புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
உன்னநதை கொள்ளைகண்ட . . . .

ன்னநதை கொள்ளைகண்ட . . . .

சிறந்த புலமை என்பது ரசிக்கத்தக் கதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதும் ஆகும். அந்தவகை யில் புகழேந்திப் புலவரிடம் இருந்த சிறந்த புலமையைக் கண்டு அவருடைய காலத்திலேயே வாழ்ந்த புலவரான ஒட்டக்கூத்தர் வியந்த நிகழ்வு ஒன்று பற்றி இங்கு பார்ப்போம்.

புகழேந்திப் புலவர் மகாசாதுர்யமுள்ள வித்வசிரோமணியாக இருப்பது கண்டு குலோத்துங்க சோழராஜனும் மற்றும் சில பிரபுக்களும் சேர்ந்து சமஸ்கிருதத்தில் உள்ள நளசரித்திரத்தை தமிழில் பாடு மாறு கேட்க அவரும் அதற்கு சம்மதி த்து பாடிமுடித்தார்.

பின்னர் அதனை சோழராஜன் சபை யில் அரங்கேற்றம் செய்யும் பொழுது அதில் அந்திக்காலத்தை வர்ணிக்கத் தொடங்கி “வெண்மையான குடமல்லிகை அரும்பில் வண்டுமொய்த்து சங்க நாதம் செய்ய நெடிய கறுப்பு வில்லை ஏந்திய மன்மதனானவன் தன்னுருத் தெரியாமல் ஆண், பெண் மீது புஷ்ப பாணத்தைப் பிரயோகித்து அவர்களுக்கு விரகதாப த்தை ஏற்படுத்த மலரும் பருவத்தை யுடைய முல்லை மாலையை தோளில் அணிந்து சிறிது நேரம் நிகழ்வதாகிய மாலைப்பொழுதை முன் நடத்திக்கொண்டு அந்திப் பொழுதானது மெல்லென நடந்து வந்தது என்னும் பொருளை அடக்கிய வெண்பாவொன்றைப் பாடினார். அது பின்வருமாறு அமைந்தது.

“மல்லிகையே வெண்சங்கா வண்டுத வான்கருப்பு வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லைமலர் மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே புன்மாலையந்திப் பொழுது.”

புகழேந்தியார் இப்படிப் பாடவும் அவருடன் ஆரம்பம் முதல் பகைமை கொண்டிருந்த ஒட்டக்கூத்தர் “இந்தப் பாட்டில் மல்லிகையரும்பைச் சங்காக வும் வண்டைச் சங்கநாதம் செய்வோனா கவும் கற்பித்தது சரி. ஆனால் சங்க நாதம் செய்வோர் அதன் பின்புறத்தை அல்லவோ வாயில் வைத்து ஊதுவார்கள்.

மலரின் அடிப்புறத்தில் வண்டுகள் மொய்த்து ஊதுவதாக இருந்தால் தவறு சொல்ல முடியாது. ஆனால் அந்த வழ க்கம் வண்டுகளுக்கு இல்லையே! அதை நினையாமற் கூறியதால் இந்தக் கற்பனை குற்றத்துக்கு இடமாகத் தெரிகிறது” என்று கூறினார்.

அச்சமயத்தில் சபையிலிருந்த கம்பர் இந்த ஒட்டக் கூத்தன் புகழேந்தியார் மேலுள்ள தனிப்பட்ட பகைமை காரண மாக அவர் பாட்டில் குற்றம் காண முயற்சிக்கிறான் என்று புரிந்து கொண்டு “இப்படிப்பட்டவன் வாயை பொட்டென்று மூடும்படி நீ விநயமாக உத்தரம் சொல்ல வேண்டும்” என்று புகழேந்திப் புலவரு க்கு கண்சாடை காட்டினார். அதைப் புரிந்து கொண்ட அவர் ஒட்டக் கூத்த ரைப் பார்த்து “நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் குடிபோதையில் உள்ளவ னுக்கு வாயென்றும் பின்புறமென்றும் தெரியுமா? நீர்தான் சொல்லும்” என்று சமாதானம் செய்பவர் போல் அவரைப் பரிகாசம் செய்ய அது கேட்டு அங்குள்ளவர்கள் எல்லாம் நகைத்து “சரி சரி” என்று மகிழ்ச்சியடைந்தனர். இப்படி இன்னும் பல வெண்பாக்களி லும் ஒட்டக் கூத்தர் குற்றம் கண்டு பிடிக்க அதற்ககெல்லாம் புகழேந்தியார் அவ்வப்போது சமாதானம் சொல்லி அவர் நாவை அடக்கினார். அதேசமயம் அவருக்கு ஒட்டக் கூத்தர் மீது பொல் லாத ஆத்திரம் ஏற்பட்டது.

