புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
2000 ஐ எட்டிய டெஸ்ட் கிரிக்கெட்

2000 ஐ எட்டிய டெஸ்ட் கிரிக்கெட்

1877 ஆம் ஆண்டு மார்ச் 15ம் திகதி ஆரம்பமான டெஸ்ட் கிரிக்கெட்டின் எண்ணிக்கை 2011 ஜுலை 21ஆம் திகதி 2000ஐ எட்டியது. ஒருநாள், இருபது - 20 என்று பல சவால்கள் வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் தனக்கே உரிய தனித்துவத்துடன் தொடர்ந்து நீடிக்கிறது.

எவ்வளவு விமர்சனங்கள் சொல்லப்பட்டாலும் கிரிக்கெட்டின் பாரம்பரியம் டெஸ்ட் கிரிக்கெட்தான். எனவே, எதிர்காலத்திலும் கிரிக்கெட்டை தனித்துவத்தோடு காப்பதற்கு டெஸ்ட் கிரிக்கெட் உயிரோட்டமாக இருப்பது கட்டாயமாகும்.

1877ஆம் ஆண்டு டெஸ்ட் (கிரிக்கெட்) ஆரம்பிக்கப்பட்ட போது இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் கிரிக்கெட் உலகில் தனித்த ஜாம்பவான்களாக இருந்தன. அப்போது தொடக்கம் இன்றைய தினம் வரையில் நடந்து முடிந்த 1999 போட்டிகளைக் கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் கடந்து வந்த பாதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

அதிகரித்துவரும் போட்டிகள்

இன்றுவரையில் விளையாடப்பட்ட 2000 டெஸ்ட் போட்டிகளையும் பிரித்துப் பார்த்தால் 1877 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 500 டெஸ்ட் போட்டிகளை விளையாடி முடிக்க எடுத்துக் கொண்ட காலங்கள் 83 ஆண்டுகளாகும். முதல் 500 டெஸ்ட் போட்டிகளும் விளையாடும் காலப் பிரிவில் இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகள் மாத்திரமே அதிக போட்டிகளில் விளையாடின.

அத்துடன் ஆரம்ப காலங்களில் இரு நாடுகள் விளையாடுவதற்கு அதிக காலம் பயணிக்க வேண்டி இருந்தது. அது மட்டமல்லாமல் இந்தக் காலப் பிரிவில் முதலாவது மற்றும் இரண்டாவது உலகப் போர் காரணமாகவும் சுமார் 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது.

இதன்படி பார்த்தால் முதல் 500 டெஸ்ட் போட்டிகளின் போது ஆண்டுக்கு சராசரியாக 6 டெஸ்ட் வீதமே விளையாடப்பட்டுள்ளன.

எனினும் இரண்டாவது 500 டெஸ்ட் போட்டிகளையும் விளையாட எடுத்துக் கொண்டது வெறுமனே 24 ஆண்டுகள்தான். இந்தக் காலப் பிரிவைப் பார்த்தால் ஆண்டொன்றுக்கு சராசரியாக 20 டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன.

மொத்தமாகப் பார்த்தால் முதல் 1000 டெஸ்ட் போட்டிகளையும் விளையாட எடுத்துக் கொண்ட காலம் 107 ஆண்டுகளாகும். 1000 டெஸ்ட் போட்டி 1984ஆம் ஆண்டு விளையாடப்பட்டது.

இதனையடுத்துப் பார்த்தால் 3 ஆவது 500 டெஸ்ட் போட்டிகளும் 16 ஆண்டுகளுக்குள் விளையாடி முடிக்கப்பட்டுள்ளன. சராசரியாக இந்தக் காலப் பிரிவில் ஆண்டொன்றுக்கு 31 டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து கடைசி 500 டெஸ்ட் போட்டிகளையும் விளையாட எடுத்துக் கொண்ட காலம் வெறுமனே 11 ஆண்டுகள்தான். இந்தக் காலப் பிரிவில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 45 டெஸ்ட் போட்டி கள் வீதம் விளையாடப் பட்டுள்ளன.

