வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 

கல்வி வளர்ச்சியை எதிர்நோக்கும் சப்ரகமுவ மாகாணம்

கல்வி வளர்ச்சியை எதிர்நோக்கும் சப்ரகமுவ மாகாணம்

இ ரத்தினபுரி நகரில் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்புடன் கூடிய தமிழ்ப்பாடசாலையொன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இ.தொ.கா மாகாண சபை உறுப்பினர்களான கணபதி இராமச்சந்திரன், மயில்வாகனம் பாஸ்கரன் இருவரும் கவனம் செலுத்துவதில்லை.

முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஐயவர்தனவினால் உருவாக்கப்பட்ட தற்போதைய அரசியலமைப்பு 1978ஆம் ஆண்டு அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த அரசியலைப்பு இன விகிதாசார தேர்தல் முறையை உள்ளடக்கியதன் பின்னரே நாட்டில் வாழும் சிறுபான்மை இன மக்களான இந்திய வம்சாவளி தமிழர்களும் முஸ்லிம் மக்களும் அவர்களின் இனத்தைச் சார்ந்த பிரதிநிதிகளை பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் ஆகியவற்றில் கூடுதல் எண்ணிக்கையில் தெரிவு செய்யக்கூடியதாக உள்ளது.

தற்போதைய அரசியலமைப்பில் தேர்தல்கள் மாவட்ட அடிப்படையில் நடைபெறுவதனால் தமது பிரதிநிதிகளை நேரடியாகத் தெரிவு செய்து கொள்ளமுடியாத நிலை இருக்கிறது. இன விகிதாசார தேர்தல் முறையை மாற்றி எதிர்காலத்தில் தொகுதிவாரி தேர்தல் முறையும் இன விகிதாசார தேர்தல் முறையும் கலந்த ஒரு தேர்தல் முறையை அமுலுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய விகிதாசார தேர்தல் முறையினால் மக்கள் பயனடைந்துள்ளார்களா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.

சப்ரகமுவ மாகாண சபையில் இந்திய வம்சாவளி தமிழர்கள் இருவர் மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒருவர் இரத்தினபுரி மாவட்டத்தையும் மற்றவர் கேகாலை மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். கடந்த சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகியன இணைந்து மலையக முக்கூட்டணி என்ற பெயரில் களத்தில் இறங்கியதன் பயனாக சப்ரகமுவ மாகாண சபையில் இரத்தினபுரி மாவட்டத்திற்கு ஒரு உறுப்பினரும் கேகாலை மாவட்டத்திற்கு ஒரு உறுப்பினரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

