வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 
சுமந்திரனும் தமிழரசுக் கட்சியும்

சுமந்திரனும் தமிழரசுக் கட்சியும்

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சுமந்திரனுக்கு எதிரான ஒரு புயல் சில இடங்களில் வீசிக்கொண்டிருக்கிறது. இந்தப் புயலைத் “தமிழ்த்தேசியத் தீவிரவாதப் புயல்” என்று குறிப்பிடலாம். முன்பு, சுமந்திரன் வெளிநாடுகளுக்குப் போனால், இது அங்கே மையம் கொண்டு வந்தது. இப்போது இங்கே, நாட்டில் சுமந்திரன் கலந்து கொள்கிற பொது வைபவங்களிலும் கூட மெல்ல மெல்ல இந்தப் புயல் சிறியதாகவும் பெரியதாகவும் வீச முயற்சிக்கிறது.

இது எதற்காக? இன்னும் சற்று அழுத்தமாகச் சொன்னால், சுமந்திரன் எதற்காக குறி வைத்துத் தாக்கப்படுகிறார்?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீதான அதிருப்தியே இதற்கான அடிப்படைக்காரணமாகும். அப்படியானால், கூட்டமைப்பில் உள்ள ஏனையவர்கள் இருக்கும்போது, அவர்களையெல்லாம் விட்டு விட்டு, சுமந்திரனின் மீது எதற்காக இந்தக் குறிவைப்பு நிகழ்கிறது?

இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு. ஒன்று கூட்டமைப்பின் மீதான அதிருப்தி. இரண்டாவது, கூட்டமைப்பின் மைய இடத்தில், எதையும் தீர்மானிக்கும் அதிகாரத்தோடு சுமந்திரன் இருக்கிறார் என்பது. இதைச் சற்று விளக்கமாகவும் அழுத்தமாகவும் சொல்வதாக இருந்தால், கூட்டமைப்பு என்ற இயந்திரத்தை இழுத்துக்கொண்டோ நகர்த்திக் கொண்டோ போகிறவராக இன்று சுமந்திரனே உள்ளார். அரசாங்கத்துடனான தொடர்பு தொடக்கம், சர்வதேசத் தொடர்புகள் மற்றும் உள் – வெளி விவகாரங்களைக் கையாள்வது வரையில் அனைத்துக்கும் சுமந்திரனே பொறுப்பாக இருக்கிறார். எனவே, எல்லாக் கற்களும் அவரை நோக்கியே எறியப்படுகின்றன. எல்லோருடைய பாய்ச்சலும் அவர் மீதே குறியாக இருக்கிறது.

அப்படியென்றால், சுமந்திரன் இப்போது ஒரு சுமைதாங்கியா?

நிச்சயமாக, அப்படித்தான் சொல்ல வேணும். கூட்டமைப்பின் மீதான அத்தனை அதிருப்திகளையும் கோபங்களையும் தனியொருவராக நின்றே எதிர்கொள்ள வேண்டிய நிலையில் சுமந்திரன் மட்டுமே உள்ளார். எல்லாப் பாத்திரங்களையும் அவரே ஏற்பதால் எல்லாக் கல்லெறிகளையும் அவர் ஏற்கத்தான் வேணும். அதையிட்டு அவருடைய சகபாடிகள் குதூகலிக்கிறார்கள். உள்ளுர ரசிக்கிறார்கள். சில சகபாடிகள் சுமந்திரனுக்கான எதிர்ப்பாளர்களையே உருவாக்குகிறார்கள், தூண்டுகிறார்கள். எதிர்ப்போரை உற்சாகப்படுத்துகிறார்கள்.

