வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 

மொ சூலில் ஆரம்பித்து சூலில் முடியும் ஐ.எஸ்

மொ சூலில் ஆரம்பித்து சூலில் முடியும் ஐ.எஸ்

“உலகெங்கும் இருக்கும் முஸ்லிம்களே! நல்ல செய்தியொன்றை கட்டியம் கூறுகிறேன். உங்களுக்கு கண்ணியம், வலிமை, உரிமைகள் மற்றும் தலைமையை திரும்பக் கொண்டுவரும் உங்களுக்கான தேசம் மற்றும் கலிபத் நிறுவப்பட்டது....”

அபூ பக்கர் அல் பக்தாதி 2014 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் அறிவித்த கலிபத் பிரகடனம் ஈராக்கையும் சிரியாவையும் புரட்டிப் போட்டது. பக்தாதியின் அறிவிப்பை ஒரு பிதற்றல் என்று உலகமே முடிவுகட்டியபோதும் இந்த ஆளுக்கு இப்படி அறிவிக்க என்ன தைரியம் என்ற கேள்வி பெரிதாக எழுப்பப்பட்டது.

வேறு ஒன்றும் இல்லை, மொசூல் நகரம் கிடைத்தது என்ற தெனாவட்டுத் தான் பக்தாதையும் அவரது ஐ.எஸ் குழுவையும் இப்படி எல்லாம் யோசிக்கத் வைத்தது.

ஐ.எஸ்ஸின் திருப்புமுனை எங்கே தொடங்கியது என்று பார்த்தால் சந்தேகம் இல்லாமல் அது மொசூலில் தான் ஆரம்பித்தது. 2014 ஆம் ஆண்டு ஜுன் 4 ஆம் திகதி வெறுமனே 1,500 ஐ.எஸ் ஆயுததாரிகள் மொசூலில் தாக்குதலை ஆரம்பித்தார்கள். அப்போது அந்த பிரமாண்ட நகரிலே கிட்டத்தட்ட 30,000 ஈராக் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தார்கள். இருந்ததற்கு என்ன பயன் ஐ.எஸ் வருகிறது என்று கேட்ட மாத்திரத்தில் அரைவாசி இராணுவத்தினர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ஓட்டம்பிடித்தனர்.

மற்ற பாதிப்பேருக்கும் ஆறு நாட்கள் தான் தாக்குப்பிடிக்க முடிந்தது. ஜுன் 10 ஆம் திகதியாகும்போது ஒட்டுமொத்த மொசூலும் ஐ.எஸ் வசமானது. ஒருவாரம் கழித்து மொசூல் பெரிய பள்ளிவாசலிலே கறுப்பு ஆடையோடு தோன்றிய பக்தாதி கலிபத்தை அறிவித்தார். அதாவது இன்று முதல் தான் உலகெங்கும் உள்ள முஸ்லிம்களின் ஏக தலைவனாம்.

ஈராக்கின் வடக்கு மாகாணமான நின்வேஹ்வின் தலைநகர்தான் இந்த மொசூல். அதாவது பக்தாதிற்கு அடுத்து ஈராக்கின் மிகப்பெரிய நகரம் இதுதான். சிரியாவின் எல்லையை ஒட்டி இருப்பதால் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரதான போக்குவரத்தும் இந்த மொசூலில் தங்கி இருக்கிறது. அதுபோக பிரதான எண்ணெய் வயல்கள், துருக்கி வரை செல்லும் எண்ணெய் குழாய்கள் என்று ஏகப்பட்ட லாபங்கள் மொசூலை ஒட்டி இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலே, மொசூலில் இருக்கும் ஜனங்கள் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது. ஐ.எஸ் காலடி வைக்கும்வரை அங்கு இரண்டு மில்லியனுக்கும் அதிக மக்கள் வாழ்ந்தார்கள். ஐ.எஸ் வந்து ஒரு சில தினங்களுக்குள் ஆளைவிட்டால் போதும் என்று கால்பங்கிற்கும் அதிகமானவர்கள் தப்பி ஓடி விட்டார்கள்.

