வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 
இலங்கையை அரவணைக்கும் சர்வதேச கரங்கள்

இலங்கையை அரவணைக்கும் சர்வதேச கரங்கள்

ஒரு காலத்தில் இலங்கையை வேம்பாக வெறுத்தொதுக்கிய மேற்குலகம், இன்று அன்புக்கரம்கொண்டு அரவணைக்கத் தொடங்கியிருக்கிறது. அது மட்டுமன்றிப் பிராந்தியத்தின் வல்லரசுகளும் தமது நல்லெண்ணத்தையும் நட்புறவையும் வலுப்படுத்திக்ெகாள்ள முன்வந்துள்ளன.`

அதேநேரம், இலங்கையைச் சிங்கள அரசாங்கம் என்று பொது எதிரியாகக் கருதி வந்த தமிழினமும் இன்று அதன் நிலைப்பாட்டினை மாற்றிக்ெகாண்டிருக்கிறது. உள்ளூரில் தம்முடன் முரண்பட்டு வந்த ஒரு தேசிய இனத்தையும் சர்வதேச ரீதியில் தம்மை அந்நியப்படுத்தி வந்த நாடுகளையும் வெற்றிகொண்டிருக்கின்றமை நல்லாட்சி அரசாங்கம் மிகக் குறுகிய காலத்தில் அடைந்துள்ள மாபெரும் சாதனை என்றே சொல்ல வேண்டும்.

கடந்த 2015ஆம் ஆண்டு வரை படிப்படியாகச் சர்வதேசத்தின் அழுங்குப் பிடிக்குள் இறுகி வந்த இலங்கை, அவ்வாண்டின் ஜனவரி எட்டாந்திகதிக்குப் பின்னரே மூச்சுக்காற்றை முழுவதும் உள்ளிழுத்துச் சுவாசிக்கத் தொடங்கியது. நாடென்ற என்ற ரீதியில், இலங்கை சர்வதேசத்தின் பிடிக்குள் இருந்து விடுபட்டதைப்போலவே, நாட்டு மக்களும் இலங்கையின் இரும்புப் பிடிக்குள் இருந்து விடுபட்டனர் என்பதே உண்மை!

இது கடந்து சென்ற வரலாறு என்றாலும், இந்த இடத்தில் குறிப்பிடுவதற்கான தேவை இருக்கிறது. சர்வதேசம், விசேடமாக மேற்குலகம், இலங்கை அரசுடன் முட்டி மோதும் ஒரு முரண்பட்ட ஒரு நிலை தீவிரமடைவதன் மூலமே தங்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என்பது தமிழ் மக்களின் நம்பிக்ைகயாக இருந்தது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பொதுநலவாய அமைப்புகளின் மாநாட்டுக்கு இலங்கை வந்திருந்தபோது, நிகழ்த்திய உரை, தமிழர் பிரதேசங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தபோது அதனை வெளிப்படையாக உணர முடிந்தது.

பொதுவாக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பொருத்தப்பாடு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்ைகயைவிடவும், அரசியல் செல்நெறியிலேயே அதிகம் யதார்த்தமாக்கப்பட்டிருக்கிறது. அது நாடென்றாலும் சரி இனக் குழுமம் என்றாலும் சரி, அரசுகளும் பிரஜைகளும் இந்தச் சிந்தனையைத்தான் கொண்டிருந்தார்கள். அதனாற்றான், தமக்குப் பொது எதிரியான இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் ெகாண்ட சர்வதேச நாடுகளைத் தமிழர்கள் நேசிக்கத்தொடங்கினர். அந்த நாடுகளின் நெருக்குவாரத்தினால், தமக்குச் சுதந்திரமான ஒரு வாழ்வாதாரம் கிடைக்கும் என்றும் நம்பினார்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வரை இந்த நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் இருந்தார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், காலம் செல்லச்செல்ல இலங்கை அரசு தம்மீதான தப்பபிப்பிராயத்தைப் போக்கிக் ெகாண்டு சர்வதேசத்துடன் நெருங்கிப்பழகும் நிலையை மேம்படுத்திக்ெகாண்டது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முதல் உலகத் தலைவர்கள் பலர் இலங்கை ஜனாதிபதியையும் பிரதமரையும் கைலாகு கொடுத்து வாஞ்சையுடன் வரவேற்கத் தொடங்கினர்.

