வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

short stories

ஏம்பா உடம்புக்கு ஏதும் சரியில்லையா....? ஒரு மாதிரியாக இருக்கீங்க...”

ஆறாவது தடவையாக கேட்டுவிட்டாள் அம்மா.

பட்டென்று பதில் சொல்ல இயலவில்லை அவனால். மனசுக்குள் குறுகுறுப்பு. அவனை அலைக்கழிப்பது இயலாமையா அல்லது ஆற்றாமையா என்பது அவனுக்கே புரிகிறமாதிரி இல்லை. சில நேரங்களில் சில உணர்வுகளை இனம் கண்டு கொள்ள முடியாமலே போகின்றன.

அம்மாவிடம் பொய் சொல்வது பாவமாகப்பட்டது. “உடம்புக்கு ஒன்றுமில்லை அம்மா.... வலியெல்லாம் மனசுக்குத்தான்... வலியின் சுமைகளை இறக்கி வைக்க வழிதான் தெரியவில்லை... அழுவதால் மட்டும் வந்த துன்பம் வேறு திசைமாறுவதில்லையே... என்ன செய்வேன் அம்மா... அம்மா...!”

உள்ளரங்கமாக உருகினான்.

சின்ன வயசிலேயே அப்பா செத்துப் போனார். சொத்து எதுவும் சேர்த்து வைக்காவிட்டாலும் உண்மையான தோழமையொன்றின் இழப்பு. அம்மாவுக்கு மட்டுமின்றி அவனுக்கும் தான்.

ஆனால் அம்மாவுக்கு திடமனசு. மூலையில் குந்தி மாலை மாலையாய் கண்ணீர் வடித்தாலும் மாண்டார் திரும்பி வராத நிஜத்தை அவள் சுளுவாகவே ஜீரணித்துக் கொண்டாள். வாழ்க்கையை சவாலாக வரித்துக் கொண்டதால் சராசரி அம்மாக்களை விட அவள் அதிகமதிகமாகவே ஆக்கினைக்குட்பட்டாள்.

அதுவே அவளைப் புடம் போட்டிருக்க வேண்டும். அவள் இலட்சியத் தாயாக எழுந்து நின்றாள். அப்பா இருந்த இடம் மீளவும் நிரப்பப்படாமல் தனியொருத்தியா அவள் தாய்மைக்காத்தாள்.

அவனுக்கு ஆதர்ஷமாகி அரணாக இருந்து காப்பு செய்தாள். அப்பா நடத்திய சின்னக்கடை வாழ்வாதாரத்துக்கு வகை ஏற்றது. அம்மா மனசைப் போல கடையும் விசாலமானது. மற்ற பிள்ளைகளை அம்மா அப்பாவோடு பார்க்க அவனுக்கு அம்மா மட்டுமே யாதுமாகிநின்றாள்.

அவனின் எதிர்காலம் குறித்து அம்மா கண்ட கனவுகளை அவன் மனதில் ஆழமாகவே விதைத்தாள். கனவுகளை அறுவடை செய்யுங்கள் என அமரர் அப்துல் கலாம் சொன்னது போல அவள் பயன் தரும் பயிராக அவனை வளர்த்தாள்: பாதுகாத்தாள். கல்வியை மட்டும் கருத்தனமாக்கிவிடவில்லை. வாழ்வியலின் வழித்தடங்களை எல்லாம் வகைவகையாய் சொல்லி வைத்தாள். அவள் அவனை அணுஅணுவாக உருவாக்கினாள். உடலாலும் உள்ளத்தாலும் அவன் வளர உரமானாள்.

இன்று நல்லதொரு தொழிலில் அவன் தலை நிமிர்ந்து நிற்க அம்மா எடுத்துக் கொண்ட பிரயத்தனங்கள் தான் எத்தனை! அக்கம் பக்க பொச்சரிப்புகளின் மத்தியில் ஆச்சரியமான அம்மாவாகவே அவன் அவளைப் பார்க்கிறான்.

காதல் என்ற கட்டில் விட்டில் பூச்சியாய் அவன் விழுந்து கிடந்தபோது நெற்றிப் பொட்டில் நீறிட்டு வெற்றி வாழ்த்துச் சொன்ன நெஞ்சமல்லவா அது.

கண்ணோச்சியவளையே கட்டி வைத்து மனம் குளிர்ந்தாள்.

தனக்காக எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக் கொண்ட தியாகத் தீபமான அவளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவன் செய்து கொடுத்தான். அவள் நிம்மதியாக இருப்பதாக திருப்தியடைந்தான்.

