புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
72 சின்னஞ்சிறார்களின் நடிப்பில் உருவாகும் முழுநீளத் திரைப்படம்

ஓர் ஆசை கனவு தேடல்

72 சின்னஞ்சிறார்களின் நடிப்பில் உருவாகும் முழுநீளத் திரைப்படம்

20ஆம் திகதி பாடல் வெளியீடு

சிறுவர்களின் சின்னச்சின்ன ஆசைகளையும் அவர்களின் எண்ணக்கிடக்கைகளையும் வெளிப்படுத்துவதாய் இலங்கையில் ஒரு முழு நீளத் திரைப்படம் வெளிவருகிறதென்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும்.

பத்திரிகை வெளியிட்டேன், புத்தகம் போட்டேன் கையைச் சுட்டுக்கொண்டேன் என்று ஆண்களே அலுத்துக்கொள்ளும் நிலையில், திரைப்படம் ஒன்றை எடுப்பதற்கு ஓர் அசுர முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள் இரண்டு சகோதரிகள்.

படத்தின் தயாரிப்பாளர் தங்கை. இயக்குநர் தமக்கை. நான்கு வயது முதல் பதினாறு வயதுவரையான மாணவர்கள்தான் நடிகர்கள். காட்டுவாசிகள், ஆதிவாசிகள், நகரவாசிகள் என மூன்று பகுதியினருக்கிடையில் ஏற்படும் மோதல், தேடல், முடிவு என கதை நகர்கிறது.

கொழும்பு முகத்துவாரம், அளுத்மாவத்தையில் அமைந்துள்ள வீ.கே. பயிற்சி நிலையத்தில் 72 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். பாடசாலை பாட விதானத்திற்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு மேலதிகமாக, பரதநாட்டியம், கணணிப்பயிற்சி, கர்நாடக சங்கீதம் முதலான பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன. இங்குப் பயிலும் மாணவர்களுள் அநேகமானோர் ஏதோ ஒரு விதத்தில் மாற்றுத் திறமைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பது கண்ணுக்குப் புலப்படாத ஓர் உண்மை. எனவே அவர்களின் மனவோட்டத்தை இலகுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்கச்செய்வதற்கு மேற்கொண்ட ஒரு சிறிய முயற்சியே ‘சின்னதாய்’ திரைப்படம் என்கிறார்கள் சிவனேஸ்வரி, புவனேஸ்வரி சகோதரிகள். இவர்களுக்குப் பக்கபலமாக இருப்பவர் இவர்களின் தந்தை வெங்கடாசலம்.

சிறுவர்களுக்குக் கல்வியைப் புகட்டுவதுடன் அவர்களின் திறமைகளை வெளிக்கொணர் வற்குத் தொடர்ச்சியாக முயற்சித்துக்கொண்டிருப்பதாகக் கூறும் சகோதரிகள், சிறுவர்களைக்கொண்டு இந்தப் படத்தைத் தயாரிப்பதில் சுமார் ஒன்றரை வருடகாலம் உருண்டோடியதாகக் கூறுகின்றனர். கேகாலையிலும் மத்துகமவிலும் படப்பிடிப்பை மேற்கொள்வதற்கு மாணவர்களின் பெற்றோர்களே உதவி புரிந்துள்ளனர்.

“இந்தப் பிள்ளைகளின் பெற்றோர் மத்திய தரத்திலும் வறுமைக்கோட்டிலும் இல்லாமல் இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கிறார்கள். அப்படியிருந்துகொண்டு அவர்களின் பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்குப் பெரும்பாடுபடுகிறார்கள். பிள்ளைகளில் அநேகருக்கு வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்கு உடல் உபாதை இருக்கிறது. அத்தனை துன்பத்தையும் மறந்து அவர்கள் மனமகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சிறுவர்களின் குறும்புத்தனத்தைப் பிரதிபலிக்கும் வகையில் முற்றிலும் நகைச்சுவை நிறைந்ததாக இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறோம். இதற்கான அடிப்படையே எனது மகள்தான்” என்று தனது மகள் பார்வதியின் திறமைகளைக்கூறி மனதை நெருடவைக்கிறார் சிவனேஸ்வரி.

பார்வதிக்கு இப்போது வயது பத்து. இசையிலும் கணணித்துறையிலும் மகா கெட்டிக்காரி. பல பத்திரிகைகளில் அவளின் திறமைகள் செய்திகளாக வெளிவந்திருக்கின்றன. இந்த இரண்டு துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்பதுதான் அவளின் கனவும் இலட்சியமும்.

“மகள் பிறந்தது முதல் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கினாள். ஐந்தரை வயதிலேயே அவளுக்குச் சத்திரசிகிச்சை செய்தோம். எனக்குப் பிள்ளைப்பாக்கியம் இல்லை என்று மருத்துவர்கள் சொன்னதால், நான் எடுத்துக்கொண்ட சிகிச்சையின் தாக்கம் என் பிள்ளையைப் பாதித்துவிட்டது. பின்னர் பிள்ளைக்குச்செய்த மருத்துவத்தின் விளைவு, அவளின் எண்ணத்தைக் குழப்பிவிடும் நிலைக்குச் சென்றுவிட்டது. ஆகவே அவளின் மனோநிலையைப் பேணுவதற்காக அவள் விரும்பிய துறைகளில் எல்லாம் பயிலவிட்டோம். என் மகளைப்போன்று எங்கள் கல்வி நிலையத்தில் பல குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் வெவ்வேறுவிதமான உபாதைகளைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பரோபகாரிகளின் உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதும் இந்தப் படத்தின் நோக்கம்” என்று விபரிக்கிறார் சிவனேஸ்வரி.

சின்னதாய் படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. அத்தனையையும் எழுதியிருப்பவர் சிவனேஸ்வரியின் தங்கை புவனேஸ்வரி. கதையை எழுதியவரும் அவரே. டிரோன் பெர்னாண்டோ இசையமைக்க, படப்பிடிப்பை த.பிரதீபன் மேற்கொண்டிருக்கிறார். படத்தொகுப்பை செய்திருப்பவர் வ.பிரசன்னா.

படத்தில் நகரவாசிகள் பகுதியில் பார்வதியுடன் பாலசுப்பிரமணியம் சரண், ஜே.சஞ்சீவன், சி.திவோனி ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடித்திருக்கிறார்கள். காட்டுவாசிகள் பகுதியில் ஏ.கிரிஷாந்தன், பீ.கிருஷாந்த் ஆகியோரும் ஆதிவாசிகளில் ஏ.சஜித்ரன், பி.சுகந்த் ஆகியோர் கலக்கியிருக்கிறார்கள். படத்தின் பாடல் வெளியீடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி மாலை 5.30 இற்கு கொழும்பு டி.ஆர்.விஜே வர்தன மாவத்தையில் உள்ள அஞ்சல் திணைக்கள தலைமையகக் கேட்போர் கூடத்தில் நடைபெறுகிறது.

விரைவில் வெளிவரவிருக்கும் ‘சின்னதாய்’ திரைப்படம் சின்னஞ்சிறார் களின் வாழ்க்கையில் மட்டுமன்றி இலங்கை திரைப்படத் துறையிலும் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண் டும் என்கிறார் படத்திற்கான வசனத்தை எழுதி இயக்கியிருக்கும் சிவனேஸ்வரி.

எவ்வாறாயினும் சின்னதாய் படம் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள சில நல்லவர்களின் உள்ளத்தைத் திறக்கு மென்றால் சிறுவர்களின் முயற்சிக்கு வெற்றிதான்.

விசு கருணாநிதி... -

படங்கள்: பி.வீரசிங்கம்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.