கடந்த வாரம் தெற்காசிய பிராந்தியத்தின் பல தலைவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய இருதரப்புச் சந்திப்பின்போது இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றுக்ெகாடுக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளனர். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முதலானோர், இலங்கையுடனான நட்புறவை பலப்படுத்திக்ெகாள்ள விருப்பம் தெரிவித்துள்ளதுடன், தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பும் விடுத்துள்ளனர்.

இந்தியாவின் கோவா மாநிலத்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக், பிறிக்ஸ் மாநாடுகளில் பங்கு பற்றிய ஜனாதிபதி அந்த மாநாட்டிற்கு வருகை தந்திருந்த வேறு தெற்காசிய நாடுகளின் தலைவர்களுடனும் முக்கிய சந்திப்புகளை நடத்தி, இலங்கை ஒரு வெறுத்தொதுக்கக்கூடி நாடு அல்ல என்பதைப் புரிய வைத்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் தொடர்பாடலும் அணுகு முறையும்தான் முக்கிய காாரணிகள் என்று உறுதியாகச் சொல்லலாம். ஜனாதிபதியின் எளிமையான போக்கும் வெளிப்படையான பேச்சும் உலகத்தலைவர்களை ஈர்த்திருக்க வேண்டும், ஈர்த்திருக்கிறது. தமக்குத் தலையிடியைக் கொடுக்காமல், தற்போதைய இலங்கைத் தலைவர்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்ெகாள்ளக்கூடியவர்கள் என்ற நம்பிக்ைக அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது எதிர்காலத்தில் தெற்காசிய பிராந்தியத்திற்குத் தலைமைதாங்கக் கூடிய வல்லமை உள்ளவர் என்பதை நிரூபித்துவிட்டு வந்திருக்கிறார். அங்கு அவர் ஆற்றிய உரை சிலாகித்துப்பேசப்பட்டது. நியுசிலாந்து விஜயத்தின்போதும், இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றுக்ெகாள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வந்திருக்கிறார். கடந்த வாரம் பெல்ஜியம் நாட்டுக்கான விஜயத்தின்போது, ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுமை உள்ளிட்ட நலன்களை மீளப்பெறுவதற்கான ஒழுங்குகளைச் செய்திருக்கிறார்.

ஆக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் இலங்கை தொடர்பாக சர்வதேச நாடுகளுக்கு ஏற்பட்டிருந்த நம்பிக்ைகயீனத்தைக் களைவதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வெற்றி கண்டு வருகிறார்கள். இந்தச் சூழல் சிறுபான்மைத் தமிழ் முஸ்லிம் மக்களுக்குச் சாதகமானதா என்பதே இன்று எழுந்துள்ள முக்கியமான கேள்வி. சாதகமான நிலவரமாகக் கருத முடியாது என்பது சர்வதேசமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் கருத்தாகவிருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, பாரிஸ் நகரில் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தபோது, அவரிடம் எழுப்பப்பட்ட ஒரே கேள்வி, "இந்த அரசாங்கத்தை எவ்வாறு நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்வீர்கள்?" என்பதுதான். அதற்கு விளக்கம் அளிப்பதற்கு முன்னரேயே ஒரு களேபரம் ஏற்பட்டு அடங்கியிருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது ஆரம்பத்தில் நம்பிக்ைககொண்டி ருந்தவர்களுக்கு இப்போது சந்தேகம் எழுந்திருக்கின்றது என்பதையே இஃது எடுத்துக்காட்டுகிறது. முன்பெல்லாம் தமிழ் மக்கள் சொல்வதைக் கேட்டு இலங்கை மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்திய அதே நாடுகள், தற்போது இலங்கையின் சாக்குப்போக்குகளை நம்பிக்ெகாண்டு செயற்படுகிறதோ என்ற ஐயப்பாடு தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு இருக்குமென்றால், அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த கால அரசுகளுடைய செயற்பாடுகளின் அனுபவப் பதிவுகள் அவ்வாறான எண்ணத்தை வளர்த்துவிட்டிருக்கலாம்.

