வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 
மாணவனின் தாயாரிடம் மன்னிப்பு கோரிய பொலிஸ்

'செலவை ஏற்கிறோம்;'

மாணவனின் தாயாரிடம் மன்னிப்பு கோரிய பொலிஸ்

பிரேத பரிசோதனை முதல் அனைத்து செலவுகளையும் நாங்களே செய்கிறோம். தவறுதலாக நடந்துவிட்டது மன்னித்துக்கொள்ளுங்கள் என்று பொலிஸார் என்னிடம் கூறினார்கள் என கொல்லப்பட்ட கிளிநொச்சி மாணவன் கஜனின் தாயார் நடராசா சறோஜினி தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்த கிளிநொச்சி மாணவன் கஜனின் தாயாரிடம் அங்கிருந்த பொலிஸார் இவ்வாறு தெரிவித்ததாக நேற்று கஜனின் தாயார் பிரேத்ததுக்கு முன் அழுதவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் வைத்தியசாலையிலிருந்து என்னையும் மகளையும் ஒரு பொலிஸ்காரர் கையை பிடித்து அழைத்துச் சென்று ஏசியவாறு வாகனம் ஒன்றினுள் ஏற்றி யாழ் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு எங்களுக்கு தேநீர் தந்தனர்.ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம்.பின்னர் அங்கு கம்பஸ் பெடியளும் வந்திட்டாங்கள்.

இதனை நாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை தவறுதலாக நடந்துவிட்டது.பொலீஸார் வெறியில் இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை சுட்டதுதான் மாணவர்கள் மீது பட்டுவிட்டது.மன்னித்துக்கொள்ளுங்கள். இனிமேல் இப்படியொன்றும் நடக்காது.என்று பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் எங்களிடம் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட பொலீஸார் மீது நடவடிக்கை எடுக்க கொழும்பில் இருந்து ஆட்கள் வருகின்றார்கள். அவர்களை நாங்கள் கைது செய்திருக்கின்றோம். கோட்டுக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம் தெரியாமல் நடந்த இந்த சம்பவத்தை நீங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.

பொலீஸ் உங்களுக்கு பந்தல் போடுவதற்கும் கதிரைகள் பிஸ்கட், சோடாவும் தந்து எல்லா செலவையும் செய்வார்கள் என்று சொல்லிப் போட்டு அங்கிருந்து (யாழ்ப்பாணம்) இங்குள்ள (கிளிநொச்சி) டிஐஜி ஒபீசுக்கு கோல் பண்ணி எங்கட வீட்டு முகவரியையும் சொல்லிப் போய் எல்லா உதவியையும் செய்ய சொன்னார்கள்

நாங்கள் செய்த குற்றத்திற்கா போஸ்மூட்டம், பெட்டிச் செலவு, வாகனச் செலவு எல்லாத்தையும் பொலீஸ் செய்து தரும். அந்த வீட்டுச் செலவு இந்தவீட்டுச்செலவு எல்லாத்தையும் நாங்கள் செய்யிறம் என்றும் சொன்னார்கள். ஆனால் இங்க எங்கட ஆட்கள் அவர்களை ஒன்றும் செய்ய விடவில்லை. பொலீஸ் இங்க வரக் கூடாது உங்கட உதவியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டுட்டினம்

பிறகு கொழும்பிலிருந்து பொலீஸ் பெரியாள் ஒருத்தர் கதைக்கிறன் என்று சொல்லி, அவா் சொன்னார் உங்கட பிள்ளைகள் ஏஏல், ஓஏல் படிச்சிருக்கினமா நாங்கள் அவா்களுக்கு வேலைவாய்ப்பு தாரம் உங்களுக்கு நாங்கள் இந்த உதவியை மனிதாபிமான முறையில் செய்யிறம் மன்னிச்சிக்கொள்ளுங்கள் தவறுதலாக நடந்துவிட்டது என்றார்..

கொல்லப்பட்ட யாழ் பல்கலைகழக அரசறிவியல்துறை மூன்றாம் வருட மாணவனான நடராசா கஜனின் தாயாரான நடராசா சறோஜினி(வயது 61) தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.