வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 
எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் தீபாவளி

எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் தீபாவளி

 நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் தீபாவளி, அதாவது தீபங்களின் வரிசைகள், இந்த ஆசையைக் கேட்டது நரகாசுரன் தான். தான் மரணம் அடையும் தறுவாயில் இந்தத் தினத்தை எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று ஸ்ரீ மஹாவிஷ்ணுவைக் கேட்டுக் கொண்டான். ஆமாம் யார் இந்த நரகாசுரன்?

பூமாதேவியின் அம்சமாக மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்த மகன் தான் நரகாசுரன். ஆரம்பத்தில் அவன் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான், ஆனால் வயது ஆக ஆக அவனது போக்கில் மாற்றம் ஏற்பட்டது, கெட்ட சகவாசத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான். பெரிய மகரிஷி குரு, போன்றவர்களையும் இகழ்ந்தான், எல்லா உலகத்தையும் ஜெயிக்க எண்ணினான், ஆகையால் போருக்குத் தேவையான எல்லாக் கலைகளும் படித்தான். பின் அவன் தாய் எத்தனைச் சொல்லியும் கேளாமல் இளம் பெண்களைத் துன்புறுத்தலானான். எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.

இதற்கு நடுவில் அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்யலானான். பிரம்மாவும் மனம் மகிழ்ந்து காட்சி தந்து, "அன்பனே உன் தவத்திற்கு மெச்சினேன், ஏதாவது வரம் கேள்" என்றார். "நான் சாகக்கூடாது, எனக்குச் சாகா வரம் அருளுங்கள்"

"உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள் அழியத்தான் வேண்டும் அது தர இயலாது ஆகையால் வேறு எதாவது கேள்"

"ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு யார்மூலமாகவும் மரணம் அடையக்கூடாது"

"தந்தேன் நரகா, நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய்" இதைக்கூறி பிரம்மா மறைந்து விட்டார்.

ஆரம்பித்து விட்டது நரகாசுரனின் அட்டகாசம். எல்லா லோகத்தையும் ​ெஜயிக்க ஆவல் கொண்டு முதலில் இந்திர லோகத்தை முற்றுகை இட்டான். பல தேவர்களைச் சிறையில் அடைத்தான். இந்திரன் ஓடி ஒளிந்துக் கொண்டான், மிஞ்சிய சிலர் மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலமையைக் கூறி காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டனர். "கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன்" என்றார் கிருஷ்ணர். ஸ்ரீகிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார். அழிவு காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினால் போல் தான், நரகாசுரன் காது கொடுத்துக் கேட்கவில்லை. போர் ஆரம்பித்தது. கண்ணனுக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார். சத்தியபாம ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள். அவளும் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது. கடும்போர் தொடர்ந்தது. நரகாசுரன் தன் கதை வீசினான், மாயக் கண்ணன் மயங்கி விழுந்தான். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா? எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர், ஆனால் காரணம் இல்லாமல் காரியமா? பூமாதேவியின் அம்சமான சத்திய பாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள் அல்லவா? அவள் கையால் தானே மரணம் ஆக வேண்டும்?

சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்தது பார்த்து கோபத்தில் வீறு கொண்டு எழுந்தாள், "என் கண்ணனுக்கா இந்த நிலை" என்று அவள் மனம் கொதிக்க, அம்பு நரகாசுரன் மேல் சரமாரியாக எய்ய அவனும் கீழே சாய்ந்தான். அவன் கேட்டபடி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான். பின் அவனுக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணு காட்சி அளித்தார். அவனுக்குத் தேவையான வரனைக் கொடுப்பதாகச் சொன்னார், நரகாசுரனோ தான் இறக்கும் இந்நாளை எல்லோரும் காலையில் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, பின் தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

இதுவே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். நம் மனதில் இருக்கும் இருளை அகற்றி ஞான ஒளியை ஏற்றி வைப்போம்.

தீபாவளி வந்தாலே மனதில் ஒரு குதூகலம், தீபஒளி, தீபங்களின் வரிசை, புது உடைகள், இனிப்புகள், கூடவே பட்டாசுகள் என்று நம் மனக் கண் முன்னால் பல காட்சிகள் வந்து விடுகின்றன. குஜராத்தில் இது புது வருடமாகக் கொண்டாடப்படுகிறது. வீட்டை முதலிலிருந்தே சுத்தப்படுத்தி, வர்ணங்கள் பூசி, இலட்சுமியை வரவேற்கத் தயார் செய்து கொள்கிறார்கள். மாவிலைகள் கட்டப்படுகின்றன, கணபதியும் இலட்சுமியும் சேர்ந்து அமர, பூஜை செய்யப்படுகிறது, வியாபாரிகள் தங்கள் புதுக் கணக்கை ஆரம்பிக்கின்றனர், அன்று கொடுக்கல் வாங்கல் இருப்பதில்லை, பல இனிப்புக்கள் இலட்சுமிக்குப் படைக்கிறார்கள் அவளை வரவேற்க இரவு முழுவதும் கதவை அடைக்காமல் திறந்தே வைக்கின்றனர், நேரம் போக்க சீட்டும் விளையாடுகின்றனர்.

