புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
நிரந்தர தீர்வை காண தமிழரிடையேயான ஒற்றுமையின்மையே பிரதான தடை: 

நிரந்தர தீர்வை காண தமிழரிடையேயான ஒற்றுமையின்மையே பிரதான தடை: 

சிந்தித்து செயற்படுங்கள்

தமிழருக்கும், தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் லண்டன் நியூபுரே மேயர் ஜெயரஞ்சன் அறிவுரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமக்கிடையேயான உட்கட்சி மோதலைத் தவிர்த்து, தமிழ் மக்கள் தமக்கு வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து அம்மக்களுக்காகப் பணியாற்ற முன்வரவேண்டும். இதுவரை காலமும் கிடைத்த பல சந்தர்ப்பங்களைக் கை நழுவ விட்டது போல இனியும் செயற்படாது, அவர்கள் இனியாவது சிந்தித்துச் செயற்ட வேண்டும் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் நியூபுரே நகரத்தின் பிரதிமேயரான தொழிற்கட்சியைச் சேர்ந்த தவத்துரை ஜெயரஞ்சன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

வரலாற்று ரீதியாகவே தமிழர்களுக்கிடையிலும், தமிழ்த் தலைவர்களுக்குமிடையிலும் ஒற்றுமை என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்துள்ளது. இதுவே நிரந்தரத் தீர்வுக்கான இயலாமையையும் வெளிப்படுத்துகின்றது. எனது தனிப்பட்ட அபிப்பிராயத்தின்படி தமிழ் மக்களுக்கிடையேயான ஒற்றுமை மட்டுமே இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வினை வழங்க முடியும்.

ஆனால் கடந்த காலங்களில் தமிழர்களுக்கிடையேயான விரிசல் தெளிவாக வெளிப்பட்டது. தற்போதைய சூழழ் நிலையில் அதுதொடர்பாக தமிழ்த்தரப்புகள் உரிய கவனம் செலுத்தவேண்டியவர்களாக உள்ளனர். குறிப்பாகத் தமிழ் மக்களின் மிகவும் நம்பிக்கைக்கும், எதிர்பார்ப்பிற்கும் பாத்திரமாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எவரதும் எடுப்பார் கைப்பிள்ளைபோன்று செயற்படாது, தனது முழுப் பலத்தையும் தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதில் காட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக அங்கம் வகிப்பதை சிறப்பானதொன்றாகவே நான் பார்கின்றேன். கடந்த காலத்தில் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை அமிர்தலிங்கம் வகித்திருந்தார். தற்போது இரா.சம்பந்தன் வகிக்கின்றார். இது தமிழர்களின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாகவே இருக்கும்.

புலம் பெயர் அமைப்புகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலேயே ஒருபகுதி புலம்பெயர் அமைப்புகள் தடைநீக்கப்பட்டும் குறித்த சில அமைப்புகள் இன்றும் தடைநீக்கப்படாதும் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன? என அவரிடம் கேட்டபோது "தமிழ் மக்களின் விடயங்களைச் சர்வதேச ரீதியாகக் கையாளவேண்டியவர்களாகப் புலம்பெயர் அமைப்பினரே காணப்படுகின்றனர். இவ்விடயம் உட்பட தமிழ்ச் சமூகம் சார்ந்து பல்வேறு வகையான பாரிய பொறுப்புகள் உள்ளன.

புலம் பெயர் அமைப்புகளின் தடைநீக்கம் பிரிவினையை உருவாக்கும் என நான் நினைக்கவில்லை. புலம்பெயர் அமைப்புகள் தமிழர்களின் விடுதலையை எதிர்பார்த்துள்ளன. அதற்கான அழுத்தங்களைப் பாரபட்சமின்றி வழங்குகின்றார்கள் என்றே நான் நினைக்கின்றேன். ஆனால் அவ்வமைப்புகளிடையே ஒற்றுமை உள்ளதா என்பது பற்றித் தெளிவற்ற நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகுவதற்கு இடமளிக்கப்போவதில்லையென்பதில் உறுதியாக இருக்கும் அரசாங்கம் தமிழீழக் கொள்கையுடன் காணப்படுகின்ற சில தரப்புகள் மீது தொடர்ந்தும் தடையை விதித்துள்ளது. மேலும் புலம்பெயர் அமைப்புகளுக்குள் வேறுபட்ட நிலைமைகள் காணப்படுமாயின் அவர்களே முன்வந்து பேச்சுவார்த்தையூடாக அவற்றுக்குத் தீர்வு காணவேண்டும். அவ்வாறான செயற்பாடொன்றை முன்னெடுப்பதற்கு வாய்ப்பு கிட்டினால் நான் அதற்கான பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவேன் எனக் கூறினார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.