அதாவது முதல் 1000 டெஸ்ட் போட்டிகளையும் விளையாட 107 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் போது, கடைசி 1000 போட்டிகளையும் விளையாட 27 ஆண்டுகள் மாத்திரமே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால் டெஸ்ட் கிரிக்கெட் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது என்ற விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

மைல்கல் டெஸ்ட்கள்

முதலாவது டெஸ்ட் : 1877 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதிவரை அவுஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலிய அணி 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

500 ஆவது டெஸ்ட் : 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 30, 31, மற்றும் 1961 ஜனவரி 2, 3ஆம் திகதிகளில் மெல்போர்னில் அவுஸ்திரேலிய - மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இதில் ஆஸி. அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

1000 ஆவது டெஸ்ட் : 1984 ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் ஹைதராபாத் நியாஸ் அரங்கில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

1500 ஆவது டெஸ்ட் : 2000 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி முதல் 17ம் திகதி வரை இங்கிலாந்து - மேற்கிற்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. எஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 93 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

2000 ஆவது டெஸ்ட் : கடந்த 21ம் திகதி இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கிடையில் லோட்ஸில் ஆரம்பமானது.

டெஸ்ட் கிரிக்கெட்டும் நாடுகளும்

ஆரம்பத்தில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மாத்திரம் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் காலப் போக்கில் மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, இந்தியா என தற்போது மொத்தம் 10 நாடுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் சிம்பாப்வே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த 10 நாடுகளையும் தவிர ஐ. சி. சி. உலக பதினொருவர் அணியும் ஒரு டெஸ்ட்டில் விளையாடியமை பதிவாகியுள்ளது.

இந்த வரிசையில் பார்த்தால் இங்கிலாந்து அணி 911 டெஸ்ட்களில் விளையாடியுள்ளது. அடுத்ததாக அவுஸ்திரேலியா 730 டெஸ்ட்களில் விளையாடியுள்ளது. இந்த வகையில் அதிக டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்ற அணியாகவும் இங்கிலாந்துதான் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து பெற்ற மொத்த ஓட்டங்கள் 2000ஆவது டெஸ்ட் தவிர்த்து பார்த்தால் 4,40,409 ஆகும். அதேபோன்று அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியதும் -நியூசிலாந்துதான். இங்கிலாந்து வீழ்த்திய மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 13,677 ஆகும்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இதுவரை நடந்து முடிந்துள்ள 1999 டெஸ்ட் போட்டிகளில் 19,59,659 ஓட்டங்கள் பெற்றப்பட்டுள்ளதோடு 61175 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.

அணிகளும் போட்டிகளும்

‘டை’ ஆன டெஸ்டுகள்

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இதுவரை நடந்து முடிந்த 1999 போட்டிகளில் 1299 ஆட்டங்களில் முடிவு கிடைத்துள்ளன. அத்துடன் 698 போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி சம நிலையில் முடிந்துள்ளன. ஆனால் 5 நாள் விளையாடும் டெஸ்ட்டில் தற்செயலாக இரண்டு போட்டிகள் ‘டை’ நிலையில் முடிந்துள்ளன. அதாவது இரு அணிகளும் சரிசமமான ஓட்டங்களைப் பெற்று போட்டி முடிந்துள்ளன.

இந்தவரிசையில் முதலாவது போட்டி 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 9 முதல் 14ஆம் திகதிவரை பிரிஸ்பேனில் நடைபெற்றது. அவுஸ்திரேலியா - மேற்கிந்திய அணிகள் மோதிய இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற 233 ஒட்டங்கள் இலக்காகக் நிர்ணயிக்கப்பட்டது. எனினும் இந்த இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ஆஸி. அணி சரியாக 232 ஓட்டங்களைப் பெற்று ஒரு ஓட்டத்தைப் பெற முடியாமல் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் ஆட்டம் ‘டை’ ஆனது.

