வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 
தீப ஒளித் திருநாள்

தீப ஒளித் திருநாள்

இந்து தர்மம் காட்டும் ஒவ்வொரு வழிமுறையிலும் ஆழம்மிக்க கருத்து பொதிந்துள்ளதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதை உன்னிப்பாக, கவனிக்கும் பட்சத்தில் மேலான சிறப்பம்சங்களைக் காணமுடிகிறது. இந்து சமயத்தில் பல பண்டிகைகள், விரதத்தினங்கள், விழாக்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன.

பொங்கல் மற்றும் ஏனைய விழாக்கள், பண்டிகைகள் விஞ்ஞான ரீதியான காரணங்களைக் கொண்டுள்ளன. நவராத்திரி போன்றன பக்தி பூர்வமாக மிளிர்ந்து வருகின்றன. தீபாவளி நன்றியுணர்வு, தீப மேம்பாடு போன்றவற்றை எடுத்து காட்டுவதாக அமைந்துள்ளது. தீபாவளி என்பது தீப ஒளித்திருநாளாகவே மிளிர்கின்றது. ஆண்டுதோறும் இந்து மக்களால் பெருமையுடன் கொண்டாடப்பட்டு வருவது தீபாவளித்திருநாள்.

உற்சாகம், ஊக்கம், ஆனந்தம், அக மகிழ்வு கொண்டு பெருமையுடன் கொண்டாடப்பட்டு வருவது தீபாவளி எனும் தீபத்திருநாளாகும்.

வரலாறு

முன்னொரு காலத்தில் பிரக்ஜோதிபுரம் எனும் நகரினில் நரகாசுரன் எனப்படும் அரசன் இருந்துள்ளான். பிரம்மதேவனை நோக்கி புரிந்த கடுந்தவத்தின் பயனாக அரிய வரங்களை அவனால் பெற முடிந்தது. இதன் சக்திகளால் நரகாசுரன் பாதாள பூலோங்களை அழித்து அனைவருக்கும் இடையூறுகள் விளைவிக்கத் தொடங்கினான். அவன் தலைக்கனம் கூடியது. தேவகுலத்தையே ஆட்டிப்படைக்கும் ஆசை மேலோங்கியது இந்திரனை போர் செய்து வெற்றிகொண்டு, தேவர்களையே அழிக்கத் திட்டம் தீட்டினான். இந்திரனின் தாயார் அணிந்திருந்த மகா குண்டலங்களாம் காதணிகளைக் கவர்ந்து கொண்டு பிரக்ஜோதிஜபுரம் நாடினான். பத்ரிக்கா ஆசிரமத்து முனிவர்களும் ஏற்கனவே இந்த நரகாசுரனின் அட்டூழியங்களினால் மனம்வெதும்பியிருந்தனர்.

தேவர்கள், முனிவர்கள், இந்திரன் புடை சூழ துவாரகாபுரி சென்று கிருஷ்ண பகவானிடம் முறையிட்டனர்.

நரகாசுரனின் கொட்டத்தை அடக்கி ஒடுக்க கிருஷ்ண பகவான் திருவுளம் கொண்டார். சத்திய பாமா சமேதராக நரகாசுரனோடு போர் புரியத் தொடங்கினார். கிருஷ்ண பகவான் அனைத்து சக்தியையும் பிரயோகித்தார். போரில் தோல்வி கண்ட நரகாசுரன் ஆவேசம் கொண்டு போரில் உக்கிரமாக செயற்படத் தொடங்கினான். அவனால் ஏவப்பட்ட சில அஸ்திரங்களால் பகவான் சிறிது சோர்வடையலானார். இது கண்ட அம்மை சத்தியபாமா பகவானை ஒருவாறு தேற்றி தாமே எண்ணற்ற பாணங்களை நரகாசுரன் மீது பல முறை பாய்ச்சிடலானார். நரகாசுரன் உடலில் பலவாறு துளைத்து குருதிபாய்ந்தது. சிறிது பின்னடைந்த நிலையிலும் தன்னை ஒருவாறு தேற்றி மீண்டும் வலிமை கொண்டு போரில் வீராப்பைக் காட்ட நரகாசுரன் முற்பட்டான்.

