வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 

தமிழக அரசியலில் சிங்கள சமூகம்

தமிழக அரசியலில் சிங்கள சமூகம்

உலகெங்கும் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். முன்னர் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிஜி, தென்னாபிரிக்கா உட்பட பல நாடுகளில் மாத்திரமே தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். தற்போது பல ஐரோப்பிய, அமெரிக்க, ஸ்கென்டிநேவிய நாடுகளில் பலம் பொருந்தியவர்களாக வாழ்கின்றனர். இவர்களுக்கு ஒரு தாயகம் இருந்தாலும் தனிநாடு ஒன்றில்லை. இதனால்தான் இலங்கையின் வடபகுதியைப் பிரித்து தனிநாடாக ஆக்கிக் கொள்வதற்கு முயற்சிக்கிறார்கள். அப்படி நடந்தால் சிங்களவருக்கென இருக்கும் ஒரு நாடும் பறி போய்விடும். இது ஒரு சர்வதேச சதி”

ஒரு பயணத்தில் சந்தித்த மூத்த பத்திரிகையாளர் ஒருவருடன் இரவு நேரத்தில் குஷியாக பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்ன இந்த விஷயம் அவருடைய சொந்த கருத்து அல்ல. படித்த சிங்களவர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகின்ற அல்லது ஊறிப் போயிருக்கின்ற அவர்களது சுய இருப்பு தொடர்பான அச்சம் கலந்த கருத்து இது. உலகெங்கும் பலம் பொருந்திய நிலையில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று அவர்கள் சொன்னாலும் தமக்கு ஏற்படக்கூடிய அந்த ‘ஆபத்து’ தமிழ் நாட்டின் வழியேதான் நிகழும் என்பது அவர்களின் கணக்கு.

இந்த அச்சத்துக்கு ஒரு வரலாற்று காரணத்தை அவர்கள் காட்டுகிறார்கள். அதுதான் பண்டைய சோழர் படையெடுப்பு. ஐந்நூறு வருடங்களுக்கு மேல் தமிழத்தில் இருந்து படையெடுத்து வந்தவர்கள் பொலன்னறுவை, அநுராதபுரம் பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டிருக்கிறார்கள். அச்சமயத்தில் சிங்கள மன்னர்கள் முடியிழந்து கானகங்களில் சரண் புகுந்து வாழ வேண்டியிருந்தது. இந்த வரலாறு இன்றளவும் பாடசாலைகளில் சொல்லித்தரப்படுவதால், இளமையிலேயே சிங்கள இளந் தலைமுறையினருக்கு அந்தத் ‘தமிழக அச்சம்’ வந்து விடுகிறது. விடுதலைப் புலிகளின் எழுச்சியும் அதற்கு இந்தியா ஆரம்பத்தில் துணையோனதும் இப்பாரம்பரிய சந்தேகத்தை வலுவடையச் செய்திருக்கிறது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனினும் வடக்கு கிழக்கில் எழுந்த தமிழ் அரசியல் தீவிரவாத அமைப்புகளின் தோற்றம் சிங்கள சமூகத்தின் இப்பாரம்பரிய சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. சுதந்திரத்தின் பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகள் உதாசீனப்படுத்தப்பட்டு ஏமாற்றப்பட்டதன் விளைவாககே இவ்வியக்கங்கள் எழுச்சி அடைந்தன என்பது தெளிவு. இதற்கு தமிழகத்தில் பரவலான அனுதாபம் கிட்டியதே தவிர ஆதரவு கிடைத்ததாக சொல்வதற்கில்லை. இதற்கான பிரதான காரணம் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதைத் தெரியாதவர்களாக தமிழக தமிழ்ச் சமூகம் இருந்து வருவதுதான்.