தேர்தல் மேடைகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் இரத்தினபுரி நகரில் சகல வசதிகளையும் கொண்ட க.பொ.த உயர்தரம் வரையில் கற்கக்கூடிய தமிழ் பாடசாலை அமைக்கப்படும் என வாக்குறுதியளித்தார். தேர்தல் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்தபோதிலும் அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இரத்தினபுரி நகரில் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்புடன் கூடிய தமிழ்ப்பாடசாலையொன்று அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இ. தொ. கா மாகாண சபை உறுப்பினர்களான கணபதி இராமச்சந்திரன் மற்றும் மயில்வாகனம் பாஸ்கரன் இருவரும் சப்ரகமுவ மாகாண சபை கூட்டங்களில் கூட பிரஸ்தாபிப்பதில்லை என கூறப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்ட இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற அங்கத்தவரும் ஊடக பிரதி அமைச்சருமான கருணாரத்ன பரணவிதான, இரத்தினபுரி நகரில் மும்மொழி பாடசாலைக்கென காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அக்காணியில் பாடசாலை கட்டப்படும் என குறிப்பிட்டிருந்தார். அக்கருத்தை சப்ரகமுவ மாகாண கல்வி அதிகாரியும் உறுதிப்படுத்தினார். ஆனால் அக்கூட்டத்தில் இவ்விரு உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சப்ரகமுவ மாகாண சபையின் இரத்தினபுரி மாவட்ட ஐ.தே. க உறுப்பினரான யெஹியா எம். இப்ளார் இன, மொழி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சேவையாற்றி வருகிறார். தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் எதிர்கால நலன்கருதி கல்வியில் கூடிய அக்கறை காட்ட வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பெருந்தொகை நிதியை ஒதுக்கியிருக்கிறார். வேறு இனத்தைச் சார்ந்த இப்ளார் இன, மத வேறுபாடின்றி செயற்படும்போது இந்திய வம்சாவளி தமிழர்களின் ஒட்டு மொத்த வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட கணபதி இராமச்சந்திரனும் மயில்வாகனம் பாஸ்கரனும் தங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் மூலம் தம்மை தெரிவு செய்த மக்களின் நலன்களில் கரிசனை காட்டி செயல்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். இங்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். சப்ரகமுவ மாகாணத்தின் தலை நகர் இரத்தினபுரி, உண்மை இதுவாக இருந்தும் கூட இரத்தினபுரி நகரில் இதுவரை முற்றுமுழுதான ஒரு தமிழ்ப்பாடசாலை அமைக்கப்படவில்லை. ஆனால் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பலாங்கொடை நகரில் கனகநாயகம் மத்திய கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் கலை, வர்த்தக, விஞ்ஞானப்பிரிவுகள் நடாத்தப்படுகின்றன. விரைவில் பலாங்கொடை பாரதி சமூக மேம்பாட்டு மன்றத்தின் முயற்சியினால் கணிதம், பௌதிகம், உயிரியல் பாடங்களையும் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்பிக்கக் கூடிய விதத்தில் வெளி மாகாணங்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சப்ரகமுவ மாகாண சபையில் கல்வி அமைச்சரான பானு முனுப்பிரிய கல்லூரியில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தின்போது தெரிவித்திருக்கிறார்.

இன, மத, மொழி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இவர் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சப்ரகமுவ மாகாண சபையின் அனுமதியைப்பெற்று வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து 300 பட்டதாரி ஆசிரியர்களை தமிழ் பாடசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுத்தவர். அவரைப் போன்று தென் மாகாண சபையின் கல்வி அமைச்சரான சந்திய ராஜபக்சவும் வடங்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு முன்பு 300 பட்டதாரி ஆசிரியர்களை தென் மாகாணத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுத்தார்.

மேல் மாகாண சபையில் இரண்டு தமிழ் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவ்விருவரும் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். தமக்கு ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு என்ன செய்கிறார்கள் என்பது மூடு மந்திரமாக உள்ளது. ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஆசிரிய உதவியாளர்கள் பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது, கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஹோமாகம கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஏழு தமிழ் பாடசாலைகளில் இருபது ஆசிரிய பதவி வெற்றிடங்கள் இருந்தபோதும் விண்ணப்பங்கள் கோரப்படவில்லை. இது சம்பந்தமாக குறிப்பிட்ட இரண்டு தமிழ் மாகாண உறுப்பினர்களிடம் முறையிட்ட போதும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த உறுப்பினர்கள் சார்ந்த கட்சியின் தலைவர் புவக்பிட்டிய சீ. சீ. தமிழ் மகா வித்தியாலயத்தில் பல மாதங்களுக்கு முன்பு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இப்பாடசாலை தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்யப்படும் எனவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்தபோதும் இதுவரை எதுவும் நடைபெறவில்லை.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளில் இருபதாயிரம் ஆசிரிய வெற்றிடங்கள் உள்ளதாகவும் அந்த ஆசிரிய வெற்றிடங்களுக்கு கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் சித்தியடைந்தவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து பல மாதங்கள் ஆகியும் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

கல்வி அமைச்சரின் வாக்குறுதியை நிறைவேற்றும்படி தற்போதைய அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி இதுவரை அழுத்தம் கொடுக்கவில்லை. எனவே, தம் இனத்தை சாராத அரசியல்வாதிகள் இன, மொழி, மத வேறுபாடின்றி செயல்படும்போது அவர்களை ஆதரித்து அவர்களுக்கு வாக்குகளை அளித்து அவர்களை வெற்றி பெற வைப்பதை எதிர்வரும் காலங்களில் இந்திய வம்சாவளி தமிழர்கள் குறிக்கோளாக கொள்ளவேண்டும். சொந்தம் சோறுபோடாது. சேவைக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.