என்றாலும் ஒன்றரை மில்லியன் மக்கள் இன்றும் ஐ.எஸ்ஸின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் தரும் வரிப்பணம் போதுமானது பெரும் நிலத்தை ஓட்டிச்செல்ல.

ஐ.எஸ்ஸுக்கு பயந்து ஈராக் இராணுவம் நகரை விட்டு ஓடும்போதும் ஆயுதங்களை விட்டுவிட்டுத்தான் ஓட்டம்பிடித்தார்கள். அந்த ஆயுதங்கள் எல்லாம் ஐ.எஸ்ஸுக்கு தானமாக கிடைத்தது. நகரின் மத்திய வங்கியில் 500 மில்லியன் டொலர் பணம் சுளையாக ஐ.எஸ்ஸுக்கு கிடைத்தது.

இத்தனையும் இருக்கும்போது ஐ.எஸ் கலிபத்தை அறிவிக்க பயப்படுவானேன்.

மறுபக்கம் மொசூல் தோல்வியை பார்த்து ஈராக் அரசு மட்டுமல்ல அதனை வளர்த்துவிட்ட அமெரிக்காவும் தலைகுனிந்தது. ரோசம்பிடித்த ஈராக் மீண்டும் தனது இராணுவத்தை சரிக்கட்டும் வேலையை பார்த்ததோடு அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் உதவிக்காக தனது இராணுவத்தையும் அனுப்பிவைத்தது.

ஈராக்கிய இராணுவம், குர்திஷ் பெஷ்மார்கா படையினர், சுன்னி பழங்குடி போராளிகள் மற்றும் ஷியா போராளிகள் என்று எல்லாமாக சேர்த்து கிட்டத்தட்ட 30,000 துருப்பினர் ஒன்று திரட்டப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் வான் தாக்குதல் நடத்த, அதன் இராணுவத்தினர் தரைவழியாக யுத்தத்தை எப்படி செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்குகின்றனர். இது ஒரு பாரிய யுத்த நடவடிக்கை. எல்லாம் மொசூலை கைப்பற்றத்தான்.

“டயெஷிடம் (ஐ.எஸ்) இருந்து உங்களை விடுவிக்கும் வீரப் போர் ஆரம்பிக்கப்பட்டதை இன்று நான் பிரகடனம் செய்கிறேன்.” ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபதி கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி விடியற்காலையில் தொலைக்காட்சி முன் தோன்றி யுத்த பிரகடனத்தை அறிவித்தார். 2003 ஆம் ஆண்டு ஈராக்கின் அமெரிக்க படையெடுப்புக்குப் பின்னர், பிராந்தியத்தில் இடம்பெறும் மிகப்பெரிய யுத்தம் இதுதான்.

ஐ.எஸ்ஸின் தலையெழுத்தை மாற்றப்போகும் யுத்தம் என்றால் சும்மாவா! மொசூல் வீழ்ந்துவிட்டால் ஐ.எஸ் ஈராக்கில் ‘அட்ரெஸ்’ இல்லாமல் போய்விடும். பின்னர் சிரியாவிலும் அதன் சண்டித்தனங்கள் செல்லாமல்போய்விடும்.

மொசூல் நகரில் இருந்து கிட்டத்தட்ட 60 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் கய்யராஹ் விமானத் தளத்தில் இருந்து தான் ஈராக் இராணுவம் மொசூல் மீதான படை நடவடிக்கையை ஆரம்பித்தது. யுத்தம் ஆரம்பித்த கடந்த ஒருவார காலத்திற்குள் மொசூலைச் சுற்றியிருக்கும் பல கிராமப் பகுதிகளை ஈராக்கிய படை விடுவித்திருக்கிறது. மறுபுறம் கிழக்குப் பக்கமாக குர்திஷ் படையினர் முன்னேறுகிறார்கள்.

என்றாலும் ஐ.எஸ் தனது வழக்கமான பணியில் பதில் தாக்குதல்களை நடத்தாமல் இல்லை. அங்காங்கே தற்கொலை தாக்குதல்கள், முன்னேற முடியாமல் அகழி தோண்டுவது, எண்ணெய் கிணறுகளுக்கு தீ வைப்பது என்று ஐ.எஸ்ஸும் தன்னால் முடிந்தவரை போராடுகிறது.