ஆனால் அண்மைக்காலமாக அம்மா முகத்தில் அந்தப் பழைய ஆதர்ஷ கலையைக் காணமுடியாமல் போகவே அவன் பேதலித்தான். காதலித்துக் கைப்பிடித்தவள் அம்மாவை மறுதலிக்கின்றாளோ என்ற மயக்கம். வேவு பார்க்க வேண்டியும் வந்தது.

இப்பொழுதெல்லாம் இருமல் வந்து அவ்வப்போது அம்மாவை சங்கடப்படுத்தும். டாக்டரிடம் கூட்டிப் போனான்.

“ஊகூம்! அம்மாவுக்கு நோய் ஏதும் இல்ல... வயசுக்கேத்த பலவீனம். அவ்வளவுதான்” டாக்டர் சொன்னார். மனசுக்கு சந்தோஷமாக இருந்தது.

ஆனாலும் அம்மா மனசளவில் சந்தோஷமாக இருப்பதாகப் படவில்லை. அயர்வடைந்து காணப்பட்டாள். காரணம்தான் தெரியவில்லை. அம்மாவிடம் பலமுறை கேட்டிருக்கிறான்.

“ஏங்கம்மா... இப்பவெல்லாம் முந்திமாதிரி கலகலப்பா இருக்கமாட்டேன்கிறீங்களே... நோய் கீய் இல்லேன்னு டாக்டர் சொல்லிட்டாரு... என்னன்னு சொல்லுங்கம்மா...!” அம்மாவின் அண்மைக்கால கலக்கத்துக்குக் காரணம் கண்டு பிடிக்காத போது அவன் அம்மாவைக் கேட்டான்.

“நல்லாத்தானே இருக்கேன்டா... எனக்கென்னா கொறச்சல்... அதான் சாமி மாதிரி பார்த்துக்கிறீங்களே...!”

வார்த்தைகள் நிஜம். ஆனால், அதை உச்சரிக்கும் உதடுகளில் தான் உயிரோட்டம் இல்லை. புரிந்தது. அம்மா மனசுக்குள் எதுவோ புகுந்து கொண்டுள்ளது. அது ஆழ் மனதில் கால் நீட்டிக் குத்தி மேல் மனசைக் குழப்பின் கொண்டிருக்கின்றது. அதைத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் அவன் அம்மா விடம்கேட்டான்.

“என்னாச்சுங்கம்மா...?”

காரணத்தை அவன் கண்டுகொண்டபின் அதை அம்மாவிடம் நேரிடையாக கேட்கத் திராணியில்லாமல் தவித்த போது அம்மா கேட்டாள். “என்னாச்சு சாமீ...?”

அம்மாவை நேருக்கு நேர் பார்க்க அவனால் இயலவில்லை. அது குற்ற உணர்வா? அல்லது கையாலாகாத தனத்தின் வெளிப்பாடா?

இரண்டு நாட்களுக்கு முன்புதான் மனைவி வடிவில் அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்தது. முடிச்சா அது... மூச்சு...

தூக்கம் கண்களைத் துழாவிக் கொண்டிருந்த நேரத்தில் மனைவி மந்திரமோதினாள். அது தலையணை மந்திரமல்ல. தலை சுற்றும் தந்திரம்.

“என்னாங்க... உங்க அம்மா இப்பெல்லாம் முந்தி மாதிரி இல்லேங்க... சிடுசிடுன்னு இருக்காங்க. எடுத்தெரிஞ்சி பேசுறாங்க... நல்லது சொன்னாக் கூட நச்சுனு கோபம் வர்து.... என்னைய, புடிக்கலயா... இல்ல இங்க இருக்க புடிக்கலயா தெரியல...” கிசுகிசுத்தாள். கிசுகிசுப்புத்தான் என்றாலும் உஷ்ணத்தின் உரசல்.

சட்டென்று எழுந்து குந்தினான்.

“நீ என்ன சொல்ற...” கேட்டான்.

“இல்ல... அவங்கள கொஞ்ச நாளைக்கு வெளில விட்டுப் பார்த்தா...” இழுத்து நிறுத்தினாள். “வெளிலன்னா...” வெடுக்கென கேட்டான்.

“வயசானவங்கள பராமரிக்கிற இல்லம் மாதிரி... மாசா மாசம் செலவ குடுத்துடலாம். இல்ல...” மென்று விழுங்கிச் சொன்னாள்.

“பைத்தியமா உனக்கு... நீ படிச்சவ இல்ல. அதில டீச்சர் வேற... உன்னோட புத்தி ஏன் இப்படி போகுது... நான் உயிரோட இருக்கையில எங்க அம்மாவ அநாதையா விடச் சொல்ற...” கோபமாகக் குமுறினான்.