யாவும் அறிந்த எல்லாம் வல்ல ஸ்ரீமத் கிருஷ்ணபகவான் சக்ராயுதத்தை அவன் மீது பாய்ச்சி அவனது உடல் தன்னை இரு கூறாகப் பிளக்கச் செய்தார். மரணத் தறுவாயிலிருந்த நரகாசுரன் பகவானை வணங்கி, “யான் இழைத்த கொடுமை, பாவங்கள் யாவற்றையும் பொறுத்தருள வேண்டும் கொடியோனாகிய நான் உயிர் துறக்கும் இந்நாளை தொல்லை நீங்கிய மங்களகரமான நாளாக மக்கள் கொண்டாட வேண்டும். இந்த நாளில் என்னை நினைவு கூர்ந்து நீராடி, புதிய ஆடை அணிந்து ஆலயங்களில் வழிபாடு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்ட வேண்டும்” என்றும் வேண்டிக்கொண்டான். கிருஷ்ண பகவானும் நரகாசுரன் வேண்டிய வரத்தை அருளிச் செய்தார்.

அத்தினமே உலகெங்கும் வாழ் இந்து மக்களால் கொண்டாடப்பட்டுவரும் தீபாவளி எனும் தீப ஒளித்திருநாளாக மிளிருகிறது.

நரக சதுர்த்தி

கிருஷ்ண பகவான் நரகாசுரனுக்கு மோட்சம் அளித்து அருட் கடாட்சம் வழங்கிய காரணத்தால் தீபாவளிப் பண்டிகையை நரக சதுர்த்தி என்றும் அழைக்கிறார்கள். தீபாவளி பற்றிய வரலாறு பல காரணங்களைக் கூறுகின்றது.

அபயம் அளித்த அருட் கடாட்சம் வழங்கிய நாள்

கிருஷ்ண பகவான் நரகாசுர வதம் செய்து அவனுக்கு மோட்சம் அளித்தருளிய அதிமுக்கிய நிகழ்வே பெரும்பாலும் ஏற்கப்பட்டு நினைவு கூரப்பட்டு வருகின்றது. இராமபிரான் ஆரண்யவாசத்தையும் இராவணவதத்தையும் முடித்த பின்பு மீள அயோத்தி நகர் திரும்பிய தினத்தன்று மக்கள் நகரமெங்கும் தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சி பொங்க கொண்டாடினார்கள். அத்தினமே இராமாயணத் தீபாவளியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

மகாபலிச் சக்கரவர்த்தியின் மேன்மைக் குணம்

மிகச் சிறந்த நீதிமானாகிய மகாபலிச்சக்கரவர்த்தி தான் அரசனாகப் பதவியேற்ற தினத்தன்று நாடெங்கிலும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டுமென ஆணை பிறப்பித்தார். இதுவும் தீபாவளி தினமாகக் கருதப்படுகிறது.

மராட்டிய மன்னன் வீர சிவாஜி எதிரிகளை வென்று கோட்டை போல் கட்டி அதனுள் தீபங்களை ஏற்றி வைத்து வணங்கினார். மராட்டிய மக்களால் இதுவே தீபாவளியாக நாளடைவில் கொண்டாடப்பட்டு வரத் தொடங்கியதாகும். இதை முன்னிறுத்தியே மராட்டிய மக்கள் இன்றும் மும்பையில் மண் கோட்டை கட்டி தீபங்கள் ஏற்றி வைத்து வழிப்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். உஜ்ஜையனி நாட்டை ஆண்டுவந்த விக்கிரமாதித்தன் போரில் வெற்றியெய்திய தினத்தன்று தீபங்கள் ஏற்றி வணங்கியதையும் தீபாவளியாகக் கொண்டாடி வருகிறார்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.