புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
ஊடகம் ஒரு பலம் வாய்ந்த ஆயுதம்

ஊடகம் ஒரு பலம் வாய்ந்த ஆயுதம்

மீடியா போரம் கிண்ணியா கருத்தரங்கில் ஏ.ஆர். சைபுல்லா

ஊடகத்தின் வாயிலாக நாம் சகலவற்றையும் சாதிக்கலாம். ஊடகம் மிகவும் பலம்வாய்ந்த ஆயுதமாகும். எமது பிரச்சினைகள் பலதரப்பட்டவை.

அவற்றைத் தீர்ப்பதற்கான செயற்பாடுகளில் படித்தவர்களை நாம் பயன்படுத்த வேண்டும். நாம் நம்மில் இலட்சியவாதிகளை உருவாக்க வேண்டும்.

“கிண்ணியா விஷன்” நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ. ஆர். சைபுல்லாஹ் இவ்வாறு கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் “21ஆம் நூற்றாண்டில் ஊடகம்” என்ற தலைப்பில் முழுநாள் கருத்தரங்கொன்றை கிண்ணியா விஷன் கேட்போர் கூடத்தில் நடத்தியது. போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமை வகித்தார்.

திருமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கென ஒரு கருத்தரங்கும், கிண்ணியா கல்வி வலய மாணவர்களுக்கான ஒரு செயலமர்வும் நடத்தப்பட்டது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பணிப்பாளர் சைபுல்லாஹ், முஸ்லிம்களுக்கு தனியான பலம்மிக்க ஊடகம் தேவையென்றும், அதற்காக சமூகம் ஆழமாகச் சிந்தித்து அவசர பணியில் இறங்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

20,000 குடும்பங்களும் 80,000 மக்களும் வாழும் கிண்ணியா அறிவுத் துறையில் இன்னும் வளர்ச்சிகாண வேண்டும் என்றும் சைபுல்லாஹ் தெரிவித்தார்.

வெளி உறவுகள் அமைச்சின் பணிப்பாளர் ஏ. எல். எம். லாபீர் பேசுகையில், கிண்ணியா “மண்ணின் மைந்தர்கள்” செய்ய வேண்டிய பணியை வெளியில் இருந்து வந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் செய்கின்றனர். இது பாராட்டத்தக்கது.

யானை தன்னுடைய பலத்தை அறியாமல் இருப்பது போன்று கிண்ணியா மக்கள் தம்முடைய ஆளுமையை அறியாமல் உள்ளனர்.

எனவே அவர்கள் தமது ஆற்றல்களை வெளிப்படுத்த வேண்டும்.

கூடிய விரைவில் கிண்ணியாவிலும் “பெளர்ணமி கலைவிழா” நடத்தப்படும். மன்னாரில் இந்த பெளர்ணமி கலை விழா மிகவும் பிரபல்யம் வாய்ந்ததாக அமைந்தது என்றார்.

தலைவர் என். எம். அமீன், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எம். ஏ. எம். நிலாம், தாஹா முஸம்மில், எச். எம். பாயிஸ், ரிப்தி அலி, எப். எம். பைரூஸ் கலைவாதி கலீல் ஆகியோரும் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.