வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 

சட்டத்தரணி அந்தோனிசாமி பீட்டர்போல் நீதிபதியாகத் தெரிவு

சட்டத்தரணி அந்தோனிசாமி பீட்டர்போல் நீதிபதியாகத் தெரிவு

ச சட்டத்தரணி அந்தோனிசாமி பீட்டர்போல் நீதிபதியாக இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் முன்னிலையில் கடந்த 17ஆம் திகதியன்று சத்திய பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற நீதிபதி தேர்வுக்கான போட்டிப் பரீட்சைக்குத் தோற்றிய 600 போட்டியாளர்களில் 60 பேர் சித்தியடைந்து நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியோரில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா, தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி அந்தோனிசாமி பீட்டர்போல் போட்டிப் பரீட்சையிலும் நேர்முகப் தேர்விலும் சித்தியடைந்து நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மத்திய மாகாணத்தைச் சேர்ந்த இவர், தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்பக் கல்வியை வட்டக்கொடை தமிழ் வித்தியாலத்திலும், இடைநிலை மற்றும் உயர்கல்வியை தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றார். ஆசிரியராக பணியாற்றி பின்னர் சட்டக்கல்வியைத் தொடர்ந்த இவர், 2010 ஆம் ஆண்டில் சட்டத்தரணியானார். பல்வேறு துறைகளில் தன்னை வளர்த்துக் கொண்டதுடன் சட்டத்தரணியாகவும் செயற்பட்டார். மலையக சமூகத்திலிருந்து சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதியாக தெரிவாகும் தொகை மிக அரிதாக இருப்பினும் இவ்வாறான உயர் பதவிகள் எமது சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்.

நீதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்ட அந்தோனிசாமி பீட்டர்போல் அவர்ளுக்கு தலவாக்கலை ஸ்கொலஸ் கல்வியகத்தின் ஆசிரியர்கள் மற்றும் சட்டத்தரணி என். பார்த்தீபன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்தோனிசாமி பீட்டர்போல், மலையக சமூகத்திலிருந்து சிறுபான்மை இனத்தவர்கள் நீதிபதி நியமனங்கள் கிடைப்பது மிக குறைவாகவே உள்ளது. இவ்வாறான பதவிகளை எமது தலைமுறையினரும் வகிக்க வேண்டும். எனவே, இது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும். மலையக சமூகத்தினர் கல்வித்துறையில் முன்னேறி இவ்வாறான பாரிய பதவி உயர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் கல்வித் துறையில் முன்னேறினால் மாத்திரமே இத்தகைய வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும். நாம் கல்வித்துறை சார்ந்த சமூகமாக எம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உருவாகும்போதுதான் உயர் பதவிகளுக்கான வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.