என்றாலும் ஐ.எஸ்ஸின் யுத்தத்தில் பெரிதாக வீரியம் இல்லை என்பது பார்க்க தெரிகிறது. உண்மையில் 30,000 படையினரை சமாளிக்கும் அளவுக்கு ஐ.எஸ்ஸிடம் ஆள் பலமும் இல்லை. மொசூல் நகரை காப்பற்ற மிஞ்சிப்போனால் ஐ.எஸ் வசம் 4,500 ஆட்கள் இருப்பார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்றால் பட்டாசு வெடித்தாலும் பயப்படும் ஈராக் படையை துரத்த இந்த ஆட்கள் போதுமாக இருக்கும். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

எப்படி ஈராக் படை மொசூலில் இருந்து தப்பி ஓடியதோ அப்படியே ஐ.எஸ்ஸும் ஓட்டம் பிடிக்கும் நிலைமை இருக்கிறது. ஈராக்கில் தனது கடைசி துருப்புச் சீட்டு என்பதால் மொசூலை அத்தனை லேசில் ஐ.எஸ் கைவிட்டுச் செல்லும் என்றும் எதிர்பார்க்க முடியவில்லை.

மறுபக்கம் ஈராக் கூட்டுப்படைக்கு மொசூலை கைப்பற்றுவது கைக்கெட்டிய தூரம். அதற்கு எத்தனை காலம் எடுத்துக் கொள்ளும் என்பதுதான் அவர்களுக்கு இன்றிருக்கும் பெரிய கேள்வி.

இதற்கு முன்னர் மன்பிஜ், ரமடி என்று பல நகரங்களில் ஐ.எஸ்ஸை துரத்திவிட்டே ஈராக் படை இப்போது மொசூலில் கைவைத்திருக்கிறது. என்றாலும் முந்தைய நகரங்களோடு மொசூலை முழுமையாக ஒப்பிட முடியாது. ஏனென்றால் மொசூல் என்பது குறுக்குச் சந்துகள், குறுகலான வீதிகள், அடுக்குமாடி குறியிருப்புகள் என்று சன நெரிசல் கொண்ட ஒரு நகரம்.

இங்கே ஐ.எஸ் கொடுமைகளுக்கு மத்தியிலும் ஒன்றரை மில்லியன் மக்கள் தொடர்ந்து வாழ்வதாக குத்துமதிப்பான கணிப்பு. ஈராக் படைக்கு மொசூலைச் சூழ யுத்தம் செய்வது இலகுவாக இருக்கலாம் மொசூலுக்குள் எப்படி யுத்தம் இருக்கும் என்பதுதான் ஒருத்தருக்கும் விடை தெரியாத கேள்வி.

குறிப்பாக அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பது எப்படி என்று ஆளாலுக்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். ஐ.நா அகதிகளுக்கான நிலையம் ஏற்கனவே நகரில் இருந்து தப்பிவரும் மக்களுக்காக ஊரைச் சுற்றி தற்காலிக அகதி முகாம்களை அமைத்து வருகிறது. இந்த யுத்தத்தால் ஒரு மில்லியன் பேர் நகரை விட்டு வெளியேறி விடுவார்கள் என்பது ஐ.நாவின் கணக்கும்.

இந்த இலக்கை வைத்துத் தான் ஐ.நா அகதிகளுக்கான நிலையம் அகதி முகாம்கள் மற்றும் ஏனைய உதவிகளை ஏற்பாடு செய்து வருகிறது. என்றாலும் இன்னும் பணம் போதாமல் இருப்பதாக அது உலகெங்கும் பஞ்சம் பேசுகிறது.

மொசூல் யுத்தம் ஆரம்பிக்கப்படும் என்பது ஓர் ஆண்டுக்கு முன்னரே தெரியும் என்பதால் ஐ.நாவினால் முன்கூட்டியே சுமார் 140 மில்லியன் டொலர்களை சேகரிக்க முடித்தது. ஆனால் அதன் மொத்த இலக்கு இதன் இரட்டிப்பான தொகை. மொசூல் யுத்தத்தின் பயங்கரம் அங்கிருந்து மக்கள் வெளியேறும் அளவை பொறுத்திருக்கிறது.