“இவனென்ன எனக்குப் பெரும் தொல்லையாக இருக்கிறான். எப்பொழுது பார்த்தாலும் என்னை அலட்சியம் செய்வதும் என்பாட்டில் குற்றம் கண்டு பிடிப்பதுமாக இருக்கிறானே. இவன் செத்தால்தான் நான் நிம்மதியாக இருக் கலாம். “பாவி சதாயுஸ்” என்பதனால் இந்த மாபாவிக்கும் மரணம் வருமா? வராதே. அதனால் “தன்னைக் கொல்ல வந்த பசுவையும் தான் கொல்வது தர்மம்” என்பதுபோல இவனை நாமே முடித்துவிட்டால் என்ன? என்று யோசித்தார். அதன்படி தன் ஜீவகாருண்ய குணத்தை யும் கைவிட்டு ஒட்டக்கூத்தரைக் கொலை செய்வதற்குத் துணிந்து அதற்குக் காலம் பார்த்திருந்தார்.

ஒருநாள் இரவு ஒட்டக்கூத்தருக்குத் தெரியாமல் அவர் வீட்டில் போய் ஒளிந்திருந்தார்.

அப்பொழுது ஒட்டக்கூத்தர் “நாம் ஆயுள் முழுதும் தலைகீழாகத் தவம் செய்தாலும் நமக்குப் புகழேந்தியைப் போல் பாடும் சக்தி வராது. நமது வல்லமை இவ்வளவாக இருந்தும் சும்மா அவர் பாட்டில் பிழைபிடித்து குறைகூறி வருகி றோம். இதனால் நமக்கு என்ன பெருமை கிடைக்கப்போகிறது என்று தன்மீதே வெறுப்புற்று அந்த எண்ணத்தினாலேயே உணவு உண்ணவும் விருப்பம் இன்றி இருந்தார். அச்சமயம் அவருடைய மனைவி அங்கு வந்து உணவு உண்ண வருமாறு அழைத்தாள். அவர் “எனக்கு சாப்பாடு வேண்டாம்” என்று கூறினார். அவள் அதற்கு “சாதம் சாப்பிடாவிட்டால் பரவாயில்லை. கொஞ்சம் பாலும் பழமுமாவது கொண்டு வருகிறேன் சாப்பிடுங்கள்” என்றாள்.

அதற்கு அவர் “போடி பைத்தியக்காரி, நீ பாலல்ல, பழமல்ல, தேனல்ல, சீனியல்ல, அந்தப் புகழேந்தி பாடிய நளவெண்பாவின் “காதலியை காரிருளில் கானகத்திற் கைவிட்ட பாதகனைப் பார்க்கப் படாதென்றோ. நாதம் அளிக்கின்ற ஆழிவா யாங்கலவ! ஓடி ஒளிக்கின்ற தென்னோ? உரை எனவும் மற்றும் பல வகையாகவும் சொல்லப்படும் கவிகளில் நான்கு ஐந்தைப் பிழிந்துதான் வார்த்தாலும் நான் சாப்பிடமாட்டேன்” என்று கூறினார்.

மூத்த எழுத்தாளர் அமரர் அருள் இராஜேந்திரனின் ஓராண்டு நினைவுப் பேருரை மற்றும் கலை இலக்கிய இதழான ‘கலைமுகம்’ சஞ்சிகை வெளியீடு அண்மையில் கொழும்பு திருமுறைக் கலா மன்றத்தின் ஏற்பாட்டில் கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள அதன் கலா மன்ற பணியகத்தில் நடைபெற்றது. ‘கலைமுகம்’ சஞ்சிகை முதல் பிரதியை இதன் போது கலாமன்ற இணைப்பாளர் அம்புறோஸ் பீற்றர், எழுத்தாளர் சீ. இரவீந்திரனிடம் வழங்கி வெளியிட்டு வைப்பதையும் கலந்துகொடோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம். (படம்: ஏ. மதுரைவீரன்)

இப்படி பல வெண்பாக்களை அவர் பாடுவதைக் கேட்டு “இதென்ன புதுமை இவனுக்கும் நமக்கும் பெரும் பகைமை. என் பாடல் இவன் செவிகளுக்கு நாராசம் போல இருக்கும்.

