வரு. 68 இல. 43

துர்முகி வருடம் ஐப்பசி மாதம் 07நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 முஹர்ரம் பிறை 21

SUNDAY OCTOBER 23, 2016

 

 
பக்கச்சார்பற்ற விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

யாழ். பல்கலை மாணவர் பொலிஸ் துப்பாக்கி சூட்டில் மரணம்;

பக்கச்சார்பற்ற விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

அமைதியை பேண கடும் பாதுகாப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் குறித்து உடனடியாக பக்கச் சார்பற்ற விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் குறித்துக் கவலை தெரிவித்துள்ள ஜனாதிபதி, இதுவிடயமாகத் துரித விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்ைக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் பல்கலை மாணவர்களின் மரணத்தினால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதந்தாங்கிய பொலிஸார் எந்நேரமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து வடக்கில் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலை தோன்றியிருப்பதாக அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியிருப்பதுடன் வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளன. அரசாங்கம் இதற்கு நீதியான விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்ைக விடுத்துள்ளன.

மரணமடைந்த மாணவர்களின் சடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக்கிரியைகளை நடத்தி சடலங்களை அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மாணவன் நடராசா கஜனின் சடலம் அவரின் பாரதிபுரம் இல்லத்திலும் யாழ் மாணவன் விஜயகுமார் சுலக்‌ஷனின் சடலம் கந்தரோடை இல்லத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சிக்கு நேற்று விஜயம் செய்த பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையிலான கல்விமான்கள் மாணவன் நடராசா கஜனின் (23) சடலத்திற்கு அஞ்சலி செலுத்தினர். கஜனின் இறுதிக்கிரியை இன்று கிளிநொச்சி பாரதிபுரத்தில் நடைபெறுகிறது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு நேரடியாக இலக்கான கந்தரோடையைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்‌ஷன் என்ற 24 வயது மாணவனின் பூதவுடலுக்கும் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர்கள் இருவரின் இறுதிக்கிரியைகளும் இன்று 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுள்ளது.

இந்நிலையில், மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவிருப்பதாகப் பல்கலைக்கழக சமூகம் அறிவித்துள்ளது. அவர்களுக்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக யாழ் வர்த்தக சமூகமும் தெரிவித்துள்ளது. நிலைமையைச் சுமுகப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்ைககளையும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டிருப்பதாக யாழ் தகவல்கள் தெரிவித்தன.

வியாழன் இரவு 11.30 அளவில் காங்கேசன்துறை வீதி,கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது அப்பகுதியில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற மாணவன் சுலக்‌ஷன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டையடுத்து மோட்டார் சைக்கிள் மதில் ஒன்றில் வேகமாக மோதியதில் கஜன் என்ற மாணவன் கடுமையாகக் காயமுற்று வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மறுநாள் வெள்ளிக்கிழமை வட பகுதியெங்கும் காட்டுத் தீ போல் பரவியதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் உருவானது.

இந்தச் சம்பவம் நடைபெற்றுக்ெகாண்டிருந்தபோது ஜனாதிபதி கலந்துகொள்ளும் ஒரு வைபவம் திருகோணமலையில் நடைபெற்றுக்ெகாண்டிருந்தது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துகொண்டிருந்தார். அவ்வேளையில் யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்று மாணவர்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, விடயத்தை எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரியப்படுத்தினார். அவர் உடனடியாக அருகில் இருந்த ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்தே ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருக்கின்றார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐந்து பொலிஸார் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டதுடன் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதவான் அவர்களை பதினான்கு நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேக நபர்களான பொலிஸாரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. சந்தேக நபர்கள் ஐவரையும் யாழ். சிறைச்சாலைக்ெகாண்டு செல்லாமல் அனுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றதாக அதிகாரிகள் தினகரனுக்குத் தெரிவித்தனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.