இன்றைக்கும் கூட இலங்கைத் தமிழ்ப் பிரச்சினையை ஆழ அகலமாக அறிந்து வைத்திருக்கும் தமிழகத் தமிழர்களின் எண்ணிக்கை சொற்பமே, தமிழக தமிழ்ச் சமூகத்தின் ஆதரவு பெரும்பாலும் உணர்வு பூர்வமானதாக, இலங்கைத் தமிழர் வரலாறு தெரியாத நிலையில், இருந்ததே தவிர, அறிவுபூர்வமானதாக இல்லை. தமிழகத் தமிழர்களின் வீரத்துக்கான பதவுரை பொழிப்புரைகள் எல்லாம் இன்றைக்கும் சங்க காலத்தவையாகவே உள்ளன. சீமானும், வைகோவும் அப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாணி பேச்சுதான் பெரும்பாலும் தமிழக வாக்காளர்களை சலிப்படையச் செய்து அவர்களுக்கு வாக்களிப்பதைத் தவிர்த்து விடுவதற்கான காரணமுமாக இருக்கலாம்.

இலங்கையில் சிங்கள சமூகம் தமிழகத்தின் மீது பெருத்த சந்தேகம் கொண்டிருக்கும் அதேசமயம், இலங்கைத் தமிழர்களை விழுங்கிக் கபளீகரம் செய்யக் காத்திருக்கும் ஒரு பகாசுரனாகவே தமிழக ஊடகங்களும் தமிழ் அரசியல்வாதிகளும் சிங்கள சமூகத்தை சித்தரித்து வருகின்றனர். சிங்கள சமூகத்துக்கு ஒரு வரலாற்று ரீதியான காரணம் இருக்கிறது, தமிழகத்தை சந்தேகப்படுவதற்கு. ஆனால் தமிழகத்துக்கு சிங்கள சமூகத்தை சந்தேகப்படுவதற்கும் வெறுப்பதற்கும் போதிய முகாந்திரம் இல்லை. 1948 இன் பின்னர் இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டார்கள் என்பதையும் உள்நாட்டு யுத்தத்தின்போது தமிழர்கள் சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் மற்றும் இறுதி யுத்தத்தில் மனிதப் பேரவலம் நிகழ்ந்தது என்பதையும் வைத்துக் கொண்டுதான் சிங்களவர்கள் மீதான தமிழகத்தின் வெறுப்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பது பொதுவான கருத்து. ராஜபக்சமார் மீதான வெறுப்பும் கசப்பும் இவ்வாறு கட்டமைக்கப்பட்டதுதான்.

ஆனால் சிங்கள சமூகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான தொடர்பு மிக நீண்டது. வரலாற்று ரீதியானதும் கூட. விஜயனும் அவனது நண்பர்களும் பாண்டிய அரசகுமாரிகளையே மணந்தனர் என்கிறது மகாவம்சம். கஜபாகு மன்னன், அழைப்பின் பேரில் சேரனின் கண்ணகி விழாவுக்கு சென்று திரும்பிவரும்போது கண்ணகி சிலையைக் கொண்டு வந்தான். கன்னி வழிபாடு இன்றைக்கும் சிங்களவர் மத்தியில் பத்தினி வழிபாடாக விளங்கி வருகிறது. தமிழகத்து சிறு தெய்வ வழிபாடுகள் சிங்களவர் மத்தியில் வீரியத்துடன் பின்பற்றப்படுகிறது. சிங்கள அரசர்களிடையே பிணக்குகள் ஏற்பட்ட போதெல்லாம் அவர்களின் ஒரு தரப்பினர் தென்னிந்திய மன்னர்களிடம் தஞ்சடைவதும் அவர்களின் உதவியுடன் மீண்டும் படை திரட்டி இலங்கை திரும்புவதும் வரலாற்றில் காணப்படும் நிகழ்வுகள். தமிழ் பேசும் தெலுங்கு நாயக்க வம்சத்தினர் கண்டி இராச்சியத்தை ஆண்டது நாம் அறிந்த உண்மை. கோட்டை மன்னர்கள் தென்னிந்தியர்களை இங்கே அழைத்து வந்து அவர்களுக்கு பதவிப் பெயர்கள் சூட்டி ஹங்வெல்ல மற்றும் கம்பஹா போன்ற பகுதிகளில் குடியேற்றியதாக அறிய முடிகிறது. இவ்வாறு வந்தவர்களே பிற்காலத்தில் நிலப்பிரபுக்களாகவும் அரசியல் தலைவர்களாகவும் மாறினார்கள். பல நூற்றாண்டுகளாக இலங்கை சிங்கள மன்னர்கள் தென்னிந்தியாவிலிருந்தே தமது தேவியரைத் தெரிவு செய்து வந்துள்ளனர்.