நம் கவிகளை இவன் இப்படிப் புகழ்ந்து பேசுகிறானே. நாம் இங்கு வந்து ஒளிந்திருப்பதை தெரிந்து கொண்டு பரிகாசம் பண்ணுகிறானோ?” என்று சந்தேகித்துக் கொண்டிருக்கையில் ஒட்டக்கூத்தரின் மனைவி மீண்டும் அங்கு வந்து இராப்பட்டினி கிடந்தால் உடம்புக்கு நல்லதல்ல. நாளைக்கும் விரத நாளாக இருக்கிறது. அதிகமாக வேண்டாம். சிறிதளவு மட்டும் சாப்பிடுங்கள் என்று கூறினாள்.

அதற்கும் அவர் முன் சொன்ன படியே சொல்லி “நீ என்ன சொன்னாலும் சரி எனக்கு சாப்பாடு வேண்டாம். என்னைத் தொந்தரவு செய்யாதே” என்று கூறினார்.

அதை செவிகுளிரக் கேட்ட புகழேந்திப் புலவர் “இவன் உண்மைதான் சொல் கிறான். நம் பாடலை வாயால் மட்டும் அவமதித்துப் பேசினானே ஒழிய மனதில் அப்படி நினைக்கவில்லை. சிறப் பாகவே மதித்துக் கொண்டு இருக்கிறான். இது தெரியாமல் அநியாயமாக இவ னைக் கொன்று பழி பாவத்துக்காளாக இருந்தோமே. அப்படிச் செய்திருந்தால் அந்தப் பாவத்தை எங்கே போய் தொலை ப்பது இவனுடைய மனைவி சர்வோத்த மியாகையால் இவனும் மரணத்திலிருந்து தப்பினான்.

அந்த மகராசி இவனை உணவு உண்ண அழைத்ததால் நாம் கொலைப் பாதகத்தோடு ராஜதண்டனையிலிருந்தும் தப்பினோம். வெளிப்பார்வைக்கு வெறுப் பாகக் காட்டினாலும் நம் கல்வியின் அருமை பெருமைகளை உள்ளூர தெரிந்து வியந்து கொண்டு இருக்கிறான். இவன் மனதில் தர்மம் நிலைத்திருக்கிறது என்று மகிழ்ச்சியுற்று ஓடிப்போய் ஒட்டக்கூத்தரை கட்டியணைத்து புளகாங்கிதமடைந்தார்.

அவர் புகழேந்தியாரைப் பார்த்து ஆச்சரியமடைந்து “இந்த நேரத்தில் நீ எப்படி இங்கு?” என்று கேட்டார். “உன்னைக் கொல்வதற்குத்தான் வந்தேன்” என்றார் புகழேந்தியார். “அப்படியா, என்னைக் கொல்ல வேண்டிய அவசியம் உனக்கு என்ன?” என்று கேட்க.

“நீ எப்போது பார்த்தாலும் என் கவி பற்றி குறை கூறுவதால் உன்மீது கோபம் கொண்டு உன்னைக் கொல்லத் துணிந்தேன்” என்றார்.

“அப்படியானால் கொல்லாமல் ஓடிவந்து என்னைத் தழுவி மகிழ்ச்சியடைவது எதனால்?” என்று கேட்டார்.

“உன் மீது முன்பு கோபங்கொண்டது உண்மைதான். ஆனால் நீ என் கவி மீது வைத்துள்ள கருத்தை நோக்கும்போது உன்மீதுள்ள வெறுப்பு போய்விட்டது” என்றார்.

தன் மனைவியிடம் கூறியதை புக ழேந்தியார் ஒளிந்திருந்து கேட்டு ள்ளார் என்று ஒட்டக்கூத்தர் புரிந்து கொண்டார்.

அதன் பின்னர் இவரும் விரோதம் மறந்து நண்பர்களாயினர்.

இதன் மூலம் புலமை என்பது அனை வராலும் ரசிக்கத் தக்கது என்பதை அறியலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.