இதேபோன்று 1986 ஆம் ஆண்டு செப்டெம்பர் 18 முதல் 22 ஆம் திகதி வரை சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்டில் இந்திய- அவுஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் இந்திய அணிக்கு பெற்றிபெற 348 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியா 347 ஓட்டங்களுக்கு சுருண்டு போட்டியை ‘டை’ நிலையில் முடித்தது. இந்த இரண்டு போட்டிகளும் தான் டெஸ்ட் வரலாற்றில் ‘டை’ ஆன போட்டியாகப் பதிவானது.

‘டிரோ’ இல்லை ‘டை’

இது மட்டுமல்லாவது சுவாரஷ்யமான முடிவுகளைக் கொண்ட போட்டிகளும் டெஸ்ட் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. அதாவது இரு அணிகளும் சம அளவான ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முடிவடையும் டெஸ்ட் போட்டியின் முடிவை ‘டை’ (ஹிiலீனீ) என்று அழைப்பர். போட்டியின் முடிவு கிடைக்காமல் 5 நாட்களும் நிறைவடையும் டெஸ்ட் போட்டியின் முடிவை ‘டிரோ’ (ளிrawn) எனக் குறிப்பிடப்படும்.

ஆனால் ‘டை’ நிலையில் முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் ‘டிரோ’ என பதிவாகியுள்ளன. இங்கிலாந்து- சிம்பாப்வே டெஸ்ட் அரங்கில் ஒன்றை ஒன்று சந்தித்த முதலாவது டெஸ்ட் போட்டி 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி புலவாயோவில் ஆரம்பமானது. இந்த டெஸ்ட் போட்டி யின் கடைசி நாளில் மேலும் 37 ஓவர் கள் எஞ்சியிருக்க இங்கிலாந்து அணிக்கு 205 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவின்போது 37 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 204 ஓட்டங்களைப்பெற்றது. இதன்படி ஆட்டம் முடிவடையும் போது சிம்பாப்வே இரண்டு இன்னிங்ஸ்களில் பெற்ற மொத்த ஓட்டங்களும் இங்கிலாந்து இரண்டு இன்னிங்ஸ்களில் பெற்ற மொத்த ஓட்டங்களும் சமனானது. ஆனால் ஆட்டம் ‘டை’ என்று முடிவு வழங்கப்படாமல் ‘டிரோ’ என அறிவிக்கப்பட்டது. ஆட்ட நேர முடிவின் போது இங்கிலாந்து அணி தனது சகல விக்கெட்டுகளையும் பறிகொடுக்காமல் இருந்ததன் காரணமாகவே ‘டிரோ’ ஆனது.

இதே போன்று 1998ம் ஆண்டு ஓல்ட் டிரபர்ட்டில் நடந்த இங்கிலாந்து - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியும் இவ்வாறு சமனானது. எனினும் தென்னாபிரிக்க அணி தனது விக்கெட்டுக்களை தக்கவைத்துக் கொண்டதால் போட்டி ‘டிரோ’ என அறிவிக்கப்பட்டது.

அணிகளின் ஆதிக்கம்

ஆரம்ப கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகள் ஒன்றை ஒன்று சளைக்காத வலுவான அணிகளாகத் திகழ்ந்தன. இந்தக் காலத்தில் தென்னாபிரிக்கா, இந்தியா, மேற்கிந்திய அணிகள் கிரிக்கெட் விளையாடினாலும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு ஈடுகட்டும் வகையில் அவர்களது ஆட்டத்திறன் இருக்கவில்லை.

ஆனால் இந்த நிலை முதலாவது உலகப் போருக்குப் பின்னர் மாறுபட்டது. முதல் உலகப் போருக்குப் பின்னரான காலத்தில் ஆஸி. அணி இங்கிலாந்தையும் மிஞ்சி மிக வலுவான அணியாக உருவானது.

