புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
க/ கல்ஹின்னை அல் மனாரின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் சஞ்சிகை வெளியீடும் 2011

வெற்றிப் பாதையை நோக்கி...

க/ கல்ஹின்னை அல் மனாரின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் சஞ்சிகை வெளியீடும் 2011

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய உருவற்ற அல்லாஹ்வின் திருவுற்ற பெயரைக் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.

தல்ஹின்னை க/அல்மனார் தேசிய பாடசாலையின் 2010ம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழாவை சிறப்பாக நடாத்த வழிகாட்டி, அருள் செய்த அல்லாஹ்வைப் புகழ்ந்தவனாக! எமது பாடசாலை பற்றி ஒரு சில வார்த்தைகள்:

எனது பாடசாலை 77 வருட வரலாற்றைக் கொண்டது. 1934ம் ஆண்டு மர்ஹ¤ம் அல் ஹாஜ் ஏ.ஓ.எம். ஹ¤ஸைன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பின் 1938ல் அரச பாடசாலையாக பொறுப்பேற்கப்பட்டு 1946ல் கனிஷ்ட பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு, 1969ல் க/கல்ஹின்னை அல் மனார் மஹா வித்தியாலமாகவும், 1993ல் மத்திய மஹா வித்தியாலயமாகவும், 1994ல் மகா விருட்சகமாக தேசிய பாடசாலை எனும் சிறந்த அந்தஸ்துக்கு உள்வாங்கப்பட்டது.

1955ல் ஷிஷிவி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு முதன் முறையாக பல்கலைக் கழகத்திற்கு 1965ல் இரு மாணவர்கள் அனுமதி பெற்றனர்.

அடிப்படை வசதிகளான மின்சாரம், நீர் வசதி, கட்டடம் போன்றவை அவ்வப்போது அரசினாலும், அரச சார்பற்ற நிறுவனங்களாலும், ஊரின் தனவந்தர்களினாலும் கிடைக்கப்பெற்று தலைநிமிர்ந்து நிற்கிறது.

1984ல் பொன்விழாக் கொண்டாடிய இப்பாடசாலை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. அகில இலங்கை ரீதியிலும் அல் மனாரின் புகழ் பரவத் தொடங்கியது. ஆனாலும் 2000ம் ஆண்டு காலப்பகுதியில் ஆசிரியர் பற்றாக் குறையாலும், பெளதீகவளப் பற்றாக்குறையாலும் வீழ்ச்சி நிலையை அடைத்து வந்தது. இந்நிலையில் இருந்த பாடசாலையை 2009ல் நான் பொறுப்பேற்றேன்.

இதன் போது பாடசாலையை வளர்க்க பாடசாலையின் நிலை என்ன? இதன் தேவைகள் என்ன? எங்கே செல்ல வேண்டும்? எவ்வாறு செல்ல வேண்டு என்ற வினாக்களுக்கு பதில் காண தேடல்களையும், தேவைகளையும் இனங்காண முற்பட்டு தேவையினை அடைந்தேன். மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, பெற்றோர்களுக்கு என்ற ரீதியில் பல நலனோம்பல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தேன். இடை விடாத முயற்சியினாலும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களின் பாரிய முயற்சியினாலும், கல்ஹின்னை கல்வி அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களின் பூரண ஆதரவும், ஊர்ப் பெற்றார்களின் தொடர்ந்த ஒத்துழைப்பினாலும் நான் அடைய வேண்டிய இலக்கை பல சிரமங்களுக்கு மத்தியில் அடைய முடிந்தது.

தொடர்ந்து எனது கல்லூரி மாணவர்களின் அறிவு, திறன், மனப்பாங்குகளில் விருத்தி செய்ய வேண்டிய அவசியத்திற்கு அடிப்படையான எண், எழுத்து, வாசிப்பு, ஒழுக்க விழுமியம் என்பவற்றில் வளர்ச்சியும், வழியும் காண பல்வேறு திட்டங்களை வகுத்து செயற்பட்டேன். அதன் அடிப்படையில்:

*கணிதத் திறனை விருத்தி செய்ய விசேட திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டது.

*தமிழ் அறிவை வளர்க்க வாசிப்பு, எழுத்துப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

*ஆரம்ப வகுப்பு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வகுப்பு ஆசிரியர், ஆசிரியைகள் பிரபல பாடசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்குரிய வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

*ஆங்கில அறிவை வளர்க்க வார இறுதி நாட்களில் வெளி இடங்களில் இருந்து ஆசிரியர் வரவழைக்கப்பட்டு ஆங்கில அறிவு வளர்க்கப்பட்டது.

மேலும் இக்கல்லூரியினை கண்டி மாவட்டத்தின் சிறந்த பாடசாலையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு பாரிய பிரச்சினையாக இருந்த ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டி- அதாவது கல்லூரியில் 35 ஆசிரியர்களே இருந்தனர். ஏனைய ஆசிரியர்களைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கி வெற்றியும் கண்டேன்.

மேலும் பாடசாலையின் இதயமாக இருக்க வேண்டிய ஒரு பொறுப்பு வாய்ந்த அதிபர் தரமுள்ள பிரதி அதிபரின் தேவையை உணர்ந்து அதிபர் தரம் உள்ள பிரதி அதிபர் ஒருவரையும் தேடி பெற்றுக் கொண்டேன்.

அவருடைய ஒத்துழைப்பையும், எனது கல்லூரி ஆசிரிய குழாத்தின் தியாக சிந்தையும், அவர்களது பூரண ஈடுபாடும் வளர்ச்சிக்கு உறுதுணையாகின.