வரலாற்று உண்மைகள் இவ்வாறிருக்க, இன்றைக்கும் நாட்டியம், கல்வி, தொழில் பயிற்சி, கலைகள் எனப் பலதரப்பட்ட தேவைகளுக்காக சிங்களவர்கள் சென்னைக்கும் தமிழகத்துக்கும் சென்று வருகிறார்கள். மருத்துவத்தின் பொருட்டு பல சிங்கள மக்கள் சென்னைக்கு செல்கிறார்கள். பெளத்த தல யாத்திரையின் பொருட்டு சிங்கள யாத்திரிகர்கள் எழும்பூருக்கு சென்று அங்கிருந்தே வட இந்தியாவுக்கான பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். சென்னை சில்க், போத்தீஸ் போன்ற பெரு வணிக நிறுவனங்களில் கணிசமான ஒரு தொகையை இந்தியா செல்லும் சிங்கள மக்கள் செலவிட்டு பொருள் கொள்வனவு செய்கின்றனர். வருடா வருடம் பெருந்தொகையான இலங்கை பணம் தமிழகத்தில் செலவிடப்படுகிறது. இத்தனை வாய்ப்புகள் இருந்தும்கூட தமிழகம் இன்றுவரை பக்கத்து நாடான இலங்கை வாழ் சிங்கள சமூகத்தை தமது பொருளாதார வளர்ச்சிக்காக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில்தான் வரலாறு தொடர்புடைய ஏராளமான கோவில்களும் வரலாற்று சின்னங்களும் அமைந்துள்ளன. இவற்றை அடைவதற்கு திருச்சி மற்றும் மதுரைக்கு செல்ல வேண்டும். சிங்கள மக்களுக்கு பிரமிப்பூட்டக் கூடிய ராமேஸ்வரம், மீனாட்சி அம்மன், தஞ்சை பெருங்கோவில், மதுரை நாயக்கர் மஹால், சமண குகைகள் என ஏகப்பட்ட சுற்றுலாத் தலங்கள் அங்கே அமைந்துள்ளதோடு சிங்கள பயணிகள் அறியாத உணவு வகைகள், உபசார முறைகள், பழக்க வழக்கங்கள் எனப் பல அரிய விஷயங்கள் உள்ளன.

தமிழகத்தின் பொருளாதார அபிவிருத்தி சார்ந்த இவ் விடயங்களில் தமிழக அரசியல்வாதிகளோ அல்லது வர்த்தக சமூகமோ இதுவரை போதிய கவனம் செலுத்தியதாக இல்லை. இதற்கான பிரதான காரணம், சிங்கள மக்கள் தொடர்பாக கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாகக் கட்டி எழுப்பப்பட்டு வந்துள்ள ஒரு எதிர்மறை அபிப்பிராயமே. வர்த்தக விடயங்களில் படு சூரர்களான தமிழர்கள் இலங்கை விடயத்தில் மெத்தனப் போக்கைக் கடை பிடிப்பதற்கு அவர்களது தமிழ் உணர்வு மட்டும்தான் காரணமாக அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பதைத் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும்.

இலங்கை வாழ் சிங்கள சமூகத்தின் சந்தேகம் பெரும்பாலும் வரலாற்று ரீதியானது. பிற்காலத்தில் துவேஷ அரசியல் சார்ந்த பரப்புரைகள் தமிழர்கள் மீதான வெறுப்பை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்ததே தவிர தமிழகத் தமிழர்கள் மீது புதிதாக எந்த வெறுப்பும் ஏற்படுவதற்கான காரணம் இருக்கவில்லை. தனிநாடு சார்பான கருத்தியலை தமிழக அரசியல்வாதிகளும் வணிக நோக்கம் கொண்ட ஊடகங்களும் தமிழகத்தில் உருவாக்கி மக்கள் ஆதரவு அலையை ஏற்படுத்தியதன் விளைவாக சிங்கள சமூகம் மீண்டும் தமிழகத்தின் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்தது.

பின்னர் தமிழகத்தில் சிங்கள எதிர்ப்பலை என்பது எப்படி ஒரு வணிகமாகிப் போனது என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.