புத். 67 இல. 50

மன்மத வருடம் கார்த்திகை மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 29

SUNDAY DECEMBER 13, 2015

 

 
தொகுதிவாரி தேர்தல் சீர்திருத்தம் முஸ்லிம் மக்களுக்கும் ஆபத்தானது

தொகுதிவாரி தேர்தல் சீர்திருத்தம் முஸ்லிம் மக்களுக்கும் ஆபத்தானது

முஸ்லிம் தரப்பினரும் கவலை தெரிவிப்பு

வட்டாரத் தேர்தல் முறை சம்பந்தமாக நாளை நடைபெறவுள்ள சர்வ கட்சி மா நாட்டின்போது வட்டார முறை என்ற மஹிந்த சிந்தனையை நீக்கி,  விகிதாசார தேர்தல் முறையே தொடர்வதற்கு சிறுபான்மை கட்சிகள் ஒற்றுமையாக வலியுறுத்த வேண்டும் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலின் போது வட்டார தேர்தல் முறை என்பது கிழக்கு மாகாணத்துக்கு வெளியே உள்ள சிறு பான்மை மக்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என்பது அனைத்து கட்சிகளாலும், அறிவுள்ளவர்களாலும் எற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

இவ்வாறான தேர்தல் முறை கடந்த ஆட்சியில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது நாம் கடந்த ஆட்சிக்கு ஆதரவளித்த நிலைமையிலும் இதற்கு சிறுபான்மை கட்சிகள் ஆதரவளிக்க வேண்டாம் என உரத்துக்கூறினோம். ஆனால் எமது குரல் சிறுபான்மை கட்சிகளுக்கு கேட்கவில்லை என்றார்.

இதேவேளை எல்லை மீள்நிர்ணயம் மற்றும் புதிய தேர்தல் முறை ஆகியவை அமுல்படுத்தப்படும்போது, உள்ளுராட்சி மன்றங்களில் இதுவரை காலமும் காணப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவங்களில் பாதிப்புக்கள் ஏற்படக் கூடாது என்றும், அந்நிலைமை உறுதி செய்யப்படவேண்டுமென்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளரும் அந்தக் கட்சியின் உச்சபீட உறுப்பினருமான ரஹுமத் மன்சூர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் முஸ்லிம் சமுகத்தில் மூன்றிலிரண்டு பகுதியினர் பரந்து வாழ்ந்து வருகின்றனர். ஆகவே அவர்களின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு பிரதிநிதித்துவங்களை உறுதி செய்யவேண்டியது மிக முக்கியமானதாகும்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல், வட்டார மற்றும் விகிதாரசார முறையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் முஸ்லிம்களின் தேசிய அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவர் ரஊப் ஹக்கீமும் அரசாங்கத்துடன் உரிய அணுகுமுறைகளை மேற்கொண்டு முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்ய வேண்டும் எனக் கோருகின்றேன்” என்றார்.

இதற்கிடையே, இவ்விடயம் பற்றிக் கருத்து வெளியிட்டுள்ள சமாதான கற்கைகளுக்கான தேசிய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி றியாஸ், தொகுதிவாரி தேர்தல் முறையில் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் குழிதோண்டிப் புதைக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

மஹிந்த, நாட்டு மக்களுக்குச் செய்த அநியாயங்கள் காரணமாக சிறுபான்மை இன மக்களும் இணைந்து நின்று அவரைத் தோற்கடிக்க உதவிசெய்தோம். ஆனால் வெற்றியின் பின்னர் மஹிந்தவின் சிந்தனை அப்படியே தொடர்வதாயின் நல்லாட்சிக்கும், மஹிந்த சிந்தனைக்குமான வித்தியாசம் என்ன? என்றும் கலாநிதி றியாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.