“சும்மா அவசரப்படாதீங்க... நாங்க ரெண்டு பேருமே வேலைக்குப் போறோம். அவங்க அதிகமான நேரம் தனியாத்தானே இருக்காங்க... அதனால மனசுல வெறுமை வந்திருக்கும் போல, அதான் எடுத்ததுக்கெல்லாம் எரிச்சல் படுறாங்க... தனிமையும் மன வெறுமையும் டேஞ்சருங்க... அது மன நோயாகவும் மாறலாம். அவங்க நல்லதுக்குத் தான் இந்த ஐடியா...!” நிதானமாகச் சொன்னாள். “இது ஐடியாவா...! அம்மாவ அநாதையா விட்டு வைக்கச் சொல்றது ஐடியாவா? வயசானவங்க குழந்தைங்க மாதிரின்னு சொல்லுவாங்க. முந்தி தனியா என் மேல பாசத்தக் கொட்டினாங் க... இப்ப எல்லாம் அதுல நீயும் பங்கு போட வந்திட்ட. இது அவங்களுக்கு உளவியல் ரீதியா பாதிப்ப உண்டாக்கியிருக்கலாம். இதையெல்லாம் அனுசரித்துப் போகிற பக்குவம் வேணும். அது உன் கிட்ட இல்ல. அதனால அவங்கள ஓரங்கட்ட நினைக்கிற...” அவன் பொறுமையாகப் பேசினான்.

அவள் முகத்தைச் சுருக்கிக் கொண்டாள்.

அவன் யோசித்தான். இப்பொழுது அம்மாவின் மன நலமா? மனைவியின் சுயநலமா? முக்கியம் என்ற பட்டி மன்றம் நடத்த ஆரம்பித்தது மனசு.

இரண்டு பேருமே முக்கியம் தான் என்றுபட்டது. ஒருவருக்காக இன்னொருவரை இழக்க நினைப்பதுதான் வாழ்க்கை என்றாால் அதில் ஏது அழகியல்?

“சரி... தீபாவளி முடியட்டும்...”

அவளைப் பார்க்காமலே சொன்னான்.

போன தீபாவளிக்கு நடந்தது நினைவுக்கு வந்தது. வழமைபோல அதிகாலையிலேயே அவனை எழுப்பிவிட்டுக் குளிக்கச் சொன்னாள் அம்மா.

குளித்துவிட்டு வந்த அவனுக்குத் தலை துவட்டி விடுவதாக அடம்பிடித்தாள்.

“என்னம்மா... நான் இன்னமும் சின்னப்புள்ளயா...?” சிரித்துக்கொண்டே கேட்டான்.

“நீங்க... எப்பவுமே எனக்குச் சின்னப் புள்ளிதான்பா.... அடுத்த வருஷ தீபாவளிக்கு இருப்பேனோ என்னமோ...” அம்மா சொல்லி முடிக்கமுன் வாயைப் பொத்தினான்.

“என்ன பேச்சு இது...” உண்மையாகவே கோபம் கொண்டான். “சும்மா... வௌயாட்டுக்குச் சொன்னேன்...” சமாளிக்க முயன்றாள் அம்மா.

இப்பொழுது அந்த நினைவு வந்து சுட்டது.

விடிந்தது. வேலைக்குப் புறப்பட்டான். போகும் முன் வழமைபோல அம்மாவிடம் சொல்வதற்காக அவளது அறைக்குள் நுழைந்தான். அம்மா எழும்பிவிட்டதாகத் தெரியவில்லை. இந்நேரம் எழும்பிவிடுபவர். இப்படி தூங்கும் பழக்கம் இல்லையே...

மனசு துணுக்குற்றது.

மெதுவாக காலைத் தட்டி “அம்மா! அம்மா!” என்றான். வாரிச் சுருட்டிக் கொண்டு எழும்பினாள் அம்மா. முகம் வாடிப் போயிருந்தது. “இரவு தானும் மனைவியும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருப்பாவோ...’ மனசில் பரபரப்பு.

ஏற்கனவே மனைவிக்கும் அம்மாவுக்கும் இடையில் பனிப்போர் ஆரம்பித்திருக்கலாம். அம்மா அதனை மூடி மறைத்திருக்கலாம். பொறுமை இல்லாத மனைவி அதற்கு வேறு வடிவம் தேடியிருக்கலாம். யதார்த்தங்கள் மறைக்கப்படலாம். அழிக்கப்பட முடியாதே... “அட.... செத்த கண்ணசந்துட்டேன் போல.... வேலைக்குப் பொறப்புட்டுட்டீங்களா சாமீ...” வாஞ்சையுடன் கேட்டாள் . அம்மா குரலில் கூடப் புதிகாக ஒரு பிசுபிசுப்பு இருப்பதாகப்பட்டது. சொல்லி விட்டுப் புறப்பட்டான்.

அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. அம்மா முகமே அசைவாடியது. அரைநாள் விடுப்பில் வீடு வந்தான். ஆச்சரியமாக மனைவியும் கூட வீட்டுக்கு வந்திருந்தாள்.

“ஏங்க... நேரத்தோட... சுகமில்லையா?” கேட்டாள். அவன் பதில் சொல்லவில்லை. நேராக அம்மாவின் அறைக்குப் போனான். சத்தமின்றி எட்டிப் பார்த்தான். அம்மா கட்டிலில் குந்தியிருந்தாள். திரும்பினான்.

மனைவி எதிரில் வந்தாள்.

“இந்தாங்க... அம்மாவ வெளியில கூட்டிக் கிட்டுப் போவமா?” மெதுவாக கேட்டாள்.

“தீபாவளி முடியட்டும்னு சொன்னேன் தானே...!” எரிச்சலுடன் கூறினான்.

“அந்த வெளியில இல்லேங்க... டவுனுக்கு...!”

“டவுனுக்கா?ஏன்?”

“இந்தத் தீபாவளிக்கு என் கையால அவங்களுக்கு விருப்பமானத எல்லாம் வாங்கிக் குடுக்கப்போறேன்...”

“ஓகோ! எல்லாத்தையும் வாங்கிக் குடுத்து நீ நல்ல பேரோட அவங்கள அனுப்பணும் இல்ல...”

“சே! இனி அவங்கள அனுப்புற எண்ணம் இல்லேங்க...!”

இவளுக்கு என்னாச்சு! அவன் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை. பாடசாலையில் இருந்தபோது அவளது அண்ணன் கைபேசியில் தொடர்பு கொண்டிருந்தான்.

அண்ணன் வீட்டில் தான் அவர்களது அம்மா இருந்தாள். அம்மாவுக்கும் அண்ணன் மனைவிக்கும் இடையில் சதா சண்டை சச்சரவுதானாம் “வீட்டில் நிம்மதியே இல்லை. அம்மாவை முதியோர் இல்லம் ஏதாவதொன்றில் விட்டு விடலாமென்று நினைக்கிறேன்” என்று கூறினான் அண்ணன்.

“வேணாம்! அம்மா பாவம்!” என்றாள் இவள். “அப்ப... உன் கிட்ட வச்சிக்கேயன்” அண்ணன் சொன்னான்.

தனது கணவனின் அம்மாவுக்கு என்ன நடக்க வேண்டும் என்று அவள் விரும்பினாளோ அதுவே தன் அம்மாவுக்கும் நடக்கப் போவது அவள் நெஞ்சைத் தைத்தது. பாடம் புகட்டியது. மனசை புடம் போட்டது. தனது தர்மசங்கடத்தைக் கணவனோடு பகிர்ந்து கொள்ளத் துணிவில்லை. குற்றமுள்ள தெஞ்சமல்லவா!

அவன் அவளை அருகில் அழைத்தான்.

“இப்படி பண்ணினா என்ன... உங்கம்மாவும் உங்க அண்ணன் வீட்ல தனியா கிடந்துதானே தவிப்பாங்க... அவங்களையும் இங்க கூப்பிட்டா ரெண்டு அம்மா மாரும் ஆளுக்கு ஆளு ஆறுதலா இருப்பாங்க இல்ல..”

மெல்ல மெல்லத் தானும் சொல்லத் தயங்கியதைத் தெள்ளத் தெளிவாக மனசைத் திறந்து அவன் சொல்லியது அவளைக் கூனிக் குறுகச் செய்தது. “இவன் எப்படித்தான் என்மனசைப் படித்தானோ” என்று வியந்தாள். தன்னைச் சுகாதரித்துக் கொண்டாள்.

“சரிங்க.... சரிங்க...” குரலில் சந்தோஷ தாண்டவம். “அவங்கள உடனேயே வரச்சொல்லு. வந்தோடன்ன ரெண்டு அம்மாமாரையும் கூட்டிக்கிட்டுப் போய் தீபாவளி சந்தோஷங்களை வாங்கிக் குடும்போம்... சரிதானே!”

“ரொம்ப ரொம்ப சரிங்க... வந்து நான் தப்பா ஏதும் பேசியிருந்தா மன்னிச்சிடுங்க.... ப்ளீஸ்...” கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

குடும்பவாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் சிலதைக் கண்டு கொள்ளாதிருப்பதே புத்திசாலித்தனம் என்பதை அவன் புரிந்து கொண்டிருந்தால் அவனால் புன்னகைக்க முடிந்தது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.