ஆனால் ஈராக் இராணுவம் சொல்லும் தீர்வு வேறுமாதிரியானது. யுத்தம் நடக்கும்போது எவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக உள்ளே அடைந்து கிடக்குமாறு அறிவுறுத்துகிறது. மக்கள் வெளியே கூட்டமாக போகும்போது சண்டைக்கு மத்தியில் சிக்கிக் கொள்ளவோ தவறாக இலக்காகவோ அல்லது ஐ.எஸ்ஸின் தாக்குதலுக்கு இலக்காகவோ வாய்ப்பு அதிகம்.

இந்த கூற்று நியாயமாக இருந்தாலும் அதிலே மற்றொரு சிக்கலும் உண்டு. ஈராக்கிய கூட்டுப்படைகளை தடுக்க ஐ.எஸ் கடைசி உத்தியாக நகரில் இருக்கும் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் யுத்தத்தை மேலும் சிக்கலாக்கிவிடும்.

மொசூல் யுத்தத்தில் மற்றொரு சிக்கலான விவகாரம் ஷியா, சுன்னி பிரச்சினை. மொசூல் என்பது சுன்னி பெரும்பான்மை நகரம். அங்கே ஷியா தலைமை அரசின் இராணுவம் யுத்தம் செய்வது கயிற்றின் மேல் நடக்கும் வேலை. கவனமாக கையாளவிட்டால் எல்லாம் சொதப்பிவிடும்.

மொசூலில் ஐ.எஸ் இத்தனை காலம் ஆட்சி புரிய முடியுமானது அது சுன்னி என்ற அடையாளத்தை பயன்படுத்தியதாகும். அதாவது தெரிந்த பேயே மேல், என்ற நிலைமையில் உள்ளூர் மக்கள் ஐ.எஸ்ஸை சகித்துக் கொண்டார்கள் என்பது இதன் மற்றொரு அர்த்தம்.

கடந்த காலங்களில் ஈராக் இராணுவம் தனது யுத்தங்களில் ஈரான் ஷியா போராளிகளை ஏகத்திற்கு பயன்படுத்தியது. இதனால் ரமடி போன்ற நகரங்களில் அது ஷியா, சுன்னி பிரச்சினையாகவே மாறியது. எனவே மொசூலில் ஷியா போராளிகளை ஒதுக்கி வைத்தால் தான் ஈராக் அரசால் முழுமையாக யுத்த வெற்றியை கொண்டாட முடியும்.

மொசூலுக்குள் ஈராக் இராணுவம் மாத்திரமே நுழையும் என்று பிரதமர் அபதி ஏற்கனவே உறுதி அளித்திருக்கிறார். அது எத்தனைக்கு சாத்தியமாகும் என்பதை போகப்போகத்தான் பார்க்க முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலே மொசூ லில் இருந்து ஐ.எஸ்ஸை விரட்டிவிட்டாலும் அதற்கு பின்னரான நகரின் நிலைமை எப்படி இருக்கப் போகிறது என்ற கேள்விக்கு சரியான பதிலை வைத்துக் கொண்டல்ல ஈராக் இராணுவம் இந்த படை நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறது.

குறிப்பாக மொசூல் முதற்கொண்டு ஈராக்கின் சுன்னி தரப்பினருக்கான அரசில் தீர்வு பாற்றி யாரும் கரிசனை காட்டுவதாக இல்லை. இது ஐ.எஸ் இல்லாவிட்டால் மற்றொரு குழு என்ற தீர்வுக்கே வழி ஏற்படுத்தும்.

ஈராக் ஆகட்டும், குர்திஷ்கள் ஆகட்டும், அமெரிக்காவாகக் கூட இருக்கட்டும் மொசூல் யுத்தம் என்பது மற்றொரு யுத்தம் என்ற தோரணையில் சண்டைக்குப் போனால் அதில் நிச்சமாக வெற்றிபெற முடியாது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.