக சாப்பிடத்தருவார்கள் என்று நிறையப் பேர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அதனால் அவர்கள் தரப்போகும் உணவை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். முதலில் எல்லோருக்கும் சிறிய பாக்கெட் ஒன்றைத் தந்தார்கள். அதைப் பெற்றுக் கொண்ட நான் என் சேர்ட் பொக்கட்டில் வைத்துக் கொண்டேன். பிறகு வித விதமான உணவுகளை வழங்கினார்கள். அவைகளை வாங்கி சாப்பிட்டு விட்டேன். சிறிது நேரத்தில் விமானம் சென்னையில் தரையிறங்கியது. அப்போது என் சேர்ட் பொக்கிட்டில் வைத்திருந்த அந்த பாக்கட்டை எடுத்து சாப்பிடுவோம் என்றெண்ணியவாறே அதைப் பிரித்தேன்.

கலைக்கமலின் இளமைத் தோற்றம்

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது அந்தப் பாக்கெட்டில் பஞ்சு இருந்தது. விமானம் பறக்கும் போது ஏற்படும் சத்தம் காதுக்குக் கஷ்டமாக இருக்குமே என்பதற்காக காதில் வைக்கத்தான் அந்தப் பஞ்சு பாக்கெட்டை தந்திருக்கிறார்கள். நான் அது ஏதோ உணவுப் பொருள் என்று நினைத்து பொக்கட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். நான் ஒருமுறை சென்னைக்கு சென்றபோது கவிஞர் நா. காமராசனை சந்திக்க அவரின் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் வீட்டு நாய் என்னைத் துரத்தியது. நாயிடமிருந்து தப்பி எப்படியோ கஷ்டப்பட்டு கவிஞரைச் சந்தித்தேன் என்றார். தற்போது ‘கமல் பேக்ஹவுஸ்’ என்ற பெயரில் ஒரு பேக்கரியை மாளிகாவத்தையில் நடாத்தி வருகிறார் கமல்.

“சின்ன வயசிலேயே நான் கமலின் தீவிர ரசிகன். கமல்தான் எனக்கு ரோல் மொடல். என் இளமைக்கால படங்களைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ கமல் மாதிரி இருப்பேன். அதனாலதான் எனக்கு கலைக்கமல் என் புனைப்பெயரை கவிஞர் இர்ஷாத் கமால்தீன் சூட்டினார்.

சிங்கள இசை உலகிற்கு அநேகமான தமிழ் பாடகர்களை அறிமுகமாக்கிய பெருமை கலைக்கமலுக்கு இருக்கிறது. ராணி ஜோசப், நிலாமதி, ஸ்ரீதர் பிச்சையப்பா உள்ளிட்ட பரையும் அறிமுகம் செய்திருக்கிறார். “எனது தந்தையாரும், ஜவாஹிர் மாஸ்டரும் இணைந்து உருவாக்கியதுதான் சுப்பர் சன்ஸ் இசைக்குழு அந்த இசைக்குழுவில் பாட வந்தவர்தான் நிரோஷா விராஜினி. நிரோஷா அறிமுகமானதே சுப்பர் சன்சில்தான் அவர் பாடவரும் போது அவரின் பெயர் விராஜினி நான்தான் நிரோஷா என்ற பெயரை அவரின் பெயருக்கு முன்னால் இணைத்துக் கொள்ளும்படி கூறினேன். இந்த விடயம் எத்தனை கலைஞர்களுக்கு தெரியுமோ...”

என்ற தமது பழைய நினைவுகளை மீட்கும் கலைக்கமலிடம் கடந்தகால வாழ்க்கையைப் பற்றிக் கேட்டோம்.

“சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் அஸ்ரா கொமினிகேஷன் என்ற கடையை நடாத்தி வந்தேன். அப்போது ஒரு நாள் எனது கடையில் அநாதரவாக ஒரு கறுப்பு பேக் கிடந்தது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. அதற்குள் தங்கச்சேயின், வளையல், மோதிரம் உள்ளிட்ட நகைகள் மின்னிக்கொண்டிருந்தது. யாரோ ஒரு மணப்பெண்ணுக்காக தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அத்தனையும் புதியதாக காட்சியளித்தன.

போன் பேச கடைக்கு வந்தவர்கள்தான் யாரோ இதை தவறவிட்டு விட்டார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். உரிமையாளர்கள் யாராவது வந்துவிடுவார்கள் என்று காத்திருந்தேன். நேரம்தான் கடந்தது யாரும் வரவில்லை. நானும் கடையை மூடத் தயாரானேன். அப்போது ஒரு பெண் பதறியபடி ஓடிவந்து என்னோட கறுப்பு பையை தொலைத்துவிட்டேன். ஒருவேளை இந்தக் கடைக்கு வந்தப்போ தவறவிட்டேனோ தெரியல..” என்றாள் நான் அவளிடம் அந்த பையில் என்ன இருந்தது என்று கேட்டேன். ‘அதற்கு அவள் ‘என் பொண்ணோட கல்யாண நகைகள் மாப்பிள்ளை வீட்டாரோட போனில் பேசுறதுக்குத்தான் இங்கே வந்தேன்.” என்ற போது அவள் கண்கள் கலங்கியது. அப்போது நான் பத்திரமாக எடுத்து வைத்திருந்த அந்தக் கறுப்புப் பையை எடுத்துக்கொடுத்தேன். அவளுக்கு அது இன்ப அதிர்ச்சி.

எனக்கு நன்றி சொன்ன அவள் அந்தப் பையை எடுத்துக்கொண்டு செல்லும் போது பக்கத்துக் கடைக்காரர்கள், வழியில் வருபவர்களிடம் எல்லாம் அந்த சம்பவத்தைக் கூறி இந்தக் காலத்திலும் இப்படியும் சில நல்ல மனிதர்கள் என்றார். அந்தப் பெண் அன்று அடைந்த சந்தோஷம் இன்றும் என் கண்ணுக்குள் அப்படியே தெரிகிறது. மற்றவர்களுக்கு நாம் உதவி செய்வதால் அவர்கள் படும் சந்தோஷம் நமக்கும் சந்தோஷம்தான். அவர்களின் ஆசிர்வாதமும் நம்மை வாழவைக்கும். நான் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை சொல்லி விட்டேன். இதுதான் என் வாழ்க்கை என்று தமது நேர்காணலை கமல் நிறைவு செய்தார்.

‘பெதுறு பஜாவில்’ தொடங்கிய இவரின் இசைப் பயணம் பெல்ஜியம் வரை தொடர நாமும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு விடைபெற்றோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.