இதற்குக் கிரிக்கெட் ஜாம்பவான் டொன் பிரேட்மனின் தோற்றம் மிக முக்கிய பங்கு வகித்தது. பிரெட்மன் இந்தக் காலத்தில் 15 சதங்களைப் பெற்றதோடு இதன் போது அவரது ஓட்ட சராசரி 91.42 ஆக இருந்தது.

தொடர்ந்து இரண்டாவது உலகப் போருக்குப் பின்னரான காலப் பிரிவைப் பார்த்தால் மேற்கிந்திய அணி கிரிக்கெட்டின் வல்லரசாகத் தோற்றம் பெற்றது. 1970கள் மற்றும் 80களில் மேற்கிந்திய அணி ஏனைய +ணிகளுக்கு நெருங்க முடியாத வகையில் வல்லமை பெற்றிருந்தது. 1984, 85 காலப் பிரிவில் மேற்கிந்திய அணி இங்கிலாந்தை 5-0 என்ற கணக் கில் இரண்டு டெஸ்ட் தொடர்களில் வீழ்த்தியது. அத்துடன் 1980இல் இருந்து 1995 வரையான காலத்தில் மேற்கிந்திய அணி டெஸ்ட் அரங்கில் ஒரு தொடரில் கூட தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்தக் காலப் பிரிவில் மேற்கிந்திய அணி 29 டெஸ்ட் தொடர்களில் விளையாடினாலும் ஒன்றைக் கூட பறிகொடுக்கவில்லை.

ஆனால் 90 களின் கடைசி பகுதி தொடக்கம் இன்றுவரை மேற்கிந்திய அணி வீழ்ச்சிப்பாதையிலேயே செல்கிறது. ஆனால் இந்தக் காலப்பிரிவில் ஏனைய அணிகள் டெஸ்ட் அரங்கில் தனது வல்லமையை வெளிக்காட்ட ஆரம்பித்தன.

நிறவெறிப் பிரச்சினையால் தடைக்கு உட்பட்ட தென்னாபிரிக்கா 90 களின் ஆரம்பத்தில் மீண்டும் கிரிக்கெட் அரங்குக்கு திரும்பியது. அது தொடக்கம் அந்த அணி சவாலாகவே இருந்து வருகிறது. சச்சின், சவ்ரொவ், டிராவிட் என்று சிறந்த வீரர்களின் தோற்றத்துடன் இந்திய அணியும் எழுச்சி பெற ஆரம்பித்தது.

அதேபோன்று 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பின் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையிலான இலங்கை அணி தனது டெஸ்ட் திறமையையும் வெளிக்காடியது. அந்த சூழல் இன்றும் தொடர்கிறது.

இம்ரான் கானின் பின்னரான பாகிஸ்தான் அணி வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ், சொஹைப் அக்தர் போன்ற வலுவான வேகப்பந்து வீச்சுக் கூட்டணி பாகிஸ்தானை டெஸ்ட் அரங்கில் சவாலான ஓர் அணியாக வெளிக்காட்டியது. நியூசிலாந்து அணியும் அடிக்கடி தமது திறமையை வெளிக்காட்டி வருகிறது. அதே போன்று பங்களாதேஷ் அணி தமது டெஸ்ட் வல்லமையை வெளிக்காட்டத் தொடர்ந்து போராடி வருவதை மறுக்க முடியாது.

டெஸ்ட் வரம் பறிபோயுள்ள சிம்பாப்வே மீண்டும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கான அடித்தளத்தை இடுவதற்கு முயன்று வருகிறது. இது மட்டுமல்லாது அயர்லாந்து போன்ற அணிகளும் டெஸ்ட் வரத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

எனவே, டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆயுள் பற்றி இப்போதைக்கு கவலைப்படத் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.