இன்னுமோர் முக்கியமான விடயம் யாதெனில், இலங்கை அரசாங்கத்தை தாங்கள் புரிந்துகொண்டதைப்போல், புலம்பெயர் தமிழர்களுக்குப் புரிதல் இல்லை, தெளிவு இல்லை. எனவே, அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பெல்ஜியத்தில் வைத்து நேரடியாகத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்றபோது, பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாகிவிடுமோ என்று ஐமிச்சம் கொள்வது சாதாரண மனித சுபாவத்திற்கும் அப்பாற்பட்ட விடயம் அல்ல என்றும் சொல்ல முடியாது.

இந்நிலையில், கடந்த பத்து நாட்கள் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்ைகயாளர் ரீட்டா ஐசாக் நாதியா, "புதிய அரசு உத்வேகத்தை இழந்துவிடக்கூடாது என்று வலியுறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். இலங்கையின் இனங்களுக்கிடையில் நம்பிக்ைகயீனங்கள் காணப்படுவதைத் தாம் புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், சகல இன மக்களும்ஒன்றிணைய வேண்டும் என்பதை சகலரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

உண்மையைக் கண்டறிதல், நல்லிணக்கம், ஆற்றுப்படுத்தல் என்பவற்றை ஒரே இரவில் மேற்கொள்ள முடியாது என்பது உண்மைதான்.ஆனால், அதற்காக 2015இல் உருவான புதிய அரசாங்கம் தனது உத்வேகத்தை இழந்துவிடக்கூடாது என்பது ரீட்டா அம்மையாரின் கருத்து.

இலங்கையில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு, அரசியல் நோக்கத்தைத் தெளிவாகக் கூறுவதற்காக உறுதிப்பாடான செயற்பாடுகளை முன்னெடுப்பது, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பது, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது, காணாமற்போனவர்களைக் கண்டறிவது, இராணுவ அதிகாரங்களைச் சிவில் அதிகாரிகளிடம் வழங்குவது போன்ற செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம், இலங்கை அரசின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மிகவும் உன்னிப்பாக இருக்கின்றது என்பதையே இஃது எடுத்துக்காட்டுகிறது.

எனவே, சர்வதேச சமூகத்தை வென்றுவிட்டோம் என்ற மெத்தனப்போக்கில் இனியும் அரசாங்கம் செயற்படக்கூடாது என்பதையும் அவ்வாறு செயற்படுவது நல்லாட்சியின் மீதான நம்பிக்ைக வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை, மேற்சொன்ன விடயங்களை எல்லாம் எடுத்த மாத்திரத்தில் நிறைவேற்றிவிட முடியாது என்பதும் உண்மையே. அதனைப் புரிந்துகொண்டுதான், தமிழ் மக்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தி வருகிறார். அதன் காரணமாகவே எழுக தமிழ் பேரணிகூட விமர்சனத்திற்குள்ளாகியிருந்தது. அந்தப் பேரணிக்குக் காரணமும் தமிழ் மக்களுக்கு எழுந்த சந்தேகத்தின் வெளிப்பாடு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். முன்பு சர்வதேச அழுத்தம் இலங்கை மீது பிரயோகிக்கப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு மீண்டுமோர் ஏமாற்றத்தை ஏற்படுத்திவிடாத வகையில் நல்லாட்சி அரசாங்கமும் சர்வதேசமும் நடந்துகொள்ளவேண்டும் என்பதுதான் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்பு. சர்வதேசம் இலங்கையை அரவணைப்ப தென்பது மூன்று தசாப்த காலமாக அல்லலுற்ற மக்களையும் சேர்த்து அரவணைத்துச் செல்வதாக இருக்க வேண்டும். அந்த நிலைமை ஏற்படுவதற்குத் தமிழர்களையும் இந்நாட்டின் பிரஜைகள், இலங்கையர்கள் என்ற நிறைவான மனநிலைக்குக் கொண்டு வரவேண்டியது நல்லாட்சி அரசாங்கத்தின் தலையாய பொறுப்பாக இருக்க வேண்டும். அதனைவிடுத்து, சர்வதேசத்தின் அணைப்பின் கதகதப்பில் இருக்கின்றோம் என்ற அலட்சியப்போக்கு இந்தப் புதிய நல்லாட்சி அரசாங்கத்திற்குக் கிஞ்சித்தும் வந்து விடக்கூடாது என்பது அழுத்தமாக வலியுறுத்தப்பட வேண்டிய ஒன்று.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.