புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
காலத்தை வென்ற கருணைக் கடல்

காலத்தை வென்ற கருணைக் கடல்

மக்கள் திலகம் மறைந்து வருடங்கள் பல உருண்டோடி விட்டன. இம்மாதம் 24ம் திகதி இவரின் மறைவு தினம். இவரின் தோற்றம் 17.1.2017 இவர் இவ்வுலகை விட்டு மறைந்த நிகழ்வு 24.12.1987. இன்றும் கூட தென்னிந்தியாவில் மக்கள் திலகத்தின் தோற்றம், மறைவு நாள் போன்றவற்றை ஆடிமாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றி விழா எடுப்பதைப் போல மாவட்டத்திற்கு மாவட்டம், நகரத்திற்கு நகரம் கிராமத்துக்கு கிராமம் ஏன் தெருவுக்குத் தெரு எம். ஜி. ஆர். பாடல்களை போட்டு அவர் நினைவு கொண்டாடுவது எவரும் நினைத்துப்பார்க்க முடியாத ஆச்சரியமான அதிசயம்.

“சொல்லுதல் யார்க்கும் எளிய - அரியவராம்

சொல்லிய வண்ணம் செயல்”

என்ற வள்ளுவரின் வாக்குக்கு உதாரணமாக வாழ்ந்து சென்றிருக்கிறார் மக்கள் திலகம். வள்ளுவன் பாடலுக்கு மட்டுமல்ல.

“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார்”

என்ற தனது பாடல் வரிகளுக்கு தானே முன்னுதாரணமாய் வாழ்ந்திருக்கிறார் எம். ஜி. ஆர் அவர்கள். நிறைய மனிதர்கள் வாழும் போதே செத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் திலகம் செத்த பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இறைவன் சாதாரண மனிதர்களைப் படைக்க நாற்பது நாள் ஆகிறது. மகான்களை தீர்க்க தரிசிகளைப் படைக்க நானூறு வருடங்களை எடுத்துக் கொள்ளுகிறான்” இது ‘ரிக்’ வேதத்தில் உள்ள சுலோகம்- அந்த ரீதியில் பார்த்தால் இந்த மனித சமுதாயம் செம்மலைப் போல் ஒருவரைப் பார்க்க இன்னும் நானூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். வட்டத்திற்கு முடிவு எது? துவக்கம் எது? என்று சொல்ல முடியாது. அப்படி அண்ணல் எம். ஜி. ஆர் வரலாற்றுக்கும் முடிவும் துவக்கமும் இல்லை.

எம். ஜி. ஆரின் முதல் மனைவியின் பெயர் பார்கவி தங்கமணி. 1938 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 1943ஆம் ஆண்டு சதானந்தவதி என்பவரை இரண்டாவது மனைவியாக எம். ஜி. ஆர். மணந்தார். நோயின் காரணமாக இரண்டு மனைவிகளும் இளமையிலேயே இறந்து விட்டதால் நடிகை வீ. என். ஜானகி அவர்களை மூன்றாவது மனைவியாக எம். ஜி. ஆர். திருமணம் செய்து கொண்டார். கலை வித்தகர் எம். ஜி. ஆர். கலையுலகில் செய்த சாதனைகள் பல. பெற்ற பரிசுகள்: “மலைக்கள்ளன்” இந்திய அரசின் வெள்ளிப் பதக்கம் (1954) “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” சினிமா ரசிகர் சங்க பரிசு (1956) “நாடோடிமன்னன்” சினிமாக்கதிர் சிறந்த இயக்குனர் பரிசு (1958) “எங்க வீட்டுப்பிள்ளை” சினிமா ரசிகர் சங்கப் பரிசு (1965) “காவல்காரன்” தமிழக அரசின் விருது (1967) “குடியிருந்த கோயில்” தமிழக அரசின் விருது (1968) “நம் நாடு” சினிமா ரசிகர் சங்கப் பரிசு (1969) “அடிமைப் பெண்” பிலிம்பேர் விருது (1969) “எங்கள் தங்கம்” சிறந்த இரண்டாவது படத்திற்கான தமிழக அரசின் விருது (1970) “ரிக்ஷாக்காரன்” பாரத் விருது (1971) “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” தமிழக அரசின் விருது (இப்படம் எம். ஜி. ஆரின் கடைசிப்படம்)

மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மறைந்தாலும் இன்றும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறார். மக்களுக்காகவே வாழ்ந்த எம். ஜி. ஆர். கடைசிவரை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு இருந்திருக்கிறார். தன்னைத் தேடி வருபவரை இருகை கூப்பி வரவேற்று தாய் உள்ளத்தோடு விசாரித்து உதவுவார். எம். ஜி. ஆர். வாழ்க்கையில் பலமறக்க முடியாத சம்பவங்கள் நடந்தன. எம். ஜி. ஆரை நம்பியவர்கள் கெட்டது கிடையாது. எதிரிக்கும் உதவும் பொன்மனம் கொண்டவர் எம். ஜி. ஆர். இதனால் தான் சைவப் பெரியார் கிருபானந்த வாரியார் இவரைப் “பொன் மனச் செம்மல்” என்றார். இப்பெயர் இறுதிவரைக்கும் நீடித்து இன்றுவளர நிற்கிறது. ஏழைகளின் இதயத்தில் சிம்மாசனமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் எம். ஜி. ஆர் மனித நேயத்தில் ஒரு இதயம். எம். ஜி. ஆருக்கு “புரட்சி நடிகர்” என்ற பட்டத்தை கொடுத்தவர் கலைஞர் மு. கருணாநிதி “புரட்சித் தலைவர்” என்று முதலில் எழுதியது “தென்னகம்” பத்திரிகையில் கே. ஏ. கிருஷ்ணசாமி.