இது ஏன்? எல்லாமே அரசியல்தான். அரசியலுக்காகத்தான். மக்களுடைய மீட்சிக்கான, விடுதலைக்கான அரசியலுக்காகவா? என்றால், நிச்சயமாக இல்லை. அவரவர் தத்தம் நலனுக்காகவும் முதன்மைக்காகவும் செய்கின்ற காரியங்கள் இவை. அதாவது உள்குத்துகள். இதற்குக் காரணங்களும் உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகளின் கூட்டு என்று சொல்லப்பட்டாலும் நடைமுறையில் அது தமிழரசுக்கட்சியின் மேலாதிக்கத்தின் கீழ் இருக்கும் ஒரு அமைப்பே. இதொன்றும் இரகசியமான சங்கதியல்ல. கட்சி என்ற தோற்றம் காட்டுகின்ற கட்சியல்லாத ஓரமைப்பு.

இந்த நிலைமைக்கு எதிராக நீண்டகாலமாகவே கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகிறது. சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேணும் என்று போர்க்கொடியே தூக்கியிருக்கிறார். இருந்தும் சம்பந்தன் தன்னுடைய பிடியை விட்டுக்கொடுக்கவில்லை. மட்டுமல்ல, சுரேசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்க வேண்டியவர், சுரேசுடன் இணைந்து கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேணும். அதனுடைய கட்டமைப்பை ஜனநாயகமயப்படுத்தியிருக்க வேணும் என்று போராடியிருக்க வேண்டியவர் செல்வம் அடைக்கலநாதன்.

ஆனால், செல்வமும் ரெலோவும் அதைச் செய்யவில்லை. இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்ட சம்பந்தன், தமிழரசுக்கட்சியை பலமாக்கினார். உதவியாகச் சுமந்திரனை வைத்துக் கொண்டார்.

இவ்வளவுக்கும் தமிழரசுக்கட்சியையும் விட, ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஏனைய கட்சிகள் கூடுதலான தியாகங்களைச் செய்தவை. போர்க்களத்தில் ஏதோ ஒரு வகையில் குறிப்பிட்ட காலமளவுக்காவது பங்காற்றியிருந்தவை. அவற்றின் மீதான குற்றச்சாட்டுகளும் களங்கங்களும் இருந்தாலும் தமிழரசுக்கட்சிக்கும் அப்பாலான செயற்றின் மிக்க அமைப்புகள் அவை.

மட்டுமல்ல, தமிழ் அரசியல் பரப்பில், சுரேசுக்கும் சித்தார்த்தனுக்கும் செல்வம் அடைக்கலநாதனுக்கும் முக்கியத்துவம் உண்டு. அதேவேளை சுமந்திரனையும் விட குற்றங்களிலும் பழிகளிலும் அதிக சுமையுள்ளவர்கள் இவர்கள் என்பதையும் இங்கே மறக்காமல் குறிப்பிட வேணும். ஆகவேதான் சுமந்திரனுடைய முன்னிலையை இவர்கள் விரும்பவில்லை.

இதனால், முதன்மைப் பாத்திரத்தை ஏற்கும் தமிழரசுக்கட்சியினரை மக்களின் எதிர்ப்பைச் சந்திக்கும் தரப்பாக இவர்கள் மாற்றி வருகிறார்கள். அதை வெளிப்படையாகச் செய்யாமல் நாசுக்காகச் செய்கிறார்கள். அதில் முதல் வரிசையில் தாக்கக்கூடியவராக சுமந்திரனே இருக்கிறார்.

ஆனாலும் சுமந்திரனுக்கும் அப்பாலும் இந்தத் தாக்குதல் சம்பந்தன், மாவை வரையில் நடந்து கொண்டிருப்பதையும் நாம் கவனிக்கலாம்.

இதில் சில உச்சக்கட்டங்கள் இடம்பெற்றதுமுண்டு. குறிப்பாக பிரித்தானியப் பிரதமர் டேவிற் கமெரூன் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தவேளை, அவரைச் சந்திப்பதற்காக வந்திருந்த மக்களைக் கமெரூன் சந்திக்காமல் சென்றபோது, அந்தக் கடுப்பை சம்பந்தனின் மீது காட்டியிருந்தனர் சனங்கள். இன்னொரு சந்தர்ப்பம் மன்னாரில் நடந்தது. “தடம்மாறிப்போகிறதா தமிழ்த்தேசியம்?” என்ற பொருளில் பல தரப்பினரின் பற்கேற்புடன் நடந்த நிகழ்விலும் இதை ஒத்த ஓர் எதிர்ப்பலை சம்பந்தனுக்கு எதிராக உருவாக்கப்பட்டது.