மஹாராஷ்ட்ராவில் இதை "பலிபாத்யாமா என்று சொல்கிறார்கள். மகாபலி சக்ரவர்த்தி வாமனரால் அழுத்தப்பட்டு பாதாள லோகத்திற்கு சென்று அங்கு அரசனாகிறார் என்பதை இது குறிக்கிறது. தீபாவளியின் ஒரு வாரம் முன்பே "ரங்கோலி" என்ற வண்ணங்களால் ஆன கோலங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலையும் அலங்கரிக்கின்றன. இதிலே போட்டிகளும் வைத்துப் பரிசுகளும் தரப்படுகின்றன. தீபாவளி அன்று கலர் பேப்பரில் முக்கோணம் அல்லது சதுரம், ஷட்கோணம் போன்று கூண்டுகள் தயார் செய்து அத்னுள் விளக்குகள் பொருத்துகின்ற்னர், அதைத் தன் வீட்டு வாசல், பால்கனியில் எரியவிடுகின்றனர். நரகாசுரன் வதத்தையும் கொண்டாடுகின்றனர். தீபாவளியின் போது பசுவும் கன்றும் சேர்ந்து பூஜிக்க்கின்றனர், இவர்களது தீபாவளி ஸ்பெஷல் கராஞ்சி லாடு, சங்கர்பாலே, சேவ் சிவ்டா, அமாவாசையன்று லட்சுமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது. இவர்களும் புதுக் கணக்கை ஆரம்பிக்கிறனர். பின் "பாவுபீஜ்" என்று சகோதர நலத்திற்காகப் பிரார்த்தனை செய்கிறனர், சகோதரர்களும் சகோதரிகளுக்குப் பரிசுகள் வழங்குகின்றனர். ராஜஸ்தானிலும் உத்தர பிரதேசத்திலும் கோவர்தன பூஜையும் நடக்கிறது. கிருஷ்ணர் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தது நம் அனைவருக்கும் தெரியும், இதைக் குறித்து "அன்னகுட்" என்று சாதம் வெடித்து அதை ஒரு பெரிய மலைப்போல் பிடித்து கிருஷ்ணர் தூக்குவதைப் போல் செய்கிறார்கள். கிருஷ்ணர் இந்திரனை ஜெயித்ததையும் கொண்டாடுகிறார்கள் பெங்காலிகள் காளி பூஜை செய்கிறார்கள். சகோதர சகோதரிகளின் நலனுக்குப் பிரார்த்தனையும் "பாய் போலே" என்ற பெயரில் நடக்கிறது.

சீக்கியர்களும் இந்தத் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்தசிங் மிகப் புகழ் அடைந்து வரும் போது முகல் அர்சர் ஜஹாங்கீருக்கு இது பிடிக்காமல் அவரைக் கைது செய்து குவாலியர் கோட்டையில் அடைத்தார். அவருடன் அவரைச் சார்ந்த 21 சீக்கியர்களும் உள்ளே அடைக்கப்பட்டனர். பின் ஜஹாங்கீரே அவர்களைத் தீபாவளியன்று சிறையிலிருந்து விடுவித்தார், ஆகையால் இந்நாளை "பந்தி சோர்ரா" என்று கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் "கால்ஸா" என்ற கூட்டமும் உருவானது அத்துடன், குரு கிரந்த சாஹேப் என்ற புத்தகமும் சிறிது மாற்றங்களுடன் சீக்கியர்களின் குருவானது. ஜைனர்களுக்கும் இது மிக முக்கியமான நாள். ஜைனமத ஸ்தாபகர் குரு மஹாவீரர் நிர்வாணம் எய்திய நாள். இன்று தீபங்கள் ஏற்றி "உத்தராத்த்யாயன் சூத்ரா"வைப் படிக்கின்றனர். இதில் மகாவீரரின் ஐந்து பிரவசங்கள் இருக்கின்றன. மொத்தத்தில் தீபாவளி என்பது நமக்குள் இருக்கும் அக்ஞான இருளை நீக்கி உள் ஒளியைக் காண்பதாகும்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.