புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
பிரபல எழுத்தாளர் அன்னலெட்சுமி ராஜதுரைக்கு பாராட்டு விழா

பிரபல எழுத்தாளர் அன்னலெட்சுமி ராஜதுரைக்கு பாராட்டு விழா

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15.12.2013) மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ள புரவலர் புத்தகப் பூங்காவின் 34ஆவது நூல் வெளியீட்டு விழாவில் பிரபல எழுத்தாளரும், “கலைக்கேசரி” ஆசிரியருமாகிய திருமதி அன்னலட்சுமி இராஜதுரை பாராட்டப்படவுள்ளார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. அன்னலெட்சுமி இராஜதுரை திருநெல்வேலி செங்குத்தா இந்துக்கல்லூரி, சுன்னாகம் இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பெற்றார். கலைச் செல்வி என்னும் மாத இதழில் கவிதை எழுதியதன் மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தார். இத்துடன் “யாழ். நங்கை” என்ற புனை பெயரில் சிறுகதை எழுத்தாளராகவும் விளங்கினார்.

1962ஆம் ஆண்டு யூன் மாதம் 1ஆம் திகதி வீரகேசரியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்த திருமதி. அன்னலெட்சுமி இராஜதுரை தமது செய்திக் கடமைகளோடு “மாணவர் கேசரி” என்னும் பக்கத்தையும் கவனித்து வந்தார். 1966ஆம் ஆண்டு வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட “ஜோதி” என்னும் குடும்பவார இதழின் பொறுப்பாசிரியராக கடமைபுரிந்தார். 1973ஆம் ஆண்டிலிருந்து 1984ஆம் ஆண்டுவரை மித்திரன் வாரமலர் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் கடமைபுரிந்தார். இக்காலப்பகுதியில் கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், நேர்முகங்கள், சிறுவர் தொடர்கதைகள், விமர்சனங்கள், மொழி பெயர்ப்புக் கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை மித்திரன் வாரமலர், வீரகேசரி நாளிதழ், ஞாயிறு இதழ் ஆகியவற்றில் எழுதிவந்தார். 1984ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டுவரை வீரகேசரி நாளிதழுடன் இணைந்து செய்திப் பகுதியில் கடமையாற்றியதுடன் மகளிர் பகுதி, இலக்கியப்பகுதி போன்ற விசேட பக்கங்களுக்கும், நாளிதழின் சிறப்பு மலர்களுக்கும் பொறுப்பாக இருந்து கடமையாற்றினார்.

2000ஆம் ஆண்டிலிருந்து மங்கையர் கேசரி, கலைக்கேசரி ஆகிய வார அனுபந்தங்களின் பொறுப்பாசிரியராக செயற்பட்டார். அதன்பின் வீரகேசரியின் ‘சங்கமம்’ வார அனுபந்தத்தின் பொறுப்பாசிரியராகவும் இருந்து வருகிறார். 2010ஆம் ஆண்டிலிருந்து கலைக்கேசரி மாத சஞ்சிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றுகிறார்.

நெருப்பு வெளிச்சம் (சிறுகதைத் தொகுதி) உள்ளத்தின் கதவுகள் (நாவல்), விழிச்சுடர் (குறுநாவல்) இருபக்கங்கள் (கவிதைத் தொகுதி) என்பன இவரது படைப்புக்களாகும். சமீபத்தில் தமது பத்திரிகைத்துறையின் 50 ஆண்டுகால அனுபவங்களின் ஒரு தொகுப்பாக “நினைவுப் பெருவெளி” என்னும் நூலை இவர் எழுதி வீரகேசரி வெளியீடாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

மணிலா, பீஜிங் நகரங்களில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்துகொண்ட அனுபவங்களை வீரகேசரி வார வெளியீட்டில் தொடராகப் பல வாரங்கள் எழுதியுள்ளார். 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு கோயம்புத்தூரில் நடைபெற்ற உலக செம்மொழி மாநாட்டில் இவர் பார்வையாளராகக் கலந்து கொண்டு வீரகேசரியில் தொடர்கட்டுரைகளை எழுதியமையும் குறிப்பிடத்தக்கது.

இவரது மகத்தான பணிகளைப் பாராட்டி இந்து கலாசார அமைச்சு 1992ஆம் ஆண்டு “தமிழ் மணி” விருது வழங்கிக் கெளரவித்தது. சிறந்த பத்திரிகையாளருக்கான விருதை 1992ஆம் ஆண்டு எஸ்மண்ட் விக்கிரமசிங்க அறக்கட்டளை, அன்றைய ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க மூலம் இவருக்கு வழங்கிக் கெளரவித்தது.

கொழும்பு தமிழ் இளைஞர் கலாசார கூட்டமைப்பு, தென்கிழக்கு ஆய்வு மையம், கொழும்பு கலைச் சங்கம், கொழுந்து சஞ்சிகை, கொழும்பு றோற்றரி (ஞிoஹீary விlub) கிளப் என்பனவும் இவரது பணிகளைப் பாராட்டிக் கெளரவித்துள்ளன.

மல்லிகை சஞ்சிகை அட்டையில் இவரது படத்தைப் பிரசுரித்து இலக்கிய வரலாற்றில் பெருமை சேர்த் துள்ளது.

2003ஆம் ஆண்டு இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கம் சிறந்த பத்திரி கையாளர்க ளுக்கான விரு தை யும், தங்கப் பதக்கத்தையும் வழங்கிக் கெளரவித்தது. 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் விருது வழங்கிக் கெளரவித்தது. எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு மையம் 2011ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருதுகளையும் மற்றும் ‘கொடகே வாழ்நாள் சாதனையாளர்’ விருதுகளையும் அண்மையிலே வழங்கிக் கெளரவித்தது.

திருமதி. அன்னலெட்சுமி இராஜதுரை இந்நாட்டில் ஒரு தலைசிறந்த பத்திரிகையாளரும், எழுத்தாளரும், பேச்சாளரும் மட்டுமன்றி மனித நேயம் மிக்க ஒரு பெண்மணியாகவும் நம் மத்தியில் வாழ்ந்து வருகிறார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.