இதைப்போல இன்னும் சில சம்பவங்கள் உண்டு. இவையெல்லாம் முகத்துக்கு நேராகவே சம்பந்தனையும் தமிழரசுக்கட்சியையும் எதிர்க்கின்ற சமாச்சாரங்கள்.

இப்படி இந்த எதிர்ப்பு அலை வளர்ந்து இப்பொழுது தமிழரசுக்கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவையும் தாக்கத் தொடங்கியிருக்கிறது. பொதுவாகவே மாவை எப்போதும் தீவிர அரச எதிர்ப்பாளராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ஒருவர். கூடவே தமிழ்த்தேசியத்தை தீவிர நிலையில் பேசும் நபரும் கூட. இதனால் தமிழ்த்தேசியவாதிகள் அநேகமாக மாவையின் மீது குற்றச்சாட்டுகளைப் பகிரங்கமாக முன்வைப்பதில்லை. இருந்தும் இதெல்லாம் இனியும் சரிப்பட்டு வராது என்கிற மாதிரி, மாவையைச் சுற்றியும் புயலடிக்கத் தொடங்கி விட்டது. மாவையின் மீதும் கேள்விக்கணைகளை அதிருப்தியாளர்கள் எறியத்தொடங்கி விட்டனர். பிரான்ஸில் நடந்த எதிர்ப்பு நடவடிக்கையும் வவுனியாவில் கடந்த கிழமை நடந்த கேள்வி எழுப்பிய நிகழ்ச்சியும் இதையே காட்டுகின்றன.

ஆகவே, தமிழரசுக்கட்சியை இந்த எதிர்ப்புப் புயல் மெல்ல மெல்லத் தாக்கி வருகிறது. இது தமிழரசுக்கட்சி எதிர்பார்த்திராத ஒரு நிகழ்ச்சி. ஏனைய கட்சிகளை விட, அவற்றை மெல்ல மெல்ல ஓரங்கட்டி விட்டுத் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளவே தமிழரசுக்கட்சி முயன்று வந்தது. அதற்கான வியூகங்களையும் அது வகுத்திருந்தது. அடுத்து வரவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்துப்போட்டியிடவே விரும்புகிறது என அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பல இடங்களிலும் குறிப்பிட்டும் வந்தனர். அந்த அளவுக்குத் தமிழரசுக்கட்சிக்குச் செல்வாக்கு உண்டென்பதும் அதை முதன்மைப்படுத்திக் கொள்ள வேணும் என்பதும் அவர்களுடைய நம்பிக்கையும் நோக்குமாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை அவ்வாறில்லை. தமிழரசுக்கட்சி பலவீனமடைந்து செல்லும் நிலையே காணப்படுகிறது. இதனால்தான் அதனுடைய தலைமைகளைக் குறிவைத்துக் கேள்விகள் எழுப்பப்படுவதும் அதனுடைய பலவீனங்களை அம்பலப்படுத்துவதும் நடக்கின்றன. இதனை உணர்ந்துதானோ என்னவோ தெரியவில்லை. முதலமைச்சர் விக்கினேஸ்வரன், ஒரு தடவை குறிப்பிடும்போது தான் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டேனே தவிர, தமிழரசுக்கட்சியின் சார்பாக நிறுத்தப்படவில்லை என்று கூறியிருந்தார். அதனால் தமிழரசுக்கட்சி தன்னைக் கட்டுப்படுத்தவும் முடியாது. அதைப்போல, தமிழரசுக்கட்சியின் குறைபாடுகளுக்கெல்லாம் தான் பொறுப்பாளியும் அல்ல எனவும் விக்கினேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