மேலும் கல்லூரியில் இருந்த ஆசிரியர் தொகைக்கு நிகராக தொண்டர் ஆசிரியர்களின் சேவையும் பெறப்பட்டது.

அதனையும் கருத்திற் கொண்டு தொண்டர் ஆசிரியர்களுக்குப் பதிலாக ஆசிரியர்களைப் பெற்றுக் கொண்டேன். இதற்கு உறுதுணையளித்த வலயக் கல்விப் பணிமனையில் கல்விப் பணிப்பாளர் கெளரவ திருமதி வீனா பெரேரா அவர்களையும், பூஜாபிட்டிய பிரதேச சபையின் உறுப்பினர் யு. டு. ஆ. ரஸான் அவர்களையும், மத்திய மாகாண முதலமைச்சர் கெளரவ சரத் ஏக்கநாயக்க அவர்களையும், முஸான் இன்டர்நெஷனல் உரிமையாளரும் சமூக சேவையாளருமான அல் ஹாஜ் முஸ்லிம் ஸலாஹ¤த்தீன் அவர்களையும் இவ்விடத்தில் நினைவு கூருதல் பொருத்தமானதே.

1934ல் 76 மாணவர்களைக் கொண்டிருந்த இக்கல்லூரியில் இன்று அண்ணளவாக 1500 மாணவர்கள் கல்வி பயின்று கொண்டிருக்கின்றார்கள்.

இதன் வளர்ச்சியைக் கண்டு பக்கத்தூர்களிலிருந்தும் மாணவர்கள் வந்து சேர்ந்த வண்ணமுள்ளனர். இதற்கு அடிப்படைக் காரணம் 2009ல் க.பொ.த. சா/த பரீட்சைப் பெறுபேறு 23%. 60 பேர் தோற்றி அதில் 13 பேரே சித்தியடைந்தனர். ஆனால் அதற்கடுத்த வருடம் 2010ல் இந்நிலை மாறி 68% உயர்த்தப்பட்டு கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் இவ்வருடம் உயர்தரத்திற்கு மட்டும் - 64 மாணவர்கள் இணைந்துள்ளனர். இது கல்ஹின்னை வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகும். மேலும் இவ்வருடம் இணைந்துள்ள உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு பிரத்தியேக செயற்றிட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நான் இக்கல்லூரியைப் பொறுப்பேற்றதும் சுற்றாடல் ஒழுங்கமைப்பு, அழகு படுத்தல், மாணவர் ஆசிரியர் நலம் பேணல், ஒழுக்க விடயங்கள் என்பவற்றிலும் முக்கிய கவனம் செலுத்தினேன். இதற்குப் பக்கபலமாக சட்டத்தரணி எச்.எம். பாரூக் அவர்களின் ஒத்துழைப்பும் ஆலோசனையும் பாராட்டுக்குரியது.

அத்தோடு விளையாட்டு மைதான சீரமைப்பு, நூலக ஒழுங்குபடுத்தல், கல்லூரியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், ஆசிரியர் நலம் பேணல், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேம்படுத்தல் போன்ற பல அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்ல இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் கூடிய கவனமெடுத்து பாடசாலை மட்டம் வலய மட்டம், மாகாண மட்டம், தேசிய மட்டம் என்ற அடிப்படையில் விளையாட்டு, மீலாத் விழா, தமிழ்த்தின விழா, ஆங்கில சிங்களத்தின விழாக்களில் மாணவர்களை ஈடுபடுத்தி ஆளுமையுள்ள நற்பிரஜைகளை உருவாக்க அரும் பாடு பட்டு வருகின்றேன். அதன் காரணமாக இவ்விழாவினை ஏற்பாடு செய்தேன்.

இக்கல்லூரியில் ஆங்கிலப் பிரிவு, விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு வீழ்ச்சி கண்டிருந்தது. எனவே நான் மீண்டும் ஆங்கிலப் பிரிவை ஆரம்பித்து செவ்வனே நடைமுறைப்படுத்தியுள்ளேன். எதிர்வரும் வருடம் விஞ்ஞானப் பிரிவையும் ஆரம்பிக்க உள்ளேன்.

இவற்றுக்கெல்லாம் தோளோடு தோள் நின்று பக்க பலமாக செற்படுகின்ற சமுக சேவையாளரான அல்ஹாஜ் முஸ்லிம் ஸலாஹ¤த்தீன் அவர்களும், ஹாரிஸபத்துவ தொகுதி அமைப்பாளர் கெளரவ எதிரிவீர வீரவர்தன அவர்களினதும், அவர்களது புதல்வரான கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பிரசன்ன வீரவர்தன அவர்களினதும் எமது ஊரைச் சேர்ந்த மன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஜுனைத்தீன் அவர்களின் விடா முயற்சியும் எமது கல்லூரி ஆயிரம் பாடசாலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. இதற்காக பல முயற்சிகளும் திட்டங்களும் வகுத்து செயற்பட்ட, அனைவரையும் நினைவு கூருகிறேன்.

இவ்வாறான தொடர் முயற்சிகளால் எனது கல்லூரி எதிர் காலத்தில் சிறந்த கல்லூரியாக இலங்கையில் மிளிரும் என்பது எனது எண்ணம், மேலும் 1934 முதல் சேவையாற்றிய அதிபர்கள் ஆசிரியர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றி கூறுவதுடன் இவ்விழாவில் பங்கெடுத்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.