புத் 65 இல. 50

விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஸபர் பிறை 11

SUNDAY DECEMBER 15 2013

 

 
ஜம் இய்யதுல் உலமாவின் முன்னோடி எம்.Nஜ.எம்.றியாழ்மௌலவி

ஜம் இய்யதுல் உலமாவின் முன்னோடி எம்.Nஜ.எம்.றியாழ்மௌலவி

இன்று முஸ்லிம் சமூகத்தின் முதுகெலும்பாய் செயற்படும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவை வளர்த்தெடுக்க அரும்பாடுபட்டவர்களில் முக்கிய இடத்தை வகித்த மெளலவி எம்.ஜே.எம்.றியாழ் கடந்த செவ்வாய்க்கிழமை 10ஆம் திகதி இரவு தனது 81 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். இன்னா லில் லாஹி வயின்ன இலைஹி ராஜிஊன்.

ஜம் இய்யதுல் உலமா என்று சொல்லும் போது எவருக்கும் ஞாபகம் வருவது றியாழ் மெளலவியே. மர்ஹும் றியாழ் மெளலவி ஜம் இய்யாவுடன் இருந்த 40 வருட கால பிணைப்பில் சுமார் 25 வருடங்கள் அதன் பொதுச் செயலாளராக இருந்து சன்மார்க்கப் பணியிலும் சமூகப் பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் என்றால் எவரும் அதில் குறை காணமாட்டார்கள்.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவுக்கு தலைமைக்காரியாலயமோ சிறியதொரு அலுவலகமோ இல்லாத காலகட்டத்திலும் அதன் தலைமைச் செயலகமாக செயற்பட்டது மெளலவி றியாழ் அவர்களின் கையில் எப்போதும் இருக்கும் பேக் கைப்பையே. எங்கு செல்லும் போதும் அது அவருடனே இருக்கும். அதில் கடிதத் தலைப்பு, இறப்பர் சீல், காகிதாதிகள், ஆவணங்கள் என்பன அடங்கும். சுருங்கக் கூறின் நடமாடும் காரியாலயமாகவே அது இருந்துவந்தது.

வடகிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் ஜம்இய்யாவின் கிளைகளை அமைத்து அனைத்து உலமாக்களையும் ஒன்று சேர்த்தார். இன்று சில பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஹலால் அத்தாட்சிப்பத்திரம் வழங்கும் முறையை ஆரம்பிக்க காரணகர்த்தாவாக இருந்தவர் இவர் என அதன் தற்போதைய உதவிச் செயலாளர் மெளலவி தாசிம் கருத்து வெளியிட்டார்.

“பாதில்களுக்கு எதிராக போராடிய இவர், அதனை அரசியல்வாதிகள் செய்தால் என்ன, உயர் அந்தஸ்தில் உள்ளவர் செய்தாலும் தட்டிக் கேட்கும் மன தைரியம் மிக்கவராக றியாழ் மெளலவி செயல்பட்டார். இறுதி நபித்துவத்திற்கு சவால்விடும் காதியானிகளின் கொள்கைகளுக்கு எதிராக போராடிய இவர் அதற்காக பல மகாநாடுகளை நடாத்துவதிலும் வெற்றி கண்டார். காதியானிகளின் வழிகேடு” என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.

1933ஆம் ஆண்டு ஜனவரி 25இல் நீர்கொழும்பு கம்மல்துறை எனும் முஸ்லிம் கிராமத்தில் பிறந்த இவர் 1938இல் தனது ஆரம்பக் கல்வியை கம்மல்துறை முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆரம்பித்தார். 1942 - 1951 காலப்பகுதியில் மகரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் இணைந்து உமர் ஹஸரத், சம்சுதீன் ஹஸரத் ஆகியோர்களிடம் மார்க்கக் கல்வியை பயின்று அல், ஆலிம் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் பயின்றார். சன்மார்க்கக் கல்வியுடன் மாத்திரம் நிற்காமல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டதாரியாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். எகிப்து அல் - அஸ்ஹர் பல்கலைக்கழகத்திலும் இவர் பயிற்சியை பெற்றுள்ளார்.

ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்து வட்டாரக் கல்வி அதிகாரியாக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக 26 வருட காலம் கல்விப் பணியில் ஈடுபட்ட இவர் கல்வித்திட்டத்தில் அரபு பாடநெறியை சேர்ப்பதிலும் அல் - ஆலிம் பாடத் திட்டம் தயாரித்தல், க.பொ.த சாதாரண, உயர்தர பரீட்சை வினாத்தாள்களை தயாரித்தல், மதிப்பீடு செய்தல், குர்-ஆன் மத்ரஸா பாடத்திட்டம், அஹதிய்யா பாடத்திட்டம் என்பவற்றை தயாரிப்பதிலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு உருவாகுவதற்கு செயற்பட்டவர்களில் இவரும் ஒருவர். மர்ஹும் சாபி மரிக்காருடன் இணைந்து சமூகத்தின் கல்விப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குரல்கொடுத்தார். தலைநகரில் நடைபெறும் முஸ்லிம்கள் தொடர்பான எந்த ஒரு கூட்டத்திலும் தவறாது பங்குபற்றும் ஒருவராக மெளலவி றியாழ் விளங்கினார். நாட்டின் எட்டுத் திக்கிலும் ஏற்படும் சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பயணிப்பதற்காக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினார். தனியார் சொகுசு வாகனங்களை பயன்படுத்தவில்லை.

கபூரியா அரபுக் கல்லூரியிலிருந்து வெளியேறிய பின்னர் அதன் பழைய மாணவர் சங்கத்தை அமைத்து அக் கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.

சமய, சமூக, கல்விப் பணியில் ஈடுபாடு காட்டிய இவர் எழுத்துத் துறையிலும், ஆர்வம் காட்டினார். மதீனாவை நோக்கி, காதியானிகளின் வழிகேடு, புக்கிகள் வேண்டுமா, சூதாட்டமும் இஸ்லாமும் போன்ற புத்தகங்களையும் வெளியிட்டார்.

அகில இலங்கை சமாதான நீதவானான மெளலவி றியாழை 2006இல் கலாசார திணைக்களம் கலாபூசணம் விருது வழங்கி கெளரவித்ததுடன் காதிமுல் உலமா, கம்சுல் உலமா, ஷெய்ஹும் உலமா போன்ற பட்டங்களும் அவ்வப்போது வழங்கப்பட்டன.

இரண்டு புதல்விகளினதும் நான்கு புதல்வர்களினதும் தந்தையான இவரின் மூத்த மகன் சட்டத்தரணி சல்மான் ஜனாஸாத் தொழுகையை நடாத்தினார். நீர்கொழும்பு காமச்சோடையில் அமைந்துள்ள தனது இல்லத்தில் வசித்து வந்த இவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலேயே வபாத்தானார். அன்னாரின் ஜனாஸா கடந்த 11ஆம் திகதி மாலை நீர்கொழும்பு, பெரியமுல்லை முஸ்லிம் பொதுமையவாடியில் நாடளாவிய உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்த பொதுமக்கள், ஊர்வாசிகள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.