தமிழரசுக்கட்சிக்காகச் சுமந்திரன் ஒரு வகையில் தியாகம் செய்கிறார் எனலாம். தமிழரசுக்கட்சியின் ஏனைய தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மதில் மேல் பூனைகளாக பதுங்கிக் கொண்டிருக்கின்றனர். இதில் ஒரு சிலர் தமிழ் மக்கள் பேரவையோடு உறவு கொண்டு ஒரு காலை அங்கும் வைத்துள்ளதையும் இங்கே குறிப்பிடலாம்.

இதேவேளை சனங்களைப்பொறுத்தவரையில் அவர்கள் இதை தமிழரசுக்கட்சியின் மீதான எதிர்ப்பாகக் கருதுகின்றனரா என்பது இன்னொரு கேள்வியாக உள்ளது. அவர்களைப்பொறுத்தவரையில், இந்த எதிர்ப்பலைகள் எல்லாம் கூட்டமைப்பின் மீதான எதிர்ப்பலைகள் என்ற புரிதலாகவே உண்டு. “கூட்டமைப்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யவில்லை. பதிலாக அரசாங்கத்துடன் நெருக்கத்தை மட்டும் பேணிக்கொள்கிறது. சனங்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்காமல், அவற்றுக்குரிய தீர்வுகளைக் காணாமல், சனங்களின் நெருக்கடிகளைத் தணிக்காமல், எதற்காக அரசாங்கத்துடன் ஒட்டி உறவாட வேண்டும்?” என்பதே சனங்களுடைய கோபம். இதையே அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

சரி, இதற்கெல்லாம் பதிலாக சுமந்திரனே சொல்வதைப்போல, சில மாதங்களுக்குள் ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுத்தால், அப்போது இந்த எதிர்ப்பலைகளை எல்லாம் வாபஸ் வாங்கிக் கொண்டு, சுமந்திரனுக்கு பொற்கிளியைக் கொடுக்கவா போகிறார்கள்? தமிழ்த்தேசிய அரசியல் என்பது எப்போதும் இப்படித்தான். சுய சிந்தனைக்கும் விசாரணைகளுக்கும் உட்படாதது. அது உணர்ச்சி வேகத்தில் செலுத்தப்படும் ஒரு விசைப்படகு. அதனால்தான் அது எப்போதும் தடம்புரண்டு கொண்டிருக்கிறது.

உண்மையில் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீதான அல்லது தமிழரசுக்கட்சி மீதான அதிருப்திக்கும் கோபத்துக்கும் காரணம், அது வெளிப்படையாக எதையும் பேசாமல், உள்ளே எதையோ செய்து கொண்டிருக்கிறது. அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறது? என்ற கேள்வியே. அத்துடன், அரசாங்கத்தை எதிர்க்காமல் அதைப் பாதுகாக்கும் வகையில் மௌனம் காக்கிறது என்ற ஒரு வகையான ஓருணர்வுமே. இத்தகைய உணர்வைச் சனங்களுக்குக் கொடுத்திருந்ததும் தமிழரசுக்கட்சியும் கூட்டமைப்புமே. அதாவது, எதிர்ப்பு அரசியல் மனோபாவத்தை வளர்த்ததும் எதையும் பகிரங்கமாகவே சொல்ல வேணும் என்ற பாரம்பரியத்தைப் பழக்கியதும் இவையே. இப்போது தாம் வளர்த்த பாராம்பரியத்துக்கே தமது தலையைக் கொடுக்க வேண்டி வந்திருக்கிறது என்பதே காலமளித்த பரிசும் தண்டனையும். இதனுடைய முதல் இலக்கே சுமந்திரன்.

வென்றால் வெற்றி. தோற்றால் பலி என்ற நிலையில் இன்று சுமந்திரனும் தமிழரசுக்கட்சியும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.