நூறு நாள் படம் ஓடி வெற்றிவிழா கொண்டாடி அதற்காக பலருக்கு கேடயம், மோதிரம் வழங்கியதில் முதல்வர். படம் “நாடோடி மன்னன்” ஒரு படத்திற்குக் கதை கொண்டு போய் அங்கு டி. வீ. யில் ஒரு பெண்ணைப் பார்த்தும் அதற்குப் பாத்திரப்படைப்பு அமைத்து படத்தில் நடிக்க வைத்து வெற்றி கண்ட முதல்வர். படம்- “உலகம் சுற்றும் வாலிபன்” ஸ்லோ மோஷ‘னில் தமிழகத்தில் படமெடுக்கச் சொன்னதில் முதல்வர் -படம் “கலையரசி’ துப்பாக்கியால் மகாத்மாவும், கென்னடியும் சுடப்பட்டு இறந்தார்கள். சுடப்பட்டு மூன்று குண்டுகள் பாய்ந்து பிழைத்த முதல்வர். நோயாளிகளை குறிப்பிட்டநேரத்தில் தான் அரசு மருத்துவமனையில் பார்க்க வசதி இருந்தும் குண்டடிபட்ட தன்னை எல்லா நேரத்திலும் பார்க்க அனுமதி வழங்கிய முதல்வர். ஒரு பெரிய நூல் நிலையத்தை தனிப்பட்ட முறையில் வைத்திருந்ததில் முதல்வர்.

திரையுலகம் மக்களுக்கும் செம்மலுக்கும் ஒரு பாலமாக இருந்தது. காளமேகம் மேகத்தை தூதுவிட்டான். தமயந்தி அன்னத்தைத் தூதுவிட்டாள். நாரையைத் தூதுவிட்ட கதையுமுண்டு. ஆனால் ‘எம்’ நாதர் திரைமூலந்தான் மக்களுக்கு தூதுவிட்டார். அவர் அமைத்த ஆட்சிக்கு ஆதரவு தந்ததே வெள்ளித் திரைதான். அரசியல் உலகம் எப்படி என்று தெரியாது. ஆனால், திரையுலகம் அவரை இன்றுவரை மறக்கவில்லை. திரையில் மறையாத மாமனிதன் எம். ஜி. ஆர். என்பதை மறுப்பார் யாருமில்லை. படம் ஓட அவர் இன்றும் தேவைப் படுகிறார். அவ ரது படம் “பெரிய இடத்துப் பெண்” அதே கதைதான் “சகல கலாவல்லவன்” அவர் எடுக்க இருந்த படம் “தூங்காதே தம்பி தூங்காதே” “இணைந்த கைகள்” அவர்கொடுத்த படத்த லைப்புகளே”. நல்லதை நாடு கேட்கும்”. நல்லதை கேட்போம் அவரது செல்லப் பெயர் “சின்னவர்” அப்பெயரில் ஒருபடம். அவரது பாட்டு “நாடு அதை நாடு” அப்படியும் ஒருபடம்.

எம். ஜி. ஆருக்கு பிடித்த உடைகள். சாதாரண காலங்களில் கைத்தறி வேட்டிதான் அணிவார். புதிய கைத்தறி வேட்டியை ஒரு முறைதான் அணிவார். கல்யாணம் மற்றும் மங்கள நிகழ்ச்சிகளில் பட்டு வேட்டி, இளம் மஞ்சள் நிற உடைகள் பிடிக்கும். எம். ஜி. ஆர். சின்ன வயதாக இருக்கும் போது அவர் அன்னையார் சத்தியபாமா மூகாம்பிகை கோயிலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம் எம். ஜி. ஆருடைய அம்மா இறந்த பிறகு அவருக்கு தன் ராமாவரம் தோட்டத்தில் பெரிய கோயில் கட்டி தினமும் வழிப்பட்டு வச்தார். இது தவிர மூகாம்பிகை கோயிலுக்கு மாதாமாதம் சென்று வந்து கொண்டிருந்தார். இறுதிவரை இவர் வில்லனாக நடித்த படங்கள். “என்தங்கை”, “அந்த மான் கைதி”, “பணக்காரி” இம் மூன்று படங்களிலும் சமுதாயத்தைத் திருத்தும் வில்லனாக நடித்துள்ளார். அதற்குப் பிறகு வில்லனாக நடிக்கவில்லை.

எம். ஜி. ஆர். மேடையில் பேசும் போது தம் ரசிகர்களை ரத்தத்தின் ரத்தமே! என்று அழைப்பார். அதற்குக் காரணம் 1967 இல் குண்டடிபட்டு எம். ஜி. ஆர். சிகிச்சையில் இருந்த போது ஏராளமான ரசிகர்கள் ரத்தம் கொடுத்திருக்கிறார்கள். எம். ஜி. ஆர் இறந்த செய்தியை அமெரிக்காவில் “வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகை வெளியிட்டது. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் மறைவுக்கு அமெரிக்க அரசு தனது அனுதாபங்களை வெளியிட்டது. அறிஞர் அண்ணா இறந்த போது 1969ல் இறுதிச் சடங்கு ஊர் வலத்தில் கலந்து கொண்டவர்கள் 18 லம்சம் பேர். எம். ஜி. ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை 28 லட்சம் பேர். இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 136. 1936 இல் “சதிலீலாவதி” முதல் இறுதிப் படம் “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” (1978) வரை திரையுலகில் ஜொலித்தார்.

பாரிஸ்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.